தர்சனம்
புதுக்கவிதை என்ற பெயர் தற்காலீகமானது. கவிதையின் பெயர் கவிதையே. இப்பெயர் பெறத் தகுதியற்ற யாவும் செய்யுள்கள்; செய்யப்பட்டவை. கவிதை எல்லாவகையான சொற்களையும் உதறுகிறது.நிதர்சனத்தில் திளைக்கிறது. யாப்பு என்ற திட்டமிடப்பட்ட உருவத்தை துறக்கும் கவிஞன் ஒரு புதிய உருவை நாடி இத்துறவை மேற்கொள்ளவில்லை.நிதசர்ணத்தை உணராத செய்யுள் வாதிகள், யாப்பு என்ற உருவில் ஒரு சௌகர்யத்தைக் கண்டு அதன் கதிக்குள் இயற்கைப் பொருள்களின் வர்ணனைகளையும், சாமான்ய மனிதனுக்குக்கூடத் தெரியும் அற முறைகளையும் அதீதமானவை என்று பிரமை காட்டி எழுதினர். இவர்கள் ஆழ்ந்த வாழ்வின் அதீத ரகசியங்களையோ மானுஷ்ய தர்மங்களையோ உணராதவர்கள். பிரத்தியட்சத்தின் மீது காதல் கொண்ட மனிதன் செய்யுள் வாதியிலிருந்து உயர எழுந்து ஸ்தூல நிதர்சனங்கள் வாழ்வின் அதீத ரகசியங்களுக்குக் குறியீடுகளாக, தார்மிக சக்திக்கு உரமாகக்கண்டான். போலி வர்ணனைகளையும் போலி தர்மங்களையும் துறந்தான். அந்தத் துறவோடு உடனிகழ்வாக யாப்பையும் துறந்தான். கவிதை தமிழில் புனர்ஜன்மம் பெற்ற கதை இது.
வசனத்தை உடைத்துப்போட்டு கவிதையை சாதித்துவிட முடியாது.
இன்றைய வாழ்வின் ஒரு உடைந்த கதி, நகர் என்ற பிரத்தியட்சத்தின் சிதறிச் சிதறித் தோன்றும் காட்சிகள், சீரற்றுத் தோன்றி மறையும் உருவப் பிரதிகள். பஸ்கள், பஸ்களினால் மறைக்கப்பட்டுத் தோன்றி ராஷஸ சொரூபமான கட்டிடங்களிடையே சிறை கொண்ட அஸ்தமனங்கள்,எட்ட இருந்துவந்து மறைந்து தொடர்பற்று அவசரத்தில் பேசி, கைகாட்டிச் சிரித்துப் பேசாது போய், மறையும் நண்பர்கள். இவையாவும் பிரத்தியட்சம். யாப்பின் கதிக்கு இந்த பிரத்தியட்சத்தில் இடமேது? எமது இன்றைய பிரக்ஞையின் இந்த சீரற்ற ஒரு புதிய தன்மையில் யாப்பு அங்கதத்திற்கே உதவும்.
In the room women come and go Talking of Michelangelo
என்ற வரியிலும்
I grow old, I grow old
I shall wear the bottoms of my frousers rolled
என்ற வரியிலும் சப்தம் அதீத உணர்வுக்காக உபயோகமாகவில்லை. கேலிக்கு அங்கதத்திற்கே உபயோகமாகிறது இன்று.
பண் என்பார் பாட்டென்பார்
கண்ணைச் சொருகிக் கவியென்பார்
அண்ணாந்து
கொட்டாவி விட்டதெல்லாம்
கூறுதமிழ் பாட்டாச்சே
முட்டாளே இன்னமுமா பாட்டு?
என்ற யாப்புருவம் கேலிக்கே -- அங்கதத்திற்கே உபயோகமாகிறது இன்று. அன்றைய சாவதானம் இல்லை. எனவே சாவதானத்தில் விளைந்த யாப்பு எமது பிரக்ஞையின் நடுவே நிகழும் போது அங்கதமாகிறது.பழைய வாழ்வின் கதியையோ, நாம் அதன் யாப்புருவோடு சேர்த்தே பருகுகிறோம்.
