Tuesday 28 November 2006

உணர்வே வாழ்வு

இளமைக் கால நினைவுக் கோலம்
முதுமைக் கால முன்பனிததுளியில்
மூழ்கி நனைந்தும் முற்றாய் அழிவதில்லை
கடமைக்காக வாழ்ந்த வாழ்வும்
உரிமைக்காக மூண்ட போரும்
ஊழிச சுழியில் நுரையும் ஆவதில்லை.

உடமைக்காக ஆடிய ஆட்டம்
பதவிக்காக ஓடிய ஓட்டம்
பழகிப் போன பாதையானதே
திறமைகாண கடிய கூட்டம்
சிறுமைகண்டும் வருந்தா உள்ளம்
மறுமைஎண்ணி வாழ்ந்தால போதுமோ.

மனித உறவில் நேயங்கள் இல்லை
புனித உணர்வை போற்றுவாரல்லை
வணித நோக்கில் வாழ்க்கை போகுதே
மளிகைக் கடைப்பொருள் மாமூல் வாழ்க்கை
அணிகலன் பொருள் ஆடை.யில் மோகம்
வெளியிலோர் வேடம் வேதனை சேர்க்குமே.

மெத்தப் படித்து மேதைகள் ஆவார்
சொத்தைச் சேர்த்து சோடையும் போவார்
அர்த்தம் நூறு வாழ்க்கைக் குரைப்பரே
பொத்திப் பொத்தி பிள்ளையை வளர்த்து
பொறுத்துப பொறுத்து பிழைகளை மறைத்து
மொத்த வாழ்வும் விழலுக் கிரைப்பரே.

இளமைக் கால நினைவுக் கோலம்
இத்தனை இத்தனை புள்ளிகள் வைத்தும்
ஒற்றைக் கோடு ஒன்றாய் இணைக்குமோ
முதுமைக் கால முன்னனுபவமும்
மூத்தோர் சொன்ன மூச்சும் பேச்சும்
ஒற்றைக் கோட்டால் இணைக்க முயல்கிறேன்.

அர்த்தமுள்ள வாழ்வை அளக்கும்
அளவுகோளைத் தேடி அலையும்
சித்தமொன்று சிந்தை வரப்பெறறால்
குற்றமுள்ள நெஞ்சால் என்றும்
குறுத்துக் குழம்பி நின்ற
பித்தர்கூடப் பின்னால் வரம்பெற்றார்.

மிச்சமுள்ள வாழ்வில் இன்னும்
மீந்திருக்கும் நாளும் கொஞ்சம்
மின்னலென ஞானம் வரப்பெற்றால்
அச்சமில்லா வாழ்வுந் தோன்றும்
ஆன்மீகத் தெளிவுந் தோன்றும்
உண்மையொளி உணரக் கூடுமே.

நட்சத்திர தூசிக் கோலம்
நாமெல்லாம் என்ற ஞானம்
உச்சியிலே உதித்து வரப்பெற்றால்
வைத்திட்ட புள்ளியெல்லாம்
வந்த்மையும் தளமுமொன்றே
ஒற்றைக் கோடு ஒன்றாய் இணைக்குமே.

இளமைக் கால நினைவுகள் இல்லை
முதுமைக் கால முணுகளும் இல்லை
மூழ்கி நனையும் அனுபவம் இல்லையே
இறந்து எதிர்படக் காலமும் இல்லை
உள்ளதும் ஒன்றே உனர்வதும் அதுவே
அறிவதும் நினைப்பதும் அறவே இல்லையே


22-03-2003

No comments: