Friday, 21 November 2014
மனம் கெட்டால் மாநிலம் கெடும்
#ஞான மண்டலம்
மனம் கெட்டால் மாநிலம் கெடும்
பிரமாண்டமான இப்பிரபஞ்ச நியமங்களைப் பற்றிய ஒரு சாமானிய அறிவு உணர்வுக்காவது இம் மண்ணுலக மனிதன் ஒரு கணமேனும் தலைவணங்கி நிரற்பாநேயானால் இவ் வையகம் பெருஞ் சுகமடைய வழியுண்டு.
மனிதன் இப்பூவுலகில் வாழ்ந்தும் அதன் உண்மைகளை உள்ளபடி அறியாமல் ஒன்றை இன்னொன்றாகவே கருதி வாழ்வதால் ஏமாற்றங்கள் பல சம்பவிக்கின்றன.
உண்மையைக் கிரகிக்க முடியாத மனம், மாறி மாறி வரும் ஏமாற்றங்களால் தன்னம்பிக்கை இழந்து வாழுந் திறமையுமற்று இறுதியில் மன வெறுப்பால் தரந் தாழ்ந்த குணமுடையதாகவும் மாறி விடுகின்றது.
மனித சுபாவம்:
மனிதருடைய அந்தரங்க உணர்வு தனது சக ஜீவிகளிடம் அன்பும் சமரச பாவனையும் உடையதாயிருந்த போதிலும், சொந்த விருப்பு வேருப்புகளுக்குப் பங்கம் விளையும் பொழுது மனித சுபாவம் கொடிய விலங்குகளைவிட மூர்க்க குணமுடையதாகின்றது.
நேற்று வரையிலும் இனிமையாகவும் நன்மையாகவும் போற்றிப் புகழ்ந்து வந்தவைகள் எல்லாம் கசப்பும் பகைமையும் உடையவைகளாகவே மாறிவிடுகின்றன. பகைமை கொண்ட மனமும் பாகனில்லாத யானையும் ஒன்றே. இங்ஙகனம் சுயநலத்தால் வெறுப்பும் பகைமையும் கொண்டு சீறும் மனம் நல்லகுணங்கள் எல்லாமிழந்து மத யானை போன்று தனக்கும் சமுதாயத்திற்கும் பெருங் கேடுகளை விளைவிக்கின்றது.
இப்படியான கரவுக் குணத்திலிருந்தெழுந்த விளைவுகள் தனி மனிதனிலிருந்து உலக ரீதியில் தோன்றிக் கொண்டிருக்கும் சகல தொல்லைகளுக்கும் மூல காரணம்.
மிக அரிது:
காலம் போகப் போகச் சிறிதேனும் உள்ளக் களிப்புடன் அமைதி நிறைந்த ஆத்மார்த்தமான ஒருவரைக் காண்பதே அரிதாகிவிட்டது.
மனிதன் தன் தன் உணர்வுகளை, செயல்பாடுகளை உன்னிக் கவனிப்பதில்லை. மனம் தோற்றுவிக்கும் விருப்பு வெறுப்புகளின் பலாபலன்களை அலசி ஆராய்வதுமில்லை.
கேடுபிடிக்குரிய யதார்த்த காரணங்கள் வேறெங்கோ இருக்கையில், விருப்பு வெறுப்புகளை மாத்திரம் முன்வைத்துப் பிரச்சனைகளைத் தீர்க்கப் பார்த்தால் மேலும் புதிய பிரச்சனைகளைத் தோற்றுவிக்கும்.
மனிதன் மனச் சாட்சியை நேர் கோட்டில் வைத்துக் காரிய காரணங்களைப் பார்த்தறியப் பழக வேண்டும்.
மனித மனம்:
பால் அதிக சத்து நிறைந்த உணவாகினும் கெட்டால் நச்சுத் தன்மையடைகிறது.
மனத்தால் வாழுகின்றவன் மனித்ன். மனிதனுடைய மனம் கெட்டுவிட்டால் இவ்வையகம் முழுவதும் கெடும்.
அடிமனம் விஷக் கலப்பில்லாத அமிர்த துல்லியமானது. பேராசையும் அகங்காரமும் மனமென்ற பொதிக்குள் விஷத்தை ஊற்றிவிடுகின்றது.
அக்கினியின் ஒளியால் கவரப்பட்டு அதிலேயே மாண்டு மடிகின்ற விட்டில் பூச்சி போன்று உலக வாசனையால் தடிப்பேறிய அகங்காரமும் பேராசையும் அதற்குரியவரைச் சுட்டெரிக்கின்றன.
உலகின் நிலை:
கேடுகள் பூமியில் இருந்தும் வானத்தில் இருந்தும் உருக்கொள்வதில்லை. அவைகள் மனித மனத்தில் இருந்து சிருஷ்டிக்கப்படுகின்றன.
பேராசையும் சுயநலமும் கேடுகளை வளர்த்தெடுக்கின்றன.
இவ்விரு நீச குணங்களுடைய பராமரிப்பில் வளர்ந்து வருகின்ற உலகம் சர்வ நாசத்திற்கு ஊர்ந்து செல்லக் கூடும்.
மிலேச்ச குணங்கள் கண்களைத் திசைமாறிப் பார்ப்பதற்குப் பழக்கி வைத்திருக்கின்றபடியால் அது நேரான மார்க்கத்தைப் பார்ப்பதற்குரிய ஒளியை இழந்து வருகின்றது.
ஜனங்களுடைய நல்ல சுபாவந்தான் உலக சேமத்தின் ஆதார பீஜம். இதை ஒவ்வொருவரும் திடமாகவே கருத்தில் ஊன்ற வேண்டும்.
மனிதர் களங்கமற்ற நற்குண சீலராய் வந்தால் கலகமும் கலக்கமும் இருக்க மாட்டா.எதார்த்தம் இவ்வாறிருக்கையில் வெவேறு மார்க்கங்களில் யோக செமங்களைத் தேடப் பார்ப்பது அர்த்தமற்றதாய் விடுகின்றது.
ஆத்மீக சிஷ்டணங்கள் சமய ஆசார அனுஷ்டானங்கள் எல்லாம் மனக் கசடுகளை உருக்கி மனிதர்களை நல்ல சுபாவ சுத்தியுடையவர்களாக்குவத்ர்கு உரிய உபாயங்களாகும்.
மனிதர் சர்வ சக்திகளையும் உபயோகித்து நற்குணங்களை விருத்தி செய்ய வேண்டும்.
உபத்திரவங்கள்:
துர்க்குணம் உடையவர்கள் வாழுகின்ற இடங்களில் பெரும் உபத்திரவங்கள் நிகழ்கின்றன. இதுதான் இன்றைய உலகநிலை.
மென்மேலும் மனக்கசடுகள் வளர்ந்துகொண்டேபோனால் மனிதனுக்கும் விஷக் கிருமிகளுக்கும் அதிக வித்தியாசமில்லாதுவிடும்.
நமது உணர்வு மாற்றத்திற்காக காலம் காத்து நிற்பதில்லை. இனியாவது மனிதர்கள், சமுதாயம் போய்க்கொண்டிருக்கும் பாதையைப் பற்றிச் சரியான அறிவுடையவர்களாகாவிட்டால் எதிர்காலம் அமங்கல கரமான பல சம்பவங்களால் பாதிக்கப்படும்.
மனிதருடைய துர்க்குணங்களே சாசுவதமான சுகத்திற்கும் சுதந்திரமான வளர்ச்சிக்கும் இடையூறாயிருக்கின்றன.
உலக சமுதாயத்தின் இரு பெருங் கண்களாகிய அரச தர்மமும் ஆத்மீக தர்மமும் அந்தரங்க சுத்தியுடன் சரியான இலட்சியத்தில் செயல்பட்டால் உயர்ந்த சீலமுடைய ஒரு மனித சமுதாயத்தை உருவாக்குவது சுலபமானதாகும்.
மனிதர் துர்க்குனங்களிலிருந்து முக்தராகுவதுதான் உலக சமாதானத்திற்கும் மாயக் கலப்பில்லாத சாந்த மதுரமான வாழ்க்கைக்கும் ஏக மார்க்கம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment