Sunday 2 November 2014

ஞான மண்டலம் 2





மனிதன் என்ற சொல்லுக்கு அர்த்தமென்ன? எதை ஆதாரமாக வைத்து இச் சொல் வழங்கி வருகின்றது. கை, கால், கண் என்பவற்றுடன் ஒன்பது துவாரங்களுடன் கூடிய உயிர்த் துடிப்பிருக்கும் வெறும் ஒரு மாமிச பிண்டத்தை மாத்திரம் கருத்தில் கொண்டுதானா இப்பெயர் வழங்கி வருகின்றது? அல்லது அதைவிட ஆழமும் விசாலமுமான பொருள் வேறேதுமிருக்கின்றதா?ஒரு இயந்திரத்தை சரியான முறையில் இயக்குவதற்கு அதை பற்றிய தக்க அறிவிருந்தாற்றான்முறையாக அதனை இயக்க முடியும். அதேபோன்று மனிதன் தன்னைப் பற்றிய தெளிந்த ஞானமுடையவனாயிருந்தாற்றான் வாழ்க்கை என்ற இயந்திரத்தை நெறி தவறாமல் இயக்க முடியும். தற்சமயம் கல்வி முறைகள் உலகாயதப் பொருள்களை அறிவதற்கும் அதைச் சம்பாத்தியம் பண்ணுவதற்கும் உபயோகப்படுமே தவிர மனிதன் தன்னையும் தன் வாழ்க்கையைப் பற்றியும் அறிவதற்குச் சிறிதளவேனும் பயன்பெறக் கூடிய வகையிலில்லை. ஜீவிதத்தைப் பற்றிய யதார்த்த ஞானக் குறைவுதான் தனி மனிதனிலிருந்து சமுதாயம் முழுவதிலும் தோன்றிக்கொண்டிருக்கும் சகல சங்கடங்களுக்கும் மூலகாரணம். மனிதன் தெளிந்த தன்னறிவின் ஒளியைக் கொண்டு வாழ்க்கையைப் பார்க்க வேண்டும். அதன் வெளிச்சத்தில் தேட வேண்டியதைத் தேடியெடுத்து அனுபவிக்க வேண்டும். மனிதன் இவ்வழியில் வாழ்ந்தால் ஜீவிதம் சம்பூரண சுகமுடையதாய் அமையும்.

மனத்தைக் கொண்டு வாழ்பவன் மனிதன் ஆகையால் "மனம் போல மாங்கல்யம்" என்றதோர் பழமொழியும் இருக்கின்றது. மனம் மனிதனை ஆளாமல் மனிதன் மனத்தை ஆளுகின்ற திறமையும் சக்தியும் பெற்றால் வண்டரிக்காமல் பூத்து மலரும் நறுமலர் போன்று வாழ்வும் ஆனந்தப் பொன்மலராய் மலர்ந்து மணம் கமழும். மனம் என்ற பொருளை உன்னிப் பார்க்குக. அதில் சந்தோஷம், திருப்தி, அன்பு,ஐக்கியம் போன்ற பசுமையான சுகவுணர்வுகளும், பகை, பொறாமை, சினம், கோபம், வஞ்சனை முதலிய புன்னெறி உணர்வுகளும் நீர்க் குமிழி போன்று மறைவதும் தோன்றுவதுமாயிருப்பதை அவதானிக்கலாம்.இத்தகைய நல்லதும் கெட்டதுமாகிய எண்ணரிய எண்ணங்களின் பிரதிபலிப்பால் மனதின் சமநிலை அல்லது ஏகாக்கிருகை கலைந்து இயல்பான சாந்தியும் சுகமும் இழக்கப்படுகின்றது.மனம் குழம்பினால் ஜீவிதம் குழம்பும். சாசுவதமான இன்பத்தையும் அறிவாற்றலையும் செல்லரித்து விடுகின்ற உணர்வலைகளின் தாக்கம், மனிதனை வாழ்க்கையின் யதார்த்த வசங்களிலிருந்து இருளடைந்த மாயா மார்க்கங்களுக்குத் திசை திருப்பிவிடுகின்றது.

தூலப் பிராண சக்தி மனதைத் தாக்கும்பொழுது வெடித்துச் சிதறிப் பறந்து திரியும் பஞ்சுத் துகள்கள் போன்று மனமும் சிதறி விடுகின்றது. சிதறிய மனம் தொட்டடுத்து நிற்கும் விஷயாதிகளில் கலந்து அதனதன் குணரூப வடிவங்கொண்டு அதற்கேற்ற சுகதுக்கங்களை அனுபவித்து நிற்கும். புல்லுருவி போன்ற மனம் எதில் கலந்து நிற்கின்றதோ அதன் வடிவங் கொள்வதுதான் மனதின் இயல்பு. இப்படி விஷய வாசனைகளில் சென்று விழுந்த மனம் வாசனா குனங்ககளாகிய எண்ணச் சுழலில் சுழன்று சுழன்று சமுத்திர அலைகளிலகப்பட்ட றப்பர்ப் பந்து போன்று அங்குமிங்குமில்லாத நிலையில் தத்தளித்துக் கொண்டிருக்கும். இதுதான் பெரும்பாலும் மனிதருடைய மானசீக அனுபவம். சகாராப் பாலைவனங்களில் ஒரு வகையான நீண்ட முள்ளுடைய முட்செடிகள் இடையிடையே முளைத்து வருகின்றன. அங்கு வாழும் ஒட்டகங்கள் அச் செடியின் முட்களுக்கிடையிலிருக்கும் பொடியிலைகளைத் தின்ன முயற்சிக்கும்பொழுது முகத்தில் முட்கள் குத்தி இரத்தம் தாரை தாரையாக வழியத் தொடங்கும். இரத்தம் வழிய வழிய ஒட்டகம் அதைத்தான் தின்ன முயற்சிக்குமே தவிர தின்னும் ஆசையை விட்டுவிட மனமில்லாமல் அங்கேயே மாண்டு மடிகின்றது.இதைப் போன்றுதான் சிற்றின்பப் பற்றுடைய மனிதனின் நிலையும். ஆயினும் மனிதன் பகுத்தறிவற்ற மிருகமல்ல.பகுத்தறியும் விவேகமுடையவன்.நிலையற்ற அற்ப சுகங்களில் மயங்கி கைக்கெட்டியது வாய்க்கெட்டாமலும், வாய்க்கெட்டியத்தை உட்செலுத்த முடியாமலும் வேதனைப்படும் பாரிசவாத நோயாளிகளைப் போன்ருதானா பெரும் பெருகளையுடைய மனிதன் வாழ்ந்து மடிய வேண்டும்.

எண்ணங்களை வைத்துக் கால்பந்து விளையாடிக்கொண்டிருக்கும் மனதை அவ் விளையாட்டரங்கினின்றெடுத்து ஆத்மாவின் பிரசாந்த மதுரமயமான வெளியரங்கில் வைத்து வாழுகின்ற மனிதன்தான் மனிதன். இதற்குரிய சக்தி மனிதனுக்கில்லை எனினும் மனிதனில் அது இருக்கின்றது.நீரில் கலந்திருக்கும் பால்போன்று மனதில் கலந்திருக்கும் அந்த மகா சக்திக்குக் கீழ்ப் பணிந்து அதன் வழி நடத்தலுக்கு நம்மை ஆளாக்கிக் கொண்டால் மார்க்க தரிசனம் சுகமாயிருக்கும்.அப்பெருஞ் சக்தியின் அருளாசியால் மனதை மாயா மயக்க உணர்வு மண்டலத்திலிருந்து ஆனந்தமயமான ஞானப் பேருணர்வு மண்டலத்தில் நுழைய விட்டால் அம மண்டலத்தின் ஈர்ப்புச் சக்தியால் ஈர்க்கப்பட்டு அது அங்கேயே சஞ்சாரஞ் செய்துகொண்டிருக்கும்.சூரியனைச் சுற்றிக்கொண்டிருக்கும் பூமியும் இடையிடையே சூரியனை அண்டி வருவது போன்று இறையழகொழுகும் ஞானமய மண்டலத்தையடைந்த மனமும் அங்கேயே சுற்றிச் சுற்றி இறுதியில் அம்மண்டல ஞான பிந்துவாயொளிரும் சர்வேஸ்வரனில்,நீரில் கலந்த உப்புப் போன்று இரண்டறக் கலந்து விடுகின்றது. இதுவே யோகம் என்பது.இதற்குப் பின் மனம் ஒரு பொழுதும் இந்தக் கர்ம பூமியை நோக்கித் திரும்பி வருவதில்லை. ஜீவன் எண்ணற்ற ஜடங்கள் வழி பிரயாணம் செய்து தனது யாத்திரையை இனிது முடிக்கின்றது.சாயுச்சியமென்ற இந்நிலையை ஜீவன் அடையும் பொழுது ஜீவனின் வளர்ச்சி பரிபூரணமடைகின்றது.உயிகள் இயறகையாகவே ஒருநாள் இந்நிலையை அடைந்துதானாகவேண்டும். ஆயினும் விவேகமுடைய மனிதன் சம்சார சாகரத்திலிருந்து விரைவில் கரையேறுவதற்கு முயற்சி என்பதொன்று அவசியம் இருந்துதானாக வேண்டும்.இயற்கை நியதிகளுடன் தான் முயற்சியும் சேரும்பொழுது நீரும் உரமும் போட்ட செடியின் வளர்ச்சி துரிதப்படுவது போன்று ஜீவனுடைய வளர்ச்சியும் துரிதமடைகின்றது.இதற்காகத்தான் ஆத்மீக சாதனைகள் உருவாக்கப்பட்டிருகின்றன.

ஆத்மீக சாதனைகளென்றால் யோக ஞான மார்க்கங்களென்று மாத்திரம் கருதக்கூடாது. சமயாசார அனுஷ்டானங்களும் ஏனைய வழிபாட்டு முறைக்களெல்லாம் இதனை ஆதாரமாகக் கொண்டவை. ஆகையால் இதுதான் சரி, மற்றவையெல்லாம் பிழையென்று கூறுவதற்கில்லை. அவரவர்களுடைய பக்குவத்திற்கும் ருஜிக்கும் ஜீரண சக்திக்கும் ஏற்றவாறு எந்தவொரு மார்க்கத்தை வேண்டுமானாலும் கடைப்பிடித்தொழுகலாம்.செய்யும் சாதனைகள் உயிரணுக்களைத் தொடும் வண்ணம் செய்யப்பட்டால் எந்தவொரு சாதனையிலும் நிச்சயம் சித்தி கிடைக்கும்.கண்ணப்பர், சபரி, ஹனுமார், குகன் போன்றவர்கள் இதற்கு உதாரணமாயிருக்கின்றனர்.

எண்ணங்களாகிய சித்த விருத்திகளால் ஜீவன் சம்சார துக்கத்தை அனுபவிக்க வேண்டியிருக்கின்றது. சித்த விருத்திகளைத் தடை செய்தால் கிரகண பீடை நீங்கிய சந்திரனைப் போன்று மனம் ஒரு நிலைப்பட்டு ஒன்றாக பிரகாசிக்கும். தெளிந்து அசைவற்றிருக்கும் மனதில் பிரமப் பிரகாசம் தானாகவே ஒளிரும். இந்த ஒளியின் மகிமையால் கவரப்பட்ட மனம் காலக் கிரமத்தில் அதனில் கலந்து அது மயமாய் விடுகின்றது. இதுதான் பிறவிப் பேறென்று சாஸ்திரங்கள் புகழும் சாயுச்சியம் அல்லது முக்தி பதம்.நமக்கு அரிய மனித ஜென்மம் கிடைத்திருப்பது எதற்காகவென்று ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். பஞ்சமா பாதகங்களால் ஐம்பொறிகளையும் கெடுத்து ஜென்மத்தையும் பாழாக்கிவிடுவதற்காகவா?அல்லது கித்த ஜென்மத்தைக் கடைத்தேற்றுவதற்காகவா? இதனைப் பகுத்தறிய முடியாத ஜென்மம் பாபக் கறை படிந்ததேயாகும். சிந்தித்துத் தெளிவடைந்து கடைத்தேற முயற்சிக்க வேண்டும். வானம்பாடி வானத்தில் பறந்து திரியும் பரவையாயினும் பூமியில் இறங்கித்தான் இரை தேடுகின்றது. மனிதனும் தனது மனதை இறை மண்டலத்தில் சஞ்சாரம் செய்யவிட்டு இந்த கர்ம பூமியில் வாழும் வரை தன் தன் கர்மங்களைச் செவ்வனே செய்ய வேண்டும். முயற்சிக்கு முன்னுக்கும்,முயர்சியின்மைக்குப் பின்னுக்கும் கடவுள் நிற்கின்றார் என்பதை உணருவாயாக! பேசுவதிலும் கேட்பதிலும் வாசிப்பதிலும் மாத்திரம் நிற்காமல் சிறிதேனும் சாதனை செய்து பயனடைவாயாக!







No comments: