Wednesday 23 July 2014

ஞான மண்டலம்


விஞ்ஞானம் இப் பூவுலகத்திற்குப் புதியதாய் வந்த தொரு நவீன சாஸ்திரம் என்று கருதுவது பிழை. இதற்கு முன்பும் அது அநேக தரம் வந்தும் போய்க் கொண்டு மிருந்திருக்கின்றது. மின்சார சேமிப்பு நிலையங்கள் வெறும் சேமிப்பு நிலையங்களே தவிர, உற்பத்தி நிலையங்க ளல்ல. அது வேறொரு இடத்தில் உற்பத்தியாகிச் சேமிப்பு நிலையங்களுக்கு வினியோகிக்கப்படுகின்றது. விஞ்ஞான அறிவும் மனிதர்களுடைய மூளையிலிருந்துதான் உற்பத்தியாகின்றதெனக் கருதுவது மிகத் தவறு.வெறும் ஜடப் பொருளாகிய மூளை அறிவு மண்டலத்தில் ஒரு வானொலிப் பெட்டியின் 'வாலப் f' போன்றது. அதற்கு மேற்பட அதற் கொரு ஸ்தானமும் உபயோகமுமில்லை. அப்படியென்றால் இந்த அறிவெல்லாம் மூளைக்கு எங்கிருந்து வருகின்றது? பிரபஞ்சத்தின் கருவூலத்தில் இருக்கும் ஞானமய கோசத்திலிருந்து உருவாகி எமது பிண்டத்திலிருக்கும் ஞானமய கோசத்தின் வழியாக மூளைக்குச் செல்கின்றது. இந்த உண்மையை உணராமல் மனிதருடைய மூளைதான் விஞ்ஞானம் முதலிய அறிவுக்கு மூலகர்த்தா என்று நினைக்கும் பொழுது அவனுக்கொரு அகந்தை வருகின்றது. நான்தான் சிருஷ்டி கர்த்தா என்பதுதான் அந்த அகந்தை. இந்த ஆணவத் திமிர்தான் பொல்லா வினைகளை வரவழைக்கின்ற பெரும் பூதங்கள். மனிதன் காரண காரியங்ககளைப் பற்றிய யதார்த்த அறிவுடையவனாகும் பொழுது பெரும் குழப்பங்களை விளைவிக்கின்ற இந்த ஆணவத் திமிர் தானாகவே ஒடுங்கி ஒழியும்.

குறியில்லாமல் அம்பெய்தால் எய்த அம்பால் ஆபத்துக்களே விளையும். இவ்வாறானதுதான் வாழ்க்கையும். மனிதன் ஒரு உயர்ந்த இலட்சியத்துடன் வாழ வேண்டும். அன்றாடக் கடமைகளை இலட்சியத்தில் பொருந்தும் வண்ணம் செய்து கடமையின் பலாபலனாகிய இன்ப துன்பங்களை இலட்சியத்துக்காக சமர்ப்பணம் பண்ணவேண்டும்.இவ்விதம் வாழுகின்றவன் சீரிய குறிக்கோளையடைந்த ஒரு பெருமகனுக்குரிய சுதந்திரத்தையும் சுகத்தையும் அனுபவிக்கிறான்.

ஞானம் இதுதான் இலட்சியங்களில் சிறந்த இலட்சியம்.ஜீவித தர்மங்கள் இந்த இலட்சியத்துடன் இணையாவிட்டால் வாழ்க்கையின் அச்சாணி உடையும். பணமும் பொருளும் வாழ்க்கைக்கு அவசியமான போதினும் மனிதன் வெறும் பொருளாதாரப் பிராணியாக மாறுவது ஆபத்தானது. ஜீவாதாரத் தேவைகளில் தன்னிறைவெய்தினாற் கூட மனிதன் திருப்திப் படுவதில்லை.அதற்கப்பால் ஒரு இருதய தாகம் இருக்கிறது. மனிதருடைய மன வேட்கைக்கு முடிவு காணும் அந்த அந்தரங்க ஆத்மீக மூல உணர்வுகளை மனித சமுதாயம் புறக்கணிக்கும் போது நீர் வற்றி வரண்டுபோன குளத்தை விட்டு நீர்ப்பறவைகள் பறந்து செல்வது போன்று அமைதியும் அகமும் உலகத்தை விட்டுப் பறந்து செல்கின்றது. மனித இருதயங்கள் ஞான கலசங்கலாகப் பரினமிக்கும்போது சமுதாயங்களுக்கிடையில் தெய்வீக உறவு நிலவுச் சாந்தியும் சமாதானமும் வேரூன்றித் தழைக்கும்.

ஒரு ஆசிரியர் தனது மாணாக்கர்களின் கல்வித் தராதரத்தை அறிவதற்காக இடையிடையே பல சோதனைகளை நடத்துகின்றார். மாணாக்கர் கற்ற கல்வியில் எவ்வளவு துரம் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்பதைத் திட்டவட்டமாக ஒரு ஆசிரியருக்கு கிரகிக்க முடியாமையால் ஒரு பரிட்சை மூலம் கிரகிக்க வேண்டியிருக்கின்றது. இறைவனும் தனது பக்தர்களை அடிக்கடி சோதனை செய்து பார்க்கின்றார் என்பது இறை பக்தர்களின் நம்பிக்கை. இறைவனோ சர்வக்ஞன். எல்லாம் அறிபவனாகிய இறைவனுக்கு சோதனையென்றொரு மத்திமம் மூலமாகவா பக்தர்களின் உள்ளத்தை அறியவேண்டும்? முக்காலமும் உணர்ந்த முழு முதல் மூர்த்திக்கு நமது மனதிலிருக்கும் அதி சூக்குமமான அசைவுகளைக் கூட சொதனையொன்றுமில்லாமலே நன்கு அரிய முடியும். பின்னர் நம்மையெல்லாம் சோதிப்பது எதற்காக? அது நம்மை நாம் அறிவதற்கு. மற்றொன்றுக்குமாகவல்ல. இதை உணர்ந்தவர்களுக்குத் துன்பமும் துயரமும் இல்லை. மனக் கலக்கம் அன்னவர்களைத் தீண்டுவதுமில்லை.தெய்வம் நம்மை வருத்துவதன் நோக்கத்தை உணர்ந்து அதற்குக் கீழ்ப்படிந்து வாழ்கின்றவர்கள் ஞானத்தின் ஏழு படிகளாகிய சுபேச்சை, விஜாரணை, தனுமானசி, சத்துவாபத்தி, அசம்ஸத்தி, பதார்த்தாபாவனை, தூரியம் என்ற ஏழு நிலைகளையும் கடந்து சாயுச்சியம் என்ற பரம பதத்தை அடைகின்றனர்.

துரியோதனன் முழுமுதற் கடவுளாகிய கார்வண்ணனைத் தரிசித்தவன். அவன் ஸ்ரீ கிருஷ்ணபகவானுடைய முப்பெரும் சக்தியை உணர்ந்திருந்தான். அது மாத்திரமல்ல. தினசரி ஸ்ரீ கிருஷ்ணனுடன் உறவாடும் அரிய சந்தர்ப்பங்களும் துரியோதனனுக்குக் கிடைத்திருந்தது. கிடைப்பதற்கரிய பெரும்பேறு அவனுக்குக் கிடைத்திருந்தும்,இறையவதாரமாகிய ஸ்ரீ ஹரிக்கு எதிர்மாறாகவே செயல் புரிந்தான். இறுதியில் பகவானுடைய பகைவனாகவே மாறிவிட்டான். படைத்தல், காத்தல்,அழித்தல் போன்ற முப்பெரும் சக்தி வாய்ந்த இறைவனுடன் நேர்முகமாகப் பகை கொள்வதற்குரிய துணிச்சல் எவ்வாறு உண்டாயிற்று? அவனுடைய கடும் ஆணவத்தாலும் பேராசையாலும் அந்தத் துணிச்சல் உண்டாயிற்று. இவ்விரு கொடிய குணங்களால் அவனுடைய ஆட்சியும் அந்தஸ்த்தும் உயிரும் பறிக்கப்பட்டன. உலகம் எத்தகைய நற்பேறுகள் எய்தினாலும்சரி, ஆணவத் திமிரும் பேராசையும் அடங்காவிட்டால் துரியோதனன் கதை போன்றுதான் முடியும். புராண இதிகாசங்களும் சரித்திர வரலாறுகளும் இதனை ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கின்றன.


சரணாகதி 


பல ஜென்மங்களில் செய்த புண்ணியத்தின் பயனாக ஒருவருடைய மனதில் பகவத் பக்தி தோன்றுகிறது. களஞ்சியத்தில் கிடக்கின்ற வித்து, அங்கு கிடந்தபடி முளைவிட்டுக் காய்த்துப் பலன் தருவதில்லை. பண்படுத்திய நிலத்தில் விதையை விதைத்து,நீரிறைத்து உரமும் போட்டுப் பக்குவமாய் வளர்த்தெடுத்தால்தான் அது பலன் தருகின்றது.
அதே போன்று, மனிதனுடைய மனதில் பீஜாவஸ்தையில் இருக்கின்ற பக்தியுணர்வை, ஞானானுஷ்டானங்களால் விருத்தி செய்து இறையருளைப் பெறவேண்டும்.
இந்தப் பிரதான தர்மத்தில் யாதொரு முயற்சியும் செய்யாத ஜனங்கள், கற்பூரம் கொளுத்தி,தேங்காயுடைத்து ஒரு தோத்திரத்தையும் பாடினால், ஆகாத காரியமெல்லாம் கடவு ஆக்கித் தரவேண்டுமென்று எண்ணுகின்றனர்.இந்த லட்சணத்தில்தான் அநேக பக்தர்களின் பக்தி விசுவாசங்கள் இருக்கின்றன.



துரியோதனாதியர் பாஞ்சாலியை வஸ்திராபகரணம் செய்தபோது ஒரு கையால் சேலையைப் பிடித்தபடி, மற்றக் கை உயர்த்தி கண்ணா! கண்ணா!! என்று அரற்றி அழுதாள். கண்ணன் வரவேயில்லை. இறுதியில் இரு கரங்களையும் உயர்த்தி, நெஞ்சுருகி அழுத் பொழுதுதான் கண்ணன் தரிசனம் கொடுத்தார்.
பாஞ்சாலியைப் போன்று தன்னை மறந்து, கண்ணை இழந்த நிலையில் கடவுளிடம் சரணாகதி அடையும் மனப் பக்குவம் நமக்கு வரும் பொழுது மாத்திரந்தான், இறைவனுடைய அருளாசிகள் கிடைக்கும்.

கடவுள் நமக்கு எல்லாவற்றையும் தருவார் என்ற நம்பிக்கையைவிட, எல்லாம் தந்திருக்கிறார் என்ற உண்மையை உணரும் பொழுது, எல்லாம் நமக்கு முன்னே இருப்பதாகத் தெரியும்.

நாம் இப்பூமண்டலத்திற்கு வருமுன், சீவியத்திற்குத் தேவையானவற்றை எல்லாம் ஒரு குறையும்மில்லாமல் நமக்கு முன்னே ஆக்கி வைத்தபின்தான் எங்களை இறைவன் இங்கு இறக்கி விடுகிறான்.

கர்ப்பப் பையிலிருந்து வெளிவரும் குழந்தைக்கு பசி, தாகம் தணிப்பதற்குரிய பாலமுதைத் தாயினுடைய தனத்தில் சுரக்க விட்ட பின்புதானே குழந்தையும் வெளிவருகின்றது.

இவ்வளவு தூரம் பெருங் கருணை காட்டிப் பாதுகாப்பளிக்கின்ற இறைவனுடைய மகா தயாள குணத்தை ஒரு கணம் நினைத்தால் போதும், மனம் அவன்பால் பற்றிப் பக்திமயமாவத்ர்கு.

இவ்வாறு உயிரினங்களை மறவாது கருணை கூர்ந்து சம்ரக்ஷனை செய்து வருகின்றவனை மறுத்து, கர்வங்கொள்கின்ற பொழுதுதான் வினையும் வந்து சூழ்கின்றது.அடுத்தவருக்கு ஒரு சிறு உபகாரம் செய்தால் அதற்கு பிரதிபலனை மனிதர் எதிர் பார்க்கின்றனர்.கிடைக்காதவிடத்தில் அவர்களை நன்றி கெட்டவர்களாகவும், பெரும் பகைவர்களாகவும் கருதிக் கொள்கின்றனர். அவ்விதமாயின் மனிதரைப் படைத்து, இமைப் பொழுதும் மறவாமல் காத்து வருகின்ற இறைவனுக்கு நெஞ்சார உபசாரம் செய்யாவிட்டால் அவனுக்கு மனிதர்கள் நன்றி கெட்டவர்களாகவும், பகைவர்களாகவும் தானே இருக்க வேண்டும். ஆனால் இறைவன் நம்மவர்களைப் போன்று அப்படியெல்லாம் நினைப்பதில்லை.

அவன் தன்னை நினைப்பவருக்கும், நினையாதவருக்கும் தன்னுடைய கருணா கடாக்ஷத்தைச் சமமாகப் பொழிகின்ற பெருங் குணமுடையவன்.

மனப் பயம், மனக் கலக்கம் வரும் பொழுதும், வராத பொழுதும் அவனையே தஞ்சமெறெண்ணி நின்றால் பொல்லாப்பு அகன்று வாழலாம்.

மனம் நொந்து போய்த் தளர்ந்த நிலையில் இறைவன்பாற் கொள்ளும் சரணாகதியைத் தவிர, மனத் துயரம் தீர்ப்பதற்கு வேறென்ன வழி? வரேன்ன கதி? இதனை மக்கள் நன்கு சிந்தித்து செயல் பட்டால், முக்தி இன்பம் பெறலாம் என்பது திண்ணம்.