Wednesday, 29 November 2006

தாய்மை


தாய்மை போற்றுதும் தாய்மை போற்றுதும்
தன்னிகரற்ற தாய்மை போற்றுதும்

மண்ணுயிர் வாழ்வில் மற்றவை எல்லாம் மறப்பினும்
விண்ணுயர் செல்வம் வீடுகள் எல்லாம் இழப்பினும்
தன்னுயிர் வாடத் தரணியில் எம்மைத் தந்திட்ட
தாய்மை போற்றுதும் தாய்மை போற்றுதும்.

ஈரைந்து மாதம் இவள் எம்மைச் சுமந்தாள்
இரவிலும் பகலிலும் எமைக்காத்து வளர்த்தாள்
வால்லறிவான் வழியில் எமைவாழ வைத்த
தாய்மை போற்றுதும் தாய்மை போற்றுதும்.

மாதா பிதா குரு தெய்வம் – இதை
ஓதா திருந்தார்கள் உண்டோ அதில்
மாதாவின் பின்தானே எல்லாம் – அந்த
தாய்மை போற்றுதும் தாய்மை போற்றுதும்.

தன்உதிரம் பாலாக்கி தன்உழைப்பில் நீர்பூக்க
எம்முகத்தைப் பார்த்தவளும் ஏற்றதெல்லாம் பேருவகை
மண்ணுலகில் வாழும்வரை மறப்போமோ அவள்முகத்தை
தாய்மை போற்றுதும் தாய்மை போற்றுதும்.

உலகஉயி ரெல்லாம் படைத்த இறைவனும் –அவர்
அருகிலம ரவோர் உபாயம் செய்தான்
தாயுருக் கொண்டு தரணியங்கும் தானாகி நின்றான்
தாய்மை போற்றுதும் தாய்மை போற்றுதும்.

நாம் வாழ்ந்த மண்ணும் தாய்தான்
நாம் பேசும் மொழியும் தாய்தான்
நமைச் சூழ்ந்த இயற்கையும் தாய்தான்
தாய்மை போற்றுதும் தாய்மை போற்றுதும்.

வாய்மையின் வடிவம் தாய்மை – உயர்
தூய்மையின் வடிவம் தாய்மை – உணர்
தெய்வத்தின் வடிவந் தாய்தான் – அந்த
தாய்மை போற்றுதும் தாய்மை போற்றுதும்.

தாய்மை போற்றுதும் தாய்மை போற்றுதும்.
தன்னிகரற்ற தாய்மை போற்றுதும்
தன்னுதரந் தன்னில் எனைத்தாங்கித் தரணிதந்த
அன்னை ஞானாம்பிகையின் பாதம் போற்றுதும்.

15-09-06சீஐடீவியின் கவிதையே தெரியுமா நிகழ்ச்சியில் நேரடி அஞ்சலில் பாடிய கவிதை.



அறிவு


அறிவு

அறிவு ஊனுடல் உள்ளவரை
அறிவு வேண்டிடு மாந்தரெலாம்
அறிவு பேணிடப் பேணிவர
அறிவு பேணுதல் தானறிவார்.

தான் அறிவார் ஞானம்
தவம் அறிவார் ஞானம்
வான் அறிவார் ஞான(ம்)
வாழ்வுக் கோர்எல்லை இல்லை.

இல்லை இது வென்று
உண்மை அது கண்டார்
உள்ள துணர் வா(ரே)றே
உண்மை யுணர் வாழ்வே.

வாழ்வே வந்திங்கு வாழ்வோர்
வாழ்வே வந்திடும் வாழ்வாய்
வாழ்வே நொந்திடு வார்க்கு
வாழ்வே வெந்தனழ் ஆகும்.

ஆகும் போதகம் மகிழ்வார்
போகும் போதேம் பிடுவார்
சாகும் போதேங் கிடாரே
சாகா வரம் பெறுவார்.

பெறுவார் பேறெல்லாம் பிறர்வாழ
தருவார் வாழ்வென்றும் தார்போற்றும்
மருவா அறநெறி மார்க்கந்தான்
கருவா(ய்) உருவான நாள்முதலாய்.

நாள்முதலாய் இரவீறாய் நயந்திடுவார்
வான்முதலான் வழிநின்று நயம்பெறுவீர்
ஊன்முதலாய் உண்டுறங்கி உழலாது
தானறிவார் தனையறியக கடைத்தேறு.

கடைத்தேறு நாள்காண்ப தறிவு
கடைத்தேறார் உறவறுப்ப தறிவு
கடைத்தேறுவா ருடன்கூட லறிவு
கடைத்தேற அருள்கூற லறிவே அறிவு.

“அறிவு”
பத்திரிகை அபிமானியின் அறிவில் அறிவு பற்றிய ஆய்வு.






ARIVU - அறிவு

உங்களுடன் ஒரு நிமிடம்
நான்காவது சுற்று முதலாவது இதழ் உங்கள் கைகளில் தவழ்கிறது. இவ்வருட முதலாவது இதழ் வெளிவரத் தாமதமாகிய தால் இரு மாதத்துக்குரியதாக இதை வெளியிடுகின்றோம்.


பெரிய மாற்றங்கள் எதுவுமின்றி கூடிய பக்கங்களுடன் வெளிவருகிறது. அதனால் விலையிலும் மாற்றம் செய்யப்பட் டுள்ளது. அதைப் பொருட்படுத்தாது உங்கள் ஆதரவைத் தொடர்ந்து தருவீர்களென நம்புகிறோம்.


உங்களுடன் ஓஷாவின் கருத்தினையும் பகிர்ந்து கொள்ளலாம் என விரும்புகின்றேன்.


"அகிம்சை என்பது பிறருக்கு எந்த வகையிலும் துன்பம் தரக்கூடாது என்றுபோதித்திருக்கிறது. பிற உயிரினங்களைக் கொள்ளக்கூடாது என்று அறிவுறுத் துகிறது. ஆனால் இவைகள் போதுமா? வாழ்வை உண்மையாக மதிக்க வேண்டுமானால், முதலில் உங்களின் உள்ளத்தை பிறருக்கு பகிர்ந்து அளிக்க வேண்டும். உங்கள் மகிழ்ச்சியை, உங்கள் அன்பை, உங்கள் அமைதியை, உங்கள் ஆனந்தத்தை, இப்படி உங்களிடம் என்ன இருக்கிறதோ, அவைகளை பிறருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். நீங்கள் இப்படி வாழ்வோடு இணைந்து நடந்து கொண்டால், கடவுள் உயிரோடு இ.ங்குவதை கண்கூடாக உணர்வீகள். பிறகு
மரத்தை அன்புடன் பார்ப்பதுகூட, ஒரு விருந்தாளிக்கு உணவு படைப்பதைவிட கடவுளுக்கு செலுத்தும் நன்றியாக, பூசையாக உணர்வீர்கள்."
எஸ்.பி.ராமச்சந்திரா,
ஆசிரியர் குழுவிற்காக

Tuesday, 28 November 2006

தினக்குரல் - கே.எஸ்.சிவகுமார்









திருகோணமலையிலிருந்து ஒரு பெண்பாற் புலவர்



-கே.எஸ்.சிவகுமாரன்-

ஸ்ரீஸ்கந்தராஜா ஞானமனோகரி என்ற கவிஞரை நம்மில் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இப்பொழுது அவருடைய 108 பாடல்கள் நூல் வடிவில் வந்துள்ளது. அவரை அண்மைக் கால அளவுகோல்களின் படி கவிஞர் என்பதிலும் பார்க்க மரபுசார் புலவர், பாடலாசிரியர் எனக் கூறலாம். ஆயினும் அவரிடம் கவித்துவமும் இருக்கிறது என்பதைக் காட்டப் பல உதாரணங்கள் நூலில் உண்டு. 168 பக்கங்களைக் கொண்ட இந்த அழகிய பதிப்பை திருகோணமலையில் நன்கு அறியப்பட்ட சித்தி அமரசிங்கத்தின் ஈழத்து இலக்கியச் சோலை வெளியிட்டுள்ளது. இந்த நூலை 21, ஔவையார் வீதி (திருகோணமலை)யில் பெற்றுக் கொள்ளலாம்.
இத்தொகுதியில் இடம்பெறும் பாடல்கள் அன்பு, அமைதி, ஆத்மீகம் போன்றவை பற்றி பேசுகின்றன. இந்த நூலுக்கு சுவாமி ஆத்மகணனந்தா, மூத்த எழுத்தாளர் பா.பாலேஸ்வரி (கலாபூஷணம் பாலேஸ்வரி நல்லரெட்ணசிங்கம்), காந்தி ஆசிரியர் அறியப்பட்ட பொ.கந்தையா, சித்தி அமரசிங்கம் ஆகியோர் நூலாசிரியர் பற்றியும் பாடல்கள் பற்றியும் நிறைய விபரங்களைத் தந்துள்ளனர். நூலாசிரியையும், அவருடைய மறைந்த கணவர் ஸ்ரீஸ்கந்தராஜாவும் எனது துணைவிக்கும், எனக்கும் உறவினர்களாவர். பல்துறைகளில் ஈடுபாடுடைய ஆற்றல் மிக்கவராய் அவருடைய குடும்பத்தினர் இருப்பதை நாம் அறிந்து கொள்கிறோம். ஞான மனோகரியின் சகோதரர்களுள் ஒருவர், வைத்தியத்துறையைச் சேர்ந்த ராமச்சந்திரன் ஆவர். இவர் `அறிவு' என்ற பிரயோசனமான பெரும்பாலும் சிறுவர்க்கான சஞ்சிகை யை வெளியிட்டு வருகிறார்.
திருகோணமலையைச் சேர்ந்த பல தமிழ் மக்கள் கடவுள் பக்தி கொண்ட வர்கள். ஆன்மீகத்திலும் மிக நாட்டமுடையவர்கள் அங்கு "மோகனாங்கி" எழுதிய சரவணமுத்துப் பிள்ளை முதல் பல எழுத்தாளர்களும், கலைஞர்களும், அறிஞர்களும் இலை மறை காய் போல் இருந்து வரு கிறார்கள். மட்டக்களப்பு, கல்முனை, அம்பாறை மாவட்டங்களிலுள்ளவர்கள் போல, மூதூர், திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களில் ஆற்றல் பற்றி பிற மாவட்டத்தினர் நன்கு அறியார் என்றே கூற வேண்டியிருக்கிறது. சிறந்த கவிஞரும், மொழி பெயர்ப்பாளரும், அரசியல் பகுப்பாய்வாளருமான பேராசிரியர் சி.சிவசேகரம் திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர் என்பது பலருக்குத் தெரியாது. சிவசேகரம் விமர்சகர் என்றும் சில இடங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
திருகோணமலையில் வடிவேல் மாஸ்டர் என்றழைக்கப்பட்ட அறிஞர் (நூலாசிரியர், கதா பிரசங்க விற்பன்னர்) உட்பட சுவாமி கெங்காதரணாநந்தவும் போற்றுதற்குரியவராக இருந்து வருகிறார். அவரிடம் ஆத்மீக பிணைப்புக் கொண்டவர் நூலாசிரியை.
இப்பாடல்களை வாய்விட்டு நான் படித்த பொழுது அவற்றில் லயம் இருப்பதையும், ஆசிரியையிடம் சொல்லாட்சி யிருப்பதையும் உணர்ந்து கொண்டேன்.
இறை பக்தியைச் சமூக சேவையுடன் ஆசிரியை தொடர்புபடுத்திக் காட்டுகின்றார். ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல, அவருடைய `நரயக்ஞம்' என்ற பாடல் அமைகிறது. இதோ பாடல்.

நரயக்ஞம்

ஏழைக்கு உதவினும் சரி
பசிக்கின்ற வயிறு பார்த்து
அன்னம் அளிப்பினும் சரி
நோயினால் வாடியே வருபவருக்கு
ஔடதம் கொடுப்பினும் சரி
ஆடை அற்ற ஏழைகட்கு
ஆடை வழங்கினும் சரி
அதுவே நரயக்ஞம் ஆகும்.


மனத்துயர் கொள்ளும் மக்கள்
வேதனை குறைப்பினும் சரி
பெண் துயர் கண்டு
அவர்துயர் துடைப்பினும் சரி
தொழில் வளம் அற்ற
சம்சாரிக்கு உதவினும் சரி
குழந்தை மன வெதும்பல்
தீர்த்து வைப்பினும் சரி
அதுவே நரயக்ஞம் ஆகும்


சமூக சேவை சங்கத்தால்
தர்மங்கள் செய்யினும் சரி
நாட்டினது அமைதிக்கு
பாடு படினும் சரி
அகதிகள் இடம் நாடிசசென்று
அவர்துயர் நீக்கினும் சரி
நாட்டு மண்ணிலே நல்ல ஓர்
ஆட்சியை அமைப்பினும் சரி
எல்லாம் நரயக்ஞம் அன்றோ

நரயக்ஞம் தன்னை குறைவர செய்துவரின் தீய கர்மாக்கள் குறையுமன்றோ.
`பூத யக்ஞம்' என்பதனை விளக்குகையில் ஆசிரியை இவ்வாறு முடிக்கிறார்.

"அன்பு என்பது அனைவருக்கும் சொந்தம்.

எல்லா உயிர்களிலும் இறைவன் உள்ளான்.

வாயது இல்லா ஜீவனை நாமே

மான்போடு அணைப்பது பூதயக்ஞம் ஆகும் தானே".


இந்து சமயத்தின் (சைவம்) பற்பல கூறுகளையும் அற்புதமாக விளக்கிக் கூறும் பாடலாசிரியர், மனித நேயம், சமூகத்தில் தனிமனிதன் , சமூக நோக்கு அளப்பரிய அன்பு, ஞானம் போன்ற பல விடயங்களையும் யாவரும் விளங்கக் கூடிய விதத்தில், ஓசை நயத்துடன் தந்திருப்பது பாராட்டத்தக்கது. பல விடயங்களை ஆசிரியை அறிந்திருக்கிறார். அடக்கமாக இருந்து இதுவரை தன்னை இனங்காட்டிக் கொள்ளாமல் இருந்த போதிலும் இத் தொகுப்பு மூலம் தமது திறமையை வெளிக்காட்டியிருக்கிறார்.
இந்த நூல் இந்து சமயம் போதிக்கப்படும் பள்ளிக்கூடங்களிலும், பல்கலைக் கழகங்களிலும் விதந்துரைக்கப்பட்ட பாட நூலாக இருப்பது அவசியம். ஏனெனில் எளிய முறையில் பல தத்துவங்களையும், கருத்துகளையும் தமது பாடல்கள் மூலம் எடுத்துக் காட்டியிருப்பதேயாகும்.
அநேகமாக ஒவ்வொரு பாடலுக்கும் கடவுளின் சித்திரங்கள் அணி சேர்க்கின்றன.
ஞானமனோகரி எழுதிய பாடல்களுள் ஒன்றின் தலைப்பு "கவித்துவம்" அதனை எவ்வாறு அவர் பார்க்கிறார்?


கவித்துவம்

எண்ணத்தில் மேன்மை வேண்டும்
எழுத்தினில் நல்லோசை வேண்டும்
சொற்களில் ஆட்சி வேண்டும்
சுவையான கவிதை கொண்டு
சாற்றியே நின்றால் இங்கு
கல்லும் கசிந்தே வரும்.

பாக்களில் இனிமை வேண்டும்
பதங்களில் பொருளும் வேண்டும்
ஏற்றம் மிகு தொடர்களாக
எழுதியே எடுத்து விட்டால்
நாட்ட மிகு கவிதை எல்லாம்
ஞாலத்தில் எட்டும் சுவையாய்

அன்புசேர் சொற்களாலே
அமிழ் தான இசையினோடு
இறைவன் தனைப் பூஜித்தால்
மயங்கிய பொறிகள் எல்லாம்
மயக்கமே தீர்த்து நின்று
வந்தவேலையைச் செய்யும் அன்றோ.

தூதுவளை தொடர்பான ஒரு கதையையும் ஆசிரியை சேர்த்திருக்கிறார்.
கவனக் குறைவால் சில வார்த்தைகள் சரியாக எழுதப்படவில்லை. உதாரணமாக கணனி, கிருஷ்ணபாலா, வீண்காலமாய் போன்ற வார்த்தைகள், வேறு உச்சரிப்பில் எழுதப்பட்டுள்ளன. தாய்க்குலம், தாய்குலம் என்று அச்சிடப்பட்டுள்ளது. 06.12.2006 இன்னமும் வரவில்லை. தம் அன்னையின் பிறந்த தினம் சரியாகப் பதிவு செய்யப்படவில்லை.
இருந்த போதிலும் குடத்திலிட்ட விளக்குப் போல, தமது பிள்ளைகளின் உந்தலினால் ஒரு நல்ல படைப்பை ஸ்ரீஸ்கந்தராஜா (மறைந்த கணவரின் பெயர்) ஞானமனோகரி தந்திருக்கிறார்.

உணர்வே வாழ்வு

இளமைக் கால நினைவுக் கோலம்
முதுமைக் கால முன்பனிததுளியில்
மூழ்கி நனைந்தும் முற்றாய் அழிவதில்லை
கடமைக்காக வாழ்ந்த வாழ்வும்
உரிமைக்காக மூண்ட போரும்
ஊழிச சுழியில் நுரையும் ஆவதில்லை.

உடமைக்காக ஆடிய ஆட்டம்
பதவிக்காக ஓடிய ஓட்டம்
பழகிப் போன பாதையானதே
திறமைகாண கடிய கூட்டம்
சிறுமைகண்டும் வருந்தா உள்ளம்
மறுமைஎண்ணி வாழ்ந்தால போதுமோ.

மனித உறவில் நேயங்கள் இல்லை
புனித உணர்வை போற்றுவாரல்லை
வணித நோக்கில் வாழ்க்கை போகுதே
மளிகைக் கடைப்பொருள் மாமூல் வாழ்க்கை
அணிகலன் பொருள் ஆடை.யில் மோகம்
வெளியிலோர் வேடம் வேதனை சேர்க்குமே.

மெத்தப் படித்து மேதைகள் ஆவார்
சொத்தைச் சேர்த்து சோடையும் போவார்
அர்த்தம் நூறு வாழ்க்கைக் குரைப்பரே
பொத்திப் பொத்தி பிள்ளையை வளர்த்து
பொறுத்துப பொறுத்து பிழைகளை மறைத்து
மொத்த வாழ்வும் விழலுக் கிரைப்பரே.

இளமைக் கால நினைவுக் கோலம்
இத்தனை இத்தனை புள்ளிகள் வைத்தும்
ஒற்றைக் கோடு ஒன்றாய் இணைக்குமோ
முதுமைக் கால முன்னனுபவமும்
மூத்தோர் சொன்ன மூச்சும் பேச்சும்
ஒற்றைக் கோட்டால் இணைக்க முயல்கிறேன்.

அர்த்தமுள்ள வாழ்வை அளக்கும்
அளவுகோளைத் தேடி அலையும்
சித்தமொன்று சிந்தை வரப்பெறறால்
குற்றமுள்ள நெஞ்சால் என்றும்
குறுத்துக் குழம்பி நின்ற
பித்தர்கூடப் பின்னால் வரம்பெற்றார்.

மிச்சமுள்ள வாழ்வில் இன்னும்
மீந்திருக்கும் நாளும் கொஞ்சம்
மின்னலென ஞானம் வரப்பெற்றால்
அச்சமில்லா வாழ்வுந் தோன்றும்
ஆன்மீகத் தெளிவுந் தோன்றும்
உண்மையொளி உணரக் கூடுமே.

நட்சத்திர தூசிக் கோலம்
நாமெல்லாம் என்ற ஞானம்
உச்சியிலே உதித்து வரப்பெற்றால்
வைத்திட்ட புள்ளியெல்லாம்
வந்த்மையும் தளமுமொன்றே
ஒற்றைக் கோடு ஒன்றாய் இணைக்குமே.

இளமைக் கால நினைவுகள் இல்லை
முதுமைக் கால முணுகளும் இல்லை
மூழ்கி நனையும் அனுபவம் இல்லையே
இறந்து எதிர்படக் காலமும் இல்லை
உள்ளதும் ஒன்றே உனர்வதும் அதுவே
அறிவதும் நினைப்பதும் அறவே இல்லையே


22-03-2003

பெண்பா புலவருக்கோர் வெண்பா



பெண்பாபுலவர் ஞானமனோகரி
ஸ்ரீஸ்கந்தராஜா








ஆத்ம துளிகள் அல்ல ஆன்மீகப் பிரவாகம்
யாத்த கவிதை எல்லாந் தெய்வீகப் பூபாளம்
பூத்த முதல் நூலே சன்மார்க்க சாராம்சம்
பூக்க இனும் நூறு சமுதாயச் சீராக்கம்.

சீராக்கல் சிந்தை சிறப்பது உன்தன் நோக்கம்
போராட்டம் மிகுந்த நடப்பிலு முன்தன் ஆக்கம்
மாறாட்ட மில்லா வாழ்வினை நம்முள் ஆக்கும்
பாராட்ட தகுந்த வரிகளை என்னுள் தேடும்.

தேடும் மனத் தேடலுக்கு இங்கோர் தெளிவு
கூறும் தமிழ் பாடலுக்கு பொருளே செறிவு
தேறும் மனத் தேறலுக்கு பலவும் பொழிந்து

ஓதும் தரம் ஆவதுக்கு பரவும் சிறந்து.

சிறந்தது கூறிச் சிறப்பது சீர்பெறு தமிழாம்
சிறந்தது கூறச் சிறந்ததுன் சீர்தரு கவிதை
பிறந்தது கூறி மகிழ்ந்திடு மோருடன் பிறப்பாய்
இருப்பது நாடி எழுந்திடும் என்மன கவிதை.

கவிதையின் தொகை நூற்றெட்டு நூல் கணக்கில்
நவின்றிடு பொருள் போற்றெட்டும் நூல் படிப்போர்
பயின்றிடா ரொரு தூற்றலும் நூல் வடிப்பார்
அறிவிலார் அத்தா லேற்றிலார் ஞான சூனியம்.

சூனியம் சுற்றி சூழவரும் ஞானியர் மனம்
பாணியம் பண்ணி பகர்ஞான மனோக ரிதம்
ஆன்மீகம் பற்றி அழகழகாய் பகிர்ந்த விதம்
பூர்வீகப் புண்ணிய தத்வஞான சாரா முதம்.

அமுதமெழி பகரும் அழகான தமிழ் வரிகள்
சுமுகமொழி நகர்ந்து சரளமாய் பொருள் விரிய
தொழுதவழி பிறரும் பிரளாமல் தொடர்ந் திடவே
எழுதஅடி பிறந்து புரளுமுன் தமிழ் பாட்டு.

பாட்டுடைத் தலைவன் அந்த பரம் பொருளே
பாட்டுரைத் தளங்கள் எங்கள் அக இருளே
பாட்டிசைப் பதங்கள் இந்த புற உலகே
பாட்டுடைத் தலைவி இந்த ஜீவ ஆத்மதுளியே.!

திருமதி ஞானமனோகரி ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களின்
ஆத்ம துளிகள் நூலின் பாதிப்பால் விளைந்த பாராட்டுக் கவிதை.
23-11-2006 ஆக்கியோன் அருள்ஜோதிச்சந்சிரன்.





Monday, 27 November 2006

சுவடுகள்




TrincoVoice திருக்கோணமலைக்குரல்

இது ஒரு புது முயற்சி. திருக்கோணமலைத் தெருப்பாடகன் என்னுந் தலைப்பில் பல தனிப் பாடல்கள் எழுதியிருந்தாலும் அவை திசைக் கொன்றாக சிதறிய நிலையில் இனி வருங் கவிதைகளையாவது ஒரு களமமைத்து காப்போமென எண்ணி இத் தளத்தை உருவாக்கினேன்.


ஈரடிச் சுவடுகள் பதிய
காலநதிக் கரையோரம்
நான் நடந்தேன்.

திரும்பிப் பார்த்த போது
நாலடிச் சுவடுகளின்
தடம் கண்டேன்.

யாரென என்னுள் வினவ
அது தானென
இறைவன் சொன்னான்.

இறைவனின் துணை உண்டு
என்ற இதமான உணர்வோடு
என் பயணந் தொடர்ந்தது.

சோதனைகளில் சோராமல்
கவலைகளில் கலங்காமல்
காலங்கள் போயின.

முதுமையின் பாரம் முற்ற
இளமையின் சாரம் வற்ற
வாழ்க்கையே சுமையாயிற்று.

இறைவனின் சுவடுகள் இன்னும்
என்னுடன் வருகுதா என்றெண்ணி
திரும்பிப் பார்த்தேன்.

திடுக்கிட்டேன் திகைப்புற்றேன்
ஒரு சோடிச் சுவடுகள் மட்டும்
தொடரக் கண்டேன்.

இறைவா என்னை விட்டு
எங்கு சென்றாய்
என்று கேட்டேன்.

உன்னையென் தோள்களில் சுமந்து
கொண்டு உன்னோடு வருகிறேன்
என்று இறைவன் சொன்னான்.
அமெரிக்க பயணத்தின் போது ஒரு உறவினர் வீட்டில் கண்ட ஆங்கிலக் கவிதையைக் கருப் பொருளாகக் கொண்டு 16-11-2006 இல் எழுதப்பட்ட வரிகள் உவை.