Monday 19 January 2015

ஞான மண்டலம் "பலாபலன்களில் பற்றுதல் வையாதே"





"பலாபலன்களில் பற்றுதல் வையாதே"


கர்ம பலனைத் துறப்பதால் வரும் பேரானந்தப் பெரும் பேற்றுக்கு நம்மை ஆளாக்கித் தீர்ப்பதற்கு கர்ம ரகசியத்தைப் பற்றி அறிவது அவசியமாகும். கர்ம பலன் சாராமல் கர்மம் செய்யும் அதி நுட்பமான கர்ம நியமங்களை தத்துவார்த்த ரீதியாக வரித்துக் கூறும் ஓர் அரிய நூல் பகவத் கீதை. பகவத் பிரசாதமாகக் கிடைத்த அந்த அபூர்வ நூலின் சாராம்சம் கர்மம் செய் பலாபலன்களில் பற்றுதல் வையாதே. கர்ம பலனைத் துறந்து சமசித்தனாய் இருப்பவனுடைய கடும் வினைகள் தீர்ந்து நித்தியா சுகம் கிடைக்கும். இறப்பு பிறப்பொழிந்து இறை சம்பந்தமும் கிடைக்கும். ஜீவன் அடைய வேண்டிய இறுதி நிலையும் இதுதான். கீதா தர்மங்கள் வாழ்க்கைத் தர்மங்களைப் புறக்கணிப்பதில்லை. கர்மத்தில் விரக்தி மனோபாவமில்லாமல் சுய தர்மத்தை முயாகச் செய்வதற்குரிய ஊக்கம் அளிக்கின்றது. அங்ஙனம் சுயதர்மத்தை  முறைதவறாமல் செய்கின்றவர்களுக்கு நாளடைவில் சுயமாகவே ஞானம் சித்திக்கும் என்பது கீதையின் கருத்து. வாழ்க்கைப் பிரச்சனைகளைத் தீர்க்கத் தெரியாமல் மதி மயங்கி விரக்த்தியடைந்திருப்பவர் களுக்கு சுய நம்பிக்கையும் உற்சாகமும் தாராளமாகக் கீதை அள்ளி வழங்குகின்றது. கர்மத்தத் துறப்பதும் பலன் கருதாமல் கர்மமாற்றுவதும் எவராலும் செய்ய முடியாத காரியம். இவ் விஷயத்தில் யோகியும் போகியும் ஒரே சார்புடையவர்கள். ஊண், உறக்கம், தொழில், வழிபாடு, தவ யோகமெல்லாம் பலன் கருதிச் செய்பவை. பயன் கருதாமல் கருமமாற்ற முடியாதென்றிருக்கையில் கர்ம பலனைத் துறப்பதென்பதின் அர்த்தமென்ன? பயன் எதுவாயினும் சரி அதில் விருப்பு வெறுப்பு இல்லாமல் சமசித்தனாய் இருப்பதென்பது அதன் உட்பொருள். இதை நடைமுறைப் படுத்துவது மிகக் கடினமான காரியமாகிலும் சிரமமான பயிற்சி, உறுதியான மனம், திருவருள் துணை கொண்டு சாதிக்கலாமென்று கீதை வலியுறுத்திக் கூறுகின்றது. உண்மைப் பொருளாகிய பகவான் கீதோபதேசம் மூலமாக நமக்கு உறுதிமொழி அளிக்கும் பொழுது நாம் அதில் நம்பிக்கை இல்லாமல் இருப்பதற் குரிய காரணங்களில்லை. வினைப் பயனை விட செயலின் பலாபலனைப் பற்றி மனம் உருவாக்கிக் கொண்டிருக்கும் "ப்ரதீகரணம்" அதிக துன்பத்தை விளைவிக்கக் கூடியது. கர்ம பலனைப் பற்றி எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி எண்ணிக் கொண்டிருக்கும் மனோ வாசனை "ப்ரதீகரணம்" எனப்படும். மனம் உருவாகிக் கொண்டிருக்கும் "ப்ரதீகரண" அலைகள் கிரியா சக்தியைப் பலஹீனப்படுத்திக் காரியத் தடையும் மனக் குழப்பமும் விளைவிக்கின்றன. மனதின் "ப்ரதீகரண" சக்தியைக் குறைத்து கர்ம பலனைத் துரப்பதற்குரிய வழியென்ன?
'பிரசாத்தால் சர்வதுக்கானாம் ஹானி' கர்ம பலன் சுகமோ துக்கமோ அது எதுவாயினும் சரி கிடைப்பதை திருவருள் பிரசாதமாய் ஏற்றுக் கொள்ளப் பழகினால் துயரம் தீரும். ஆலய வழிபாட்டிற்குப் (ஆலயம் வழிபடுகிரவர்களுக்குப்) பின் பிரசாதம் கிடைக்கிறது. சில சமயம் சக்கரை அமுது, பஞ்சாமிருதம் போன்ற சுவை மிக்க இனிய பிரசாதம் கிடைக்கும். வேறு சிலவேளையில் கிடைப்பது நீர், குழை, மலர் போன்றவையாய் இருக்கும். அது எதுவாயினும் சரி கிடைக்கும் பொருளின் குறை நிறை தராதரம் ஏதுமே நினைக்காமல் நிறை மனதுடன் ஈஸ்வர பிரசாதமென்ற மனோபாவனையுடன் அதை ஏற்றுக் கொள்கிறோம். அதே மனோபாவனையுடன் தினசரி செய்யும் கர்ம பலன் எதுவாயினும் சரி வருவதெல்லாம் திருவருள் பிரசாதமென்ற மன சங்கல்பத்துடன் ஏற்கப் பழகினால் வினைப் பயன் சாராத எல்லையில்லா இன்பமும், ஆழ்ந்த உள் அமைதியும் நித்ய அனுபவமாயிருக்கும். இறுதியில் முத்தி நிலையைத் தருகிற ஞானம் இயல்பாகவே உதிக்கும்.
மனிதர் தமது சுய விருப்பு வெறுப்புகளைச் சாதிப்பதற்காக எத்தனையோ கர்மங்களை வருந்திச் செய்கின்றனர். அதனால் வரும் கடுந் துன்பங்களைப் பொறுக்கவும் ஏற்கவும் பழகிக் கொள்கின்றனர். மேலும் பிறவித் துன்பங்களைப் பெருக்கும் இத்தகைய செயலைச் செய்கின்ற மனிதன் முன்வினையைத் தீர்த்து பின்வினை சாராமல் அல்லலொழிந்து நித்தியா சுகமும், சாந்தியும் தரும் இந்தப் பயிற்சியைச் செய்து கடைத்தேறினால் என்ன?
மனித சரீரத்தில் நிறைந்திருக்கும் ஜீவன் மென்மையானது. மரணத்திற்குப் பின் ஜீவனுக்கு மீண்டும் மனித சரீரம் கிடைக்குமோ என்பது சந்தேகம். சம்சார சமுத்திரத்தைக் கடப்பதற்குரிய மனித சரீரமென்ற பெருத்தமான தோணியும் குருவென்ற சுக்கானும் இறை அருள் என்ற சாதகமான காற்றும் கிடைத்தும் கரையேற முயற்சிக்காத மனித ஜென்மம் தற்கொலைக்கு ஒப்பானது.


No comments: