Wednesday, 7 January 2015

ஞான மண்டலம் கீதையின் அருளுரை



#ஞான மண்டலம்

கீதையின் அருளுரை 


ஸ்ரீ பகவத் கீதையைப் பற்றி இங்கு விளக்க வேண்டிய அவசியமில்லை. பாரத யுத்தத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ் ணன் அருச்சுனனுக்கு உபதேசித்தருளிய இப் புனித நூல் சகல உலகத்தவராலும் அறியப்பட்டது. வராக புராணத்தில் சாட்சாத் விஷ்ணுவால் விளக்கப் பட்ட கீதையின் மகத்துவத்தின் ஒரு சிறு பகுதி இச சிறு நூலின் கடைசி யில் சேர்க்கப் பட்டிருக்கின்றது. வியாச பகவான் இயற்றிய மகா பாரதத்தில் வரும் பீஷ்ம பர்வத்தில் கீதா தத்துவம் விளக்கப் பட்டிருக்கின்றது. பதினெட்டு அத்தியாயங்களில் எழுநூறு சுலோகங்களால் கீதை எழுதப் பட்டிருக்கின்றது. இக பரங்களைப் பற்றி அரிய வேண்டிய சகல விளக்கங் களையும் மனிதன் கடைத்தேற வேண்டிய சகல வழிவகை களையும் இதில் பகவான் கிருஷ்ணன் திருவாய் மலர்ந் தருளியிருக்கிறார். கீதை தனி ஒரு சமயத்தவருக்கோ, இனத்தவருக்கோ சார் புடையதன்று. இதன் உபதேசங்களும் கருத்துக்களும் சகல மனித சமூகத்தவருக்கும், சமயத்தவருக்கும் உரியது. ஏற்றுக் கொள்ளத் தக்கது. சொந்தமானது. கீதையை முழுதும் படித்துப் பயன் பெற முடியாத அன்பர்களுக்கு அதன் முக்கிய கருத்துக்களை யாவது இதனால் அறிந்து பயனடையலாம் என்று கருது கின்றோம். கீதையின் முக்கிய போதனைகளும், சாதனா முறைகளும் இச் சிறு நூலில் தரப் பட்டிருக்கின்றன. மெய்யன்பர்கள் யாவரும் மன ஒருமையுடன் ஊன்றிப் படித்து அவ்வழி நின்று இறைவனருளால் பூரண விடுதலை யின் மிகச் சிறந்ததை அடைவீர்களாக.

சாங்கிய யோகம்: (ஆத்ம தத்துவ விளக்கம்)

ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா கூறுகிறார்.

சுலோகம் 3. 
பார்த்தா! கோழையின் இயல்பை அடையாதே. இது உனக்குப் பொருந்தாது. இழிவான மனத் தளர்ச்சியை நீக்கி எழுந்து நில்.

அருச்சுனன் கேட்டது:


சுலோ.6. 

சிறுமை என்ற குறையால் நல்லியல்பு இழந்தவனாய் அறநெறி இன்னதென்று உணராமல் கலங்கிய அறிவுடன் உன்னைக் கேட்கின்றேன்.

சுலோ.7. 

கண்ணா! எது எனக்குச் சிறந்ததென்பதை நீ நிச்சயப் படுத்திக் கொள்வாயாக. நான் உனது சீடன். உன்னிடம் தஞ்ச்சமடைகின்றேன். உபதேசித்தருள்க.

கண்ணன் உபதேசித்தது:


சுலோ. 12
முன்பு எப்பொழுதாவது நான், நீ, இங்குள்ள வேந்தர் யாவரும் இல்லாதிருந்த தில்லை. இனி இந்தச் சடலங்கள் அழிந்தாலும் நாம் என்றைக்கும் இல்லாமற் போகவும் மாட்டோம்.

சுலோ. 14
குந்தியின் மகனே! குளிர் வெப்பம், சுகம் துக்கம், யாவும் இயற்கையின் நடைமுறையால் தோன்றி மறைவான. என்றும் நிலை பெற்றிருபனவல்ல. பாரதா! அவற்றைப் பொறுத்துக் கொள்ளப் பழகு.

சுலோ. 15
எவன் இவற்றால் கலங்காமல் இன்ப துன்பங்களைச் சமனாகக் கொள்வானோ அந்தத் தீரன் சகா நிலைக்கு (மோட்சத்திற்கு) தகுந்தவனாகின்றான்.

சுலோ. 16
இல்லாதது உள்ளதாகாது. உள்ளது இல்லாததாகாது. பேரறிஞர்கள் இவை இரண்டிற்குமுள்ள வேற்றுமைகளை உணர்வார்கள்.

சுலோ. 2௦
ஆத்மா பிறப்பதுமில்லை. இறப்பதுமில்லை. இது முன் இல்லாதிருந்து பிறகு பிறந்ததுமல்ல. ஆத்மா பிறப்பு இறப்பற்றது. குன்றாதது. வளராதது. காயம் அளிக்கப்பட்டாலும் அவன் அழியான்.

சுலோ. 22
பழைய துணிகளைக் கழற்றி எறிந்து புதியதைப் போட்டுக் கொள்வது போல் ஆத்மா நைந்த உடல்களைக் களைந்து புதியவற்றில் புகுகின்றது.

சுலோ. 27
பிறந்தவன் இறப்பதும் இறந்தவன் பிறப்பதும் நிச்சயம் எனில் இத் தவிர்க்க முடியாத விஷயத்தில் நீ வருந்துவது தகுதியன்று.

சுலோ. 28
உயிர்கள் தொடக்கத்தில் தோன்றாமலும் இடையில் தோன்றியும் முடிவில் தோன்றாமலும் இருக்கின்றன. இதைக் குறித்து நீ துயரப்படுவானேன்.

சுலோ. 3௦
பாரதா! எல்லாவற்றிலும் உறைகின்ற இந்த ஆத்மா கொல்ல முடியாதது. ஆகையால் நீ எந்த உயிரின் பொருட்டும் வருந்துதல் வேண்டாம்.

சுலோ. 33
அரப் போராகிய இதனைச் செய்யாது விட்டால் தவ தர்மத்தையும் கீர்த்தியையும் இழந்த பாவத்தை அடைவாய்.

சுலோ. 35
நீ பயத்தினால் போரை விட்டு விலகியதாக மகாரதர் எண்ணுவார்கள். உன்னை எவர்கள் போற்றினார்களோ அவர்களால் இகழப்படுவாய்.

சுலோ. 37
அரப் போரில் மடிந்தால் வானுலகை எய்துவாய். ஆகையால் போரின் பொருட்டு உறுதி கொண்டு எழுந்திரு.(நம் வாழ்வும் ஒரு போராட்டம் தானே?)


மனிதனின் துக்கத்துக்கும் அளிவுக்குமுள்ள காரணங்களை பகவான் சொல்கிறார்:


சுலோ. 62.
விஷய சுகங்களை நினைப்பதால் பற்றுண்டாகிறது. பற்றுதல் ஆசையாகவும், ஆசை சினமாகவும் வடிவெடுக்கின்றது.

சுலோ.63.
சினத்தால் மனக் குழப்பமும், மனக் குழப்பத்தால் மறதியும், மறதியினால் புத்தி நாசமும், புத்தி நாசத்தால் மனிதனுக்கு அழிவும் உண்டாகின்றது.

சுலோ.66.
மனோலயம் இல்லாதவனுக்கு ஆத்ம போதமும் ஆத்ம பாவனையுமில்லை. ஆத்மத்தியானம் இல்லாதவனுக்கு சாந்தியில்லை. சாந்தியில்லாதவனுக்குச்  சுகமேது?

சுலோ.68.
எவன் ஒருவன் ஆசைகளை அறவே அகற்றி நான் எனது, என்பதற்று அகங்காரமின்றி நடமாடுகிரானோ அவன் அமைதி பெறுகிறான்.

தியான யோகம்:


சுலோ.5.
தன்னைத்தான் உயர்த்திக் கொள்க. தன்னைத் தன்னால் இழிவுறுத்த வேண்டாம். தனக்குத் தானே நண்பனுமாவான், பகைவனுமாவான்.

சுலோ.6.
தன்னைத் தான் வென்றவனே தனக்குத் தான் நண்பன், தன்னைத் தான் வெல்லாதவன் தனக்குத் தான் பகைவன் போல் கேடு விளைவிப்பான்.

சுலோ.7.
தன்னை வென்று சித்தம் தெளிந்தவனுக்குக் குளிர் வெப்பங்களிலும், சுகம் துக்கம், இகழ்ச்சி புகழ்ச்சிகளிலும் ஈஸ்வர தரிசனம் நிலைத்திருக்கும்.


தியான யோகப் பயிற்சி விளக்கம்:


சுலோ.11.
சுத்தமான இடத்தில் அதிக உயரமில்லாமலும், அதிக தாழ்வில்லாமலும், மான் தோல், துணி, தர்ப்பை இவைகளை விரித்து அதன்மேல் உறுதியாய் ஆசனத்தமர்ந்து

சுலோ.12.
மனதை ஒருமுகமாக்கி புலச் செயல்களையும் நன்கு கட்டுப்படுத்திச் சித்தசுத்தியின் பொருட்டு யோகம் பயில்க.

சுலோ.13.
உடல், தலை, கழுத்து நேராக அசைவின்றி வைத்து உறுதியுடன் மூக்கு நுனியைப் பார்த்துக் கொண்டு திசைகளைப் பாராமல்

சுலோ.14.
மன அமைதியுடையவனாய் அச்சத்தைப் போக்கி பிரமச்சரிய விரதம் பூண்டு மனதை வசப்படுத்திச் சித்தத்தை என்பால் வைத்து என்னையே குறியாகக் கொண்டு யோகத்தில் இருக்கக் கடவாய்.

சுலோ.15.
இவ்விதம் எப்போதும் மனதைத் தியானத்தில் பயிற்றி உள்ளத்தைக் கட்டுப்படுத்திய யோகி, என்பாள் நிலைபெற்றதாகிய மிகச் சிறந்த விடுதலையால் உண்டாகும் ஆறுதலை அறிவான்.

சாதகன் அனுசரிக்க வேண்டிய நியமங்களின் சுருக்கம்:


சுலோ.16.
மிகைப்பட உண்போனுக்கும், உணவற்றோனுக்கும் யோகமில்லை. அதிகம் உறங்குபவனுக்கும், அதிகம் விழித்திருப்பவனுக்கும் யோகம் கைகூடுவதில்லை.

சுலோ.25.
உறுதியான புத்தியால் மனதை ஆத்மாவில் நிறுத்தி மெல்ல மெல்ல அமைதி பெறுக. எதற்கும் கவலையுறாதிருக்கக் கடவாய்.

சுலோ.26.
எங்கெங்கே மனம் சஞ்சலமாய் உறுதியின்றி உழல்கின்றதோ அங்கங்கே அதைக் கட்டுப்படுத்தி ஆன்மாவின் வாசத்துக்குக் கொண்டு வருக.

சுலோ.28.
இங்ஙனம் குற்றங்களைப் போக்கி எப்போதும் ஆத்மாவில் லயத்திருப்பானாகில் அந்த யோகி பிரம்மத்தைத் தொடுவதாகிய மிக உயர்ந்த இன்பத்தை எளிதில் எய்துவான்.

மனிதன் இயல்பு விளக்கப்படுகிறது:


அர்ச்சுனன் உரைத்தது:
சுலோ.34.
கண்ணா! மனம் சஞ்சலமுடையது. தவறு செய்யும் இயல்புடையது. வலிவுடையது. அதைக் கட்டுப்படுத்துதல் காற்றைக் கட்டுபடுத்துவது போல் மிகக் கடினமான காரியமென்று நான் கருதுகிறேன்.

கண்ணன் கூறியது:
சுலோ.34.
பெருந்தோளாய்! மனத்தைக் கட்டுதல் அரிதுதான். அலையும் சுபாவமுடையதுதான். ஆனால் குந்தியின் மகனே! அதைப் பயிற்சியினாலும் வைராக்கியத்தினாலும் உறுதியினாலும் கட்டிவிடலாம்.

சுலோ.36.
தபசிலும் ஞானத்திலும் யோகி சிறந்து விளங்குகின்றான். கர்ம யோகத்திலும் அவன் சிறந்தவன். ஆதலால் அர்ச்சுனா நீ யோகியாகுக.

பகவான் திருவாய் மலர்ந்தது:

சுலோ.7.
எவரெவர் அனைத்தையும் எனக்கு அர்ப்பணம் செய்து என்னையே தஞ்சமாகக் கொண்டு சிதறா மனத்துடன் என்னையே தியானித்து வழிபடுகின்றார்களோ அவர்களை நான் மரண சம்சாரக் கடலில் நின்றும் விரைவில் தூக்கி விடுவேன்.

சுலோ.8.
மனதை என்பால் நிறுத்து. புத்தியை என்னுட் புகுத்து.இனி நீ என்னிடத்தே வசிப்பாய்.ஐயமில்லை.

இதுகாறும் கூறியவற்றை அனுசரிக்க முடியாதவர்கள் செய்யக் கூடியவை:


சுலோ.9.
இனி மனதை என்னில் உறுதியாக நிறுத்த வல்லமை இல்லை என்றால் பழகிப் பழகி என்னை அடைய விரும்பு.

சுலோ.1௦.
பழகுவதில் நீ திறமையற்றவனாகில் என் பொருட்டு தொழிலைச் செய்வதைக் குறிக்கோளாகக் கொள்க. என் பொருட்டு கர்மம் செய்தாலும் நீ பெரு நிலையடைவாய்.

சுலோ.11.
இதுவும் உன்னால் செய்ய இயலாவிட்டால் என்னிடம் அடைக்கலம் புகுந்து, தன்னடக்கம் பயின்று எல்லாச் செய்கைகளின் பலன்களையும் எனக்கு அர்ப்பணம் செய்து நில். நீ நற்கதியடைவாய்.

பக்தனின் சுபாவமும் இலட்சணமும்:


சுலோ.19.
புகழ்ச்சி, இகழ்ச்சி, மானம், அவமானம், குளிர், வெப்பம், சுகம், துக்கம் இவற்றைச் சமனாகக் கருதும் பற்றற்ற மௌனி; கிடைத்ததில் போதுமென்ற நிறைவுடையவன்; தனக்கென்று ஒரு இடம் தேடாதவன்; நிச்சய புத்தியுடையவன் இத்தகைய சுபாவமுடைய பக்திமான் எனக்கினியவன்.

சந்யாச யோகம்:
ஒருவன் எளிதில் கடைத்தேற வழி:


சுலோ.56.
எத்தொழிலைச் செய்தாலும் என்னையே சரணமாகக் கொண்டவன் எனதருளால் அழிவற்ற பரம பதத்தை எய்துகிறான்.

சுலோ.58.
என்னைச் சித்தத்தில் வழுத்திக் கொண்டிரு. எனதருளால் எல்லாத் தடைகளையும் தாண்டிச் செல்வாய் அன்றி நீ அகங்காரத்தால் இதனைக் கேளாது விடுவாயெனில் பெரும் நாசத்தை அடைவாய்.

சுலோ.62.
பாரதா! எல்லாப் பாங்கிலும் என்னையே சரண் புகு. எனதருளால் பரம சாந்தியாகிய நித்தியா இன்பத்தை எய்துவாய்.

சுலோ.63.
இங்ஙனம் மகா இரகசியமாகிய ஞானத்தை உனக்குரைத்தேன். இதனை முற்றிலும் ஆராய்ந்து எப்படி விருப்பமோ அவ்விதம்  செய்.

சுலோ.64.
இன்னும் ஒரு முறை எல்லாவற்றிலும் ஆழ்ந்து எனது இறுதி வசனத்தைக் கேள். நீ எனக்குற்ற நண்பன். உனக்கு நல்லதைச் சொல்லுகிறேன் கேள்.

சுலோ.65.
உன் மனதை எனதாக்குக. என்னிடம் பக்தி பூண்டு என் தொடனாகுக. என்னையே வணங்கு; என்னையே அடைவாய். நிச்சயம் உனக்கு உறுதி கூறுகிறேன்.நீ எனக்கு இனியவன்.

பகவானின் இறுதி வசனம்:


சுலோ.66.
எல்லா அறங்களையும் விட்டு என்னையே சரணடைக. சகல பாவங்களில் நின்றும் நான் உன்னை விடுவிக் கின்றேன். துயரப் படாதே.

ஸ்ரீ பகவத் கீதா மகத்துவம்:
விஷ்ணுவினால் திருவாய் மலர்ந்தருளப் பெற்றது:


கேள்வி: பகவானே! பரமேசா!! சம்சார தோஷத்தால் கட்டுண்டு கிடக்கும் ஒருவன் உயர்ந்த பக்தியைப் பெறுவது எங்ஙனம்?

விடை:
எவனொருவன் கீதா பயிற்சியில் இன்புறுவானோ அவன் முன் ஜென்ம கர்ம தோஷத்தால் தவிப்பினும் அவன் முக்தனாவான்.இவ்வுலக சுகத்தையும் அனுபவிப்பான்.

முறைப்படி கீதா பாராயணம் செய்து தியானம் செய்கின்ற வனை மகா கொடிய பாவங்களும் தீண்டாது.

பகவத் கீதை எங்கிருக்கிறதோ, எங்கு கீதா போதனை நடைபெறுகிறதோ, அங்கு புண்ணிய தீர்த்தங்கள் அனைத்தும் வந்து சேர்ந்த பலனும் மற்றும் புண்ணியங்க ளும் வந்து கூடுகின்றன.

கீதா பாராயணமும் பயிற்சியும் செய்து கொண்டிருப்பவன் வெகு சீக்கிரத்தில் பூரண விடுதலை அடைகிறான். மரணத் தறுவாயில் 'கீதை' என்று உச்சரிப்பவர் உடனே பரம பதமடைவர்.

கொடிய பாவங்கள் செய்தவனும் கீதையின் கருத்தைக் கேட்பதில் விருப்பங் கொள்வானாகில் அவன் செய்த பாவங்கள் நீங்கி ஸ்ரீ வைகுண்டமேகி மகா விஷ்ணுவுடன் இரண்டறக் கலந்திருப்பான்.

No comments: