உலகம் நியதி தவறாமல் போய்க்கொண்டிருக்கின்றது. அதில் பிசகேற்படுவதில்லை. பிசகு இருந்தால் அது நம்முடையதன்றி உலகத்தினுடையதல்ல. ஒவ்வொருவரும் வைத்துப் பார்க்கும் கண்ணாடியின் நிற வித்தியாசத்திற்குத் தக்கவாறு எல்லாம் காட்சியளிப்பதன்றிச் சத்தியம் ஒன்றேதான். சத்தியம் இன்னதென்று மனதில் தெளிந்தால் வித்தியாசமாய்த் தோன்றியதெல்லாம் ஒன்றின் பிரதிபலிப்பென்ற உண்மையை விளங்க வேண்டும். இது விளங்கினால் மனிதனின் குதர்க்க சுபாவங்கள் தீர்ந்து சந்தேக நிவர்த்தி வரும்.மனத்திற்கு சாந்தியும் கிடைக்கும். சத்தியம் தெளிந்து நேர்முக ஞானம் வந்தால் கலக்கமெல்லாம் தீரும். கிலேசமிராது. இது விளங்குவதற்கேற்ற முறையில் வாழ்க்கையைத் திருத்தி அமைப்பதுதான் புருஷ தர்மம்.
மது, மாமிசம், விபச்சாரம், கொலை, களவு, கொள்ளை, இலஞ்சம் போன்ற மகா பாவங்களை அடிமனதிலிருந்து அறவே விளக்கி உண்மையைப் பேசித் தர்மத்தின் வழி வாழவேண்டும்.அசுத்தங்களை மனதில் வைத்து இறைவனை வழிபட்டால் அது கருணை காட்டாது. இரக்கமும் கொள்ளாது. மனதிலிருந்து கழிவுகளை நீக்கி வஜிபாடியற்றினால் ஆகாததும் ஆகும். வேண்டி நின்றால் பெரும் ஞானமும் கிடைக்கும். இந்த ஞானம் வெளிப்படும் வரையில் இருளில் தடவித் திரியும் குருடனைப் போன்றுதான் வாழ்க்கையும், வாழ்க்கை அனுபவங்களுமிருக்கும்.ஆகையால் குருடனைப் போன்று தட்டுத் தடுமாறி வாழ்ந்து மடியாமல் இருட்டிலும் ஒளி விட்டுக்கொண்டிருக்கும் சர்ப்ப மணி போன்று மாயா இருளடைந்த இந்த மயக்க உலகத்தில் ஞான ஒளியின் துணையால் சேர வேண்டிய கரையைச் சேர வேண்டும். இதற்காகத்தான் மனிதன் இங்கு தோன்றியிருக்கிறான். இந்த மேலான ஞான நிலவில் இளைப்பாறியிருந்தால் பிறவிக் கிலேசங்களெல்லாம் தீரும். ஆத்மாவுக்குப் பரம திருப்தியும் சுகமும் கிடைக்கும். கண் கூசாத இந்த நிழலிலிருந்து பார்த்தால் உலகத்தின் திருகுதாளங்கள் எல்லாம் விளங்கும். அது விளங்க ஞானம் ஸ்திரப்படும். இது ஸ்திரப்படும் வரையில் ஜென்ம கிலேசம் இருந்தே தீரும். இவையெல்லாம் பலரும் பலகாலமாய்க் கெட்டுப் பழகிய பாடங்கள். இருந்தும் ஏதோ ஒருவனுக்குத் தவிர மற்றவர்களுக்கு இதில் உள்ளார்வம் உண்டாவதில்லை. அதற்குத் தக்க காரணம் உண்டு. புண்ணியக் குறைவு அதுதான் காரணம். அதனால் அந்த ஆர்வம் இல்லாதவர்களுக்கு ஞான வாசனை வருவதற்கு நிறையப் புண்ணிய கருமங்களைச் செய்து வரவேண்டும். கடுகளவேனும் சுயநலமில்லாமல் புண்ணிய சீலராய் வாழ்ந்தால் ஒரு நாள் ஞானக் கதவு நிச்சயம் திறக்கப்படும்.
மரங்கொத்திப் பறவை என்றொரு பறவை இருக்கின்றது.அதற்கு நல்ல மரத்தில் கூடுகட்டி முட்டையிட வேண்டுமென்றொரு ஆசையிருப்பதால் நல்ல மரங்களைத் தேடி எல்லா மரங்களையும் கொத்திப் பார்த்துக் கொண்டு திரியும். ஒரு மரத்திலும் திருப்தி வருவதுமில்லை.இதற்கிடையில் ஆகாயத்திலே முட்டையும் போட்டு முட்டை கீழே விழுந்து உடைகின்றது. இதைப் போலவே மனிதனும் எல்லாவற்றையும் ருசிபார்த்துத் திரிகிறான். ஒன்றிலும் போதும் என்ற திருப்தியும் சுகமும் உண்டாவதில்லை. நிரந்தரமான திருப்திக்குரிய ருசி எதிலிருகின்றது என்று அறிவதற்கிடையில் மரணம் மனிதனைக் கௌவிக் கொள்கின்றது. இதே நிலை மாறி மாறி நிகழ்ந்து கொண்டிருப்பதால் ஜீவனுக்கு ஈடேற்றங் கிடைப்பதில்லை. எத்தகைய சுகங்களை அனுபவித்தாலும் அவற்றிலெல்லாம் ஒரு பற்றாக்குறை அல்லது ஒரு திருப்திக் குறை இருப்பதாகத் தோன்றும். அந்தப் பற்றாக்குறைதான் ஜீவிதாசைகளைப் பரிபூரணப் படுத்தும் ஞானம். ஞானம் மிளிர்ந்தால் குறையிலும், நிறையிலும் நிரந்தரமான திருப்தி, நிரந்தரமான சுகம். இந்த அனுபவத்திற்கு வரவேண்டிய மனிதர் மரங்கொத்திப் பறவையைப் போல் வாழ்வதென்றால் அது பெரும் சங்கடத்தில் முடியும்.மனிதருடைய முயற்சியின்பங்களுக்குப் பரிபூரணத்துவம் வராது. ஆகையால் ஜென்ம சுகம் சம்பூரணமடைவதற்கு நேர காலத்துடன் ஞான வழியில் முயற்சிக்க வேண்டும். முகத்தில் தாக்கப்படும் அலை உணர்வுகளைக் கொண்டு அனுகூலப் பிரதிகூலங்களை அறிந்து வாழும் வௌவால் போன்று மனிதன் தான் மெய்யுணர்வு அலைகளுக்குள் ஐம்புல வாசனைகளைச் சுருட்டி எறிந்தால் மெய்யுணர்வு அலைகள் அவனை ஞானக் கரையில் ஏற்றி விடும். இனிமேலாவது கிடைத்த ஜென்மத்தைப் பாழாக்காமல் உறுதியான வைராக்கியத்துடன் அப்பியாசித்து ஞானமாகிய பெரும் பேற்றைப் பெறுக.
No comments:
Post a Comment