Monday 27 November 2006

சுவடுகள்




TrincoVoice திருக்கோணமலைக்குரல்

இது ஒரு புது முயற்சி. திருக்கோணமலைத் தெருப்பாடகன் என்னுந் தலைப்பில் பல தனிப் பாடல்கள் எழுதியிருந்தாலும் அவை திசைக் கொன்றாக சிதறிய நிலையில் இனி வருங் கவிதைகளையாவது ஒரு களமமைத்து காப்போமென எண்ணி இத் தளத்தை உருவாக்கினேன்.


ஈரடிச் சுவடுகள் பதிய
காலநதிக் கரையோரம்
நான் நடந்தேன்.

திரும்பிப் பார்த்த போது
நாலடிச் சுவடுகளின்
தடம் கண்டேன்.

யாரென என்னுள் வினவ
அது தானென
இறைவன் சொன்னான்.

இறைவனின் துணை உண்டு
என்ற இதமான உணர்வோடு
என் பயணந் தொடர்ந்தது.

சோதனைகளில் சோராமல்
கவலைகளில் கலங்காமல்
காலங்கள் போயின.

முதுமையின் பாரம் முற்ற
இளமையின் சாரம் வற்ற
வாழ்க்கையே சுமையாயிற்று.

இறைவனின் சுவடுகள் இன்னும்
என்னுடன் வருகுதா என்றெண்ணி
திரும்பிப் பார்த்தேன்.

திடுக்கிட்டேன் திகைப்புற்றேன்
ஒரு சோடிச் சுவடுகள் மட்டும்
தொடரக் கண்டேன்.

இறைவா என்னை விட்டு
எங்கு சென்றாய்
என்று கேட்டேன்.

உன்னையென் தோள்களில் சுமந்து
கொண்டு உன்னோடு வருகிறேன்
என்று இறைவன் சொன்னான்.
அமெரிக்க பயணத்தின் போது ஒரு உறவினர் வீட்டில் கண்ட ஆங்கிலக் கவிதையைக் கருப் பொருளாகக் கொண்டு 16-11-2006 இல் எழுதப்பட்ட வரிகள் உவை.


No comments: