Thursday 27 November 2014

சுயாதீன மனம்



#ஞான மண்டலம்


சுயாதீன மனம்


காட்டில் சூரப்பற்றை என்று கூறப்படும் ஒரு இன முட்செடி இருக்கின்றது.
இது வளைந்த கூரிய முட்களையுடையதாய் அடர்த்தியாக வளர்ந்திருக்கும் ஒருவகை முட்புதர்.
இந்த முட்செடியில் காய்த்துப் பழுக்கும் சிறு பழங்கள் வௌவாலுக்கு மிக ருசியான உணவு.

வௌவால்:

இதைத் தின்பதற்காகப் பறந்து வந்து இச்செடியில் தொங்கும் வௌவாலின் தோற செட்டைகள் இம் மரத்தில்
கொழுவிக் கொள்ளும்.
கொழுவிக் கொள்ளும் பகுதியை விடுவிக்க முயற்சிக்கும் பொழுது, ஏனைய பகுதிகளும் முள்ளில் கொழுவிக் கொள்கின்றன. இதனால் வௌவால் தன்னை விடுவிக்க முடியாமல் அதிலேயே கிடந்தது மடிகின்றது.
இதே போன்று மனிதரும் விஷய சுகங்களென்ற முட்புதரிற் சிக்கி, மீள முடியாமல் அந்தரப்படுகின்றனர்.
விவேகத்தை உபயோகித்துச் சிரத்தையோடும் பொறுமையோடும் இதிலிருந்து மீள முயற்சிக்காத வர்களுடைய ஜீவன் மீண்டும் இதனையே பற்றிக்கொண்டு வீணாக மாய்கின்றது.

மழை:

மழை உயிரினங்களை உயிர்ப்பிக்கின்றது. இருள் மயமான முகில்கள் இல்லாமல் மழையாகிய அமிர்தம் வர்ஷிப்பதில்லை.
அதே போன்று சுக துக்கங்களாகிய கருக்கூட்டல் இல்லாமல் ஈஸ்வர அநுபூதி என்ற தேவாமிர்தம் மனிதரில் பொழிவதில்லை.
ஆகாய விமானங்கள் ஏறி இறங்கும் விமானத் தளம் போன்று ஜீவாத்மாக்கள் ஏறி இறங்கிக் கொண்டிருக்கும் ஒரு பெருந் தளந்தான் இந்த கர்ம பூமி.
ஜீவிகளுடைய பிரயாண லட்சியத்தை அடைவதற்கு இதைத் தவிர பிறிதோரிடமில்லை. எனவே மட் புதர் நிறைந்ததாயினும் மண்டலங்களில் சிறந்த மண்டலமாகிய  இந்தக் கர்ம பூமியில் மனிதராய்ப் பிறந்தவர்கள் எல்லாம் பெரும் புண்ணியசாலிகள்.
நாம் காலூன்றி நிற்கும் இத்தளத்தை வெறுக்காமலும், அதே சமயம் இதிலிருக்கும் மட் புதரில் கொழுவிக் கொள்ளாமலும் ஜீவிதத்தைச் சம்பூர்ணமாக்க வேண்டும்.

பாஷாணம்:

நமக்கு பந்த மோட்சங்களைத் தருவது மனந்தான் என்பது அனைவரும் அறிந்த விஷயம். மனம் பாஷாணம் போன்று மிகக் கெட்டதும், நல்லதுமாயிருக்கின்றது.
பாஷாணத்தைச் சுத்திகரித்து ஔஷத வீரியமாக்கினால் அதைக் கொண்டு தீராத வியாதிகளையெல்லாம் தீர்க்கலாம்.
அதே போன்று அழுக்காறு நீங்கிய மனம் பிறவித் துன்பங்கள் என்னும் மகா ரோகத்தைத் தீர்க்கும் பெரும் சித்த ஔஷதமாகப் பரிணமிக்கின்றது.
மனிதரால் இலகுவில் கிரகிக்க முடியாத மனதின் இரகசிய நுண்ணிய கேந்திர ஸ்தானங்களைத் தடவிப் பார்த்துப் பிடிக்கவேண்டிய இடத்தில் பிடித்தால் "நாகெந்தி"மூலிகை நுகர்ந்த நாகம் போன்று மனம் அடங்கி நிற்கும்.
அடங்கிய மனம் நில்லென்றால் நிற்கும். போ என்றால் போகும். இவ்வாறு அடங்கிச் சுயாதீனப்பட்ட மனதை விட ஒருவருக்கு வேறென்ன பேறு பெறவேண்டியிருக்கின்றது.
இதற்குரிய மானசீகப் பயிற்சிகளை ஆத்மீக தர்மங்கள் நமக்குத் தருகின்றன.
ஒருவர் தன் மனம் சுயாதீனமடைந்த பின்னர் வாழுகின்ற வாழ்க்கைதான் எதார்த்தமான வாழ்க்கை.
உலகியல் இன்பங்களுக்காக பல வழியிலும் பகீரதப் பிரயத்தனம் செய்து கொண்டிருப்பவர்கள் நாள் தோறும் சிறிது நேரரமாவது மனப்பூர்வமாக ஜெபம், தியானம், பிரார்த்தனை, நாமசங்கீர்த்தனங்களாகிய ஆத்மீகப் பரிசீலனங்களைச் சிரத்தையோடு செய்து வ்ருவாராகில் லெளகீகமும் ஆத்மீகமுமான வாழ்க்கையில், இன்றிருப் பதைவிடக் கூடுதலான திருப்தியும் சுகமும் முன்னேற் றமும் அடைவார்கள்.
சிறிது சிறிதாகச் செய்யும் ஆத்மீகப் பயிற்சியால் காலக்கிரமத்தில் தன்னைத்தான் அரியும் ஞானம் என்ற பேரறிவைப் பெறலாம். இந்தப் பேரறிவுதானே பிறவிப் பயன் தரும் பேறு!

No comments: