Tuesday, 29 October 2013

நாளொருமேனி பொழுதொருவண்ணம்




நாளொருமேனி பொழுதொருவண்ணம் 
நடப்பவை எல்லாம் நன்மைக்கே 
நானொருபோதும் கவலையில் ஆழேன் 
நம்பிக்கை கொள்வேன் உண்மைக்கே
.
மாதொருபாகன் ஆகிய நாதன் 
கங்கையைக் கரந்தான் தலையினிலே 
ஏனொருகேள்வி எழுந்ததே இல்லை 
என்னதான் தத்துவம் இக்கதையினிலே?

தத்துவம் சொல்லத் தத்துவமுள்ளோர்
தத்துவந் தந்து உதவட்டுமே
பக்குவமில்லா மனிதனின் மனதை
பக்குவப் படுத்தி உயர்த்தட்டுமே
.
மாலவன் மண்ணில் ராமனாய்வந்து
மனைவி ஒன்றென உரைத்தானே
ஆனவன் பின்னால் ஆண்டவனாகி
ஆயிரம் மனைவிகள் கொண்டானே.

ஏனிவை எல்லாம் ஏறுக்குமாறாய்
எங்கள் மதத்தில் ஏறினவோ?
மானுடம் இதனால் நேருக்குநேராய்
எதைத்தான் உணர்ந்திடக் கூறினவோ?

பாருக்குப் பலதும் கூறிடும் பெரியோர்
பதிலுரை கூறி உதவட்டுமே
யாருக்குக் கூறி ஆவதுஎன்ன?
என்றோர் எண்ணத்தை உதறட்டுமே.



No comments: