Monday, 17 November 2014

இல்லறம்




இல்லறம்

ஆகாய விமானம் பூமியில் சிறிது நேரம் ஓடிய பின்புதான் மேலெழுந்து பறக்கின்றது. விமானம் மேலெழுந்து பறக்கின்ற சக்தியும் வேகமும் ஓடுகின்ற ஓட்டத்தில்  இருந்துதான் பெறுகின்றது.

அதே போன்று இப்பூவுலக வாழ்க்கையைக் கிராமமாய் வாழ்ந்து முடிப்பவர்களுக்குத்தான் மேலான ஞான வாழ்க்கைக்குரிய சக்தியும் மனபரிபாகமும் கிடைக்கின்றது.
இல்லற தர்மத்தின் ஒவ்வொரு படியையும் ஒழுங்காக ஏறிச் செல்கின்றவர்களே இறுதியில் ஞானத்திற்கு அருகதையுடையவர்களாயிருப்பார்கள்.

சகல சராசரங்களும் திவ்விய ஞானத்தை நோக்கிப் பருணமித்துக் கொண்டிருக்கின்றன.

பரிணாம வளர்ச்சியின் மேல்நிலைக்கு வந்திருக்கின்ற மனிதன் தனது சம்பூரண வளர்ச்சியைத் துரிதப்படுத்துவதற்காகச் சில விஷேச தர்மங்களைக் கடைப்பிடித்து வாழ வேண்டும்.

இல்லற தர்மம்:

அவைகளை அனுசரித்து வாழ்கின்றவர்களே உத்தமமான மனிதர்கள். உத்தமமான மனிதன்தான் ஞானவானாக பரிணமிக்க முடியும்.
மனிதனை மேல்நிலைக்கு உயர்த்துகின்ற தர்மங்களில் இல்லற தர்மமே முதல் தர்மம்.
இந்த ஆரம்ப தர்மத்தைச் செவ்வனே நிறைவேற்றி முடிக்காதவர்கள் எவ்வுலகத்திலிருந்தாலும் சரி, அவர்கள் கர்ம தோஷத்தினால் சதா துன்பப்பட்டுக் கொண்டேயிருப்பார்கள். அவர்களுக்கு கெதி மோட்சம் என்பதில்லை.
முதல் தர்மமாகிய இல்லற தர்மத்தின் மகிமையையும் பெருமையையும் எடுத்துக் காட்டுவதற்காகவே நமது தெய்வங்களும் அவதார புருஷர்களாகிய இராமரும், கிருஷ்ணரும் மற்றையோரும் இல்லற வாசிகளாவே திகழ்ந்தனர்.
பிரசித்தமான கர்ம யோக மார்க்கம் இல்லற தர்மத்திற்கு ஒரு அழுக்கற்ற கண்ணாடிபோல் பிரகாசிக்கின்றது.
கர்மயோக மார்க்கத்தை அறிந்து அதன் வழி வாழுகின்ற இல்லற தர்மிகள், இந்த விசாலமான சம்சார சாகரத்தை வெகு சாதுரியமாய்க் கடந்து நற்கதியடைவார்கள்.
ஒவ்வொருவருக்கும் தமது சொந்தக் கடமையிலிருந்து தேசக் கடமை வரையிலும் பலவாறான கடமைகள் இருக்கின்றன.
தன் தன் கடமைகளைச் செயற்படுத்தும்போது வரும் இடையூறுகளைத்தான் வாழ்க்கைப் பிரச்சனைகள் என்று சொல்கின்றோம்.
இப்போது மனிதர்கள் பெரும் மூளைசாலிகளாகவே வளர்ந்து வருகின்ற போதிலும், வாழ்க்கைப் பிரச்சனைகளும் எல்லை மீறி வளர்ந்து வருகின்றன. கெட்டிக்காரர்கள் கூட வாழ்க்கைப் பிரச்சனைகளுக்கு முன் தடுமாறி நிற்பதைக் காணும் பொழுது, இவர்களுடைய அறிவாற்றல்களெல்லாம் வாழ்க்கை மர்மங்களை அறிவதற்குப் பயனற்றவை எனத் தோன்றுகிறன.

காட்டுப்பன்றி

ஒரு காட்டுப்பன்றி தனது குட்டிகளுக்குப் பாலூட்டும் பொழுதெல்லாம், தனது வீரபராக்கிரமன்களைக் குட்டிகளுக்குப் புனைந்து கூறுவது வழக்கம்.
ஒருநாள் இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கையில் ஒரு வெடிச் சத்தம் கேட்டது. சத்தம் கேட்டவுடனே தாய்ப்பன்றி குட்டிகளையும் விட்டு ஓடிப் போய்விட்டது.
பின்பு பன்றிக் குட்டிகள் தாய்ப் பன்றியைத் தேடிப்பிடித்து தங்களை விட்டோடியதன் காரணத்தை விசாரித்தன.
தாய்ப் பன்றி "என் அருமை மக்களே! வெடிச் சத்தத்திற்கு முன் எனது துணிச்சலெல்லாம் பறந்து விடுகின்றது" என்று கூறியது.
இதே போன்றுதான் வாழ்க்கைப் பிரச்சனைகளுடன் நேர்முகப் பரீட்சை நடத்தும் பொழுதுள்ள மனிதர்களுடைய நிலையும்.
விஞ்ஞானம், அரசியல் போன்ற உலகாயத அறிவுகளெல்லாம் இப் போராட்டத்திற்கு முன் முழந்தாளிடுகின்றன. அவ்விடத்தில் மகா மேதைகளும் தளர்ந்து விடுகின்றனர்.
வாழ்க்கைத் தர்மங்களைச் சரிவரக் கற்றுக்கொள்ளாத காரணத்தால் இன்று தனி மனிதனிலிருந்து உலகம் முழுவதிலும் குழப்பங்களும்,தற்கொலைகளும்,வெட்டுக் குத்துக்களும் நடைபெறுகின்றன.
மனிதன் செயலாற்றும் திறமைசாலியாய் மட்டுமிருந்தால் போதாது. அதிலிருந்தெழும் பிரச்சினைகளைச் சாதூரியமாய்த் தீர்த்துக் கருமமாற்றும் நுண்ணறிவும் ஆற்றலும் பெறவேண்டும்.
இதனைப் பெறாவிட்டால் மேலும் அனர்த்தமும், வெறுப்பும், விரக்தியும்தான் வாழ்க்கையில் கண்ட பலனாயிருக்கும்.

கர்ம ரகசியம்:

கருமமாற்றும் நியதி நியமங்களையறியாமல் வந்த விரக்தியும் வெறுப்பும் அயோத்தியில் வைத்து இராமனுக்கும், குருஷேத்திரத்தில் வைத்து அர்ச்சுனனுக்கும் உண்டாயின.தக்க தருணத்தில் இராமனுக்குத் தனது குலகுருவாகிய வசிடரிடத்திலிருந்தும், அருச்சுனனுக்குக் கிருஷ்ணரிடத்திலிருந்தும் கர்ம ரகசியங்கள் உபதேசமாகக் கிடைத்தன.
வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர்கள் மீண்டும் கர்மத் திறமையுடையவர்களாயினார்கள்.
அதே கர்ம ரகசியங்களை மானிடர் தமது வாழ்க்கையிலும் பகிர்ந்தெடுக்க வேண்டும்.அப்பொழுதுதான் தன் தன் கடமைகளில் குறுக்கிடும் பிரச்சனைகளைத் தீர்ப்பதென்பதற்குரிய நுண்ணறிவும் கர்மத் திறமையும் கிடைக்கும்.
குடும்பச் சண்டையிலிருந்து தேசியக் கலவரங்கள் வரை தோன்றுகின்ற சகல பிரச்சனைகளுக்குரிய காரண காரியங்களும் இராமாயண காவியத்தில் அதி நுட்பமாக எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன.
மனிதருடைய மனம் செயற்பட்டுக்கொண்டிருக்கும் காலம்வரையில் இராமாயண சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டேயிருக்கும்.
இராமர் மனித வாழ்க்கைக்கு ஒரு உதாரண புருஷர். இந்த மகா புருஷன் கையாண்ட வாழ்க்கை நெறிகளை ஏனைய மனிதர்களும் வாழ்க்கையில் கையாளுவார்களேயாகில் இம்மண்ணுலகில் தாமரை இலையில் நீர் போல் வாழ்ந்து சாஸ்வதமான சத்தியத்தை இங்கேயே அனுபூதிமயமாக்கலாம்.

.



No comments: