Monday, 5 January 2015

ஞான மண்டலம் பாரதக் கதை தரும் போதனை



#ஞான மண்டலம்


பாரதக் கதை தரும் போதனை 


மனித ஜீவிதம் ஒரு அமர்க்களம். சுகம் துச்சம் இரண்டுக்கும் இடையே நடைபெறும் இப் போராட்டத்தின் மத்தியில் நின்று வாழ்க்கையை ஆனந்த மயமாக்கித் தீர்க்க வேண்டும்.
இதுதான் வாழ்க்கையின் யதார்த்த தத்துவ தரிசனம்.
பாரதப் போர்முனையில் வைத்துக் கிருஷ்ணன் அர்ச்சுனனுக்கு இதற்குரிய சித்தானந்தத்தை உபதேசித்தார்.

மகாகாவியம்:

அர்ச்சுனன் போர்க்களத்தில் வைத்தே அதை அநுபூதி மயமாக்கினான். பாரதக் கதை ஒரு வெறும் கதையல்ல.அது ஒரு முழுமையான ஜீவித சாஸ்திரம்.
இந்த மகா காவியம் தரும் ஜீவித மார்க்கங்களை மனித சமுதாயம் கடைப்பிடித் தொழுகுமேயானால் உலகம் உய்யும்.
பாரதக் கதையில் வரும் உத்தம பாத்திரங்களாகிய பஞ்சபாண்டவர்கள் அனுபவித்த கஷ்ட நஷ்டங்கள் கொஞ்ச மல்ல.
அரசாட்சி, உடைமைகள், மானாபிமானம் எல்லாம் இழந்து வசிப்பதற்கு ஒரு இடமும் வீடும் இல்லாமல் வனத்திலே நாடோடிகளாய்த் திரிந்தனர்.
மனக் கலக்கமின்றி ஆனந்த மயமான மனத்துடன் யாவற்றையும் வரவேற்றனர். மனந் தளராமல் அவ்வளவு தூரம் பொறுமையோடு சாந்த சீலராய் வாழ்வதற்கு இறைவனிடத்தில் பக்தியும் சரணாகதியுமே காரணமா யிருந்தன.
பக்தியும் சரணாகதியும் மனிதரை அப்பேர்ப்பட்ட மன பரிபாகம் உடையவர்களாக்கித் தீர்க்கின்றன.
மனிதன் தனது துன்பங்களை ஒழிக்க முயற்சிப்பதற்கு முன் அவைகளைப் பொறுமையோடு சகிப்பதற்குரிய மனப் பக்குவத்தைத்தான் முதல் பெற வேண்டும்.
அதற்குப் பயன் படக்கூடிய பக்தியைத்தான் உண்மையான பக்தியென்று சொல்லலாம்.
பக்தர்கள் தமக்கு மிகப் பிரியமாதையும், இறை பக்திக்காக அர்ப்பணம் பண்ணத் தயாராயிருக்கும் தியாகசீலமுடைய வர்களாக மாறும் பொழுது மாத்திரந்தான் பகவத் பக்தியின் பரிபூரண சுகம் பக்தர்களுக்குக் கிடைக்கும்.

அங்குசம்:


யானையை அங்குசத்தால் மடக்குவது போன்று தொல்லைகளைச் சிருஷ்டிக்கும் மனதைப் பக்தி என்ற அங்குசத்தால் மடக்கிச் சுயாதீனப் படுத்தும் பக்தன், சமுத்திர அலைகளுக் கிடையில் மிகச் சந்தோஷமாக நீந்திக் கரையேறும் சிறந்த ஒரு நீச்சல் வீரனைப் போன்று இம் மண்ணுலக வாழ்க்கையின் வெப்பம், குளிரால் தாக்கப் பட்டாமல் நீந்திக் கரையேறுகின்றான்.
ஆகையால் பக்தர்களுடைய பக்தி விசுவாசங்களைப் பாண்டவர்களைப் போன்று நிலை குலையாமல் உறுதிப் படுத்தினால் இப் பூவுலகப் பிரச்சனைகள் எல்லாம் பக்தனுக்கு அர்ச்சனை மலர்கள் போன்றவையாகவே இருக்கும்.
பாரத மகா காவியம் போன்ற நுல்களைக் கற்றறிவதால் மாத்திரம் பெரும் பயன் என்ன?
பாரதக் கதையை நன்றாகக் கற்றறிந்த ஏழைப் பிராமணன் இருந்தான்.பெருத்த குடும்பம். வறுமையால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த அந்தப் பிராமணனுக்கு வறுமையைப் போக்குவதற்கு அவனுடைய மனைவி ஒரு ஆலோசனை கூறினாள்.
"மிகவும் நல்லவராகிய நம் மன்னர் ஒரு பெரும் புலவர் சபையை வைத்திருக்கிறார். நீக்கள் மன்னரிடம் போய் புலவர் சபையில் பாரதக் கதையை விரிவுரை செய்வதற் குரிய ஒரு சந்தர்ப்பத்தைக் கேளுங்கள். கிடைத்தால் அதற் கொரு மானியத்தையும் தந்து கொண்டிருப்பார். அதைக் கொண்டு நாம் சீவிக்கலாம்" என்று கூறிப் பிராமணனை வழியனுப்பினாள்.
பிராமணன் மனனரிடத்தில் சென்று வந்த நோக்கத்தைத் தெரிவித்தான். மன்னர் அதற்கு சம்மதித்தார். ஆனால் அதற்கு முன் பாரதக் கதையை நன்கு மீண்டும் படித்து விட்டு வாருங்கள் என்று கூறி அனுப்பி விட்டான்.
ஏகாந்த இடத்திற்குச் சென்று தனிமையிலிருந்து பாராயணம் செய்யத் தொடங்கினான் அந்தப் பிராமணன்.
நாளடைவில் பாரதக் கதையின் உட்பொருளில் இரண்டறக் கலந்து குடும்பம், வறுமை யாவற்றையும் மறக்கலாயினான்.
இறுதியில் இவ் வையக ஆசைகளெல்லாம் பிராமணனை விட்டு அழிந்தொழிந்தன.மாசு படியாத இறையின்பத்தில் லயித்தான்.
கற்ற ஞானம் வாழ்வாக மலரும் போதுதான் கற்றதனால் பலன் ஏற்படும்.
இப்பிரபஞ்ச்சத்தைப் பந்தாக்கி விளையாடிக் கொண்டி ருக்கும் இறைவனுடைய திருவிளையாடலை ஞானா னுபூதியினால் உணர்ந்தவர்களுக்கு இவ்வையக வாழ்வு பேரானந்தம் தரும் ஒரு விளையாட்டு.
பேராசையால் மத யானைகள் போன்று கலகஞ் செய்து திரியும் மனிதர்கள், கற்றவைகளில் நல்லவற்றை ஜீவித மயமாக்கினால் இந்த உலகம் ஆனந்த மயமாயிருக்கும்.

No comments: