Tuesday 9 December 2014

சனாதன தர்மம்



#ஞான மண்டலம்

சனாதன தர்மம்

இறைவனனுக்கு சனாதனன் என்றொரு விசேட நாமம் இருக்கின்றது. சனாதனன் என்றால் என்றும் இருப்பவன் என்று பொருள்.
தர்மம் சனாதனனாகிய இறைவனிடத்திலிருந்து தோன்றி யதாகையால், அதற்க்குச் சனாதன தர்மம் அல்லது எப்பொழுதும் இருக்கின்ற தர்மம் என்று அர்த்தம்.
தர்மம் என்பது ஒரு மத விஸ்வாச சம்பிரதாயமன்று. தர்மம் வாழ்க்கையின் பீஜ சக்தி.
இதன் கர்ப்பாசயத்தில் கருக் கொண்டு வளரும் மனிதர்கள் ஜீவித தர்மங்களை நல்லவண்ணம் அனுபவித்து ஜீவித இலட்சியத்தை அடைகின்றனர்.

இணைக்கும் கருவி:


மின்சார சக்தியையும், மின் விளக்கையும் இணைக்கின்ற மின்கம்பி போன்று, இறைவனுடைய தெய்வீக சக்தியை மனித இருதயத்துடன் இணைக்கும் இணைப்புக் கருவிதான் சனாதன தர்மம்.
உலகம் என்னென்ன அபிவிருத்திகளைப் பெற்றிருந்த போதிலும் தார்மீக நெறிகளையிழந்த மனித வர்க்கம் மின்சார இணைப்பற்ற மின் விளக்கைப் போன்றதே.
பஞ்சமா பாதகங்களைத் தீண்டாத ஜீவிதம், இருதய சுத்தியோடு கூடிய ஈஸ்வர பக்தி, சமபாவனை, பரோபகாரம், இணங்கி வாழும் குணம், தன்னலம் குறைந்த சுபாவம் இவைகள் தர்மத்தின் அவயவங்கள்.
மனித சக்திக்கும் அறிவுக்கும் மீறிய உலகப் பிரச்சனைகள்,  இன மத துவேஷங்கள், அதிகரித்து வரும் சமுதாய விரோதச் செயல்கள், அனுகூலமில்லாத கால நிலைகள் போன்ற விபரீத சம்பவங்களெல்லாம் தர்மத்தின் அவயவ சக்திகள் தளர்ந்து வருவதன் அறிகுறிகள்.
ஜனந்களுக்கிடையில் பக்தி விஸ்வாசம் மேம்பட்டு வருவதாகத் தோன்றினாலும் கூட, தற்பொழுது தர்மத்தின் உண்மையான நிலை, "தர்மங்கரோதுபறவை" களின் கதை போன்றிருக்கிறது.

வினோத பறவை:


ஒரு தேசத்தில் தர்மம் குன்றி அதர்மம் பெருகிக் கொண்டிருந்த சமயத்தில் தர்மப் பிரசாரத்திற்காக "தர்மங்கரோதர பறவைகள்" என்ற பேரில் ஒரு பறவைக் கூட்டம் அங்கு வந்து சேர்ந்தது.
அப்பறவைகள் மக்கள் போற்றும் வண்ணம் தர்மப் பிரசாரம் செய்து வந்தன.
அந்த நாடு பசு சம்ரட்சனையில் பேர் பெற்ற நாடு. காலப் போக்கில் அங்கு வளர்க்கப்படும் பசுக்களுடைய கண்கள் களவு போய்க் கொண்டிருந்தன.
ஊர்மக்கள் இதனைக் கண்டு பிடிக்க முடியாமையால் மன்னனிடம் முறையிட்டனர்.
இதன் காரணத்தைக் கண்டறிவதற்கு மன்னன் தனது அதிகாரிகளைப் பணித்தான். சில நாட்களின் பின்னர் அதிகாரிகள் மன்னனிடம் வந்து காரணத்தை அறிவித்தனர். "தர்மம் கரோது பக்ஷீனாம் இராத்தி ரௌகோ நேத்திரௌ பக்ஷ்ணம்" என்பதுதான் காரணம் என்றனர்.
"பகல் முழுதும் தர்மப் பிரசாரம் செய்து வரும் பறவைகளே இராக் காலத்தில் பசுக்களின் கண்களைக் களவெடுத்து வருகின்றன. அவைகளுக்குப் பசுக் கண்களே உணவு. வேறொன்றும் உண்பதில்லை." என்று சொல்லி முடித்தார்கள்.
இந்தப் பறவைகளின் கதை போன்றதுதான் இன்றைய உலகப் போக்கு.
இன்னும் இதே நிலை போய்க் கொண்டிருந்தால் பாரத யுத்தத்திற்குப் பின் கௌரவர் குலத்திற்கு நேர்ந்ததுதான் நமது எதிர்கால சமுதாயத்திற்கு நேரலாம்.
ஆகையால் மனிதர்களைப் பேயராய்ப் பித்தராய் அலைய விடாமல் தடுத்தாட் கொண்டுவரும் சனாதன தர்மம் சிறப்புற்று வளருவதற்கு ஒவ்வொருவரும் தன் தன் கருமத்தைச் சுத்திகரிக்க வேண்டும்.

தார்மீக சமுதாயம்:

தேசத் தலைவர்கள், மதகுமார்கள், சமயப் பிரசாரர்கள், கல்விமான்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் போன்ற தேசத்தின் இரத்த நாளங்களாய் இருப்பவர்கள்; ஆசார சீலராயிருந்து சிரத்தையோடும், கருணையோடும் பாமர மக்களைத் தார்மீக போதமுடையவர்களாக்க வேண்டும்.
தேசாபிவிருத்திக்குரிய சகல துறைகளிலும் சனாதன தர்மத்தின் அமிர்தம் பொழியும் பொழுது இன்று வரையும் உபத்திரவப் படுத்திக் கொண்டிருக்கும் சகல கஷ்டங்களும் சகஜமாகவே தீர்ந்து சாந்தியும் சுகமும் நிறைந்த ஒரு தார்மீக சமுதாயம் உதயமாகும்.

No comments: