Wednesday, 31 December 2014

ஞான மண்டலம் மரணத்திற்குப் பின்...

#ஞான மண்டலம் 

மரணத்திற்குப் பின்...

வாழ்க்கையின் முடிவு மரணம் என்பது அனைவரும் அறிந்த விஷயம். மரணத்திற்குப் பின் என்ன? என்பதை யாரும் அறிவதில்லை.
விஷய ஞானம் இல்லாத இடத்தில் பயம், பீதி முதலிய மனக் கஷ்டங்கள் தோன்றுவது சகஜம்.
மரணம் என்று நினைக்கும் பொழுது மரணத்திற்குப் பின் என்ன நிகழ்கின்றது என்ற சரியான அறிவில்லாததால் மரண பயம் உண்டாகின்றது.
மரணம் என்பது ஜீவனைப் பொறுத்தவரையில் புதிய சக்தியும், உற்சாகமும், புது ஆற்றல் திறமையும் உயிரில் உருவாகும் ஒரு புனிதமான நிகழ்ச்சி.
பகல் முழுவதும் உழைத்துக் களைப்படைந்தவர்களுக்கு இரவு உறக்கம் கலை தீர்த்துப் புத்துணர்வும், தென்பும் அளிப்பதைப் போன்று வாழ் நாள் முழுவதும் பல துறைகளிலும் செயலாற்றி வாழ்வில் களைப்படைந்த மனிதர்களுடைய ஜீவன் சுயமாகவே ஏற்றெடுத்த ஒரு தீர்க்க கால உறக்கம் அல்லது ஓய்வுதான் மரணம். பழுதடைந்த உடையை மாற்றிப் புது உடை அணிவது போன்று ஜீவன் தனது லட்சியத்தை அடையும் வரையும் பழுதடைந்த சரீரத்தை மாற்றிப் புதுச் சரீரத்தில் நுழைய வேண்டி இருக்கிறது.
மரணத்திற்குப் பின் உயிர்கள் என்ன நிலை அடைகின்றது என்பதைப் பற்றி இந்து சமய சாஸ்திரங்கள் விளக்கந் தருகின்றன.
கண்ணுவன், கபிலன் போன்ற மகா ரிஷிகளின் பரிணாம சித்தாந்த சாஸ்திரங்களில் இது விஞ்ஞான பூர்வமாகத் தெளிவு படுத்தப்பட்டு இருக்கின்றது.
நசிகேசன் நமனைக் குருவாக ஏற்பதற்குரிய காரணம், மரணத்திற்குப் பின் ஜீவனுடைய நிலையை அறிவதற் குரிய பெரும் அவா தான் என்பதை கடோபநிஷாதம் கூறுகின்றது.
ஒரு நோயாளி நோயை குணப் படுத்துவதற்காக ஒரு வைத்தியரைச் சந்திக்கச் செல்கிறான். பின்னர் சந்திக்க முடியாமல் திரும்பி வருகிறான். மீண்டும், மீண்டும் செல்லும் பொழுதும் அதே நிலைதான்.
மருத்துவரைச் சந்திக்கும் வரையும் வருத்தமுடையவர் வருவதும் போவதுமாகிய நிகழ்ச்சி நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.
மருத்துவரைச் சந்திப்பதுதான் நோயுடையவரின் நோக்கமாகையால் அது கைகூடும் வரையும் இவ்வாறு நிகழ்ந்து கொண்டிருக்கின்றது.
ஜீவன் சிவனுடன் ஐக்கியப் படுவதுதான் பிறவியின் நோக்கம் என்ற காரணத்தினால், ஜீவன் சுத்த சிவன் நிலை அடையும் வரையும் பிறப்பு,இறப்பு என்பன நிகழ்ந்து கொண்டிருக்கும்.
உயிரை பற்றிய சில அடிப்படைத் தத்துவங்களைத் தெரிந்து கொள்ளும் பட்சத்தில் இவ் விஷயத்தில் இருக்கும் பல சந்தேகங்கள் தீர்க்கப்பட்டு விடுகின்றன.

உயிரியல் சாஸ்திரம்:

இந்து மத உயிரியல் சாஸ்திரப்படி சகல சராசரங்களும் உயிருடையன. தூணிலும், துரும்பிலும் உயிர் ஊடுருவி நிற்கின்றது .மனிதனும், மனிதனுடைய நிழலும் போன்று உயிர் பரமாத்மாவின் பிரதி பாசம்.
ஆகையால் உயிரை ஆக்கவும், அழிக்கவும் முடியாது. உயிரை உண்டாக்க முடியாத காரணத்தால் ஒரு புதுச் சரீரம் உருவாகும் பொழுது, நிலையான பழைய உயிரைத் திரும்பவும் சுவீகரிக்க வேண்டியிருக்கிறது.
பழைய உடல் அழிந்து புதுப் புது உடல் உருவாகிக் கொண்டிருப்பதாலும், என்றும் இருக்கின்ற உயிரை அழிக்கவும், ஆக்கவும் முடியாதிருப்பதாலும் மறு பிறப்பு என்பது நிகழ்ந்து கொண்டேயிருக்கும்.

மரணம்:

ஒரு திரவத்தின் அடிப்படையான இறுதி அணுக்களில் இருந்து விஷேச ரீதியில் உருவாகும் அலைநீள சலன சக்தியே உயிரென்று நவீன அலைச் சித்தாந்த சாஸ்தி ரங்கள் கூறுகின்றன.
ஜீவன் தேகத்திலிருந்து பிரிவது (மரணம்) ஒரே நேரத்தில் ஒரே முறையில் நிகழ்வதில்லை.ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் இரண்டு தரமாக ஜீவன் பிரிந்து செல்கின்றது.
முதல் தரம் நிகழ்கின்ற மரணம் தைதீக மரணம் என்றும் இரண்டாம் முறை நிகழ்வது கோச மரணம் என்றும் சொல்லப்படும்.
வெறும் சரீரத்திலிருந்து மாத்திரம் உயிர் பிரிந்து சரீரம் செயலாற்றுப் போகும் நிலைக்கு தைதீக மரணம் என்றும், இறுதியில் பஞ்ச கோசத்திலிருந்து உயிர் பிரிவதை கோசீக மரணம் என்றும், பஞ்ச கோசத்திலிருந்து முற்றாக ஜீவன் பிரிந்தாற்றான் உண்மையான மரணம் சம்பவிக்கின்றது என்றும் கூறப் படுகிறது.
தைதீக மரணத்திற்குப் பின் இரண்டு அல்லது மூன்று மணித்தியாலத்திற்குள் கோசீக மரணம் நிகழ்கிறது.
அபூர்வமாக சில சந்தர்ப்பங்களில் கோசீக மரணம் நிகழ்வதற்கு முன், சரீரத்தி இருந்து பிரிந்து நின்ற ஜீவன் திரும்பவும் சரீரத்தில் நுழைவதுண்டு.
இதைத்தான் இறந்தவர் மீண்டும் உயிர் பெற்ற சம்பவமாகக் கேள்விப்படுகிறோம்.
எனவே சில சந்தர்ப்பங்களில் இவ்விதம் நிகழ்வதால் சரீரம் அதிகம் பழுதடையாத நிலையில் மரணம் சம்பவிக்கும் போது, குறைந்தது ஆறு அல்லது எட்டு மணித்தியாலங் களின் பின்னர் தகனம் செய்வதுதான் உசிதமானதாகும்.

ஞானம்:

முன் ஜென்மங்களைப் பற்றி அறிவதற்கு "பரித்துவாஜ தர்சனம்" என்ற ஒரு சாஸ்திரக் கிரந்தம் இன்றும் நடைமுறையில் இருக்கின்றது. இதை இதய சுத்தம் உடையவர்கள், நாலு ஆண்டுகள் அப்பியாசித்தால் தமது சொந்தப் பூர்வ ஜென்மங்களைப் பற்றியும், எட்டாண்டுகள் பயின்றால் மற்றவரகளுடைய பூர்வ ஜென்ம விருத் தாந்தங்களைப் பற்றியும் அறியத் தக்க ஞானம் சித்திக்கும்.
அல்லது மூலாதார சக்தியை ஆதார சக்கரங்கள் வழியே சகஸ்ராரத்தில் ஏற்றி நிறுத்திப் பழகிய மகா யோகிகள், சித்தத்தில் அடங்கிக் கிடக்கும் பூர்வ ஜென்ம வாசனை களில் சம்யமனம் செய்து பார்க்கும் பொழுது முன் ஜென்மங்களைப் பற்றிய அறிவு கிடைக்கின்றது.
ஜீவன் பிறவி தோறும் செய்த கர்ம பலாபலங்களுக்குத் தக்கபடி, அடுத்தடுத்துப் பிறவிகளை எடுத்துச் சுக துக்கங்களை அனுபவிக்கின்றது. முற்ஜென் மங்களில் செய்த கர்ம பலன்களைப் பற்றி மனிதன் அறிவாநாக்கில் பாப கர்மங்களைப் புரிவதற்கு அஞ்சி வாழ்வான்.
ஆகையால் பிறவி தோறும் வினையாற்றிக் களைப் படைந்த ஜீவன் களையைத் தீர்த்துப் புத்துணர்வு பெறுவதற்காக மரணம் என்ற ஒரு இடைக்கால ஓய்வெ டுப்பதைப் பற்றிச் சந்தோஷம் அடையாமல் பயப்படுவதேன்?

No comments: