Tuesday, 28 November 2006

பெண்பா புலவருக்கோர் வெண்பா



பெண்பாபுலவர் ஞானமனோகரி
ஸ்ரீஸ்கந்தராஜா








ஆத்ம துளிகள் அல்ல ஆன்மீகப் பிரவாகம்
யாத்த கவிதை எல்லாந் தெய்வீகப் பூபாளம்
பூத்த முதல் நூலே சன்மார்க்க சாராம்சம்
பூக்க இனும் நூறு சமுதாயச் சீராக்கம்.

சீராக்கல் சிந்தை சிறப்பது உன்தன் நோக்கம்
போராட்டம் மிகுந்த நடப்பிலு முன்தன் ஆக்கம்
மாறாட்ட மில்லா வாழ்வினை நம்முள் ஆக்கும்
பாராட்ட தகுந்த வரிகளை என்னுள் தேடும்.

தேடும் மனத் தேடலுக்கு இங்கோர் தெளிவு
கூறும் தமிழ் பாடலுக்கு பொருளே செறிவு
தேறும் மனத் தேறலுக்கு பலவும் பொழிந்து

ஓதும் தரம் ஆவதுக்கு பரவும் சிறந்து.

சிறந்தது கூறிச் சிறப்பது சீர்பெறு தமிழாம்
சிறந்தது கூறச் சிறந்ததுன் சீர்தரு கவிதை
பிறந்தது கூறி மகிழ்ந்திடு மோருடன் பிறப்பாய்
இருப்பது நாடி எழுந்திடும் என்மன கவிதை.

கவிதையின் தொகை நூற்றெட்டு நூல் கணக்கில்
நவின்றிடு பொருள் போற்றெட்டும் நூல் படிப்போர்
பயின்றிடா ரொரு தூற்றலும் நூல் வடிப்பார்
அறிவிலார் அத்தா லேற்றிலார் ஞான சூனியம்.

சூனியம் சுற்றி சூழவரும் ஞானியர் மனம்
பாணியம் பண்ணி பகர்ஞான மனோக ரிதம்
ஆன்மீகம் பற்றி அழகழகாய் பகிர்ந்த விதம்
பூர்வீகப் புண்ணிய தத்வஞான சாரா முதம்.

அமுதமெழி பகரும் அழகான தமிழ் வரிகள்
சுமுகமொழி நகர்ந்து சரளமாய் பொருள் விரிய
தொழுதவழி பிறரும் பிரளாமல் தொடர்ந் திடவே
எழுதஅடி பிறந்து புரளுமுன் தமிழ் பாட்டு.

பாட்டுடைத் தலைவன் அந்த பரம் பொருளே
பாட்டுரைத் தளங்கள் எங்கள் அக இருளே
பாட்டிசைப் பதங்கள் இந்த புற உலகே
பாட்டுடைத் தலைவி இந்த ஜீவ ஆத்மதுளியே.!

திருமதி ஞானமனோகரி ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களின்
ஆத்ம துளிகள் நூலின் பாதிப்பால் விளைந்த பாராட்டுக் கவிதை.
23-11-2006 ஆக்கியோன் அருள்ஜோதிச்சந்சிரன்.





No comments: