Wednesday, 16 October 2013

அம்மா

அன்னை என்று உன்னை எந்தன்
அறிவில் கொண்ட நாள் முதல்
முன்னை பின்னை என்றில்லாமல்
மூவுலகத்திலும் உன்னையல்லதோர்
தெய்வமும் உண்டாங் கொள்ளோ.

இன்று (28/10/2013) எமதன்னையரின் 48வது சிரார்த்த தினம்.திதியல்ல. கந்த சஷ்டி விரத நான்காம் நாள் வரும் சதுர்த்தி திதியே அன்னாரின் திதி ஆகும். நானும் என் மைந்தனும் அன்னாரின் திருவுருவப் படத்திற்கு முன் விளக்கேற்றி மலர்தூவி நம் வணக்கங்களைத் தெரிவித்தோம். என் சகோதர - சகோதரியாருடன் தொடர்பு கொண்டு சொன்ன போது அவர்கள் முற்றாகவே இன்றைய தினத்தை மறந்து விட்டிருந்தது என் மனத்துக்குக் கொஞ்சம் நெருடலாயிருந்தது. அவசர உலகம், பரபரப்பான வாழ்க்கை என்று ஆயிரம் காரணங்கள் சொல்ல வந்தாலும் பெற்றோரின் இறந்த தினம் கூடமறந்து போகுமா?





என் அன்னையை நான் எனது பதினாறாவது வயதில் இழந்தேன்.
ஆறில் இழந்தால் அறியாத வயது. தேறியிருப்பேன்.
அறுபதில் இழந்தால் அனுபவித்த வயது. ஆறியிருப்பேன்.
பதினாறில் இழந்ததில் பழியானது எனது கல்வி மட்டுமல்ல; வாழ்வின் சுவையான பகுதியுந்தான்.
அன்று என் அன்னையின் நினைவாஞ்சலி மலரில் நான் எழுதிய வரிகளில் சில துளிகள்.

ஈன்றெடுத்த தாய் எனக்கின்றில்லை
நாளையெனைச் சான்றோனெனக்
கேட்க வருவளோ - இனி யார்தமக்கு
தோன்றும் பேரவலம் துடைத்து நின்று
சான்றோன் எனச் சார்தல்.

28.10.1965 இல் எழுதிய கவிதை. இனறு 48 வருடங்களின்
பின்னர் எதிரொலித்ததில் என்னுள்
நானே உடைந்து போகிறேன்.






இவர்களில் எண்மர் எனது தாயாரின் மைத்துனரும் மைத்துனியும் ஆவர்.
இவர்களில் சிலர் தங்களின் தாய் தந்தையரொடும் அப்பப்பா அப்பம்மாவோடும்
உள்ள 1909ஆம் ஆண்டுப் படம் விரைவில் போடவுள்ளேன்.






மூன்றெழுத்துக் கவிதை 'அம்மா'
முதலெழுத்து இல்லாட்டில் 'ம்மா'(பெரிய)
முடிவெழுத்து மட்டுமெனில் 'மா'
எல்லாமே பெரிதைத்தான் குறிக்கும்
அம்மா.

No comments: