Wednesday 29 November 2006

தாய்மை


தாய்மை போற்றுதும் தாய்மை போற்றுதும்
தன்னிகரற்ற தாய்மை போற்றுதும்

மண்ணுயிர் வாழ்வில் மற்றவை எல்லாம் மறப்பினும்
விண்ணுயர் செல்வம் வீடுகள் எல்லாம் இழப்பினும்
தன்னுயிர் வாடத் தரணியில் எம்மைத் தந்திட்ட
தாய்மை போற்றுதும் தாய்மை போற்றுதும்.

ஈரைந்து மாதம் இவள் எம்மைச் சுமந்தாள்
இரவிலும் பகலிலும் எமைக்காத்து வளர்த்தாள்
வால்லறிவான் வழியில் எமைவாழ வைத்த
தாய்மை போற்றுதும் தாய்மை போற்றுதும்.

மாதா பிதா குரு தெய்வம் – இதை
ஓதா திருந்தார்கள் உண்டோ அதில்
மாதாவின் பின்தானே எல்லாம் – அந்த
தாய்மை போற்றுதும் தாய்மை போற்றுதும்.

தன்உதிரம் பாலாக்கி தன்உழைப்பில் நீர்பூக்க
எம்முகத்தைப் பார்த்தவளும் ஏற்றதெல்லாம் பேருவகை
மண்ணுலகில் வாழும்வரை மறப்போமோ அவள்முகத்தை
தாய்மை போற்றுதும் தாய்மை போற்றுதும்.

உலகஉயி ரெல்லாம் படைத்த இறைவனும் –அவர்
அருகிலம ரவோர் உபாயம் செய்தான்
தாயுருக் கொண்டு தரணியங்கும் தானாகி நின்றான்
தாய்மை போற்றுதும் தாய்மை போற்றுதும்.

நாம் வாழ்ந்த மண்ணும் தாய்தான்
நாம் பேசும் மொழியும் தாய்தான்
நமைச் சூழ்ந்த இயற்கையும் தாய்தான்
தாய்மை போற்றுதும் தாய்மை போற்றுதும்.

வாய்மையின் வடிவம் தாய்மை – உயர்
தூய்மையின் வடிவம் தாய்மை – உணர்
தெய்வத்தின் வடிவந் தாய்தான் – அந்த
தாய்மை போற்றுதும் தாய்மை போற்றுதும்.

தாய்மை போற்றுதும் தாய்மை போற்றுதும்.
தன்னிகரற்ற தாய்மை போற்றுதும்
தன்னுதரந் தன்னில் எனைத்தாங்கித் தரணிதந்த
அன்னை ஞானாம்பிகையின் பாதம் போற்றுதும்.

15-09-06சீஐடீவியின் கவிதையே தெரியுமா நிகழ்ச்சியில் நேரடி அஞ்சலில் பாடிய கவிதை.



No comments: