Thursday, 22 January 2015

ஞான மண்டலம் இந்து





#ஞான மண்டலம்



இந்து 


பழமையிலும் புதுமையிலும் புகழ் பூத்து நிற்கும் இந்து என்ற நிறை வசனம் பூர்வீக காலத்திலிருந்தே உலகப் பேரறிஞர்களை வெகுவாகக் கவர்ந்து வந்திருக்கின்றது. அறிவு மண்டலத்தில் பலவாறான விமர்சனங்களுக்கும் கேந்திர பிந்துவாயிருக்கின்ற இச்சொல் அநேக கால கட்டங்களில் பல வர்க்கங்கள் மதங்கள் நாஸ்திகம் கடும் தாக்கங்களை ஏற்க வேண்டியிருந்தது. அத்தகைய தாக்கங்களுக்கு இடையிலும் சமுத்திர அலைகள் மத்தியில் அசைவற்று நிற்கும் கருங்கல் பாறை போன்று இன்றும் உலக வியாபார ரீதியில் அது தலை நிமிர்ந்து நிற்கின்றது. தோன்றியும் தோன்றாமலும் இருக்கின்ற சகல தர்மங்களையும் சகல சாஸ்திரங்களையும் உள்ளடக்கி நிற்கும் இந்து என்ற பதத்திற்கு சரியான அர்த்தமென்ன? அது யாரை அல்லது எதைக் குறிக்கின்றது.

" ஹீனம் தூ-ஷய தீதி ஹிந்து "அதர்மங்களை ஒழிக்கின்றவன் இந்து. " ஹிம் ஸாம்தமய நீதி ஹிந்து " ஹிம்சாபரமாய சகல கர்மங்களையும் நீக்கி ஜீவிகளை ஏகாத்ம பாவனையுடன் பார்க்கிறவன் ஹிந்து. ஹிம் ஸந்தி தர்மோ நிதி ஹிம்-ஸா " சனாதன தர்மங்களுக்குக் கேடு விளைவிப்பவரை ஒடுக்கி விடுகின்றவன் ஹிந்து. இந்து என்ற சொல்லுக்கு இந்துமத சாஸ்திரங்களில் இப்படிப்பட்ட அர்த்தங்களைக் காணக்கூடிய தாயிருந்தாலும் அவை யொன்றும் அதன் பொருளைச் சம்பூரணப் படுத்துவதா யில்லை. காரணம் அதன் உட்பொருள் வசனாதீதமானது. ஆத்மானுபூதியால் மாத்திரம் உணரக் கூடியது. அது மட்டுமல்ல இந்து என்ற பதப் பிரோயகத்தின் ஆரம்ப காலம் இதுவரையில் அனுமான நிர்ணயமாய் இருப்பதைத் தவிர கால நிர்ணயம் நிச்சயிக்கப் படவில்லை. நீட காலமாக பௌதீக ஆத்மீக அனுபங்களிற் கூடி வளர்ந்து வந்த இந்து மதம் அகண்ட பிரபஞ்சசாராம்சங்களைத் தன்னகத்து அனுபூதி மயமாக்கிய ஒரு சர்வக்ஞான கலசம். இதுவரை காலமும் தோன்றியிருக்கின்ற சகல ஆத்மீக பௌதீக ஒளிகளும், சகல மதங்களுடைய அடிப்படைச் சித்தாந்தங்களும் இந்துக்களுடைய வேதாந்த தரிசன சாஸ்திரம் என்ற மணி விளக்கிலிருந்து கொளுத்தியெடுத்த சுடர்கள் என்பது வெளிப்படையான ஒரு சாத்தியமாகும். வேதாந்த தரிசனங்களிற் பரவலாகக் காணும் பொருளாதார சமத்துவ சித்தாத்தங்களுடைய ஒரு பிராகிருத பாவம் மாத்திரந்தான் மாக்ஸீச தத்துவம் என்பதைக்கூட நீங்கள் அரியும் பொழுது வியக்கக்கூடும். வேதாந்த தரிசன சாஸ்திரங்களைத் தவிர மற்றதொரு சாஸ்திரங்களும் சம்பூரணமானவையல்ல.வேதாந்த தரிசனங்களில் காணும் அந்தர்முக சத்தியங்களை ஏற்காத நவீன சாஸ்திரங்களும் பூரணப்படுவ தில்லை.

சனாதன தர்மத்தை அனுசரித்து வாழ்கின்றவர்கள் எல்லாம் இந்துக்கள் என்ற நம்பிக்கை இந்துக்களிடம் பரம்பரை பரம்பரையாகவே இருந்து வருகின்றது. முற்றிலும் யதார்த்தமாய் இருக்கின்ற இக்கருத்தில் ஹிந்துக்கள் முழுத் திருப்தி உடையவர்களாய் இருக்கின்றனர். ஆகையால் சனாதன தர்மந்தான் இந்து அல்லது இந்துமதம். சனாதனம் அல்லது என்றும் இருக்கின்ற தர்மம் எபது இந்து சமுதாயத்தின் ஜீவித நிஷ்டயாய் இருக்கின்ற படியால்தான் இன்றுவரை யாதொரு உந்தலும் இல்லாமல் இந்து கால வெள்ளத்தில் ஒழுகிப் போகாமல் இன்றும் மிதந்து நிற்கின்றது. சனாதன தர்மத்தின் மூல சக்திகள் உயிர்களுடைய நிலை பேற்றிற்கும், மாணவ சமுதாயத்தினுடைய சேம நலத்திற்கும் அவ்வப்போது விலை மதிக்க முடியாத பலவற்றையும் ஈன்று கொடுத்திருக்கின்றது. இவைகள் உலக அரங்கில் இந்துக்களுக்கு நிலையானதொரு அந்தஸ்த்தை வழங்கியிருக்கின்றன. நாம் நமுடைய தர்மத்தைப் பற்றியும் கலை கலாச்சாரங்ககளைப் பற்றியும் பெருமை அடைகின்றோம். எனினும் கண்மூடித் தனமாகப் பழையதெல்லாம் நல்லவை என்றும், புதியவை எல்லாந் தீயவை என்றும் கருதுவது சரியில்லை. இந்த இரண்டு வழிகளிலிருந்தும் விலகி மூன்றாவது ஒரு வழியிற் சிந்தனையைச் செலுத்த வேண்டும். பழையதிலும் புதியதிலும் நல்லவற்றை மாத்திரம் தேர்ந்தெடுத்து இரண்டும் கலந்ததொரு புதிய வெளிச்சத்தில் நடந்து செல்ல வேண்டும்.

மாற்றமும் வளர்ச்சியும் இயற்கை நியதிகள் என்பதை அறிந்து செயலாற்றாவிட்டால் கால சக்கரம் நம்மை ஒரு மூலையில் உருட்டிவிடும். இந்து மதத்தின் சகல துறைகளும் காலா காலத்தில் படிப்படியாக மாற்றி அமைக்கப்பட்டு வந்ததுதான் இன்று காணும் உயர்நிலை. ஆகையால் அடிப்படையில் மாற்றமில்லாமல் தேவையான மாற்றங்களைச் செய்வதற்குத் தயங்கக் கூடாது. இதற்கேற்ற விசால மனத்தையும் அறிவையும் ஆற்றலையும் இந்துக்கள் பெற்றெடுக்க வேண்டும்.

சரித்திர காலந் தொடக்கம் விதேச ரீதியிலும் தேசிய ரீதியிலும் இந்துக்கள் பல கோணத்தில் இருந்தும் தாக்கப்பட்டு வருகின்றனர். எனினும் இந்துக்களுடைய தாராள மனமும் பொறுமையும், விரோதிகளிடத்தில் இணங்கி வாழும் ஒருமைப் பாட்டுணர்வும்,அவர்களை மென்மேலும் மேன்மைப் படுத்தி இருக்கின்றது. நமது சனாதன தர்மத்தின் அத்திவாரம் மிக ஆழத்தில் பதிக்கப் பட்டிருப்பதால் இதுவரை ஏதொரு சக்திக்கும் அதைச் சிதைக்கவோ, நொருக்கவோ முடியவில்லை. எனினும் இடைக் காலத்தில் எமக்கிடையே வளர்ந்து வந்த சில பலவீனங்கள் சமுதாய ஐக்கியத்தில் ஆழமான சில பிளவுகளை ஏற்படுத்தி விட்டிருக்கின்றது. பிரபஞ்சத்தில் பரஸ்பர விரோதங்கள் என்று தோன்றக் கூடிய பலவற்றையும் இணைத்து வாழத் தகமையுடைய இந்துக்கள் தங்களுடைய சமுதாய முரண் பாடுகளைச் சமப் படுத்துவதில் தோல்வி கண்டிருக்கின்றனர்.