சீரும், அடியும், தளையும் யாப்பின் ஆதாரங்கள். சப்த அணிகளையும் யாப்பு மேற்கொள்ளும். இந்த அம்சங்களிலேயே உழல்வது சௌகர்யம். செய்யுள்வாதிகள் கவிதை என்ற ஆதாரத்தை இழந்தே இந்த உழலில் ஈடுபட்டனர். கவிதை என்பது அதன் பொருளாகவே உருப் பெறவேண்டும் என்பதுதான் இன்றைய சித்தாந்தம். நிதர்சனத்தை ஹ்ருதயமும் புத்தியும் தத்துவ தார்மிக உணர்வும் கொண்ட கண்களோடு சந்தித்தால்தான் 'பொருள்' என்ற அம்சம் செழிக்கும். செய்யுள்வாதிகளோ புலமைவாதிகளாயினர்.பழைய கவிஞர்களும் புலவர்கள் என்றே அவர்களது சமயத்தில் அழைக்கப்பட்டிருந்ததால் புலமையை நூல்களின் மூலமும் செய்யுள் இயற்றும் பயிற்சி மூலமும் பெற்று இவர்களும் புலவர்களாயினர். இதன் அபத்தத்தை உணர்ந்து பழைய புலவர்களை இந்த புதிய புலவர்களிளிருந்து பிரித்த கவிஞன்,
கண்டவன் கலைஞன்
பொருள் சொன்னவன் புலவன்
என்ற புதிய சித்தானந்தத்தை எழுதினான்.
இன்றைய கவிஞனுக்கு யாப்பின்மை ஒரு குற்றமாக முடியாது. கவிதையின் பொருளம்சத்தில் குற்றம் இருக்கக் கூடாது என்பதே இவனது அக்கறை. தங்கள் தங்கள் அளவில், அந்தந்த பிரசுர கர்த்தாக்கள் இன்று தமது திறமைக்கேற்ப பொருளம்சத்தையே யாப்பற்ற கவிதைகளில் முக்கியமானதாகக் கண்டு அந்த அடிப்படையிலேயே கவிதைகளைத் தேர்ந்தெடுக்கின்றனர். இங்கேதான் கூறியது கூறல்,மிகைப்படக் கூறல், சென்று தேய்ந்திறுதல் என்றெல்லாம் பொருளம்சத்தைப்பற்றிக் குறிப்பிட்ட குற்றங்களை அவதானிக்கும் சாத்யம் இருக்கிறது. இது போன்ற குற்றங்கள் எக்காலத்திலும் குற்றங்களே. யாப்பை மீறிய கவிதை பிறக்கக் காரணமே யாப்புருவக் கவிதையுள் இவ்வகைக் குற்றங்கள் களைகளாக வளர்ந்து மலிந்தமைதான் என்போரும் உளர். களைகளைப் பிடுங்கி எறிந்த போது ஒழுங்கற்று, திட்டுத் திட்டாக உண்மையான கவிதைப் பயிர் தெரிந்த நிலைமை யாப்பின்மையாயிற்று. அதுவே ஓர் அழகாயிற்று.
யாப்பற்ற கவிதைக்கு யாப்பாக அமைவது பொருளின் ஒழுங்கு. வசனத்தை உடைத்துத் தூவி இந்த ஒழுங்கை நிகழ்விக்க இயலாது. அறிவிற்கு போருட்கிடை தரும் அதிர்ச்சிகளின் ஒழுங்கிற்கேற்பவே யாப்பற்ற கவிதையின் வரிகள் நிர்ணயிக்கப்படுகின்றன. இது வசனத்தை உடைத்துத் தூவுவதாகாது.
வசனத்தை
உடைத்துப்
போடுவதல்ல
கவிதை
என்ற ஒழுங்கு எவ்வித அதிர்ச்சியையும் தரவில்லை. எனவே இது செய்யுள்! யாப்புருவினுள் மட்டும் அல்ல, யாப்பற்ற உருவினுள் கூட செய்யுள் சாத்தியம் என்பதற்கு இன்றைய நிலைமையில் ஆதாரங்கள் உள. விகடக் கூற்றுக்களை மேற்படி ஒழுங்கைப் போன்ற வகையில் உடைத்துப் போட்டுப் பிரசுரித்துக் கொள்வோருமுளர்.
நிரோத் உபயோகியுங்கள்
நிரோத் உபயோகியுங்கள் என்று
விளம்பரங்கள் வலியுறுத்துகின்றன
வாயேன்.
என்ற ஒழுங்கு செய்யுள்தான். இதை வசனமாக எழுதிப்பார்த்தால் தன போலித்தன்மையை இது காட்டி விடுவதை உணரலாம்.
நிரோத் உபயோகியுங்கள் நிரோத் உபயோகியுங்கள் என்று விளம்பரங்கள் வலியுறுத்துகின்றன, வாயேன்.
ஒரு முதிர்ச்சியற்ற, மனிதத்தன்மையற்ற, செக்ஸின் ஆழத்தை உணராத இளம்பிள்ளை (adolescent) மன நிலையில் பிறக்கும் விகடத்தனமான கூற்று. இந்த மன நிலைக்கும் இவ்வகை விகடத்துக்கும் கவிதை அகப்படாது.
மேலே உள்ள இரண்டு உதாரணங்களில் வரிக்கு வரி நாம் நிறுத்த வேண்டிய அவசியத்தை அந்த வரிகள் ஏற்படுத்த வில்லை. 'வசனத்தை' என்ற பிரயோகம் ஒரு தனி வரியாக நிகழ வேண்டுமானால், அது பொருள்வழியில் நிகழ வேண்டும். அவ்வரியின் பொருள் தொடர்ந்து வரும் சொல்லான 'உடைத்து' என்ற வரியுடன் வசன கதியில்தான் உறவு கொள்கிறது.எனவே இந்த வரிக்குத் தன்நிகழ்வு இல்லை.
'நிரோத் உபயோகியுங்கள் என்று....
என்று? அதற்கப்புறம்?
'விளம்பரங்கள் வலியுறுத்துகின்றன' அதுதான் தெரியுமே, என்று சலித்துக் கொள்கிறோம். 'நிரோத் உபயோகியுங்கள் என்று' என நிறுத்தப்பட்டவுடன் நாம் தயாராவது ஒரு அதிர்ச்சிக்காகும். கடைசி வரியான 'வாயேன்' கூட அறிவுக்கு அதிர்ச்சி தரவில்லை. முகச் சுளிப்பையோ கேலியுணர்வையோதான் தருகிறது. அறிவு அதிர்ந்து விரியவில்லை.
கழுத்திறுக்க
கண்பிதுங்க
நெற்றியில் வேர்வை
முத்தாகி உருண்டோட
சந்தைக்குச் சுமையோடு
செல்கிறேன்,
சுமைமாற்றி, ஏதேனும்
இருக்கலாகாதா?
இங்கே ஒவ்வொரு வரியும் தன்னிகழ்வு பெறுகிறது. 'கழுத்திறுக்க, கண்பிதுங்க, நெற்றியில் வேர்வை முத்தாகி உருண்டோட, சந்தைக்கு சுமையோடு செல்கிறேன். சுமைமாற்றி ஏதேனும் இருக்கலாகாதா?' என்று இதை வசனமாக எழுதிப் பார்க்கும் போதும் நாம் இதை வாசிப்பதும் கவிதையின் கதியில்தான். நெற்றியில் வேர்வை' என்றவுடனேயே நம் பிரக்ஞை நிற்கின்றது. காரணம் கழுத்திறுக்க-- கண்பிதுங்க--என்று ஒரு பெரிய பாரத்தைச் சுமப்பதன் விளைவுகள் நின்று நின்று பிறந்து முதல் இரண்டு சொற்களுமே தனித் தனி வரிகளாக ஒரு கதியை ஏற்படுத்துவதுதான். ஒரு புடவையை வித்துக் கிடத்தி அதன் ஒரு கோடியில் பிடித்து உதறி ஓர் அலையைப் பிறப்பித்ததும் அவ அலை புடவையின் முழுப் பரப்பிலும் ஓடி வருவது போல, முதல் இரண்டு வரிகளிலும் ஏற்பட்ட லயம் முன்றாவது வரியிலும் தொற்றிக் கொள்கிறது. நான்காவது வரி ஆரம்பம் 'நெற்றிக்கும் முத்து'க்கும் ஒற்றேளுத்துச் சப்த உறவு கொண்டு எதிரொலிக்கிறது. 'சந்தைக்குச் சுமையோடு' என்ற வரிக்கு அடுத்து 'செல்கிறேன்' ஆரம்பித்து ச, செ யிலுள்ள சகர உறவோடாகும்.
இங்கே இக்கவியே குறிப்பிடும் வகையாக சப்த அணிகூட ஒரேயடியாக நீக்கப்படவில்லை. சிக்கனமாகிறது. "சவுக்கந் தோப்பினூ டே காற்று பாய்ந்து சென்ற பிறகு தோன்றும் ஓயுமொலி அளவுக்கு சப்தம் சிக்கனமாகிறது.
இக் கவிதை வரிகளில் வரிக்கு வரி ஒருமனநிலையின் பிரதிமை படிப்படியாக எழும்புவதில்தான் அறிவு விருந்தடைகிறது. படிப்பவன் மௌனம் கொள்கிறான். பிரத்தியட்ச வாழ்வின் பங்கங்களில் ஒன்றைக் கவியோடு பகிர்ந்து கொள்கிறான். 'முத்தாகி உருண்டோட'என்பது வரை ஒரு கடினமான சமயத்தில் உடல் கொள்ளும் இயல்புகள். சந்தைக்குச் சுமையோடு செல்கிறேன் என்றதும் இயல்பின் காரியம் காரணம் கொண்டு விரிவடைகிறது. கவி வெறும் ஸ்தூலச் சுமையைப் பற்றிப் பேசவில்லை. 'சுமை'என்ற ஸ்தூல நிதர்சனம் ஒரு ஆழ்ந்த பரிமாணத்திலுள்ள நிதர்சனத்துக்கு இட்டுச் செல்கிறது.
கழுத்திறுக்க
கண்பிதுங்க
நெற்றியில் வேர்வை
முத்தாகி உருண்டோட
சந்தைக்குச் சுமையோடு
செல்கின்றேன்.
சுமைமாற்றி ஏதேனும்
இருக்கலாகாதா?
தானே அழுதழுது
பிள்ளைபெற வேணுமென்று
நெஞ்சற்ற டாக்டர்களும்
முதியவரும் சொன்னபடி
செய்ய முயன்றேன்,
முயல்கிறேன்.
இடுப்பில் கையும்
இருளூடே முனகலுமாய்
ஒடிந்து குமைகின்றேன்.
சுமைமாற்றி ஏதேனும்
இருக்கலாகாதா?
உணர்வை விளக்கி
உள்ளொளியை எள்ளி
தன்னறிவு வழிச் செல்லும்
தனிச்சுமையை ஏற்று
வாழ்வின் அடிப்படையைக்
குடைந்தறிய முற்பட்டேன்
சப்பாத்திப்பழம் சடைத்த
வெறுமையே வாழ்வாயிற்று
வேதனையே அரசாயிற்று......
சரீரத் தளத்திலிருந்து கவி சுமை என்ற படிமத்தை ஆன்மிக பிரச்னை வரை ஈர்த்துச் செல்லும் ஒழுங்கு அற்புதமானது.
இது புலனாகிய பின்பு மீண்டும் 'கழுத்திறுக்க' என்று இரண்டாவது தடவை படிக்கிறோம். முதற் சொல்லே அதிர்ச்சி தருகிறது.தன்னறிவின் தனிச்சுமைக்கும் இந்த கழுத்திறுப்ப்தற்கும் உள்ள உறவு இப்போது பலமாகிவிட்டது. எனவே திரும்பத் திரும்பப் படிப்பதற் கேற்ப எதிரொலிகளின் செறிவு உள்ளதுதான் கவிதை. நிரோத்தைப் போன்று உபயோகித்து விட்டு கழற்றி வீசுவதற்கல்ல கவிதை.முன் குறிப்பிட்ட நிரோத் 'கவிதை'யில் 'வாயேன்' என்ற பிரயோகத்தோடு 'கவிதை' தீர்ந்தே விடுகிறது. திரும்பப் படித்து அதிசயிக்க அங்கே ஏதுமில்லை.
துருப்பிடித்த
இரும்புக் கோடுகளினூடே
சிதறும்
பயனற்ற
உப்பு நீர்ப்பாறைகள்
மேலே குறிப்பிட்ட 'ஓயுமொலி' என்ற அம்சம் கூட குறைவாகவே உள்ள கவிதை இது. இங்கே உடைவு நேர்வதற்கு, சப்தத்தின் அனுகூலம் கிஞ்சித்தும் இல்லை. பொருளே யாப்பு. 'கோடு'என்பது ஒரு குணம். இரும்புக் 'கோடு'என்ற பிரயோகம் ஒரு அதிர்ச்சி தருவது.'துருப்பிடித்த' அம்சத்தில் நிறுத்துவதானால் நாம் எதற்கோ தயாராகிறோம். எதிர்பார்த்ததற்கேற்ப இரும்புக்கோடுகளினூடே, என்ற பிரயோகம் 'துறுத்' தன்மையையும் ஏற்று அதிர்வுதந்து விரிகிறது.'இரும்புக்கோடு' என்பது தனிச் செறிவுள்ள பிரயோகம். எனவே தனிவரியாகக் கூடியது. இத்தகைய தகுதி பெறாத பிரயோகங்கள் ஒன்றன் பின்னாக ஒன்று வந்தும், கவித்துவத்தின் சாயலே மிகுதியாக உள்ள பிறவிகளைத்தான் 'வசன கவிதைகள்' என வேண்டும். 'சிதறும்' 'பயனற்ற' என்று நிறுத்தப்பட்டதற்கும் காரணம் சிதறல், பயனின்மை ஆகிய இரண்டு தன்மைகளும் தனித் தனியாக அழுத்தம் பெருவதாலாகும். தொடர்ந்து வரும் பிரயோகத்தைக் கவனித்தால் அது, இதுவரை வந்த பிரயோகங்களை வெற்றென விளக்குவதாக இல்லை.விளக்கி விரிவு கொள்வதாகவே உள்ளது. 'சிதறும் பயனற்ற அலைகள்' என்றிருந்தால் வெற்றின் விளக்கம். அதே சமயத்தில் தர்க்கத்துக்கு ஒவ்வாதது. அலைகள் சிதறலாம். பயனற்றவையா? என நம் அறிவு முகம் சுளிக்கும்.பயனின்மைக்குக் காரணம் ஏற்படுத்தப்படவில்லை. ஆனால்
சிதறும்
பயனற்ற
உப்பு நீர்ப்பாறைகள்
எனும்போது, 'அலைகள்' என்று குறிப்பிடாமலே 'அலைகள்' குறிப்பிடப்பட்டு, பயனின்மைக்கு உப்பு நீரும் இணங்கி விரிகின்றன. முன்னிரு வரிகளும் மூன்றாவது வரியில் பொருள்வாயிலாகக் கலக்கிறது. இக்கலப்பிலேயே அறிவு சமாதானம் கொள்ளும், விரியும்,வியப்படையும். இக்கலப்பு 'அலைகள்' என்ற பிரயோகத்தில் நிகழாமல் அறிவும் ஏமாறும். வெறுப்படையும்.தொயும். கவிதையும் ஊர்வனவற்றைச் சாரும்.
தீட்சண்யத்தோடு இயங்கக் கூடியவனுக்குத்தான் கவிதையுலகில் இடமுண்டு. வரிக்கு வரி பொருளம்சத்தில் தர்க்கம் நிகழ்ந்துகொண்டு போவதுதான் சிருஷ்டி முறை. இன்றைய பெரும்பாலான யாப்பற்ற கவிதைகளிலோ இந்த தீட்சண்யம் இல்லை. ஒரு புறத்தில் விகடக்கூற்றுக்களும், ஹிருதய மின்மையையே 'பரிசோதனை' என்று சொல்லி உருவாகும் பிதற்றல்களும்,மறுபுறத்தில் கட்சி அரசியலுக்கு ஒத்தூதி அதீத சொற்பிரயோகங்களை எவ்வித கவித்வ நியாயமுமற்று அடுக்குவோரும் மலிந்திருக்கின்றனர்.பயங்கர ஆடை மொழிகளை இவ்வகையினர் கவித்வ தர்க்கம் அற்று பிரயோகிக்கின்றனர்.
அடைமொழிகளின் கடமையை பெயர்ச சொற்களும் வினைச் சொற்களும் ஏற்று தனித்து வரும்போது கவிதையின் உறுதி பெருகுகிறது. அடைமொழி உபயோகப்படும் பட்சத்தில், அது பெயர்ச் சொல்லுடன் பின்னிப் பிணைந்து தீவிரம் பெற்றாக வேண்டும். இன்றைய பிரக்ஞையில் சாங்கோபாங்கமான அடைமொழி அடுக்குகளுக்கு இடமில்லை.அத்தகைய அடுக்குகள் யாப்பின் சாவதான பிரக்ஞியைச் சார்ந்தவை.அடைமொழியும் உவமையும் எழுவாய்ப் பெயரைவிட்டுத் தனித்து நிற்பவை. எனவே எழுவாய்க்கு, வினைக்கு,கவிதைக்கு தீவிரம் தரமாட்டாதவை. இந்நிலையில் இருமுறைகள் கையாளப்படும் சமயத்தில் இவை புதிய பிரக்ஞையின் படிமங்களாகவே பிறந்தாக வேண்டும். இன்றைய பிரத்தியட்சத்தின் கவி நிகழ்ச்சிகளாக வேண்டும்.
இனி,
கவிதையில் ஏற்படும் சிக்கல் தெளிவின் அடிப்படையில் நிகழ்ந்தாக வேண்டும்.
சிலையை உடை
என் சிலையை உடை
கடலோரம்
காலடிச் சுவடு
உறுதிமயமான சிலையை உடைக்கும்படி சொல்வது தெளிவாகிறது. கடலோரம் காலடிச் சுவடு இருப்பதும் தெளிவாகிறது. இரண்டு பிரயோகங்களும் பின்னப்ப்படும்போதும் ஏற்படும் அறிவில் அதிர்ந்து உள்ளோடி விரிகிறது.
இன்னும் வரும் 21/01/2014
இன்னும் வரும் 20/01/2014
இன்னும் வரும் 18/01/2014
இன்னும் வரும் 17/01/2014