Tuesday, 29 October 2013

சுவாமிஜியும் நானும்



















உள்ளதெல்லாம் இங்கொன்றே                                               

ஆழ்துயில் தொட்டு அறிதுயில் மட்டும் 
ஆத்மானுபவம் பட்டேன் 
மூழ்வதுஎங்கே   மீள்வதுஎங்கே 
உள்ளதெல்லாம் இங்கொன்றே!

கருவறை தொட்டுக் கல்லறை மட்டும்
கண்ணிருந்தும் நான் குருடே
கருமையுமென்ன வெண்மையுமென்ன 
காண்பதெல்லாம் இங்கொன்றே!

ஆராரோ தொட்டு அழுகுரல் மட்டும் 
யாராரோ சொல்லக் கேட்டேன் 
அறிவுரைஏது அருளுரைஏது 
செவிடன் காதூதும் சங்கே!

பால்சுவை தொட்டு மதுச் சுவைமட்டும் 
பலவித சுவைகளைத் தொட்டும் 
இனிப்பது ஏது கசப்பது ஏது
சுவை அறியாத வாழ்வே!

பிறந்தமண் மணமும் இறந்தபின் மண்ணும்                                             பிழைபடா நாசியில் முட்டும் 
சுகந்தங்கள் பாதி கந்தங்கள் மீதி 
நுகர்ந்திடும் நுகர்வும் பொய்யே!

அன்னையின் ஸ்பரிசம் தந்தையின் ஸ்பரிசம்
ஆண்பெண் ஸ்பரிசங்கள் எல்லாம்
எல்லையில்லாத இன்பங்கள் தாமோ?
இல்லை இவையும் இங்கு பொய்யாமே!

பொய்மையில் தொட்டு மெய்மைக்கு மட்டும்
போவதே ஜீவனின் திட்டம் அதில் 
உண்மையும்மில்லை பொய்மையும்மில்லை
உள்ளதெல்லாம் இங்கொன்றே!

ஜயனி என் மனைவி



உதிரும் நினைவில் உதிரா நினைவாய் 
மலரும் நினைவில் மலராய் வருவாள் 
புதிதாய் புதிதாய் உறவுகள் வரினும் 
புரியாப் புதிராய் உறவுகள் பிரியும்.

அரிதாம் அரிதாம் மனிதம் அரிதாம் 
அதனினும் அரிதாம் அறிவை அறிதல்
அறிவால் உறவை அறிபவன் மனிதன்
அன்பால் உறவைப் புரிபவன் புனிதன்.

மனிதம் மறைந்து புனிதன் பிறந்தால்
இனிநம் உலகே இறைவன் வீடாம்
அறிவை மறந்து அன்பால் உணர்ந்தால்
தெளிவை அடைந்து தெய்வம் ஆவாய்.

தெய்வம் ஆன தேவதை அவளே
தெய்வம் ஆகின் தேவைகள் இல்லை
தெய்வம் அடிநான் சேரும் வரையென்
மலரும் நினைவில் மலராய் வருவாள்.

நாளொருமேனி பொழுதொருவண்ணம்




நாளொருமேனி பொழுதொருவண்ணம் 
நடப்பவை எல்லாம் நன்மைக்கே 
நானொருபோதும் கவலையில் ஆழேன் 
நம்பிக்கை கொள்வேன் உண்மைக்கே
.
மாதொருபாகன் ஆகிய நாதன் 
கங்கையைக் கரந்தான் தலையினிலே 
ஏனொருகேள்வி எழுந்ததே இல்லை 
என்னதான் தத்துவம் இக்கதையினிலே?

தத்துவம் சொல்லத் தத்துவமுள்ளோர்
தத்துவந் தந்து உதவட்டுமே
பக்குவமில்லா மனிதனின் மனதை
பக்குவப் படுத்தி உயர்த்தட்டுமே
.
மாலவன் மண்ணில் ராமனாய்வந்து
மனைவி ஒன்றென உரைத்தானே
ஆனவன் பின்னால் ஆண்டவனாகி
ஆயிரம் மனைவிகள் கொண்டானே.

ஏனிவை எல்லாம் ஏறுக்குமாறாய்
எங்கள் மதத்தில் ஏறினவோ?
மானுடம் இதனால் நேருக்குநேராய்
எதைத்தான் உணர்ந்திடக் கூறினவோ?

பாருக்குப் பலதும் கூறிடும் பெரியோர்
பதிலுரை கூறி உதவட்டுமே
யாருக்குக் கூறி ஆவதுஎன்ன?
என்றோர் எண்ணத்தை உதறட்டுமே.



Monday, 28 October 2013

கண்ணா நீ




கண்ணா நீ முகங் காட்ட வா பெண் மனம் 
கண்ணாடி பொருள்போல் அன்றோ!
மன்னா நீ மறை போற்றும் மாதவனே ஆனாலும் 
முன்னால்  நீ வரும் போது முற்றும் எனக்கன்றோ!  





தேய்ந்து வளரும் சந்திரன் போல நம் வாழ்வும் இருந்தால் நாம் பல பிழைகளை மீண்டும் மீண்டும் செய்யாது வாழ்ந்திருப்போம்.

வஜனாம்ருதம் தொடர்ச்சி...

அஸதோ மா ஸத்கமய 
தமஸோ மா ஜ்யோதிர்கமய 
ம்ருத்யோர் மா அம்ருதம்கமய 
ஓம் சாந்தி சாந்தி சாந்திஹி.



50. அறிவினாலும், அப்பியாசத்தினாலும் மனதைத் தன்வசப்படுத்தத் தெரிந்தவனுக்கு வாழ்க்கை என்பது காற்பந்து விளையாட்டுப் போன்று சுவைமிக்க விளையாட்டாகும்.

26. மனித வாழ்க்கை அருவருக்கத் தக்க நிலைக்குத் தாழ்ந்துவிடும் பொழுதும், சமுதாயப் பண்புகள் நஷ்டப்படும் பொழுதும் இவ்வுலகில் மனிதனாகப் பிறப்பதற்குரிய சந்தர்ப்பம் கிடைத்த நன்றிக்கடனுக்காவது நாம் மேலான வாழ்வு வாழக் கடமைப்பட்டிருக்கிறோம். இதை உணராமல் செய்யுஞ் செயல் எல்லாம் தன்னைத்தான் வஞ்சிப்பதாகும்.வஜனாம்ருதம்

27. தங்கள் தங்களுடைய தேசிய கலை, கலாச்சாரத்திற்குத் தனி மதிப்பளிக்கும் ஒரு அரசியலமைப்புக்கு மாத்திரந்தான் ஆதரவளிக்க வேண்டும். ஏன்?... இதில்தான் எங்களுடைய முழுச் சுதந்திரமும் தங்கியிருக்கின்றது.

28. காலமெல்லாம் பாலூட்டிவளர்த்த பாம்பும் ஒரு நாள் ஊட்டிய கரத்தில் கொத்தும். அவ்விதமே செய் நன்றி மறந்த மனிதனும்.

29. சான்றோர் மனம் புண்பட நடந்தால் தீர்த்தால் தீராத பிரம்ம சாபம் உன்னை விட்டு அகலாது.

30. உன் குற்றம் மற்றவர் குற்றமாவதில்லை.குற்றத்தை உணர்ந்தால் திருத்துவதும், திருந்துவதும் எளிது.

31. நம்பினாலும் நம்பாவிட்டாலும் சரி, தெய்வம் உன்னைக் கணப்பொழுதிலும் கைவிடுவதில்லை. உயிர்த்துடிப்பின் ஆதார சத்தி தெய்வமாய் இருக்கும்பொழுது அது கைவிட்டால் நீ வாழ்வது எங்ஙனம்?

32. அழிய வேண்டியது அழியும் பொழுது அதனைப் பார்த்துத் துயரம் கொள்ளாதே.

33. புயல் சமுத்திரத்தில் கொந்தளிப்பை உண்டு பண்ணினாலும் சமுத்திரம் சமுத்திரமாகவே இருப்பது போன்று பக்குவம் அடைந்தவர்களுடைய மனமும்,வாழ்க்கையும் உலக விகாரத்தினால் கொந்தளிப்பதில்லை.

34. புனித யாத்திரைகள், ஆலய தரிசனம் போன்றவைகளை இறைவனோடு இணையும் முறையில், திரிகரண சுத்தியுடன் சிறுமைக் குணங்களை நீக்கிச் செய். அழுக்காறுகள் நீங்கும்வண்ணம் அது புனிதமாய் இருக்கட்டும்.

35. அந்தரங்க சுத்தி இல்லாத நாம ஜெபம் தியானம் போன்றவைகள் எள்ளளவிலும் பயன்
அளிப்பதில்லை. அது வெறும் நாடகமாயும், தன்னையும் மற்றவர்களையும் ஆத்மவஞ்சனைக்கு உட்படுத்தும் ஒரு தந்திரமாகவும் மாறலாம்.

36. நல்லொழுக்கக் குறைவால் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் துயரம், கடவுளே! கடவுளே! என்று சொல்லிக் கொண்டிருப்பதால் மட்டும் தீர்ந்துவிடாது. நற்செயலால் மனதைப் பரிசுத்தப்படுத்தும் பொழுது எல்லாம் சுகமாய் முடியும்.

37. பசி,தாகமில்லாத இறைவனுக்கு வேளா வேளைக்கு நீரும், உணவும் அளிக்கிறீர்கள். தூணிலும், துரும்பிலும் குடியிருக்கத் தகுதியுடையவனுக்குத் தனித்ததோர் இடவசதியும் செய்து கொடுக்கின்றீர்கள். உங்களுடைய அதே உணர்வும், செயலும்  மனிதனாகப் பிறந்தும், மனித உரிமையற்று நிர்க்கதியாய் ஊர்ந்து செல்லும் மனித உருவங்களுக்கு அளிக்கப்படுமானால், அதுவே இறைவனுக்கு அர்ப்பணிக்கும் சிறந்த நிவேதனமாகும்.

38. இரைப்பை பழுதடையும் வண்ணம் உண்டு உறங்கும்பொழுது, இலை தளைகளைத்தின்று வாழும் நிலைக்குத் தள்ளப்பட்ட ஏழை மக்களைப் பற்றி நினையாத இருதயத்தில் இறைவன் கடுகளவும் நுழைவதில்லை.

39. மனதால் வாழ்கிறவன் மனிதன். நீதி நியாயத்திற்கு பொறுத்த மில்லாத ஆதிக்க மனமுடையவர்களுடைய மனதைவிட உங்களுடைய மனதை அதீத சக்தியுடையதாக மாற்றிவிடுங்கள். அங்ஙனம் நீங்கள் சுயரட்சகர்களாக மாறிவிடும் பொழுது விடுதலைக்குரிய வழிதானே பிறக்கும்.

40. சொல்லும் செயலும் சிந்தனையும் தாய் மொழிமூலம் செயற்படும் போது விடுதலையின் முதற்கதவு திறக்கப்படுகிறது.

41. மூர்க்கத்தனமான அசுரசக்தியைக் கூரிய புத்தியாலும் நுணுக்கமான உபாயத்தாலும் எளிதில் வென்றுவிடலாம்.


42. வாழ்க்கை உரிமைகளுக்குரிய சமசந்தர்ப்பம் மனிதனுக்கு மாத்திரமன்று, விலங்கினத்திற்கும் இருக்க வேண்டும்.அதைப் பகிர்ந்தளிக்கும் தேசம்தான் தர்மதேசம்.

43. தங்கள் தங்களை இன்னும் ஆழமான ரீதியில் அறிவதற்கும், நாள்தோறும் கூடுதலான கர்ம சக்தியைப் பெறுவதற்கும் பழகிக் கொள்ள வேண்டும். சொந்தப் பிரச்சனைகளை நேரடியாக பார்த்தறிவத்ற்கும், அதைச் சுயமாகவே தீர்ப்பதற்கும் இதைத் தவிர வேறு வழியில்லை.

44. கிடைக்கும் சுதந்திரம், சந்தர்ப்பம் இவற்றை சரிவர உபயோகப்படுத்தத் தவறினால் அது மீண்டும் கிடைப்பதரிது.

45. இராவணன், கம்ஸன், துரியோதனன், சூரன் போன்றவர்களுக்குத் தண்டனைக்குப் பின்புதான் பாவ மன்னிப்புக் கிடைத்திருக்கிறது.

46. பொருளின் தாரதம்மியங்களைக் கொண்டு வாழ்க்கையின் உயர்வு தாழ்வை நிச்சயிப்பது மடமை.மனதின் தராதரத்தைக் கொண்டுதான் அதை நிச்சயிக்க வேண்டும். மனத் தெளிவுடையவனுக்கு இலாபமும் நஷ்டமும் ஒன்றேயாகும்.

47. தேவையானதை வைத்துத் தேவையில்லாததை விட்டுவிடும் இயற்கையான அறிவு சகல ஜீவராசிகளிடத்திலும் இயல்பாக அமைந்திருக்கிறது. மனிதனில் அது விவேகம் அல்லது பகுத்தறிவு என்ற சிறப்பான குணத்துடன் இருந்தும் பேராசையால் அது அறியப்படுவதில்லை.

48. மனம் எப்பொருளில் கலந்திருக்கிறதோ அப்பொருளின் வடிவம் கொள்ளும்.

49. மனம் ஒரு நுண்மையான பொருளாதலால் அதை முறையாக ஆராய்ந்தால் எளிதில் அறியக் கூடியதேயாகும். 










Wednesday, 16 October 2013

அம்மா

அன்னை என்று உன்னை எந்தன்
அறிவில் கொண்ட நாள் முதல்
முன்னை பின்னை என்றில்லாமல்
மூவுலகத்திலும் உன்னையல்லதோர்
தெய்வமும் உண்டாங் கொள்ளோ.

இன்று (28/10/2013) எமதன்னையரின் 48வது சிரார்த்த தினம்.திதியல்ல. கந்த சஷ்டி விரத நான்காம் நாள் வரும் சதுர்த்தி திதியே அன்னாரின் திதி ஆகும். நானும் என் மைந்தனும் அன்னாரின் திருவுருவப் படத்திற்கு முன் விளக்கேற்றி மலர்தூவி நம் வணக்கங்களைத் தெரிவித்தோம். என் சகோதர - சகோதரியாருடன் தொடர்பு கொண்டு சொன்ன போது அவர்கள் முற்றாகவே இன்றைய தினத்தை மறந்து விட்டிருந்தது என் மனத்துக்குக் கொஞ்சம் நெருடலாயிருந்தது. அவசர உலகம், பரபரப்பான வாழ்க்கை என்று ஆயிரம் காரணங்கள் சொல்ல வந்தாலும் பெற்றோரின் இறந்த தினம் கூடமறந்து போகுமா?





என் அன்னையை நான் எனது பதினாறாவது வயதில் இழந்தேன்.
ஆறில் இழந்தால் அறியாத வயது. தேறியிருப்பேன்.
அறுபதில் இழந்தால் அனுபவித்த வயது. ஆறியிருப்பேன்.
பதினாறில் இழந்ததில் பழியானது எனது கல்வி மட்டுமல்ல; வாழ்வின் சுவையான பகுதியுந்தான்.
அன்று என் அன்னையின் நினைவாஞ்சலி மலரில் நான் எழுதிய வரிகளில் சில துளிகள்.

ஈன்றெடுத்த தாய் எனக்கின்றில்லை
நாளையெனைச் சான்றோனெனக்
கேட்க வருவளோ - இனி யார்தமக்கு
தோன்றும் பேரவலம் துடைத்து நின்று
சான்றோன் எனச் சார்தல்.

28.10.1965 இல் எழுதிய கவிதை. இனறு 48 வருடங்களின்
பின்னர் எதிரொலித்ததில் என்னுள்
நானே உடைந்து போகிறேன்.






இவர்களில் எண்மர் எனது தாயாரின் மைத்துனரும் மைத்துனியும் ஆவர்.
இவர்களில் சிலர் தங்களின் தாய் தந்தையரொடும் அப்பப்பா அப்பம்மாவோடும்
உள்ள 1909ஆம் ஆண்டுப் படம் விரைவில் போடவுள்ளேன்.






மூன்றெழுத்துக் கவிதை 'அம்மா'
முதலெழுத்து இல்லாட்டில் 'ம்மா'(பெரிய)
முடிவெழுத்து மட்டுமெனில் 'மா'
எல்லாமே பெரிதைத்தான் குறிக்கும்
அம்மா.

Wednesday, 9 October 2013

வஜனாம்ருதம்

அஸதோ மா ஸதகமய தமஸோ மா ஜ்யோதிர்கமய ம்ருத்யோர் மா அம்ருதம்கமய ஓம் சாந்தி சாந்தி சாந்திஹி.


25. மனச்சாந்தியை இழந்தவர்கள், தன்னையும் உலகத்தையும் வெறுக்கின்றனர். அன்றியும் தான் கொண்டதுதான் சரி என்ற ஆபத்தான பிடிவாத குணம் உடையவராயும் இருப்பர். எனவே தனக்கும் சமுதாயத்திற்கும் உபத்திரவம் இல்லாது வாழ மனச் சாந்தியை வளர்த்தெடுக்க வேண்டும்.
-----------------------------------------------------------------------------------------------வஜனாம்ருதம்

அஸதோ மா ஸத்கமய
தமஸோ மா ஜ்யோதிர்கமய
ம்ருத்யோர் மா அம்ருதம்கமய
ஓம் சாந்தி சாந்தி சாந்திஹி

1. உனது வாழ்வில் நிரந்தரமான சுகத்துடன் நிம்மதியாக வாழ முடியுமா? என்ற விஷயத்தில் என்னனவும் சந்தேகப்படாதே. கருகிய கரி நெருப்புடன் சம்பந்தப் படும் பொழுது அதன் இயற்கையான கருமை மாறி ஒளிர்கின்றது. அதே போன்று உனது மனம் தெய்வீக ஒலியில் கலந்திருந்தால் ஜீவசுகம் நிறைந்த சம்பூரண மனிதனை உன்னில் காணலாம்.

 2. கறல் ஏறிய இரும்பைக் காந்தம் ஈர்க்காதது போன்று அழுக்கு நிறைந்த மனதைத் தெய்வீக ஒளி கவர்ந்தெடுப்பதில்ல.

3. உனது இதயத்தை தூய்மைப் படுத்துக. அப்பொழுது சிந்தனா சக்தியும் செயலாற்றும் திறமையும் அற்புதமான ரீதியில் பெருகும்.

4. நீ தெய்வத்தைப் பார்க்கவில்லையென்றாலும் தெய்வம் உன்னைப் பார்க்கிறது.

5. கண்கள் உலகத்தைப் பார்க்கும்  சக்தியை இழந்தாலும், தெய்வத்தைப் பார்க்கும் சக்தியை இழப்பதில்லை.

6.உனது சிறு செயலிலும் சிற்றறிவிலும்கூட பேராற்றலும் பேரறிவும் மறைந்திருக்கிறது. அதை உணரக்கூடிய அளவிற்கு இதயத்தைப் புனிதப்படுத்துக.

7.தார்மீக வழியில் தேடிய பணம் அவ்வழியில் செலவழித்தால் பாபங்கள் தேய்ந்துவிடும்.

8.உன் மனக்குற்றம் மற்றவர்களின் குற்றமாகத் தோற்றமளிக்கிறது.

9. அழுக்காறு நீங்கியபின் செய்யுந் தொண்டுதான் தொண்டு.

10. குறுகிய மனமுடையவனின் பக்தி நஞ்சு கலந்த அமிர்தம் போன்றது.

11.தன்னைத்தான் அளந்து பார்க்கத் தெரியாதவன் மற்றவர்களை அளந்து பார்ப்பது எங்ஙனம்?

12.உலோபியின் செல்வம் பாம்புப் புற்றிலிருக்குந் தேன் போன்றது.

13. நல்லதாயினும் அது நல்லோர்களிடத்திளிருந்து வரவேண்டும். 

14. கர்ம ரகசியம் தெரிதவனுக்கு  வாழ்க்கை விளையாட்டரங்கம் போன்றது. 

15. சேர்ந்து வாழ்ந்தாலும் நீரிற் கலந்த என்னேய்யைப்போல் வாழ்.

16. உன்னை உன்வசப்படுத்தினால், மற்றவர்கள் உன் வசப்படுவார்கள்.

17. உண்மை இருக்கும் இடத்தில் அழகும், இளமையும் பொழியும்.

18. அடிமைகள் வாழ்ந்தாலும், நலன் பெறுவதற்கு ஒன்றுமேயில்லை.

19. மரணபயம் இருக்கின்றவன் விடுதலையின் உயர்ந்த சுகத்தை அறிவதில்லை.

 20. அரிய சந்தர்ப்பங்கள் பலதும் உன் எதிரில் நிற்கின்றன. குழைத்து ஊட்டும்போது உண்ண மறுக்கும் குழந்தையைப்போல், சந்தர்ப்பத்தை உணர்ந்து செயற்படுத்தத் தெரியாதவர்கள்,துன்பத்திலிருந்து மீளுவதில்லை.

 21. காலத்தைப் பிரயோசனப்படுத்தத் தெரியாதவர்களுக்குக் காலமும், காலனும் ஒன்றே.

22. உபயோகமுறை தெரிந்தால் நஞ்சும் அமுதமாகும்.

23. உரிமை இல்லாத இடத்தில் உரித்துடன் பேசி விரோதிகளைத் தேடாதே.

24. மனிதா! உனது மெய்யன்பை உணர்ந்து ஏற்றுக்கொள்ளும் வகையில், இவ்வுலகம் இல்லை. அதை உணர்ந்து அன்புடன் அரவணைக்கும் இறைவனிடம் அன்பு செலுத்தினால், வஞ்சனை இல்லாத பேரன்பில் முழ்கி வாழலாம்.

25. மனச்சாந்தியை இழந்தவர்கள், தன்னையும் உலகத்தையும் வெறுக்கின்றனர். அன்றியும் தான் கொண்டதுதான் சரி என்ற ஆபத்தான பிடிவாத குணம் உடையவராயும் இருப்பர். எனவே தனக்கும் சமுதாயத்திற்கும் உபத்திரவம் இல்லாது வாழ மனச் சாந்தியை வளர்த்தெடுக்க வேண்டும்.

வஜனாம்ருதம் தொடர்ச்சி...