வேற்றுமையிலும் ஒற்றுமையைக் காணும் ஆத்மீக ரகசியங்களை உலகத்திற் கெடுத்தோதிய இந்துக்கள் இதில் தோல்வி கண்டிருப்பதன் காரணம் என்ன? இந்தத் தோல்வியின் யதார்த்த ரூபத்தை ஒரு ஆத்ம பரிசோதனை மூலம் கண்டறிவதால் மாத்திரந்தான் இந்தப் பிரச்சனையில் இருந்து விமோசனம் அடையலாம். இந்து சமாஜத்தில் இன்று காணும் சீர் கேடுகளுக்கு அந்நியரை குற்றஞ் சாட்டுவது நமது சுபாவமாய் இருந்து வருகின்றது. இதில் சில உண்மைகள் இருந்த போதிலும் தம்மிடம் இருக்கின்ற ஏதோ பலவீனந்தான் அவர்களுக்கு அத்தகைய தொரு சந்தர்ப்பம் அளித்திருக்கின்றது என்பதை அவதானமாகச் சிந்தித்து அரிய வேண்டியிருக்கின்றது.

குலம், கோத்திரம், ஜாதி, தீண்டாமை, மதத் தத்துவக் கொள்கைகள், குரு பராம்பரிய பேதங்கள், வழிபாட்டு முறைகள் போன்றவைகளில் இருந்தெழுந்த பிணக்கும் போராட்டமுந்தான் இந்துக்களுடைய ஐக்கியத்தைச் சீர்குலைத்து வருகின்றது.இந்தப் பலவீங்களை அன்னியர் தங்கள் சுயநலத்திற்குச் சாதகமாகப் பயன்படுத்தினார்கள் என்பதுதான் உண்மை. நமது ஐக்கிய சக்தியைப் பிளவு படுத்திக் கொண்டிருக்கும் உயர்வு தாழ்வுகளையும் முரண்பாடுகளையும் அறவே ஒழிக்க வேண்டும். இந்து ஆலயங்கள் இந்து சமுதாயத்தில் நடுநாடியாகவே இருந்து வருகின்றன. இதன் கற்பகக் கிரகத்தில் இருந்து ஒழுகி வரும் பிராண சக்தி சமுதாயத்தின் நாடித் துடிப்பைச் சீராக்குகிறது. சேத்திர சைதன்னியம் இருந்திருக்கா விட்டால் இந்து மதம் வரண்ட பாலை வனம் போன்று சூனிய நிலையை அடைந்திருக்கும்.

வர்ண பேதங்களும், முரண்பாடுகளும், சம்பிரதாய பேதங்களும் உடைய இந்துக்கள் எல்லாம் ஆலயத்தின் ஏக சைதன்ய சக்தியில் ஐக்கியப் படுகின்றனர். வெவ்வேறு திசையில் இயங்கிக் கொண்டிருக்கும் இந்துக்களுடைய நாடி நரம்புகளை ஒன்றிணைத்துச் சமுதாயத்தின் இரத்தா சயங்களை ஆலயங்கள் சுத்திகரித்துக் கொண்டிருக்கின் றன. இத்தகைய மகா மகிமை பொருந்திய ஆலய கர்மங்களும், நிர்வாக முறைகளும் எவ்வளவு தூரம் இலட்சிய சுத்தியோடும், ஆத்மார்த்தத்தோடும் நடை பெருகின்றதென்பது இன்று ஒரு விமரிசன விஷயமா யிருக்கின்றது. ஆலயங்ககளில் பிராண நாடியைப் பாதிக்கக் கூடிய இவ்விஷயத்தில் கண்மூடி மௌனிகளாய் இருப்பதும், அல்லது தெளிவும் சக்தியும் இல்லாத அபிப்பிராயங்களை வைத்துக் கொண்டிருப்பதும் எதிர்காலத் தலைமுறைகள் அவிசுவாசிகளாக மாறுவதற்குக் காரணமாயிருக்கின்றது. ஆலயமென்ற நடு நாடியின் இருமருங்கிலும் இயங்கிக் கொண்டிருக்கும் இடகலை பிங்கலை போன்ற பெரும் சுவாசக் கலைகளாகிய ஆலய குருமார்களும் தர்ம கர்த்தாக்க்களும் தான் ஆலயச் சுடரோளியைத் தூண்டி விடும் தூண்டு கோல்கள்.

இவர்கள் போதிய இலட்சிய சுத்தியோடும் ஆத்மார்த்தத்தோடும் ஈஸ்வரார்ப்பன புத்தியோடும் ஆலய கைங்கரியங்களை நிர்வகிக்கத் தவறும் பட்சத்தில் சேத்திரங்கள் விரைவில் இரவுச் சந்தைகளாக மாறிவிடும். இதில் பரவலாகக் காணப்படும் சீர்கேடுகளைத் தகுந்த முறையில் திருத்தி அமைப்பதற்கு ஆலய பக்தர்கள் சிரத்தை எடுக்க வேண்டும். தவறினால் வளர்ந்து வரும் நமது பசுமை நிறைந்த இளம் உள்ளங்களில் மதத்தைப் பற்றிய தப்பபிப்பிராயங்கள் ஏற்பட்டு சூனிய வாதிகளாக மாறிவிடுவர்.பக்தர்களுடைய பக்தி விஸ்வாசங்களைத் தவறான வழியில் சுரண்டி எடுத்து ஆலயங்களை வளர்க்கப் பார்ப்பது ஆலயங்களுக்கும் மதத்துக்கும் பெரும் களங்கத்தை ஏற்படுத்துவதாயிருக்கும். இந்து மதத்தை எதிர்நோக்கி இருக்கும் இன்னொரு அபாயமும் இருக்கின்றது.
#ஞான மண்டலம்

இந்து

பெரும்பாலான இந்துக்கள் கிராமப் புறங்களில் தான் வாழ்கின்றனர். அவர்கள் அஞ்ஞானத்தாலும் வறுமையாலும் மத ரீதியான ஐக்கியத்தையிழந்து கூறு கூறாகப் பிரிந்து கொண்டிருக்கின்றனர். உதிர்ந்து விழும் இத் துண்டுகளைக் கொத்தித் தின்னக் கூடிய கழுகுகள் ஏற்கனவே ஆங்காங்கு கூடு கட்டி வாழ்ந்து வருவதையும் அறிந்திருக்க வேண்டும். நகர மத்தியில் வசதியான நாற்காலிகளில் மாத்திரம் கொண்டிருக்கும் நமது மத தத்துவ சம்ஹிதைகளும், புகழ் பெற்ற மத இயக்கங்களும் ஆதரவற்று ஒளியிழந்து வரும் கிராம இந்துக்கள் மத்தியில் ஒரு கை விளக்கையாவது கொளுத்தி வைக்க முயற்சி செய்தால் இருளடைந்த அவர்களுடைய வாழ்விலும் ஒரு விடி வெள்ளி உதிக்கலாமல்லவா? தனி நபர்களை மாத்திரம் மோட்சத்திற்கனுப்பிவைக்க முயற்சிக்கின்றவர்கள் சமுதாய மோட்சத்திலும் ஒரு சிறு கண் பார்வை செலுத்தினால் சமுதாயம் மோட்சத்திற்கு அருகதை உடையதாய்த் தீரும். சுதந்திரத்திற்குப் பின்னர் இந்துக்களுடைய எண்ணிக்கை கணிசமான அளவிற்குக் குறைந்திருக்கிறது என்பது ஆழமாகச் சிந்திக்க வேண்டிய விஷயம். பல தலை முறைகளாய் எங்களை நோக்கி ஒழுகி வந்த விதேசச் சிந்தைனைகளும் பழக்க வழக்கங்களும் இந்துக்களுடைய பாரம்பரியச சிறப்புகளைச் சாரமாய்ப் பாதித்திருக்கின்றன. இன்னும் நாம் அதே ஒழுங்கில்தான் ஒழுகிக் கொண்டிருக்கின்றோம். இந்த அடிமைத்துவ நிலை எங்களுடைய சுய அறிவிலும் சிந்தனையிலும் முரண்பாடுகளையும் மயக்கத்தையும் உண்டாக்கி இருக்கின்றதும் அல்லாமல் சுதந்திரமாகிய மூல வேரையும் அறுத்து விட்டிருக்கின்றது. இனியாவது சொந்தக் கால்களில் நிற்பதற்கும், சுயமாகச் சிந்திப்பதற்கும், செயலாற்றுவதற்கும் முயற்சிக்க வேண்டும். இந்து என்று சொல்வதற்கு வெட்கப்படும் சில பகுத்தறிவாளர்கள் காலம் மாறுவதை அறிவதில்லை. இந்துக்கள் உடையதாய் இருக்கின்ற எதையும் நிந்தனைக் கண்கொண்டு பார்க்கின்ற இந்த நவீன பகுத்தறிவாளர்கள் விஞ்ஞான மண்டலத்தில் நிமிஷம் தோறும் மாறிக் கொண்டிருக்கும் மாற்றங்களை அறியத் தவறி விடுகின்றனர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஏட்டுப் பிரதிகளாய் இருக்கின்ற இவர்கள் இருபதாம் நூற்றாண்டின் நவீன விஞ்ஞான கூட்டங்களில் இந்துமத வேதாந்த தரிசனங்களைச சாஸ்திர ரீதியாக நிரூபித்து வருகின்றனர் என்பதை அறிய வேண்டும். இங்ஙகனம் நவீன விஞ்ஞான சித்தாத்தங்கள் வேதாந்த தரிசனங்களை நோக்கிப் பருணமித்து வருகின்ற இவ்வேளையில் விஞ்ஞான அறிவில் அரிச்சுவடிப் பாடத்திளிருக்கின்ற நம்மவர்களில் பலர் மத யதார்த்தங்களில் கண்மூடிகளாயிருப்பது முழு முட்டாள்தனமாகும்.

மத ஞானமில்லாத பௌதீக சாஸ்திரமும், பௌதீக சாஸ்திரமில்லாத மத ஞானமும் மனித சமுதாயத்தின் சரியான வளர்ச்சிக்கு உதவுவதாய் இருப்பதில்லை. ஆகையால் எதிர்கால உலகம் ஞான விஞ்ஞான யோகத்திலிருந்து உடலெடுத்த பழமையும் புதுமையுங் கலந்த ஒரு நவீன உலகமாயிருக்கும். இதன் அறிகுறியாக பௌத்த சுபீட்சம் நிறைந்த மேல் நாடுகளிலிருந்து தங்களுடைய கலை கலாச்சாரங்களைப் புறக்கணித்து இந்து ஆத்மீகக் குருமார்களை நாடி வந்து குவியும் மேல் நாட்டு இளைஞர்களைப் பார்த்தால் இதன் தாற்பரியங்களை நீங்கள் ஊகித்தறியலாம். வளர்ந்து வரும் இளம் வயதினர்கள் தங்களுடைய ஜீவித மூலகங்களை நோக்கி இறங்கிச் செல்வதற்கு இவ்வளவும் போதுமானது.

இனி எங்களுடைய வேதாந்த தரிசனங்களின் சாரம் என்ன? பரமாத்மா என்பது ஏகமான, நிலையான ஒரு சத்திய வஸ்த்து. அது சர்வ சராசரங்களினுடைய இருதய குகையில் இருக்கின்றது. உள்ளேயிருப்பது போல் வெளியிலும் இருக்கின்றது. அது சலிக்கின்றது. சலனமில்லாமலும் இருக்கின்றது. எக்காரணம் கொண்டும் பிளவு படாத ஏக சக்தி எனினும் புலன்களுடைய பௌதீகா னுபவங்களில் அது பலவாறாகத் தோற்றப்படுகின்றது. இதுதான் பிரபஞ்சத்தின் தோற்றம், நிலைபேறு, ஒடுக்கம் இவைகளுக்கு மூல காரணமாய் இருக்கின்ற பரமாத்மா, இவ்வாறு பலவாறாக தோற்றப்படுகின்ற துவைத்த பாவம். ருசிக்கும் சாமியாப் பாட்டுக்கும் தக்கபடி படிப்படியாக வளர்ந்து அத்வைதம் என்ற ஏகாத்ம வாதத்தில் முடிகின்றது. இதுதான் வேதாந்த தரிசனம் தரும் ஏகாத்ம வாத சித்தாந்தம். இது முழு மனித வர்க்கத்தை மாத்திரமல்ல, சகல ஜீவ ராசிகளையும் ஒரு குடும்பமாக இணைத்து வாழ வைப்பதற்குரிய அற்புத ஆற்றலுடையது. அமங்கலகரமானதொரு முகூர்த்தத்தை நோக்கிச் சென்று  கொண்டிருக்கும் இவ்வுலகத்தைப் பாதுகாப்பதற்குரிய சக்தி, இந்த ஏகாத்ம வாத சித்தாந்தத்தைத் தவிர வேறெதற்கும் இருப்பதாகத் தெரியவில்லை. இந்த லட்சியத்தின் கீழ் ஆத்மீகத் தலைவர்களும் மதாசாரியர்களும், மத ஸ்தாபனங்களும் எல்லாம் ஒன்று திரண்டு செயலாற்ற வேண்டும்.

இது விஷயத்தில் ஜனங்களை ஒன்று திரட்டி அறிவுடைய வர்களாக்கித் தீர்க்கும் பொழுது சமுதாயத்தில் உடைந்து இருக்கும் பிணைப்புகள் எல்லாம் இணைந்து சரியாகி விடும். இந்து சமுதாயம் ஒருமுகப் பட்ட பெரும் சக்தியா கவே வடிவெடுக்கும். பிராமணர்களுக்கு இருக்க வேண்டிய பிரம்ம சிந்தனையும், சத்திரியர்களுக்கு இருக்க வேண்டிய வீரமும், வணிகர்களுக்கு இருக்க வேண்டிய வர்த்தக விவசாயத் திறமையும், சூத்திரர்களுக்கு இருக்க வேண்டிய தொண்டாற்றும் விசால மனமும் எவரொருவரிடத்தில் இருக்கின்றதோ அவர்தான் உத்தமமான இந்து.

சுருங்கக் கூறின் இந்து மதத்தின் பல துறைகளிலும் நிலவி வருகின்ற பாகு பாடுகளும், ஆலய கைங்கரியங்களிலும் நிர்வாகத் துறைகளிலும் வளர்ந்து வருகின்ற சீர்கேடுகளும், கிராமிய இந்துக்களுடைய பரிதாப கரமான நிலையம், மத அறிவின்மையால் இளம் வயதினர்களுக்கு இடையில் தோன்றிக் கொண்டிருக்கும் தப்பபிப்பிராயங்களும், சம்பூரணம் அடையாத விஞ்ஞான அரிவாள் வரும் சூனிய வாதம் போன்றவைக்கு முடிவு காணும் வண்ணம் சக்தி வாய்ந்த ஒரு மார்க்கத்தைக் கண்டறிய வேண்டி இருக்கின்றது. இதுதான் இன்றைய அவசரமான தேவை யும் நோக்கமும். இந்து என்ற அபிமானமும் மனப் பூர்வமான இருதயமும் இருக்கு மாகில் இதற்குரிய சக்தி உங்களிடமே இருக்கின்றது.
உங்களுடைய இருதய நாடிகளைப் பூர்வீக இருஷிகளின் இருதயத்துடன் இணைக்குக. இவர்கள் விட்டுச் சென்ற ஆத்மீகச் சுவடிகளை நன்றாக்க் கற்றுணர்ந்து அதில் இரண்டறக் கலந்து விடுங்கள். உங்கள் கலை கலாச்சாரத்துக்கு முத்து மணிகளாக இருப்பவைகளைப் பேரபிமானத்துடன் தயங்காமல் ஏற்றுக் கொள்ளும் பொழுது உங்களுடைய சூக்கும சரீரத்தில் ஒரு சுதந்திரமான யதார்த்த இந்து உருவாகிறான். இந்தப் பரிபூரண சுதந்திரந்தான் ஒரு இந்துவின் பரம இலட்சியம். இதில்தான் உங்களுடைய ஐக்கியமும் திருப்தியும் சாஸ்வதமான இன்பமும் தங்கி இருக்கின்றது. இதை உணர்க. அனுபவிக்குக. வருங்கால உலகம் தனது ஆத்மாவின் குளிர்மைக்காக உங்களை நோக்கித்தான் வரப் போகின்றது. அதற்கிடையில் உங்கள் கொதிவலிகளைத் தீர்த்து, ஒரு யதார்த்த இந்துவாகத் தலை நிமிர்ந்து நில்லுங்கள்.

No comments: