Tuesday 28 November 2006

தினக்குரல் - கே.எஸ்.சிவகுமார்









திருகோணமலையிலிருந்து ஒரு பெண்பாற் புலவர்



-கே.எஸ்.சிவகுமாரன்-

ஸ்ரீஸ்கந்தராஜா ஞானமனோகரி என்ற கவிஞரை நம்மில் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இப்பொழுது அவருடைய 108 பாடல்கள் நூல் வடிவில் வந்துள்ளது. அவரை அண்மைக் கால அளவுகோல்களின் படி கவிஞர் என்பதிலும் பார்க்க மரபுசார் புலவர், பாடலாசிரியர் எனக் கூறலாம். ஆயினும் அவரிடம் கவித்துவமும் இருக்கிறது என்பதைக் காட்டப் பல உதாரணங்கள் நூலில் உண்டு. 168 பக்கங்களைக் கொண்ட இந்த அழகிய பதிப்பை திருகோணமலையில் நன்கு அறியப்பட்ட சித்தி அமரசிங்கத்தின் ஈழத்து இலக்கியச் சோலை வெளியிட்டுள்ளது. இந்த நூலை 21, ஔவையார் வீதி (திருகோணமலை)யில் பெற்றுக் கொள்ளலாம்.
இத்தொகுதியில் இடம்பெறும் பாடல்கள் அன்பு, அமைதி, ஆத்மீகம் போன்றவை பற்றி பேசுகின்றன. இந்த நூலுக்கு சுவாமி ஆத்மகணனந்தா, மூத்த எழுத்தாளர் பா.பாலேஸ்வரி (கலாபூஷணம் பாலேஸ்வரி நல்லரெட்ணசிங்கம்), காந்தி ஆசிரியர் அறியப்பட்ட பொ.கந்தையா, சித்தி அமரசிங்கம் ஆகியோர் நூலாசிரியர் பற்றியும் பாடல்கள் பற்றியும் நிறைய விபரங்களைத் தந்துள்ளனர். நூலாசிரியையும், அவருடைய மறைந்த கணவர் ஸ்ரீஸ்கந்தராஜாவும் எனது துணைவிக்கும், எனக்கும் உறவினர்களாவர். பல்துறைகளில் ஈடுபாடுடைய ஆற்றல் மிக்கவராய் அவருடைய குடும்பத்தினர் இருப்பதை நாம் அறிந்து கொள்கிறோம். ஞான மனோகரியின் சகோதரர்களுள் ஒருவர், வைத்தியத்துறையைச் சேர்ந்த ராமச்சந்திரன் ஆவர். இவர் `அறிவு' என்ற பிரயோசனமான பெரும்பாலும் சிறுவர்க்கான சஞ்சிகை யை வெளியிட்டு வருகிறார்.
திருகோணமலையைச் சேர்ந்த பல தமிழ் மக்கள் கடவுள் பக்தி கொண்ட வர்கள். ஆன்மீகத்திலும் மிக நாட்டமுடையவர்கள் அங்கு "மோகனாங்கி" எழுதிய சரவணமுத்துப் பிள்ளை முதல் பல எழுத்தாளர்களும், கலைஞர்களும், அறிஞர்களும் இலை மறை காய் போல் இருந்து வரு கிறார்கள். மட்டக்களப்பு, கல்முனை, அம்பாறை மாவட்டங்களிலுள்ளவர்கள் போல, மூதூர், திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களில் ஆற்றல் பற்றி பிற மாவட்டத்தினர் நன்கு அறியார் என்றே கூற வேண்டியிருக்கிறது. சிறந்த கவிஞரும், மொழி பெயர்ப்பாளரும், அரசியல் பகுப்பாய்வாளருமான பேராசிரியர் சி.சிவசேகரம் திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர் என்பது பலருக்குத் தெரியாது. சிவசேகரம் விமர்சகர் என்றும் சில இடங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
திருகோணமலையில் வடிவேல் மாஸ்டர் என்றழைக்கப்பட்ட அறிஞர் (நூலாசிரியர், கதா பிரசங்க விற்பன்னர்) உட்பட சுவாமி கெங்காதரணாநந்தவும் போற்றுதற்குரியவராக இருந்து வருகிறார். அவரிடம் ஆத்மீக பிணைப்புக் கொண்டவர் நூலாசிரியை.
இப்பாடல்களை வாய்விட்டு நான் படித்த பொழுது அவற்றில் லயம் இருப்பதையும், ஆசிரியையிடம் சொல்லாட்சி யிருப்பதையும் உணர்ந்து கொண்டேன்.
இறை பக்தியைச் சமூக சேவையுடன் ஆசிரியை தொடர்புபடுத்திக் காட்டுகின்றார். ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல, அவருடைய `நரயக்ஞம்' என்ற பாடல் அமைகிறது. இதோ பாடல்.

நரயக்ஞம்

ஏழைக்கு உதவினும் சரி
பசிக்கின்ற வயிறு பார்த்து
அன்னம் அளிப்பினும் சரி
நோயினால் வாடியே வருபவருக்கு
ஔடதம் கொடுப்பினும் சரி
ஆடை அற்ற ஏழைகட்கு
ஆடை வழங்கினும் சரி
அதுவே நரயக்ஞம் ஆகும்.


மனத்துயர் கொள்ளும் மக்கள்
வேதனை குறைப்பினும் சரி
பெண் துயர் கண்டு
அவர்துயர் துடைப்பினும் சரி
தொழில் வளம் அற்ற
சம்சாரிக்கு உதவினும் சரி
குழந்தை மன வெதும்பல்
தீர்த்து வைப்பினும் சரி
அதுவே நரயக்ஞம் ஆகும்


சமூக சேவை சங்கத்தால்
தர்மங்கள் செய்யினும் சரி
நாட்டினது அமைதிக்கு
பாடு படினும் சரி
அகதிகள் இடம் நாடிசசென்று
அவர்துயர் நீக்கினும் சரி
நாட்டு மண்ணிலே நல்ல ஓர்
ஆட்சியை அமைப்பினும் சரி
எல்லாம் நரயக்ஞம் அன்றோ

நரயக்ஞம் தன்னை குறைவர செய்துவரின் தீய கர்மாக்கள் குறையுமன்றோ.
`பூத யக்ஞம்' என்பதனை விளக்குகையில் ஆசிரியை இவ்வாறு முடிக்கிறார்.

"அன்பு என்பது அனைவருக்கும் சொந்தம்.

எல்லா உயிர்களிலும் இறைவன் உள்ளான்.

வாயது இல்லா ஜீவனை நாமே

மான்போடு அணைப்பது பூதயக்ஞம் ஆகும் தானே".


இந்து சமயத்தின் (சைவம்) பற்பல கூறுகளையும் அற்புதமாக விளக்கிக் கூறும் பாடலாசிரியர், மனித நேயம், சமூகத்தில் தனிமனிதன் , சமூக நோக்கு அளப்பரிய அன்பு, ஞானம் போன்ற பல விடயங்களையும் யாவரும் விளங்கக் கூடிய விதத்தில், ஓசை நயத்துடன் தந்திருப்பது பாராட்டத்தக்கது. பல விடயங்களை ஆசிரியை அறிந்திருக்கிறார். அடக்கமாக இருந்து இதுவரை தன்னை இனங்காட்டிக் கொள்ளாமல் இருந்த போதிலும் இத் தொகுப்பு மூலம் தமது திறமையை வெளிக்காட்டியிருக்கிறார்.
இந்த நூல் இந்து சமயம் போதிக்கப்படும் பள்ளிக்கூடங்களிலும், பல்கலைக் கழகங்களிலும் விதந்துரைக்கப்பட்ட பாட நூலாக இருப்பது அவசியம். ஏனெனில் எளிய முறையில் பல தத்துவங்களையும், கருத்துகளையும் தமது பாடல்கள் மூலம் எடுத்துக் காட்டியிருப்பதேயாகும்.
அநேகமாக ஒவ்வொரு பாடலுக்கும் கடவுளின் சித்திரங்கள் அணி சேர்க்கின்றன.
ஞானமனோகரி எழுதிய பாடல்களுள் ஒன்றின் தலைப்பு "கவித்துவம்" அதனை எவ்வாறு அவர் பார்க்கிறார்?


கவித்துவம்

எண்ணத்தில் மேன்மை வேண்டும்
எழுத்தினில் நல்லோசை வேண்டும்
சொற்களில் ஆட்சி வேண்டும்
சுவையான கவிதை கொண்டு
சாற்றியே நின்றால் இங்கு
கல்லும் கசிந்தே வரும்.

பாக்களில் இனிமை வேண்டும்
பதங்களில் பொருளும் வேண்டும்
ஏற்றம் மிகு தொடர்களாக
எழுதியே எடுத்து விட்டால்
நாட்ட மிகு கவிதை எல்லாம்
ஞாலத்தில் எட்டும் சுவையாய்

அன்புசேர் சொற்களாலே
அமிழ் தான இசையினோடு
இறைவன் தனைப் பூஜித்தால்
மயங்கிய பொறிகள் எல்லாம்
மயக்கமே தீர்த்து நின்று
வந்தவேலையைச் செய்யும் அன்றோ.

தூதுவளை தொடர்பான ஒரு கதையையும் ஆசிரியை சேர்த்திருக்கிறார்.
கவனக் குறைவால் சில வார்த்தைகள் சரியாக எழுதப்படவில்லை. உதாரணமாக கணனி, கிருஷ்ணபாலா, வீண்காலமாய் போன்ற வார்த்தைகள், வேறு உச்சரிப்பில் எழுதப்பட்டுள்ளன. தாய்க்குலம், தாய்குலம் என்று அச்சிடப்பட்டுள்ளது. 06.12.2006 இன்னமும் வரவில்லை. தம் அன்னையின் பிறந்த தினம் சரியாகப் பதிவு செய்யப்படவில்லை.
இருந்த போதிலும் குடத்திலிட்ட விளக்குப் போல, தமது பிள்ளைகளின் உந்தலினால் ஒரு நல்ல படைப்பை ஸ்ரீஸ்கந்தராஜா (மறைந்த கணவரின் பெயர்) ஞானமனோகரி தந்திருக்கிறார்.

No comments: