Wednesday 31 December 2014

ஞான மண்டலம் மரணத்திற்குப் பின்...

#ஞான மண்டலம் 

மரணத்திற்குப் பின்...

வாழ்க்கையின் முடிவு மரணம் என்பது அனைவரும் அறிந்த விஷயம். மரணத்திற்குப் பின் என்ன? என்பதை யாரும் அறிவதில்லை.
விஷய ஞானம் இல்லாத இடத்தில் பயம், பீதி முதலிய மனக் கஷ்டங்கள் தோன்றுவது சகஜம்.
மரணம் என்று நினைக்கும் பொழுது மரணத்திற்குப் பின் என்ன நிகழ்கின்றது என்ற சரியான அறிவில்லாததால் மரண பயம் உண்டாகின்றது.
மரணம் என்பது ஜீவனைப் பொறுத்தவரையில் புதிய சக்தியும், உற்சாகமும், புது ஆற்றல் திறமையும் உயிரில் உருவாகும் ஒரு புனிதமான நிகழ்ச்சி.
பகல் முழுவதும் உழைத்துக் களைப்படைந்தவர்களுக்கு இரவு உறக்கம் கலை தீர்த்துப் புத்துணர்வும், தென்பும் அளிப்பதைப் போன்று வாழ் நாள் முழுவதும் பல துறைகளிலும் செயலாற்றி வாழ்வில் களைப்படைந்த மனிதர்களுடைய ஜீவன் சுயமாகவே ஏற்றெடுத்த ஒரு தீர்க்க கால உறக்கம் அல்லது ஓய்வுதான் மரணம். பழுதடைந்த உடையை மாற்றிப் புது உடை அணிவது போன்று ஜீவன் தனது லட்சியத்தை அடையும் வரையும் பழுதடைந்த சரீரத்தை மாற்றிப் புதுச் சரீரத்தில் நுழைய வேண்டி இருக்கிறது.
மரணத்திற்குப் பின் உயிர்கள் என்ன நிலை அடைகின்றது என்பதைப் பற்றி இந்து சமய சாஸ்திரங்கள் விளக்கந் தருகின்றன.
கண்ணுவன், கபிலன் போன்ற மகா ரிஷிகளின் பரிணாம சித்தாந்த சாஸ்திரங்களில் இது விஞ்ஞான பூர்வமாகத் தெளிவு படுத்தப்பட்டு இருக்கின்றது.
நசிகேசன் நமனைக் குருவாக ஏற்பதற்குரிய காரணம், மரணத்திற்குப் பின் ஜீவனுடைய நிலையை அறிவதற் குரிய பெரும் அவா தான் என்பதை கடோபநிஷாதம் கூறுகின்றது.
ஒரு நோயாளி நோயை குணப் படுத்துவதற்காக ஒரு வைத்தியரைச் சந்திக்கச் செல்கிறான். பின்னர் சந்திக்க முடியாமல் திரும்பி வருகிறான். மீண்டும், மீண்டும் செல்லும் பொழுதும் அதே நிலைதான்.
மருத்துவரைச் சந்திக்கும் வரையும் வருத்தமுடையவர் வருவதும் போவதுமாகிய நிகழ்ச்சி நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.
மருத்துவரைச் சந்திப்பதுதான் நோயுடையவரின் நோக்கமாகையால் அது கைகூடும் வரையும் இவ்வாறு நிகழ்ந்து கொண்டிருக்கின்றது.
ஜீவன் சிவனுடன் ஐக்கியப் படுவதுதான் பிறவியின் நோக்கம் என்ற காரணத்தினால், ஜீவன் சுத்த சிவன் நிலை அடையும் வரையும் பிறப்பு,இறப்பு என்பன நிகழ்ந்து கொண்டிருக்கும்.
உயிரை பற்றிய சில அடிப்படைத் தத்துவங்களைத் தெரிந்து கொள்ளும் பட்சத்தில் இவ் விஷயத்தில் இருக்கும் பல சந்தேகங்கள் தீர்க்கப்பட்டு விடுகின்றன.

உயிரியல் சாஸ்திரம்:

இந்து மத உயிரியல் சாஸ்திரப்படி சகல சராசரங்களும் உயிருடையன. தூணிலும், துரும்பிலும் உயிர் ஊடுருவி நிற்கின்றது .மனிதனும், மனிதனுடைய நிழலும் போன்று உயிர் பரமாத்மாவின் பிரதி பாசம்.
ஆகையால் உயிரை ஆக்கவும், அழிக்கவும் முடியாது. உயிரை உண்டாக்க முடியாத காரணத்தால் ஒரு புதுச் சரீரம் உருவாகும் பொழுது, நிலையான பழைய உயிரைத் திரும்பவும் சுவீகரிக்க வேண்டியிருக்கிறது.
பழைய உடல் அழிந்து புதுப் புது உடல் உருவாகிக் கொண்டிருப்பதாலும், என்றும் இருக்கின்ற உயிரை அழிக்கவும், ஆக்கவும் முடியாதிருப்பதாலும் மறு பிறப்பு என்பது நிகழ்ந்து கொண்டேயிருக்கும்.

மரணம்:

ஒரு திரவத்தின் அடிப்படையான இறுதி அணுக்களில் இருந்து விஷேச ரீதியில் உருவாகும் அலைநீள சலன சக்தியே உயிரென்று நவீன அலைச் சித்தாந்த சாஸ்தி ரங்கள் கூறுகின்றன.
ஜீவன் தேகத்திலிருந்து பிரிவது (மரணம்) ஒரே நேரத்தில் ஒரே முறையில் நிகழ்வதில்லை.ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் இரண்டு தரமாக ஜீவன் பிரிந்து செல்கின்றது.
முதல் தரம் நிகழ்கின்ற மரணம் தைதீக மரணம் என்றும் இரண்டாம் முறை நிகழ்வது கோச மரணம் என்றும் சொல்லப்படும்.
வெறும் சரீரத்திலிருந்து மாத்திரம் உயிர் பிரிந்து சரீரம் செயலாற்றுப் போகும் நிலைக்கு தைதீக மரணம் என்றும், இறுதியில் பஞ்ச கோசத்திலிருந்து உயிர் பிரிவதை கோசீக மரணம் என்றும், பஞ்ச கோசத்திலிருந்து முற்றாக ஜீவன் பிரிந்தாற்றான் உண்மையான மரணம் சம்பவிக்கின்றது என்றும் கூறப் படுகிறது.
தைதீக மரணத்திற்குப் பின் இரண்டு அல்லது மூன்று மணித்தியாலத்திற்குள் கோசீக மரணம் நிகழ்கிறது.
அபூர்வமாக சில சந்தர்ப்பங்களில் கோசீக மரணம் நிகழ்வதற்கு முன், சரீரத்தி இருந்து பிரிந்து நின்ற ஜீவன் திரும்பவும் சரீரத்தில் நுழைவதுண்டு.
இதைத்தான் இறந்தவர் மீண்டும் உயிர் பெற்ற சம்பவமாகக் கேள்விப்படுகிறோம்.
எனவே சில சந்தர்ப்பங்களில் இவ்விதம் நிகழ்வதால் சரீரம் அதிகம் பழுதடையாத நிலையில் மரணம் சம்பவிக்கும் போது, குறைந்தது ஆறு அல்லது எட்டு மணித்தியாலங் களின் பின்னர் தகனம் செய்வதுதான் உசிதமானதாகும்.

ஞானம்:

முன் ஜென்மங்களைப் பற்றி அறிவதற்கு "பரித்துவாஜ தர்சனம்" என்ற ஒரு சாஸ்திரக் கிரந்தம் இன்றும் நடைமுறையில் இருக்கின்றது. இதை இதய சுத்தம் உடையவர்கள், நாலு ஆண்டுகள் அப்பியாசித்தால் தமது சொந்தப் பூர்வ ஜென்மங்களைப் பற்றியும், எட்டாண்டுகள் பயின்றால் மற்றவரகளுடைய பூர்வ ஜென்ம விருத் தாந்தங்களைப் பற்றியும் அறியத் தக்க ஞானம் சித்திக்கும்.
அல்லது மூலாதார சக்தியை ஆதார சக்கரங்கள் வழியே சகஸ்ராரத்தில் ஏற்றி நிறுத்திப் பழகிய மகா யோகிகள், சித்தத்தில் அடங்கிக் கிடக்கும் பூர்வ ஜென்ம வாசனை களில் சம்யமனம் செய்து பார்க்கும் பொழுது முன் ஜென்மங்களைப் பற்றிய அறிவு கிடைக்கின்றது.
ஜீவன் பிறவி தோறும் செய்த கர்ம பலாபலங்களுக்குத் தக்கபடி, அடுத்தடுத்துப் பிறவிகளை எடுத்துச் சுக துக்கங்களை அனுபவிக்கின்றது. முற்ஜென் மங்களில் செய்த கர்ம பலன்களைப் பற்றி மனிதன் அறிவாநாக்கில் பாப கர்மங்களைப் புரிவதற்கு அஞ்சி வாழ்வான்.
ஆகையால் பிறவி தோறும் வினையாற்றிக் களைப் படைந்த ஜீவன் களையைத் தீர்த்துப் புத்துணர்வு பெறுவதற்காக மரணம் என்ற ஒரு இடைக்கால ஓய்வெ டுப்பதைப் பற்றிச் சந்தோஷம் அடையாமல் பயப்படுவதேன்?

Tuesday 30 December 2014

புத்தாண்டுப் புதுக்கவிதை



புத்தாண்டில் பூத்து வரும் புதுக்கவிதை
பத்தாண்டில் பழங் கருவாய் போயிருக்க
மற்றாண்டில் நிகழ்ந்தவைகள் நினைவுமாக
மலரட்டும் மற்றுமொரு மகத்தான புத்தாண்டு.

ஆண்டாண்டு தோறும் வரும் புத்தாண்டு
ஆங்காங்கே தோன்றி வரும் புதுக்கவிதை
வேண்டாங்க, மற்றவங்க மனம் நோகுமென
வேண்டாத வரிகள் நீக்க மனைவி இல்லை.

தாங்காத என் வலியைக் கவியாய் சொல்ல
தடையாக நின்றவளும் புவியில் இல்லை
நீங்காத நினைவலைகள் வந்து போக அவள்
தாங்காத சிலவரிகள் அழிந்து போகும்.

அவள் வடித்த முதல் கவிதை என் தமக்கைகாக
அவள் படித்த பல கவிதை என் படைப்பிற்காக
அவள் துடித்த துடிப்பெல்லாம் என் வலியை பார்த்து
அவள் முடித்த கதையை நான் தொடருகின்றேன்.

புத்தாண்டே நீ வர வேண்டும்; புத்துணர்வை
அள்ளித் தரவேண்டும்; சத்தியத்தின் பாதையிலே
தர்மங்கள் தழைக்க வேண்டும்; அன்போடு
அமைதி இந்த அகிலத்தை ஆள வேண்டும். "ஜோ"

Thursday 25 December 2014

இதயத் தியானம்

ஞான மண்டலம் 


இதயத் தியானம் 


மனிதன் மங்களகரமான பல சங்கர்பங்களுடந்தான் வாழ்க்கையை ஆரம்பிக்கின்றான். காலக் கிராமத்தில் குடும்பம், உற்றார் உறவினர், பொரு ளாதாரம், சரீரம், தன் மானம் போன்றவை களிளிருந் தெழும் உபாதிகளுடைய உபத்திரவங்களால் மனதின் சம நிலை கெட்டு மனம் தொல்லை கொடுக்க ஆரம்பிக்கின்றது.
சிறுகச் சிறுகப் பெருகிவரும் மனத் தொல்லைகளுடன் சில காலங் கழிய, ஏற்கனவே மனதில் வைத்திருந்த சங்கற்பங்களுக்கு எதிர் மாறாக அன்றாட அனுபவங்களும் நிகழ்ந்து கொண்டுவர, மனமானது மென்மேலும் கலக்கமடைந்து புத்தியும் தடுமாறி சமுத்திர அலைகளில் அகப்பட்ட பந்து போல் தத்தளிக்கின்றது.
எண்பத்து நான்கு லட்சம் பிறவிகளில் அபூர்வமாகப் பெற்றெடுத்த இந்த மனித ஜென்மம் அஞ்ஞானத்தால் இப்படி ஒரு சோக நாடகமாய் முடிவடைகிறது.
ஆசைப்பட்டுக் கொண்டிருக்கும் உலகியல் இன்பங்கள் எல்லாம் இன்று வரும், நாளை வரும் என்று எதிர் பார்த்துக் காலத்தை விரயமாக்காது எஞ்சிய காலத்தை யாவது ஞான தர்மங்களை அனுசரித்து வாழ்ந்து இருளில் இருந்து ஒளிக்கு வர முயற்சிக்க வேண்டும்.
ஜீவித கிலேசங்களில் இருந்து விமோசனம் அடைவதற்கு ஞான தர்மங்களை அன்றாட வாழ்க்கையுடன் இணைப் பதைத் தவிர வேறு வழியில்லை என்பதையும் உணர வேண்டும்.
பரிசுத்தமான இருதயத்தில் இருந்துதான் களங்கமற்ற பெரும் சுகத்தைத் தரும் தெய்வீக அமிர்தக் கசிவு ஊற்றெடுக்கின்றது. அந்த அமிர்தக் கசிவில் இருந்து ஒரு சிறு துளியேனும் ஒருவன் ஒருமுறை உட்கொள்ள முடியுமேயானால் அனுடைய வாழ்க்கைச் சேற்றில் முளைத்த வெண்டாமரை போல் அருள் மழை பொழிந்து மலரும்.
இந்தத் தெய்வீக மாற்றங்கள் வெறுமனே ஞான நூல்களை வாசிப்பதாலோ அருளுரை கேட்பதாலோ உண்டாவது இல்லை. அப்பியாச - அதொன் றினாலன்றி வேறொன்றினும் அது சித்திப்பதில்லை. எனவே உறுதியான வைராக்கியத்துடன் ஒரு ஆத்மீக உள்முகப் பயிற்சிக்கு உங்களைத் தயார் படுத்திக் கொள்வீர்களாக.
முத்துச் சிப்பியில் விழும் ஒரு சிறு மழைத் துளி விலை மதிக்க முடியாத ஒரு முத்தை உருவாக்குவது போன்று ஒழுங்கான ஒரு சிறு ஆத்மீகப் பயிற்சி கூட ஒருவனைக் கடைத்தேற செய்யப் போதுமானது.
வைகறையில் உறக்கமுணர்ந்து சிறிதளவு குளிர்ந்த ஜலம் பருகிக் காலைக் கடன்களை முடித்துக் கொள்க. நேர வசதிக் கேற்றவாறு தேகப் பயிற்சிகள் செய்து முடிந்த பின்னர் நீராடுக. தேகசுகம் குறைந்தவர்கள் ஈரச் சீலையால் சரீர சுத்தி செய்தல் போதுமானது.
அதற்குப் பின் வழிபாட்டறையில் அல்லது தூய்மையான இடத்தில் விளக்கேற்றி நறுமணம் வீசும் மலர்களை வைத்துத் தக்க ஆசனத்தில் நேரே நிமிர்ந்து அமர்ந்திருக்கவும். மனம் கசிந்துருகும் வண்ணம் பக்திப் பாடல்கள் சிலவற்றைப் பாடிய பின்னர் குரு வணக்கமும் இறை வணக்கமும் செய்து முடிக்க வேண்டும்.
பின்னர் சுருக்கமான முறையில் ஆராதனைகளைச் செய்க. உடம்பை நேராக வைத்திருந்து மூக்கு நுனியைப் பார்த்தபடி சிறிது நேரம் இருந்த பின் நாசியை விரலால் பிடிக்காமல், இரு நாசித் துவாரங்களாலும் சுவாசத்தை நிதானமாக உள்ளிழுக்கவும். நெஞ்சில் வைத்திருக்கக் கூடிய அளவுக்கு வைத்திருந்து மெல்ல மெல்ல வெளி விடவும். சுவாசத்தை உள்ளுக்குள் இழுக்கும் பொழுதும், வெளி விடும் பொழுதும் சுவாசம் ஆடாமல் முறியாமல் பார்த்துக் கொள்ளவும்.
சுவாசத்தை ஏற்றி இறக்கும் பொழுது மனதை அதில் லயப் படுத்துவது அவசியம். இதனைச் செய்யக் கூடிய அளவுக்குச் செய்து (ஆரம்பத்தில் ஐந்திலிருந்து பதினைந்து தடவை) முடிக்கவும்.
பின்னர் நாசி வழியாக ஓடித் திரிந்து கொண்டிருக்கும் சுவாசத்தை ஊன்றிக் கவனித்தபடியே இருக்கவும். இது சரியாக அமைந்தால் கொஞ்ச நேரத்திற்குள் எண்ணங்கள அடங்கி மனம் சாந்த நிலையடையும்.
சாந்த நிலை அடைந்து வரும் மனதைச் சகுணத் தியானத்தில் நிறுத்திப் பழக வேண்டும். இறைவனுடைய ஏதாவதொரு திருவுருவத்தை நெற்றி, இருதயம், நாபி போன்ற தியான ஸ்தானங்களில் சங்கல்பித்து அதில் மனதை இடையறாது நிறுத்திப் பழகுவதுதான் சகுணத் தியானம் என்பது.
இதனை இருவேளை செய்க. தியானம் முடிந்த பின் எழுந்து தியான சித்திக்காக இறைவனுடைய தாளிணைகளை மனப் பூர்வமாக வணங்கி சாந்த சீலனாய் அன்றாடக் கடமைகளைச் செவ்வனே செய்து வருக. வீட்டில் இட வசதி இல்லாவிடில் ஆலயம் போன்ற இடங்களில் செய்வது நலம்.
பயிற்சிக் காலத்தில் தாது புஷ்டிக்கும் மன ஒருமைப் பாட்டிற்கும் உதவக் கூடிய பசும்பால், பசு நெய், தேன் போன்றவைகளை உட்கொள்ள வேண்டிய வசதியும் தேக நிலையும் இருப்பவர்கள் பகல் வேளையில் மாத்திரம் உட்கொள்ளவும், இரவு படுக்கைக்குப் போகும் முன் திரிபலாதி சூரணம் ஒரு களஞ்சியம் அளவில் எடுத்துச் சர்க்கரையில் குழைத்து உண்டு இளம் வெந்நீர் பருகிப் படுக்கவும். இது மல சுத்தியைச் செய்து வாத, பித்த, கப தோஷங்களைத் தீர்க்கும்.தேகத்தையும் ஆரோக்கியமாய் வைத்திருக்க உதவும்.
ஆசார சீலராயிருந்து ஒரு மண்டலம் தொடக்கம் மூன்று மண்டல காலம் வரையில் (ஒரு மண்டலம் நாற்பத்தொரு நாள்) தொடர்ந்து பழகி வரும் பொழுது உடலிலும் உணர்விலும் நல்ல மாற்றங்கள் தென்படும்.
சுபாவத்திலும் இம்மாற்றன்களைக் காணலாம். இடை யிடையே தெய்வீக தரிசனங்கள் கிடைக்கும். அவை மனம் ஒரு முகப் பட்டு வரும் பொழுது காணும் மானசீக தரிசனங் களைத் தவிர ஞான சித்திகளல்ல.
அநுபவங்களை அடக்கமாக வைத்திருக்கவும். இந்த சாதனையை அன்றாட வாழ்க்கையுடன் இணைத்து வாழுகின்ற ஒருவருக்கு அருளொளி வீசும். ஒரு புதுக் கோணத்தில் இருந்து வாழ்க்கையைப் பார்ப்பதற்கும் அனுபவிப்பதற்கும் முடியும்.
அது மாத்திரமல்ல, ஜீவிதப் பிரச்சனைகளில் யதார்த்த காரணத்தைக் கண்டறிந்து, அதிலிருந்து விமோசனம் அடைவதற்குரிய மார்க்கங்களைத் தெளிந்து காண்பான். பட்ட மரத்தைத் துளிர்க்க வைக்கும் விருஷியூர் வேத காயகற்ப சிகிச்சை போன்று, இச்சிறு ஆத்மீகப் பயிற்சி தளர்ந்து போன வாழ்க்கையை மீண்டும் துளிர்க்க வைக்கும்.
பயிற்சியின் ஆழமும் சக்தியும் கூடிவரும் பொழுது அண்ட சராசரங்களுடைய சூத்திரதாரியாகிய இறை வனுடைய சூத்திரக் கயிற்றில் கோத்து ஆடிக் கொண்டிருக்கும் பாவைகள்தான் இப் பிரபஞ்ச வஸ்துக்களும், அதில் உட்பட்ட நாங்களும் என்ற பரமார்த்தீக போதம் வரும். இந்தப் பெரும் அநுபவ அறிவுதான் ஜன்மக் கிலேசங்களைத் தீர்க்கும் சம்பூரண ஞானம்.

Pictures


Friday 19 December 2014

மெய்யுணர்வு




#ஞான மண்டலம்

 

மெய்யுணர்வு 


உலகம் உணர்வு மயம். பதியிலிருந்து பசுக்கள் வரை சங்கிலித் தொடர்பு போல் நீண்டு விரிந்து நிற்கின்றது உணர்வு. உணர்வின் மாற்றத்திற்குத் தக்கபடி உயிர் பல வடிவங்கொள்ளும். உணர்வு இரண்டு வகைப் படும். ஒன்று சிற்றுணர்வு அல்லது பொய்யுணர்வு. மற்றது உள்ளுணர்வாம் மெய்யுணர்வு. சிற்றுணர்வு மனம், புத்தி, காயங்களுடன் சம்பந்தப்பட்டு புறவாழ்வைத் தூண்டி நிற்கும். மெய்யுணர்வு இதயத்தின் ஆழ்ந்த பகுதியில் மெய்ப்பொருளை ஊடுருவி நின்று அகவாழ்வை உணர்த்தி நிற்கும். அறிவும் உணர்வும் ஒன்றோடொன்று சம்பந்தப் பட்டவை. உணர்வு விரிந்து இறுதியில் எப்பொருளில் கலந்து நிற்குமோ அதில் அறிவு வளர்ந்து முற்றுப்பெறும். அதாவது சிற்றுணர்வு மாறி மெய்யுணர்வு ஆகுங்கால் சிற்றறிவு மெய்யறிவாக மாறும். புறவுணர்வு புற வாழ்வினால் வரும் அற்ப சுகங்களைத் தந்து இறுதியில் துன்பத்தில் ஆழ்த்தி நிறுத்தும். உள்ளுணர்வு அகவாழ்வை உணர்த்தி அகப் பொருள் ஒன்றையே நாடி நின்று அதன் வழி வரும் முடிவில்லாத இறை இன்பத்தை அனுபவிக்கச் செய்யும். மனிதனில் இந்த இரண்டுவித உணர்வுகளும் கலந்து நிற்கின்றன. சிற்றுணர்வும் மெய்யுணர்வும் கலந்த கலவையின் வடிவமே மனிதன். மனித உணர்வில் ஒளியும், இருளும், அறிவும்,அறியாமையும் கலந்திருக்கும்.

புற உணர்வு மேலோங்கி நிற்குங்கால் நிலையற்ற குறுகிய இன்பங்களைத் தரும் விஷயாதிகளை நாடிச் செல்ல மனம் தூண்டி நிற்கும். உள்ளுணர்வு மேலோங்கி நிற்கும் பொழுது பந்த பாசங்களைக் கடந்த மெய்ப் பொருளின் இன்பத்தை நாடி மனம் உயர்ந்து செல்லும். நிலையற்ற பொருளை வருந்தி அடைவதும் அதன்பின் இழக்க நேரிடும் பொழுது சினம் கொள்வதும், சினத்தினால் கோபமும், கோபத்தினால் மனங் கலங்கிப் புத்தி தடுமாறுவதும், புத்தி தடுமாற்றத்தினால் அழிவும் உண்டாவதற்குச் சிற்றுணர்வின் ஆதிக்கமே காரணம். சமுகத்திற் காணும் புன்மையான குணங்களும், கபட முயற்சியால் வரும் அழிவுகளும் புறவுணர்வின் விளைவால் வருவனவே. சிற்றுணர்விற்குக் கீழ்ப் படிந்து நிற்கும் மனமானது நஞ்சு கலந்து அமைதியும் இன்பமும் காண முடியாமற் கலங்கி நிற்கும். உலகமனைத்தையும் அடக்கியாளும் வல்லமை பெற்றாலும் சிற்றுணர்வின் வழி நிற்பவன் தன்னில் ஒளியும் இன்பமும்,அமைதியும் காண்பது அரிது. புற வுணர்வுக்குப் பின்னால் சத்தியத்தை நாடி நிற்கும் மெய்யுணர்வின் வழி சென்று, உட்புருஷனின் தொடர்பால் வரும் அருட் சக்திக்கு நமது வாழ்வைத் திறந்து கொடுத்து நிர்போமாகில் ஒளியும், ஆற்றலும், தன்னறிவும் நிறைந்த ஒரு பகுதிக்கு நாம் உயர்ந்து சென்று அத்வைத இன்பத்தில் கலந்து நிற்போம்.

அநேக குறைபாடுகள் நிறைந்து, குழப்ப நிலையிலும் தீராத துன்பத்திலும் திரும்பத் திரும்பச் செல்லும் சங்கட நிலை மாற வேண்டுமாகில், சிற்றுணர்வைப் புறக்கணித்து உள்ளுணர்வின் வழி ஊடுருவிச் சென்று, உட்புருஷனைக் கண்டு தெளிந்து, அவன் ஆணையின் கீழ்ப்படிந்து வினையாற்றுவதைத் தவிர வேறு வழி இல்லை. துவேஷமும், வஞ்சனையும், வேற்றுமைகளும் வளர்ந்து அமைதி குறைந்து அழிவின் வரம்பை மோதி நிற்கும் மனித குலம் இருளில் நின்று ஒளிக்கும், அறியாமையினின்றும் அறிவுக்கும், வேற்றுமையிநின்று ஒற்றுமைக்கும், சென்று பூரண அமைதியும், அன்பும்,இன்பமும் நிறைந்த ஒரு புது உலகம் காண அருள் வழியை நாடிச் செல்ல வேண்டி யிருக்கிறது.

மனம், புத்தி, பிராணன்களில் வீறிட்டு நிற்கும் புன் னெறியை நீக்கி மெய்யுணர்வால் அப்பகுதிகளை நிரப்பி அதனால் வரும் பக்தி, ஞானம், ஆனந்தம் என்ற ஈஸ்வர குணங்களை வாழ்வுடன் சம்பந்தப் படுத்த முடியுமானால் கற்பனையில் இருக்கும் சகல நன்மைகளும் அனுபவத்துக்கு வந்தே தீரும். "உள்ளுணர்வு அல்லது மெய்யுணர்வின் வழியே அருள் வழியாம்". அருள் வழி செல்பவன் அருளாளன்.அவன் குறைவற்றிருப்பான். பந்த பாசங்களைத் தரும் சிற்றுணர்வின் முடிச்சறுத்து, உள்ளுணர்வின் வழி நடத்தலுக்கு நெஞ்சந் திறந்து கொடுப்போமாகில் அது நம்மை ஆணவ மலங்கள் நிறைந்த துன்பப் பாதையினின்று விலக்கியெடுத்து அருள் பொழியும் ஒளி பொந்திய பாதையில் வழி நடத்திச் சென்று இறுதியில் தனது இருப்பாகிய மெய்ப்பொருளில் அழுத்தி நிறுத்தும்.  சத்தியத்தின் அல்லது அந்தராத்மாவின் உணர்வுக்கு இசைந்து நின்று அது வழி வரும் அருட் சக்தி வழி நடத்திச் செல்லும் பொருட்டு நம்மை ஒரு சாதனமாய்க் கருதி நிற்பதே "சும்மா இரு" என்று சான்றோர்களால் கூறப்படுவதின் சாரமாகும்.

கிணற்றுத் தவளையின் பூலோக அறிவு போலிருக்கும் மனமும், புத்தியும் தனக்குப் பின்னால் உண்மையின் வழி நிற்கும் மெய்யுணர்வை ஆராய்ந்தறிய இடந் தருவ தில்லை. தகுந்த ஆத்ம சாதனங்களால் மெய்யுணர்வு அல்லது கடவுளுணர்வு விருத்தியடைந்து வருங்கால் பலவீனங்களும், அறியாமையும், இடர்களும் படிப் படியாய் விலகி நின்று அருளின்பந் ததும்பிப் பரவத் தொடங்கும். மெய்யுணர்வு கிளம்பி வருமிடத்து உட்பார்வையால் உன்னிப் பார்த்து, அறிந்து, தெளிந்து அதுவழி மெய்ப் பொருளின் இருப்பை அகமுகமாய்க் கண்டறிவதே "தன்னைத் தானறிதல்" என்றதன் பொருளாம். மெய்யுணர்வு கிளம்பிப் பரவத் தொடங்குங்கால் உட்பகுதிகள் அனைத்திலும் விளங்க முடியாத அமைதியும், இன்பமும், தூய்மையும் குடி கொள்ளும். மனப் பிராணன்களின் கிளர்ச்சிகள் அடங்கி அமைதி பெறும். மெய்யுணர்வின் வெளிப் பாட்டை விழிப்புட னிருந்து கவனித்து வருவோமாகில் பண்பற்ற அஞ்ஞான உணர்வு விலகி அமைதியும் இன்பமும் நிறைந்த ஒளிமயமான ஒரு தூய சக்தி நம்மில் இறங்கி வந்து அல்லது வெளிப்பட்டு நின்று சகல துறைகளிலும் அது தானாக நம்மை வழி நடத்திச் செல்வதைக் கண்கூடாகக் காணலாம்.

இது மிகச் சிரமமான காரியமாயிருந்தாலும் முயற்சியால் சாதிக்க முடியாததொன்றல்ல.ஆர்வத்தோடு தக்க சாதனா முறைகளை மேற்கொண்டொழுகினால் நிச்சயம் பயன் அளிக்கும். ஆத்ம சாதனா முறைகள் சகலதும் பொய் யுணர்வை அடக்கி மெய்யுணர்வை வெளிப்படுத்தும் பொருட்டே வகுக்கப் பட்டிருக்கின்றன. சிற்றுணர்வாம் பொய்யுணர்வு மெலிந்து மெய்யுணர்வு தடிப்பேற ராஜஸ, தாமஸ, குணங்களின் தன்மை மாறி அகந்தையின் எழுச்சியும் அடங்கி நின்று தெவீக குண விஷேசங்கள் மலர்ந்து நிற்கும். பொய்யுணர்வடங்கி மெய்யுணர்வின் வழி வரும் அருட் பொலிவுக்கு நம்மை முற்றாக அர்ப்பணித்து நிற்போமாகில் பழைய வாசனைகளையும், இன்னும் கேடுடைய யாவற்றையும் அதுவே விலக்கித் தந்து குறைவற்ற அருளின்பத்தில் நம்மை அணைத்துச் சேர்த்து நிறுத்தும். கேவல புத்தியால் பிரியும் படிப்பினாலும், தர்க்க வாதங்களினாலும் பலனில்லை. அவைகள் குழப்பத்தைப் பெருக்கும். தெளிவு காண முடியாது. சாதனையினாலேயே சாத்தியம் கைவரும். விதிப்படி "இதயத் தியானம்" பழகி வந்தால் மெய்யுணர்வின் வழி தெளிந்து காணும். மெய்யுணர்வின் எழுச்சியாலும் அருள் நிறைந்த ஒளியின் பொழிவினாலும் சக்தியும், ஞானமும் வாழ்வில் படர்ந்து நின்று குறைவற்ற தெய்வீக இன்பத்தை அனுபவிக்க இதயத் தியானத்தை மேற் கொள்வீராக.

Saturday 13 December 2014

ஹட யோகம்




#ஞான மண்டலம்


ஹட யோகம்:


"சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையலாம்" என்பது பழமொழி. வாழ்க்கையின் அடிக்கல் போன்ற அதி முக்கியமான ஒரு காரியத்தை இந்தப் பழமொழி நமக்கு ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கிறது.
வாழ்க்கை என்பது கர்மங்களின் ஒரு தொகுப்பு. உறங்குவது கூட ஒரு கர்மம் அல்லது ஒரு செயல். சரீர சுகம் இல்லாதவர்களிடத்தில் உறக்கம் என்ற கர்மம் ஒழுங்காக நிகழ்வதில்லை.
இதே போன்று தேகாரோக்கியம் இல்லாதவரால் யாதொரு கர்மமும் சரிவரச் செய்து முடிக்க முடியாததால் ஆரோக்கியத்தைப் பேணி வளர்க்க வேண்டியது மனிதருடைய முதற் கடமையாகும். இதுதான் முன் கூறிய பழமொழியின் அர்த்தம்.
ஜீவித தர்மங்களைச் செவ்வனே செய்வதற்கும், அனுபவிப்பதற்கும் சரீரம் முதற் காரணமாய் இருப்பதால் அதைப் பலப் படுத்திச் சுகமாய் வைத்திருக்க வேண்டும்.

யோக மார்க்கம்:

மனித ஜென்மத்தைக் கடைத்தேற்றி எடுப்பதற்கு அநேக யோக மார்க்கங்கள் இருக்கின்றன.
அதில் ஹட யோகம் பிரசித்தமானது. ஹடயோகம் சரீர மன சாஸ்திரங்களுடைய ஒரு சபூர்ண ஞானக் களஞ்சியம்.
ஹட யோகம் முக் கரணங்களிலிருக்கின்ற மலங்களை நீக்கி ஞான மார்க்கத்தி தடையின்றி சஞ்சாரம் செய்வதற்குத் தகுதி உடையவராக்கித் திகழ்வதுதான் இதன் அந்தரங்க நோக்கம்.
எனினும் ஞானயோக மார்க்கங்களைக் கடைப் பிடித்தொழு காதவரும் சரீர மன சுத்திக்கு மாத்திரம் பிரயோசனப் படக்கூடிய பகுதிகளை அப்பியாசித்து சுகமடைவதற்கும் தடையேதுமில்லை.
இதன் ஆரம்பப் பயிற்சிகள் ஒவ்வொருவருக்குப் போதிய மன வலிமையையும் தேகாரோக்கியத்தையும் கொடுக்கத் தக்கது.
தீர்க்காயுள், நோயற்ற வாழ்க்கை, மனச்சாந்தி முதலியவற்றை விரும்புகிறவர்கள் மூப்பு, பிணி, ஆண், பெண் வித்தியாச மில்லாமல் நோக்கத்திற்குரிய சாதனைகளைச் செய்து சுகமாய் வாழலாம்.

ஹட யோகம்:

"ஹ" என்றால் இட கலையில் (இடது நாசியில்) ஓடிக் கொண்டிருக்கும் சுவாசத்தையும், "ட" என்றால் பிங்கலை என்ற வலது நாசியில் ஓடிக் கொண்டிருக்கின்ற சுவாசத்தையும் குறிக்கின்றன.
இடகலை பிங்கலையை ஒன்று சேர்த்து இணைப்பதற் குரிய யோக மார்க்கத்திற்குக் ஹடயோகம் என்று பெயர்.
வலது இடது கலையில் ஏறி இறங்கிக் கொண்டிருக்கும் சுவாசத்தை பிராணாயாமத்தால் ஜடராக்கினியுடன் சேர்த்து  மூலாதார பத்மத்தில் உரக்க நிலையில் கிடக்கும் குண்டலினி என்ற மகா சக்தியைத் தட்டி உணர்த்தி, முது கெலும்பிலி ருக்கும் சுழுமுனைத் துவாரம் வழியாக உச்சியிலிருக்கும் பிரமாந்திர வாசலில் ஏற்றி நிறுத்த வேண்டும்.
அப்படி நிறுத்தினால் பிரமாந்திர வாசல் திறக்கப் படும். இது திறந்த பின், பகிர்முக மனம் அல்லது வெளிமனம் அடங்கி, அந்தர்முக மனம் (உள்மனம்) பிரகாசிக்கத் தொடங்கும்.
அந்தர்முக மனப் பிரகாசத்தால் சமாதி என்றொரு அவஸ்தை மூலமாக ஞானம் சித்திக்கிறது.
இந்த இறுதி வைபவத்தை நோக்கித்தான் மனிதனிலிருந்து பிராணிகளீறாக வாழ்க்கை என்ற யாத்திரையைச் செய்து கொண்டிருக்கின்றன.

உயிர்ச் சக்தி:

சரீரத்தில் அதி பிரதான பகுதி சுவாசம். பரிபாஷையில் இதைக் கலையென்றும் சரமென்றும் கூறுவார்கள்.
உடம்பில் ஒரு சில நிமிடங்கள் சுவாசங்கள் ஓடாதிருந்தால் தேகம் உயிரற்று விடுவதால் உயிச்சக்தி சுவாசத்தில் தான் தங்கி இருக்கின்றதென்பதை அறியலாம்.
சகல சராசரங்களும் இந்தப் பிரதான சக்தியால் இயக்கப்படுகின்றன.
தேகம் தனது இயக்கத்திற்குத் தேவையான பிராண சக்தியைப் பஞ்ச பூதங்களிலிருந்து பெறுகின்றது.
சரீரத்தில் பிராண சக்தி குறைந்தால் வியாதி வரும். நின்றால் மரணமும் சம்பவிக்கும்.
இரத்தத்தை ஓடச் செய்வது, உண்ணும் உணவை ஜீரணிக்கக் கூடிய ஜீரண சக்தியைக் கொடுப்பது, ஹிருதயத் துடிப்புண்டாக்குவது, நுண் சுரப்பிகளிலிருந்து சுரக்கும் பலவிதமான் ரசங்களை உற்பத்தி செய்வது போன்ற அதி அற்புதகரமான வேலைகள் பிராண சக்தியால் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
இதே பிராண சைதன்னியம் தான் ஜீவிகளுடைய ஜீவனாகவும் அந்தராத்மாவாகவும் குடிகொண்டிருக் கின்றது.

நரம்பு மண்டலம்:

மனித சரீரத்தில் அநேகம் கரந்திகள் அல்லது நரம்பு மண்டலங்கள் இருக்கின்றன.
நரம்பு மண்டலங்கள் நாடி நரம்புகளில் இருக்கின்ற வாத, பித்த, கப தொஷங்ககளைச் சமப்படுத்தி அவைகளை நிலை தவறாமல் இயக்குதல், மனம், புத்தி, காயங்களை இணக்கிச் செயல் படுத்துவது போன்ற நுட்பமான கருமங்களை ஆற்றிக் கொண்டிருக்கின்றன.
வெளி மனதின் விகாரங்கள் உணர்வுகளை எல்லாம் உள்மனம் வாங்கி அதற்குரிய சுக துக்கங்களை நாடி நரம்புகள் வழியாகச் சரீரம் முழுவதற்கும் அனுப்பி வைப்பதில் நரம்பு மண்டலங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இப்படித்தான் நாம் சுக துக்கங்களை உணர்ந்து கொள்ளு கிறோம்.
ஆசனம், நாடி, சுத்திப் பிராணாயமம், கும்பபகப் பிராணாயாமம், பந்தனம், கிரியைகள் போன்றவை ஹட யோகத்தின் அதிமுக்கியமான பகுதிகள்.
சாஸ்திர ரீதியான ஆசனங்கள் எண்பத்திநான்கு. இவைகள் சரீரத்திற்கும் மனத்திற்கும் உபாதிகளை உண்டாக்குகின்ற ராஜச தமோ குண தர்மங்ககளை நாசஞ் செய்து, சோம்பல், சோர்வு, தடுமாற்றம், சந்தேகம், சஞ்சலம் போன்றவைகளை நீக்கி மனத்திற்கு ஸ்திரத் தன்மையையும், சரீரத்த்ற்கு ஆரோக்கியத்தையும் கொடுக்கின்றன.
பிரதான பிராணாயாமங்கள் எட்டு. அவைகள் சூரிய பேதனம், உஜ்ஜாயி, சீல்க்காரி, சீதலி, பஸ்திரிகா, பிராமரி, மூர்ச்சை, ப்ளாவினி, என்பனவைகளாகும்.
இந்த எட்டு வித பிராணாயாமத்தால் வியாதிகள் குணமடைவதுடன் நாடி நரம்புகளிலிருக்கின்ற கொழுப்பையும் கரைத்துச் சுவாசத்தை முழுச் சரீரத்திலும் தட்டுத் தடை இல்லாமல் ஏற்றவும் இறக்கவும் வேண்டிய நேரம் வரை சுவாச பந்தனம் செய்வதற்கும் இதனால் முடியும்.
முத்திரைகள் பத்து. அவைகள் மகாமுத்திரை, மகாபந்தம், மகாவேதம், கேசரி, உட்டியாணா, மூலபந்தம், ஜாலந்திர பந்தம், விபரீத கரணி,  வச்சிரோளி, சக்தி சாலனம் என்பவைகள்.
இந்தப் பத்து முத்திரைகளையும் குரு சந்நிதானத்தில் தக்க சில நோன்புகளுடனிருந்து சாதனை செய்து சித்தி யடைந்தால் சப்த தாதுக்கள் சுத்திகரிக்கப்பட்டு பெரும் பயன் பெறலாம்.
அதி நுட்பமான சித்திகளால் சகஸ்ராதாரக் கதவுகள் திறந்து அதிலிருக்கின்ற ஞானானந்த ரசத்தைச் சரீரத்திலும் ஜீவனிலும் ஒழுகச் செய்து ஜீவிதம் ஆனந்தமாகித் திகழ்கின்றது.
இப்படி தேகத்திற்கும், தேகிக்கும் பரம சுகத்தைத் தருவதாகிய ஹட யோக வித்தைகள் நமது பூர்வீக சொத்தாகவே இருக்கையில் அவற்றை அறிவதிலும் அப்பியாசிப்பதிலும் உதாசீனர்களாயிருப்பது ஏனோ?

அங்குசம்:


யானையை அங்குசத்தால் மடக்குவது போன்று தொல்லைகளைச் சிருஷ்டிக்கும் மனதைப் பக்தி என்ற அங்குசத்தால் மடக்கிச் சுயாதீனப் படுத்தும் பக்தன், சமுத்திர அலைகளுக் கிடையில் மிகச் சந்தோஷமாக நீந்திக் கரையேறும் சிறந்த ஒரு நீச்சல் வீரனைப் போன்று இம் மண்ணுலக வால்க்கையின் வெப்பம், குளிரால் தாக்கப் பட்டாமல் நீந்திக் கரையேறுகின்றான்.
ஆகையால் பக்தர்களுடைய பக்தி விசுவாசங்களைப் பாண்டவர்களைப் போன்று நிலை குலையாமல் உறுதிப் படுத்தினால் இப் பூவுலகப் பிரச்சனைகள் எல்லாம் பக்தனுக்கு அர்ச்சனை மலர்கள் போன்றவையாகவே இருக்கும்.
பாரத மகா காவியம் போன்ற நுல்களைக் கற்றறிவதால் மாத்திரம் பெரும் பயன் என்ன?
பாரதக் கதையை நன்றாகக் கற்றறிந்த ஏழைப் பிராமணன் இருந்தான்.பெருத்த குடும்பம். வறுமையால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த அந்தப் பிராமணனுக்கு வறுமையைப் போக்குவதற்கு அவனுடைய மனைவி ஒரு ஆலோசனை கூறினாள்.
"மிகவும் நல்லவராகிய நம் மன்னர் ஒரு பெரும் புலவர் சபையை வைத்திருக்கிறார். நீக்கள் மன்னரிடம் போய் புலவர் சபையில் பாரதக் கதையை விரிவுரை செய்வதற் குரிய ஒரு சந்தர்ப்பத்தைக் கேளுங்கள். கிடைத்தால் அதற் கொரு மானியத்தையும் தந்து கொண்டிருப்பார். அதைக் கொண்டு நாம் சீவிக்கலாம்" என்று கூறிப் பிராமணனை வழியனுப்பினாள்.
பிராமணன் மனனரிடத்தில் சென்று வந்த நோக்கத்தைத் தெரிவித்தான். மன்னர் அதற்கு சம்மதித்தார். ஆனால் அதற்கு முன் பாரதக் கதையை நன்கு மீண்டும் படித்து விட்டு வாருங்கள் என்று கூறி அனுப்பி விட்டான்.
ஏகாந்த இடத்திற்குச் சென்று தனிமையிலிருந்து பாராயணம் செய்யத் தொடங்கினான் அந்தப் பிராமணன்.
நாளடைவில் பாரதக் கதையின் உட்பொருளில் இரண்டறக் கலந்து குடும்பம், வறுமை யாவற்றையும் மறக்கலாயினான்.
இறுதியில் இவ் வையக ஆசைகளெல்லாம் பிராமணனை விட்டு அழிந்தொழிந்தன.மாசு படியாத இறையின்பத்தில் லித்தான்.
கற்ற ஞானம் வாழ்வாக மலரும் போதுதான் கற்றதனால் பலன் ஏற்படும்.
இப்பிரபஞ்ச்சத்தைப் பந்தாக்கி விளையாடிக் கொண்டி ருக்கும் இறைவனுடைய திருவிளையாடலை ஞானானுபூதியினால் உணர்ந்தவர்களுக்கு இவ்வியக வாழ்வு பேரானந்தம் தரும் ஒரு விளையாட்டு.
பேராசையால் மத யானைகள் போன்று கலகஞ் செய்து திரியும் மனிதர்கள், கற்றவைகளில் நல்லவற்றை ஜீவித மயமாக்கினால் இந்த உலகம் ஆனந்த மயமாயிருக்கும்.

Tuesday 9 December 2014

சனாதன தர்மம்



#ஞான மண்டலம்

சனாதன தர்மம்

இறைவனனுக்கு சனாதனன் என்றொரு விசேட நாமம் இருக்கின்றது. சனாதனன் என்றால் என்றும் இருப்பவன் என்று பொருள்.
தர்மம் சனாதனனாகிய இறைவனிடத்திலிருந்து தோன்றி யதாகையால், அதற்க்குச் சனாதன தர்மம் அல்லது எப்பொழுதும் இருக்கின்ற தர்மம் என்று அர்த்தம்.
தர்மம் என்பது ஒரு மத விஸ்வாச சம்பிரதாயமன்று. தர்மம் வாழ்க்கையின் பீஜ சக்தி.
இதன் கர்ப்பாசயத்தில் கருக் கொண்டு வளரும் மனிதர்கள் ஜீவித தர்மங்களை நல்லவண்ணம் அனுபவித்து ஜீவித இலட்சியத்தை அடைகின்றனர்.

இணைக்கும் கருவி:


மின்சார சக்தியையும், மின் விளக்கையும் இணைக்கின்ற மின்கம்பி போன்று, இறைவனுடைய தெய்வீக சக்தியை மனித இருதயத்துடன் இணைக்கும் இணைப்புக் கருவிதான் சனாதன தர்மம்.
உலகம் என்னென்ன அபிவிருத்திகளைப் பெற்றிருந்த போதிலும் தார்மீக நெறிகளையிழந்த மனித வர்க்கம் மின்சார இணைப்பற்ற மின் விளக்கைப் போன்றதே.
பஞ்சமா பாதகங்களைத் தீண்டாத ஜீவிதம், இருதய சுத்தியோடு கூடிய ஈஸ்வர பக்தி, சமபாவனை, பரோபகாரம், இணங்கி வாழும் குணம், தன்னலம் குறைந்த சுபாவம் இவைகள் தர்மத்தின் அவயவங்கள்.
மனித சக்திக்கும் அறிவுக்கும் மீறிய உலகப் பிரச்சனைகள்,  இன மத துவேஷங்கள், அதிகரித்து வரும் சமுதாய விரோதச் செயல்கள், அனுகூலமில்லாத கால நிலைகள் போன்ற விபரீத சம்பவங்களெல்லாம் தர்மத்தின் அவயவ சக்திகள் தளர்ந்து வருவதன் அறிகுறிகள்.
ஜனந்களுக்கிடையில் பக்தி விஸ்வாசம் மேம்பட்டு வருவதாகத் தோன்றினாலும் கூட, தற்பொழுது தர்மத்தின் உண்மையான நிலை, "தர்மங்கரோதுபறவை" களின் கதை போன்றிருக்கிறது.

வினோத பறவை:


ஒரு தேசத்தில் தர்மம் குன்றி அதர்மம் பெருகிக் கொண்டிருந்த சமயத்தில் தர்மப் பிரசாரத்திற்காக "தர்மங்கரோதர பறவைகள்" என்ற பேரில் ஒரு பறவைக் கூட்டம் அங்கு வந்து சேர்ந்தது.
அப்பறவைகள் மக்கள் போற்றும் வண்ணம் தர்மப் பிரசாரம் செய்து வந்தன.
அந்த நாடு பசு சம்ரட்சனையில் பேர் பெற்ற நாடு. காலப் போக்கில் அங்கு வளர்க்கப்படும் பசுக்களுடைய கண்கள் களவு போய்க் கொண்டிருந்தன.
ஊர்மக்கள் இதனைக் கண்டு பிடிக்க முடியாமையால் மன்னனிடம் முறையிட்டனர்.
இதன் காரணத்தைக் கண்டறிவதற்கு மன்னன் தனது அதிகாரிகளைப் பணித்தான். சில நாட்களின் பின்னர் அதிகாரிகள் மன்னனிடம் வந்து காரணத்தை அறிவித்தனர். "தர்மம் கரோது பக்ஷீனாம் இராத்தி ரௌகோ நேத்திரௌ பக்ஷ்ணம்" என்பதுதான் காரணம் என்றனர்.
"பகல் முழுதும் தர்மப் பிரசாரம் செய்து வரும் பறவைகளே இராக் காலத்தில் பசுக்களின் கண்களைக் களவெடுத்து வருகின்றன. அவைகளுக்குப் பசுக் கண்களே உணவு. வேறொன்றும் உண்பதில்லை." என்று சொல்லி முடித்தார்கள்.
இந்தப் பறவைகளின் கதை போன்றதுதான் இன்றைய உலகப் போக்கு.
இன்னும் இதே நிலை போய்க் கொண்டிருந்தால் பாரத யுத்தத்திற்குப் பின் கௌரவர் குலத்திற்கு நேர்ந்ததுதான் நமது எதிர்கால சமுதாயத்திற்கு நேரலாம்.
ஆகையால் மனிதர்களைப் பேயராய்ப் பித்தராய் அலைய விடாமல் தடுத்தாட் கொண்டுவரும் சனாதன தர்மம் சிறப்புற்று வளருவதற்கு ஒவ்வொருவரும் தன் தன் கருமத்தைச் சுத்திகரிக்க வேண்டும்.

தார்மீக சமுதாயம்:

தேசத் தலைவர்கள், மதகுமார்கள், சமயப் பிரசாரர்கள், கல்விமான்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் போன்ற தேசத்தின் இரத்த நாளங்களாய் இருப்பவர்கள்; ஆசார சீலராயிருந்து சிரத்தையோடும், கருணையோடும் பாமர மக்களைத் தார்மீக போதமுடையவர்களாக்க வேண்டும்.
தேசாபிவிருத்திக்குரிய சகல துறைகளிலும் சனாதன தர்மத்தின் அமிர்தம் பொழியும் பொழுது இன்று வரையும் உபத்திரவப் படுத்திக் கொண்டிருக்கும் சகல கஷ்டங்களும் சகஜமாகவே தீர்ந்து சாந்தியும் சுகமும் நிறைந்த ஒரு தார்மீக சமுதாயம் உதயமாகும்.