Sunday 8 February 2015

என்னோட மனிதர்கள்




என்னோட மனிதர்கள் 


"என்னோட மனிதரர்கள்" என்ற தலைப்பில் என்னுடன் பழகிய மனிதர்களை, என்னுடைய மனிதர்களைப் பற்றி எழுதலாம் என்று எண்ணினேன். என் எண்ணத்தின் வேகத்திற்கு எழுத்து இடம் கொடுக்காது என்பது என்னவோ உண்மைதான். எழுத்தென்று வரும்பொழுது அது ஒரு வரையறைக்குள் இலக்கணம் மீறாது, சமுதாய நாகரீகம் மீறாது, உறவுகளின் உணர்வுகளை மதித்து எழுதப்பட வேண்டிய அவசியம் உண்டு.

இதில் உறவுகளின் உணர்வுகளை ஒரு பொருட்டாகக் கொள்ளக் கூடாது என்ற முன் எச்சரிக்கையோடுதான் "என்னோட மனிதர்கள்" என்ற தலைப்பை என்னோட உறவுகள் என்ற தலைப்பில் இருந்து மாற்றி எழுதினேன். உண்மையில் என்னோடு பழகிய மனிதர்களாகவே அவர்களை நான் இன்று இனம் காண்கின்றேன்.

உறவுகள் என்ற புனிதமான ஒரு இணைப்பை அவர்களிடம் இருந்து உணராத வரையில் அவர்களை எல்லாம் வெறும் மனிதர்களாகவே எண்ணிக் கொள்ள வேண்டிய கட்டாயம். மேலும் என் வாழ்வில் பழகிய மனிதர்களின் வீதத்தில் உறவுகள் எல்லாம் வெறும் சிறு பகுதியே. அதிலும் உடன் பிறப்புகளும், இரத்த உறவுகளும் ஒரு வீதம்கூட வரப்போவதில்லை.

நான் ஒரு கவிஞன் என்ற நினைப்பில் எழுதிய கவிதைகளின் பெருந் தொகையான கவிதைகள் என் உடன்பிறப்புகளையும், அவர்களது குடும்பங்களையும் சார்ந்ததாகவே இருந்ததுண்டு. ஒரு சராசரிக் கவிஞனாக அகமும்,புறமும் சேரக் காதலையோ போரையோ பற்றி இல்லாமல், கற்பனையில் விரிந்து வரும் இயற்கையின் வண்ணங்களும் இல்லாமல் வெறுமனே என் உறவுகளின் வக்கரித்துப் போன வாழ்க்கையைப் பற்றியும் அவர்கள் வாழத் தவறிய அல்லது வாழ்வில் காணத் தவறிய நல்லவற்றைப் பற்றியுமே சுற்றிச் சுற்றி வந்தது.

இவற்றை எல்லாம் ஒரு கவிதைத் தொகுதியாக வெளியிட எனக்குள் உடன்பாடில்லை. அந்த ஒரு காரணத்தினால் மட்டுமே இன்று வரை நான் எழுதிய நூற்றுக் கணக்கான கவிதைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக குறைப் பிரசவங்கள் போல கிடக்கின்ற நிலையில் எனது மண உளைச்சல்களுக்கு ஒரு வடிகாலாக இதனை "என்னோட மனிதர்கள்" என்ற தலைப்பில் இன்று எழுத முற்பட்டேன்.

இதில் வரும் சம்பவங்கள் அனைத்தும் உண்மையே. உண்மையைத் தவிர வேறில்லை.இதைச் சம்பந்தப்பட்டவர்கள் வாசிக்க நேர்ந்தால் அல்லது வாசித்தவர்களின் விமர்சனங்களால் தங்களைப் பற்றியே குறிப்பிடப் பட்டிருப்பதை உணர்ந்து கொண்டால் அவர்கள் மனநிலை என்னவாக இருக்கும் என்பதைப்பற்றி எனக்கு ஒரு கவலையும் இல்லை. உண்மையில் அவர்களை கவலைப் படுத்த வேண்டும் என்றோ அல்லது அவரவரின் காரணங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்றோ நான் எதிர்பார்க்கவில்லை. 

எந்தவிதமான எதிர்பார்ப்புகளுமே இல்லாமல் எழுதுகின்ற இந்த எழுத்துக்கள் இன்னொருவருடைய அங்கீகாரத்தை எதிர்பார்ப்பதில்லை. இது என்னுடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளின் வெளிப்பாடே.

09/04/2011

பகுதி பகுதியாக வெளிவரப் போகும் "என்னோட மனிதர்கள்" தொடர்ந்து வாசிக்கும் வகையில் என்னுடைய புளக்கில் பதிவு செய்யப்படும். அதன் லிங்க் அந்தந்தப் பகுதியோடு மேலேற்ற முடிவு செய்துள்ளேன்.
என் தந்தையைப் பற்றி நான் சொல்வதை விட எனது பெருமதிப்பிற்கும், பேரன்பிற்கும் பாத்திரமான ஜெகமண்ணா என்று எங்களால் அழைக்கப் பட்டவரும், பல கவிதைத் தொகுப்புகளை எழுதி வெளியிட்டவருமான டாக்டர் சி.சிவசேகரம் அவர்களால் எழுதப்பட்ட இந்த தொகுப்பை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

பேராசிரியர் சி.சிவசேகரம் அவர்களால் எழுதப்பட்டது.

அசாதாரணமான ஒரு சாதாரண மனிதர் 

இயற்கை அற்புதமானது. அதன் விதிகள் அற்புதமானவை. அவற்றை மீறிய நிகழ்வுகள் என்ற வகையில் அற்புதங்கள் என எதுவும்மில்லை. நாம் இயற்கையை அறிய அதன் விதிகளை அறிய முயல்கிறோம். அதேவேளை அவ்விதிகளை மீறும் அற்புதங்களுக்காக காத்திருக்கிறோம்.அவற்றை நிகழ்த்துவதற்கு இயற்கையில் மிக சாதாரணமான படைப்பான மனிதரிடையே எவரையாவது எதிர் நோக்கி இருக்கிறோம். ஜோசியக்காரர்கள் வருகிறார்கள். வித்தைக்காரர்கள் வருகிறார்கள். துறவு வேடம் பூண்டோர் வருகிறார்கள். நாம் அவர்களிடம் மயங்குகிறோம். பகுத்தறிவுக்கு எட்டாதது என்று நாம் கூறும் பரம்பொருளின் இருப்பை நிலைநிறுத்த தர்க்க முறையிலான வாதங்களையும் விஞ்ஞானத் தகவல்களையும் துணைக்கு அழைக்கிறோம். மனித இருப்பு வெகு சாதாரணமானது என்பதாலேயே அது அற்புதமானது. எளிய விஷயங்களைப் புரிந்து கொள்வதற்கான முயற்சி இல்லாமலே அறிவதற்கு எட்டாத விஷயங்கள் பற்றி நம்மால் தீர்ப்பு வழங்க இயலுமாகிறது. இவ்வாறான முரண்கள் ஆன்மிகம், ஞானம், யோகம் என்ற பேர்களில் ஊக்குவிக்கப்படுகின்றன. தெளிவான சிந்தனையும் நேரான மதியும்  தீர்க்கக்கூடிய விஷயங்களுக்கு யார் யாரையோ தேடி அலையும் நிர்ப்பந்தம் எமக்கு.

புற வளர்ச்சிக்கு மேலாக அக வளச்சியையும் உலக ஞானத்திற்கு மேலாக ஆன்மீகத்தையும் சமுதாயப் பொறுப்புகட்கும்,நீதிக்கும் மேலாக தவயோகத்தையும் வலியுறுத்துகிற சாமிமாரைப் பணக்காரர்களும், பிரமுகர்களும் சூளுகிறார்கள். விளம்பர யுகம் யாரை விட்டுவைக்கிறது. கைக் கெட்டுத் தொலைவிலுள்ள சுடர்விலக்கைவிடத் தொலைவில் மின்னும் வண்ண விளக்குகள் நம்மைக் கவருகின்றன. இவ்வாறான மயக்கங்களினின்று நாம் மீளுமுன் நம் கைக்கு எட்டக் கூடியன காணாமற் போய்விடுகின்றன. சந்திரசேகரம்பிள்ளை அவர்கள் பற்றி நான் எழுதுவதற்கு ஜோதி என்னைக் கேட்டது மட்டுமே காரணமல்ல. நான் அறிந்த நல்ல மனிதர்களுள் அவர் ஒருவர் என்பதும் அவரிடமிருந்து கற்கவேண்டிய நிறைய உள்ளது என்பதும் முக்கியமானவை.

அவரைப் பெயர் குறிப்பிட்டு எழுதுவதோ, பேசுவதோ இதுவே முதன்முறையாக இருக்கலாம். அவரது பிள்ளைகளுடைய பெயரைக் குறிப்பிட்டு, இவரை அவரது அப்பா என்றோ அவரது குடும்பத்தினருடன் போகும்போது அப்புச்சி என்று அவரது பிள்ளைகள் அழைப்பது போலவோ தான் அழைப்பது வழக்கம். அம்மா சந்திரசேகரத்தார் என்று சொல்வது நினைவு. மற்றப்படி அந்த வீடு அயல் எல்லாம் புளியடிமச்சி என்ற பெயராலேயே குறிப்பிடப்படும். அசாதரமானவை என்று நாம் வழமையாகக் கருதும் எதுவிதமான பண்பும் அவரிடமில்லை. பணம், பட்டம், பதவி என்றவாறான அளவுகோளால் மதிப்பிடும் வெற்றிகள் அவருக்குரியனவல்ல. அவற்றின் மீதான மோகமும் அவரிடமிருந்ததாகத் தெரியவில்லை. அதேவேளை மனிதரது தேவைகளும் உணர்வுகளுஞ் சார்ந்த ஆபாசங்கட்கு அப்பாற்பட்டவராகவும் அவர் இருக்கவில்லை. தனக்குத் தெரிந்த வாழ்க்கையை தனக்குத் தெரிந்த நெறிகட்கமைய ஆரவாரமில்லாமலேயே வாழ்ந்தவர் என்று சொல்லலாம்.

அவரது உலகநோக்கு மரபு சார்ந்ததும், பழமை பேணுவதுமான ஒன்று. அதை எல்லார் மீதும் திணிக்கும் நோக்கம் அவரிடம் இருந்ததில்லை.தன்னுடைய வயதையும் அனுபவத்தையும் மற்றவர்களை அடக்கும் ஒரு ஆயுதமாக அவர் பிரயோகித்ததாக நினைவில்லை. வயதுக்கேற்ற மரியாதை என்பது மனிதருடன் பேசுவதிலும் பழகுவதிலும் உள்ள பண்பு என்று மட்டும் வரையறுத்துக் கொள்ளாமல் அதிகாரத்துக்கான தகுதி என்று கருதுகிற மனோபாவம் அவரிடம் இருக்கவில்லை. இதனால் அவருடன் எந்த நேரத்திலும் எந்த சூழலிலும் எதைப்பற்றியும் சமத்துவமான முறையில் பேச இயலுமாயிருந்தது.என்னைவிட நாற்பத்தாறு வயது மூத்தவர் என்ற உணர்விற்கே இடமில்லாமல் பன்னிரண்டு பதின்மூன்று வயதில் கூட அவருடன் உரையாட முடியுமாயிருந்தது.

அவர் கோபப்படாதவரோ கடுமையான மொழி பேசாதவரோ இல்லை. நியாயவீனமானவையும் ஏமாற்றும் கடுமையான கோபத்தை வரவழைப்பதுண்டு. சிலசமயம் நெருக்கமானவர்களுடன் குரலை உயர்த்திப் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். புளியடிமச்சியுடன் இவ்வாறான சூடான வாக்குவாதங்கள் அடிக்கடி நிகழும். ஆனால் அவர்களைப் போல நெருக்கமான கணவன் மனைவி என்று பலர் இல்லை.

பிறர் பொருள் மீது ஆசைப்படாதவர்கள் கூட மற்றவர்களது நல்ல நிலையைப் பார்த்துப் பொறாமைப்படுவதுண்டு. தன்னுடைய நிலையை மற்றவர்களது நிலையுடன் ஒப்பிடுகிற அக்கறைகூட அவருக்கு இருந்ததாகத் தெரியவில்லை. பொய்ப் புகழ்ச்சிக்கான தேவையும் அவருக்கு இருக்கவில்லை. பிள்ளைகளுடைய படிப்பு, தொழில் போன்ற அலுவல்களிலும் அவர் அதிகம் குறுக்கிடவில்லை. இதனால் அதிகம் கெட்டுப் போனதாகவும் தெரியவில்லை. சில பெற்றோர்களினளவுக்கு மிகுதியாக குறிப்பிட்டிருப்பதாயின் அதன் விளைவுகள் எவ்வாறு அமைந்திருக்குமென யாரும் வேண்டுமானால் ஊகிக்கலாம். ஆனால் உறுதியான முடிவுகட்கு வருவது கடினம்.

வேகமாக மாறி வருகிற சமுதாயச் சூழலில் மூர்க்கத்தனமான பொருள் முதல்வாத விழுமியங்கட்கு நாம் பலியாகி வருகிறோம். மரபின் பெயரால் வெறும் சடங்குகளையே பற்றிக்கொண்டு நம்மையே இழந்து வருகிறோம். அந்த மரபில் மனித வாழ்வும் மனித உறவுகளும் தொடர்பான சமுதாய விழுமியங்கள் பற்றிய ஆழமான அக்கறையில்லாதபோது மரபின் நல்ல பண்புகளை இழந்து புதிய சூழலில் தவறான பண்புகளையே நாம் தழுவிக்கொள்ளும் அபாயம் உண்டு. இந்த வகையில் நவீன உலகத்துக்குள் வர ஆயத்தமில்லாத நிலையிலும், அதனுடன் பகையின்றித் தன் வாழ்வைத் தனக்குத் தெரிந்த விதிகட்கு அமையத் தனக்கு உண்மையாக வாழ்கிறவர்கள் போற்றத்தக்கோர். சந்திரசேகரம்பிள்ளை அவர்கள் அவர்களுள் ஒருவர். அவரது பெருந்தன்மை பற்றி அம்மா பலமுறை குறிப்பிட்டிருக்கின்றார். அவரது குறைபாடுகலாகக் காணப்பட்டவை பலவற்றை மீள நோக்கினால் அவை அவரது குறைபாடுகள் அல்லாமல் எங்களது பார்வையின் குறைபாடாகவும் கருத இடமுண்டு. அவருடைய  அந்தக் குறைபாடு மற்றவர்களுக்குக் கேடு செய்யும் வகையிலாவதில்லை. உலகில் உள்ள கபடும் வஞ்சனையும் பற்றி அவர் அறிவார். ஆயினும் தன்னை அவற்றில் ஈடுபடுத்திக்கொள்ள அவர் என்றுமே ஆயத்தமாக இருக்கவில்லை. இதைவிடப் பெரிய  வெற்றி என வாழ்க்கையில் அதிகம் இல்லை.

அவரிடமிருந்து திருக்கோணமலையின் பழைய நாட்கள் பற்றிக் கொஞ்சம் கேட்டறிந்திருக்கிறேன். சம்பிரதாயங்களின் பேரால் நடக்கும் பம்மாத்துக்கள் பற்றிய அவர் கூறிய நகைச்சுவையான கதைகளையும் கேட்டிருக்கிறேன். மேலும் கேட்டிருக்கலாம். ஆனால் அவ்வாறு நிகழவில்லை.வாழ்வின் பல நெருக்கடிகளின் மத்தியில் அவரால் தடுமாற்றமின்றி வாழ முடிந்தது.இது நாம் கற்க வேண்டிய ஒன்று. இதை நன்கு அரிய முடிந்தால் ஞானிகளாகவும் சித்தர்களாகவும் உலா வருகிறவர்களின் பின்னால் ஓட வேண்டிய தேவை இராது என நினைக்கிறேன்.

No comments: