Sunday 15 February 2015

ஆலயம்



ஆலயம் 


சமயம் கோவில் குளங்களெல்லாம் வேண்டாம். இதெல்லாம் மக்களைச் சுரண்டி வாழ்வதற்கு ஒரு சில பிற்போக்குவாதிகளால் செய்து வைத்த சூழ்ச்சிகள். சமூக முன்னேற்றத்திற்குச் சமயம் பெரும் இடைஞ்சலாக இருக்கின்ற படியால் இந்த சமயக் குப்பையில் இருந்து மக்களை விடுதலை செய்ய வேண்டும். இவ்வித மெல்லாம் சடவாதம் செய்யும் கட்சிகளின் செல்வாக்குப் பெருகி வருகின்றது.

"ஈசனுக் கன்பில்லார் அடியவர்க்குமன் பில்லால் 
 எவ்வுயிர்க்கு மன்பில்லார் தமக்கு மன்பில்லார்"

என்ற சிவஞான சித்தியாரின் பாடலின் கருத்தை உணராதவர்களின் சகோதரத்துவம், சமத்துவம், சமதர்மம், பஞ்சசீலம், முதலியன எந்நிலைப் பட்டதோ? இன்னும் சில கோஷ்டிகள் ஆலய சீர்திருத்தத்தின் பெயரால் என்னென்னவோ சொல்லிக் கொண்டு, இருக்கின்ற ஆசாரத்தையும் கெடுத்து அனாச்சாரத்தைப் புகுத்தப் பார்க்கின்றது.

நட்ட கல்லும் பேசுமோ என்ற கூற்றின் உட் பொருள் தெரியாமல் வாசாஞானம் பேசி ஆலயம் புகாமல் கற்பனா உலகில் பிராணத்தியாகம் செய்கின்றவர்களைப் பற்றி என்னவென்று சொல்வது. இன்னொரு சாரார் மதம் மயக்கும் மருந்தென்று சமயத்திற்கு ஒரு பரிபாஷை செய்திருக்கின்றனர். சமயத் துறையில் மதத்திற்கு "தரிசனம்" என்று சொல்வதுண்டு.தரிசனம் என்றால் பார்க்கப் படுவது என்று பொருள். உள்ளதை உள்ளபடி பார்த்தறிவது சமயம். யதார்த்தத்தை அறிவதே அறிவு.

யதார்த்தத்தை அறிவதே அறிவு. மற்றவை எல்லாம் பொய்யறிவு. நமக்கு வரும் சங்கடமெல்லாம் பொய்யறிவின் விளைவு. எனவே மயக்கந் தெளிந்து உள்ளதை உள்ளபடி அறிய உதவுவது எதோ அது மதம் எனப்படும். சிலர் பக்தியானது பயத்தினால் பிறந்த ஒரு மனக்கோளாறு என்று முடிவுகட்டி பக்தியின் ஆராய்ச்சியை அத்துடன் நிறுத்தி விட்டனர். பயத்தினால் உலக மகாயுத்தம் மூளுவதைவிட இறை அச்சத்தினால் பக்தி பிறந்து அன்பினால் பிணைக்கப் பட்ட ஏக சமூக வாழ்வு உத்தமமானதன்றோ? "நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்" என்று பக்தி பெருகி பயமற்ற பெரியாராகிய நாவுக்கரசர் பாடியிருப்பது அவர்களுக்குத் தெரியவில்லைப்போலும். பக்தி பிறந்தால் பயம் பிரியும் என்ற தத்துவம் நவீன உளநூல் ஆராய்ச்சியாளர்களின் புத்திக்கு அகப்படுமோ என்பது சந்தேகம். அச்சமும் பயமுமற்ற அன்னியோன்னிய அன்புடன் சேர்ந்து வாழும் சாந்தமான சூழ்நிலையையே இன்றைய உலக மக்கள் வேண்டி நிற்கின்றனர். உலக சமாதானத்திற்காக ஏதோ சிலதெல்லாம் சொல்லியும் செய்தும் மூச்சுத் திணறி அவஸ்தைப் படுகிறவர்கள் எல்லாம் பக்தியின் சிறப்பை யுணர்ந்து, அதை ஒரு சிறிதளவாவது உட்கொண்டால் போதுமானது. சுவாசம் ஒழுங்காயோடும். மனம் தெளிவடைந்து சாந்தி பிறக்கும். பஞ்சசீலம் விளங்காகதவர்கட் கெல்லாம் சீலமும் நோன்பும் தானே வரும். பக்தி இருக்கின்ற உள்ளத்தில் எல்லோரும் இறைவன் குழந்தைகள். சிருஷ்டிகள் எல்லாம் அவனுடமை என்ற சிருஷ்டி தத்துவம் விளங்கும். சண்டை சச்சரவுகள் குறையும். உனது எனது என்ற மமதை அடங்கும். யுத்த முஸ்தீபுகளுக்கு விரயமாகும் பொருளும் பணமும் மக்கள் க்ஷேமத்திற்காகப் பயன்படும். எனவே அச்சமகற்றி ஏகத்துவம் சகோதரத்துவம் சமத்துவம் முதலிய சமரச உணச்சிகளுக்கு ஆதாரமான பக்தியை வளர்க்கும் ஆலயங்களைச சம்ரட்சணை செய்வோம்.

நாம் வாழும் யுகத்திற்கு கலியுகமென்று பெயர் சொல்கிறோம். கலியுகம் என்றால் இலகுவில் உணர்ச்சி வசப்படும் கால கட்டம் என்று பொருள்படும். அற்ப காரியங்களுக்கும் உணர்ச்சி வசப்பட்டுத தற்கொலை புரிபவர்களின் எண்ணிக்கையை எடுத்துப் பார்த்தால் கலி என்ற சொல் எவ்வளவு பொருத்தமான சொல்லென்பது தெரியும். கலியுக வரதனை நெஞ்சிலூன்றி நினைப்ப வர்களுக்கு மனதில் கொண்ட கலியும் கிலியும் போய் அமைதி நிலவும். பாவ சிந்தனை வராது. ஜென்மம் கடைத்தேற வேண்டுமென்று நினைப்பவர்க்கெல்லாம் கலியுகம் சிறப்புடையது. அதிலும் திராவிடர்க்கு இன்னும் விஷேசம். முன் ஆரியர் வர்த்தம் (விந்திய மலையி லிருந்து வடக்கே இமயம் வரையில்) பக்திக்கும் புண்ணியத்திற்கும் சிரேஷ்டமானதென்று கருதியிருந்தது. கலியுக பகவான் வளர வளர ஆரியர் வர்த்தத்திளிருந்து பக்தியும் புண்ணியமும், ஏனைய சிறப்புகளும் தெற்கே நோக்கி (விந்தியத்திற்குத் தெற்கே) வருமென்று சாஸ்திரங்கள் பல கூறுகின்றன. நானூறு வருடங்களுக்கு முன் திராவிட நாட்டில் தோன்றிய ஒரு பரம ஞானியால் தீர்க்க தரிசனமாகச் சொல்லி வைத்ததின் ஒரு சிறு பகுதியை இங்கு கூறுகின்றோம்.

"த்ர மிள புவி ததோ 
பூரி சஸ்த்தத்திர சோச்சை 
காவேரிம் தாமிர பர்ண்ணீமனுகில கிருதமா 
லாஞ்ச புண்ணியாம் ப்ரதீசிம்" [நாராயணீயம்]

"த்ரமிள புவி" என்றால் திராவிட பூமி என்று பொருள். உலக நெருக்கடி அதி உச்ச நிலையை அடையும் பொழுது திராவிடத்தில் (குறிப்பாகக்  காவிரி நதியோரங்களில்) மகான்கள் தோன்றி உலக க்ஷேமத்தை உண்டு பண்ணுவர் என்று சொல்லப் பட்டிருக்கின்றது.

த்ரமிள புவி என்றால் ... மனித நாகரீகம் முதல் முறையாகத் தோன்றிய பிரதேசமல்லவா? சிறப்பிக்கத்தானே செய்யும். ஆகையால் இனி நமது நாட்டில் சமய நெறி குன்றி பக்தி குறைந்து ஆலயங்கள் தகர்த்து எறியப் படும் என்று யாரும் ஐயம் கொள்ள வேண்டாம். திராவிடக் கலை, கலாச்சாரங்கள் புத்துயிர் பெற்று புது முறையில் விளங்கப் போகின்றது. அந்தரங்க சுத்தியுடன் இருக்கும் ஆலயங்களை நன்நெறி நின்று பரிபாலனம் செய்து வந்தால் போதும்.

அறம் வளரும். புண்ணியம் கூடும். நாடும் சிறக்கும். மற்ற யுகங்களில் கொடிய தவத்தினாலும் அடைய முடியா மேன்மைகளும் சித்தியும் கலியுகத்தில் ஜெபம், பஜனம், நாமார்ச்சனை பக்திப் பாடல்கள் முதலிய சாதாரண சாதனையால் சித்திக்கும் என்ற பாகவதம் முதலிய கிரந்தங்களில் சிறப்புற எழுதப் பட்டிருக் கின்றது. எனவே சீலமும் நோன்பும் இருக்கின்ற பக்த ஜனங்களுக்குக் கலியுகம் மோட்ச காலம் என்றே கருதலாம்.

விஞ்ஞான புத்தி பல அற்புத சாதனைகளைச் செய்து வருகிறது. உடல் வாழ்க்கையைக் கூடுதல் சௌகரியப் படுத்தல் பல நூதனப் பொருள்களையும் ஆக்கித் தந்திருக் கின்றது. அவை எல்லாம் பெருமையுடன் நினைவு கூறத் தக்கவை. அதிக வசதியைச் செய்வதில் மட்டும் புத்தியைச் செலுத்தினால் முடிவு சோகமும் துயரமும் என்பதைப் பாமர மக்கள் உணர இன்னும் பல்லாண்டுகள் செல்லலாம். ஞான, தர்ம, ஒழுக்க நெறி, சிந்தனை களுக்கு இடமில்லாத இன்றைய உலகாயுதக் கல்வி நிலவி இருக்கும் வரையில் தேகத்தைக் கடந்த உன்னத சிந்தனைகளுக்குச் சந்தர்ப்பம் கிடைப்பது அரிது. சில பறவைகள், ஈக்கள், அணுப் பிரமாணமான நுண் சீவிகள் இன்னும் சில செடி கொடிகள் தங்கள் ஜீவனத்திற்காக, விளக்க முடியாத எத்தனையோ அற்புதச் செய்கைகள் செய்கின்றன. அவற்றின் அற்புத செய்கைகளை உன்னிக் கவனித்தால்  அறிவியல்களின் அகந்தை தானே அடங்கும்.

பகுத்தறிவில்லாத பிராணிகளும் அது இருக்கின்ற மனிதனும் செய்யும் நூதன நுட்பங்களெல்லாம் வெறும் உடல் வாழ்க்கையை மாத்திரம் வசதிப் படுத்திக் கொள்வதற்கு என்றால் அவைக்கும் நமக்கும் பெரிய வித்தியாசம் ஏதும் இருப்பதாய்க் கூறுவதற்கில்லை. மனிதனை விட மிருக சாதிகளுக்கிடையில் நோயும் பிணியும் சண்டை சச்சரவுகளும் குறைவு. வஞ்சனை, போட்டி, பொறாமையும் நம்மைவிட விலங்கினத்தில் அதிகமாய் இருப்பதாகத் தெரியவில்லை. இதனால் மனிதனை விட மற்ற ஜந்துக்கள் மேலானது என்று கருதலாமா? சகல பிராணிகளையும் விட மனித ஜன்மம் சிரேஷ்டமான தென்று சர்வ சம்மதமாயிருக்கின்றது. மனிதனில் இருக்கும் அந்த விசேஷம் தான் என்ன? இறை வழிபாடும் சமரச சிந்தனையும் மோட்ச விசாரமும் மிருக சாதிகளுக்கு இல்லை. புலன்களைத் தன் வசப் படுத்தி நிறுத்தும் தனிச் சிறப்பியல்பு மனிதர்களுக் கில்லாவிட்டால் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று கருதி அகப்பட்டதெல்லாம் தின்றும் குடித்தும் உயிரை மாய்க்கும் மிருக இயல்பில் நாங்களும் இருந்திருப்போம். மனித உருவில் இருந்தும் செயலில் இப்படி இருக்கின்றவர்களும் உண்டு. இறைவன் கருணை உள்ளம் அவர்கள்பால் வீசுவதாக.

ஜீவனின் தோற்றம், நிலை, ஒடுக்கம் இவைகளைப் பற்றி நவீன ஆராய்ச்சியாளர்கள் ஏகோபித்த முடிவிற்கு இன்னும் வரவில்லை. ஆரம்பத்திலேயே அவர்களுக்கு இடையில் கருத்து வேற்றுமைகள் தாராளமாகவுண்டு. ஆய்வின் முடிவுகள் அடிக்கடி நெறி செய்தும் வருகின் றன. நமது சமய சாஸ்திரங்கள் இவைகளுக்குத் தக்க பிரமாணங்களுடன் பூரண விளக்கம் தந்தி ருக்கின்றன.  பரிணாம தத்துவத்தை அரைகுறையாக கிரகித்த "டார்வினுக்கு" நாலாயிரம் ஆண்டுகளுக்குமுன் பரிணாம வளச்சியை அதன் முழுநிலையில் ரிஷிகளால்ஆராய்ந்த றியப் பட்டிருக்கிறது.  சிவா புராணத்தில் மணிவாசகப் பெருமான் பரிணாம தத்துவத்தைச் சுருக்கமாகப் பாடி வைத்தார்.அதிகம் சொல்லுவானேன். இந்து மதம் ஒரு பரிபூரண பரிணாம சித்தாந்தத்தை அடிப் படையாகக் கொண்டு பிரபஞ்ச தத்துவத்தை விளக்கி மனிதன் பூரணத்துவம் அடையும் வழி முறைகளை வகுத்துத் தந்திருக்கின்றது. இதைப் பற்றி இங்கு ஈண்டு ஆராயப்பட வேண்டியதில்லை. பதஞ்சலி யோக சூத்திரத்தை சுதேச புத்தியுடன் ஆராய்ந்தால் அணுவின் நுட்பங்களும் பரிணாம இரகசியங்களும், தக்க சான்றுகளுடன் சாஸ்திர ரீதியாய் விளக்கப் பட்டிருப்பதை அறியலாம். மனிதன் பரிணாம வளர்ச்சியின் முழுமையன்று. அவன் இன்னும் வளர வேண்டி இருக்கின்றது. உருவிலன்று. உள்ள்ளத்தால், புத்தியால். எனினும் மனித உருவில் வைத்தே அது முழுமை அடைய வேண்டியிருக்கின்றது.

எல்லாவற்றையும் அறிய வேண்டும் என்ற ஆசையும் விருப்பமும் எல்லோருக்கும் இருக்கின்றது. அங்ஙனம் எல்லோராலும் எல்லாவற்றையுமறிய முடிவதில்லை. நமது புத்தி அது செல்லக் கூடிய எல்லை வரையிலும் தான் செல்லும். அதற்கப்பால் இருப்பதைப் பார்க்க ஊனக் கண்களின் ஒளி போதாது. அதைப் பார்த்தறிய ஒளி மிக்க கண்கள் தேவை. அதை ஞானக் கண் என்று சொல்வர். எல்லோர் உள்ளத்திலும் இருக்கும் ஞானக் கண் மாயா சக்தியினால் ஆவரணம் செய்யப் பட்டிருக்கின்றது. மாயை அல்லது அவித்தை என்ற திரையை நீக்கம் செய்து, மறைந்திருப்பதைப் பார்க்கச் சொன்னவர்களை ரிஷிகள் என்பார்கள். அவர்களின் ஞானக் கண்களால் பார்க்கப்பட்ட விசேஷங்களை உலகச் க்ஷேமத்திற்காக எழுதி வைத்தவைகளே நமது வேத சாஸ்திரங்கள். என்றும் மாறாத தர்மங்களை சமய நூல்கள் சொல்லுகின்ற படியால் மற்றும் நூல்களை விட சமய சாஸ்திர கிரந்தங்களுக்கு விசேஷம் கூட இருக்கின்றது. அல்லது காலத்திற்குக் காலம் மாற்றி எழுதப்படும் விஞ்ஞான நூல்களின் தரத்தில் அதுவும் அகப்பட்டிருக்கும். அங்ஙனம் ரிஷிகளால் பார்த்தரியப் பட்ட வேத தத்துவங்களை துவாபர யுக முடிவில் கலியின் ஆரம்பத்தில் வியாச பகவான் இருக், யசுர்,சாம, அதர்வ என்ற நான்காக வகுத்தார். வேதம் முழுவதும் ஒருவருக்கு கற்றரிய முடியாத காரியமானதினால் அதை ஆயிரத்து ஒருநூற்று எண்பது சாகைகளால் பிரித்தார். ஒருவனால் கற்றரியக் கூடிய ஒரு பகுதிக்கு ஒரு சாகை என்று சொல்லப்படும். ஏதாவது ஒரு சாகையை அறிந்தால் வேதாசாரம் முழுதும் அறிந்ததற்குச் சமமாகும். வேதம் நான்கிற்கும் அங்கம் ஆறு. உப அங்கம் நான்கு. இவைகளைத் தவிர ஆயுள் வேதம், தனுர் வேதம், காந்தர்வ வேதம், அர்த்த வேதம் முதலிய நான்கு உப வேதங்களும் இருக்கின்றன. இவை யெல்லாம் சேர்த்து பதினெட்டு வித்தை என்பார்கள். வேதாந்தம் என்றால் முற்றிய அறிவென்று பொருள். வேதத்தில் என்ன இருக்கு என்று கேட்போருக்கு அதில் இல்லாதது, ஒன்றுமேயில்லை என்று  விடை யளிக்கலாம். அறுபத்திநான்கு கலைகளும் வேதத்தி நின்று தித்தவை.

இன்றைய கல்வித் துறையில் போதிக்கப்படும் தாவர தத்துவ சாஸ்திரம் (Botany) ரசாயன சாஸ்திரம் (Chemistry) பௌதீக சாஸ்திரம் (Physics) மருத்துவ சாஸ்திரம் (Medical Science) வியத்தக்க கணிதம் (Arithmetic, Geometry, Algebra) முதலிய சாதாரண வாழ்க்கைக்குரிய சாமானிய விஷயங்கள் கூட வேதத்தில் இருக்கின்றன. ஒவ்வொன்றுக்கும் விரிவான விளக்கங்கள் உண்டு. இன்றைய முறைகளை விட அவை எளிதாகவும் தெளிவாகவும் இருக்கின்றன. வேதத்தின் ஒரு பகுதியாகிய ஜோதிஷத்தில் அண்டங்களைப் பற்றிய ஆராய்ச்சிகளும் அவற்றின் கெதி விசேஷங்களும், தூரமும் அமைப்பு முறைகளும் சாஸ்திரானுசரனமாக விளக்கப் பட்டிருக்கின்றது. அவை யாவும் இன்றைய விஞ்ஞான ஆராய்ச்சியின் முடிவுகளுக்கு ஒத்ததாகவும் இருக்கின்றன. தற்பொழுது குழந்தைகளுக்கு பூமியின் ஆகர்ஷண சக்தியை (Gravitation) முதன் முறை கண்டு பிடித்தவர் நியூட்டன் என்று சொல்லிக் கொடுக்கப் படுகிறது. நியூட்டனுக்கு எத்தனையோ ஆயிரம் வருடங்களுக்கு முன் எழுதி வைத்த சூரிய சித்தாந்தம் என்ற நூலில் பூமியின் ஆகர்ஷண சக்தியைப் பற்றிக் கூறப் பட்டிருக்கின்றது. அதற்குப் பிறகு ஆரிய பட்டனும், பாச்கரவர்மனும் (இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்) பூமியின் இழுவைச் சக்தியைப் பற்றியும் நரை ஆராய்ந்து தங்களது ஜோஷி கிரந்தங்களில் எழுதியிருக்கின்றார்கள். மின்சார சக்தியைபற்றியும் இவர்கள் அறிந்திருந்தார்கள்.
தனுர் வேதத்தில் யுத்த முறைகளும் யுத்த கருவிகளை உற்பத்தி செய்யும் முறைகளும் கூறப் பட்டிருக்கின்றன. அதில் யுத்த கருவிகளை சஸ்த்திரம் என்றும் அஸ்திரம் என்றும் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப் பட்டிருக்கின்றது. சஸ்திர  மென்பது பொருள்களால் ஆக்கப் பட்டு அதன் இயக்க சக்தியால் மட்டும் இயக்கப் படுவது. அஸ்திர மென்பது ஆயுதங்களை ஆத்மா வலிமையால் பிரயோகிக்கப் படுவது. அஸ்திரத்துக்கு முக்தா முத்தம் என்ற இன்னொரு பெயருமுண்டு. முக்தா முக்த        மென்றால் போய்த் திரும்பி வருவது என்று அர்த்தம். இன்று ஆத்மா வலிமையால் அல்லாவிடினும் அத்தகைய யுத்த கருவிகள் (Rocket) உற்பத்தி செய்யப் படுகின்றன. இவ்விதம் ஒவ்வொன்றாய் ஆராய்ந்து கொண்டு போனால் இகபர வாழ்வுக்கு, உபயோகமான சகலதும் வேதத்தில் அடங்கி இருப்பதைப் பார்க்கலாம். வேத சாஸ்திரங்களை எள்ளி நகையாடும் அறிவிலிகள் இவைகளை ஆராய்ந்தால் தங்கள் வெளி வேஷம் தேசிய மயமாயிருந்தாலும் புத்தி தேசிய மயமாகவில்லை என்ற உணர்ச்சி மேலிடும். வேதத்தின் தனிச்  சிறப்பு மேற் சொன்ன சாமானிய விஷயங்களில் தங்கி நிற்கவில்லை. அதன் மகிமை முழுவதும் மக்கள் பூரணத்துவத்தை அடையும் ஆத்ம போதனையிலும் ஆத்ம விளக்கத்திலுமே தங்கி நிற்கின்றன.

"வேதியா வேத கீதா" பரம சிவம் சதா வேதத்தை ஓதிக் கொண்டிருக்கின்றதாம். சிவனால் ஓதிக் கொண்டிருக்கும் வேதத்தை நிந்தனை செய்வது சிவா நிந்தனையாகாதா? கலியுகத்தில் சாதாரண மக்களால் மேதார்த்தத்தை நேரடியாகக் கிரகிக்க முடியாதென்று கருதி, மந்த புத்திகளும் அவைகளை அறியும் பொருட்டு வியாசர் புராணங்களை இயற்றினார். அதில் வேத சாரங்கள் கதைகளாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. அத்தகைய புராணங்கள் பதினெட்டு. சாமானிய ஜனங்கள் வேத தத்துவங்களை அறிந்து அதன் வழி வாழ்ந்து, அறம், பொருள், இன்பம், வீடு முதலிய புருஷார்த்த தர்மங்களை அடைய வேண்டும் என்ற பரந்த நோக்கத்தாலேயே வியாசர் அவ்விதம் செய்தார்.  பண்டைக் காலத்தில் சீரிய கல்விப் போதனா முறை ஒன்றிருந்தது. பாடங் கேட்கும் போது மனதைச் சாந்தமாய் வைத்துக் கேட்க வேண்டும் மென்பதே அந்த முறை. மனம் சாந்தமாய் இருந்தால் கேட்கும் விஷயங்கள் நன்றாய் மனதில் பதிந்து விடும். அன்றைய கல்விப் போதனா முறைக்கும் தற்கால கல்விப் போதனா முறைக்கும் உள்ள வித்தியாசங்களைச் சிந்தனையாளர் சிந்திப்பார்களாக. அன்று அநேக விஷயங்களைப் போதிப்பதற்கு ஒரு ஆசிரியர். இன்று ஒரு விஷயத்தைப் போதிப்பதற்கு பல ஆசிரியர்கள். அப்படியிருந்தும் கேட்ட விஷயங்கள் அன்றைய உற்சாகத்துடன் மனதை விட்டுப் பிரிந்து சென்று விடுகின்றன. ஆலயங்களில் சாந்தமான சூழ் நிலையில் இருந்து புராண பாராயணங்கள் கேட்டால் அவை நன்றாக மனதில் பதிந்து விடும். தற்பொழுது ஆலயங்களில் புராண படனம் அருகி வருகின்றது. வரவர ஆலய நிர்வாகங்கள் எல்லாம் நவீனத்தில் செல்கின்றன. புராணம் படித்துப் பயன் சொல்ல வேண்டியவர்கள் எல்லாம் அர்த்த சாஸ்திரம் படிப்பதில் கண்ணும் கருத்துமா யிருந்தால் மற்றவர்களின் நிலைமையைப் பற்றிக் கூறுவானேன். ஆத்மாக்கள் ஆத்ம மயம் பெருவதற் குரிய இடமே ஆலயமாகும். தற்காலத்தில் அமைதியைக் கருதித தொழிற்சாலைகளில் பொருந்தும் இயந்திரங்கள் கூட சப்தமில்லாமல் இயங்கும் வகையில் செய்யப் பட்டு வருகின்றன. அங்ஙனம் இருக்க ஆத்மா சாந்திக்கும் அமைதிக்கும் வந்த ஆலயங்களில் இன்று நடப்பவை என்ன? சித்தத்தைக் கலக்கி காதைச் செவிடாக்கும் அசுர ஒலிகளால் அமைதி குலைக்கப் படுகின்றது. குறித்த இலட்சியத்தின் கண் உச்சாடானம் செய்ய வேண்டிய மந்திர ஒலிகள் கூட ஒலிபெருக்கியால் சிதறடிக்கப் படுகின்றது. இதை எல்லாம் பார்த்து மூல ஸ்தானத்தில் வீற்றிருக்கும் சுவாமியின் பொறுமையை நினைத்தால் நமக்கும் வாயடக்கமும் பொறுமையும் தானே வரும். "வேத விகித கரும மார்கேஷு சிறர்த்தா" ஆலய காரியங்கள் எல்லாம் வேதாகம விதிப் படி ஊக்கத்தோடு பிழையறச் செய்ய வேண்டும் என்று சாஸ்திரம் வலியுறுத்திக் கூறி இருக்கிறது. இவ்விடத்தில் ஒரு புராணக் கதை ஞாபகத்துக்கு வருகிறது.

பிரம்ம தேவனிடத்தில் ஒருவர் சென்று அடுத்த ஜென்மத்தில் தான் ஒரு கோவில் பூசாரியாகப் பிறக்க வரம் தர வேண்டும் என்று பிரார்த்தித்து நின்றார். பிரம்மா கேட்ட வரத்தை அளித்தார். வரம் வாங்கி விடை பெற்றுச் செல்லும் பொழுது அந்தரங்க சுத்தி இல்லாமல் பூஜா காரியங்கள் செய்யுமாகில் அதற்கடுத்த ஜென்மம் நாயாகப் பிறப்பாய் என்று பிரம்ம தேவர் ஒரு எச்சரிக்கையும் பண்ணி விட்டார் என்பது ஒரு கதை. ஆலய சம்பந்திகள் சித்த சுத்தியுடன் ஆலய கருமங்கள் செய்யா விட்டால் பாவ ஜென்மம் எடுக்க வேண்டி வரும் என்பதே கதையின் உட்பொருள். என்ன ஜென்மம் வந்தாலும் இப்படியே நடக்கட்டும் என்று நினைப்பவர் களைப் பற்றி நாம் ஒன்றும் கூறுவதற் கில்லை.

புராணங்களைப் பொருளுணர்ந்து சொல்லும்படி சொன்னால் கேட்பதற்கு ஆளில்லாமற் போகாது. கேட்பவர்க்கு வைராக்கியம் உதிக்கும். பக்தி பெருகும். ஈஸ்வரார்ப்பண புத்தி தோன்றும். தனக்கென்று வைத்தி ருப்பதில் ஒரு பங்கை ஈஸ்வரார்பணமாக கொடுக்க வேண்டும் என்ற சற்புத்தி வரும். ஆலயத்தின் பொருள் பண்டங்கள் தாராளமாகச் சேரத் தொடங்கும். நிர்வாகத்தினருக்கு பொருள் தேடித் திரியும் சுமை குறை யும். அருட்சக்தி பொலிவுக்கும் பக்திக்குமனுகூலமான காரியங்களையே ஆலயங்களில் செய்ய வேண்டும். ஆரவாரத்தினாலும் ஆடம்பரங்களினாலும் மக்களை ஆலயத்தின் பால் ஈர்க்க முயற்சிப்பது தவறு. விக்கிரங்களுக்கு மந்திர பூர்வமாகச் சக்தி கொடுத்து பூசை, அர்ச்சனை, அபிஷேகம், யாகம் முதலியவற்றை முறைப்படி சித்த சுத்தியுடன் செய்து வந்தால் அருட் சக்தி ஆலயங்களில் உதயமாகும்.தென்கயிலை மலை என்று போற்றும் திருக்கோணேஸ்வரம் அதற்குத் தக்க சான்றாய் இன்றும் விளங்குகிறது. அங்கிருந்த சேத்திரம் டச்சுக்காரர்களால் இடிக்கப் பட்ட பின் வெளிப் பார்வைக்கு வேற்று மலையாய் இருந்த போதிலும் பல்லாண்டுகளாகத தினசரி நுற்றுக்கணக்கான பக்த ஜனங்களைத் தன் பால் ஈர்த்து அனுக்கிரகம் செய்து கொண்டிருக்கும் அருட் காட்சியைப் பார்த்தவர்களுக்கு முன் கூறிய விஷயம் நன்கு விளங்கும். எவ்வித ஆடம்ப ரமுமில்லாமல் மௌன சாட்சியாய் இருந்து ஆயிர மாயிரம் நாஸ்திக, ஆஸ்திகர்களுக்கு அருளொளி காட்டிக் கொண்டிருப்பதை உணர்ந்தாலே போதும் ஐம்பெரும் பாவங்கள் தானே நீங்கும். சிவராத்திரி போன்ற விசேஷ காலங்களில் தரிசனத்துக்கு வரும் அடியார்களுக்குக் கணக்கில்லை. பார்வைக்கு சிறியதாய்த் தோன்றும் திருமலை உச்சியில் ஒரு பொழுதும் ஜன நெருக்கடி என்பது நாளிதுவரையும் இருந்ததில்லை.இதைத்தான் ஸ்தல மகிமை என்று சொல்வது.

எங்கும் நிறைந்திருக்கின்ற இறைவனுக்குக் கோவில் ஏன் என்று சிலர் கேட்கின்றனர். பரம்பொருள் எங்கும் பரந்திருக்கின்ற தென்ற உணர்ச்சி எல்லோருக்கும் இருந்தால் சூது, வாத்து, வஞ்சனை, பொய்கள் ஒன்றும் இருந்திருக்காது. மின்சக்தி எங்கும் பரந்திருக்கும். ஊனக் கண்களுக்குப் புலனாவ தில்லை. சில ஆராய்ச்சியினால் இருக்கின்ற தென்று அறியப்பட்டிருக்கின்றது. அருவமா யிருக்கும் மின்சக்தியைச் சில கருவிகளால் சேமித்து வைத்து அதற்கேற்ற உபகரணங்கள் மூலம் நாம் நமது தேவைகளுக்கு ஏற்றவாறு உபயோகப்படுத்திக் கொள்கி றோம்.அதே போல் அருவ சக்தியாயிருக்கும் அருட் சக்தியைச் சேமித்து வைத்திருக்கும் அருள் நிலையம் ஆலயம். மந்திரம், தோத்திரம், அபிஷேகம், அர்ச்சனை முதலியன அருட் சக்தியைச் சேமிக்கும் கருவிகள். பிரார்த்தனை, வழிபாடு, தியானம்முதலியன அந்தச் சேதனா சக்தியை நாம் பெறும் உபகரணங்களாகும்.

வழிபாட்டுக்குரிய விக்கிரகங்கள் சைய்ரி (கல்), தாருமை லௌகி, லேப்பியா,லேக்கியா, சைகதி, மனோமாயி, மணிமயி என்ற எட்டு விதப் பொருள்களால் செய்யப் பட வேண்டும் என்ற நியதி உண்டு. எண் வித லிங்கங்களும் சாலக் கிராமம் முதலியவைகளும் மணிமயி என்பதில் உட்படும். பிரதிஷ்டைக் குரிய விக்கிரகங்களுக்கு லாளித்துவம், பிரசாதம், சுகமத, பாவமாது, ரியம், தர்மோப தேசப் பிராஜுரியம் என்ற ஐந்து வித லெட்சணங்களும் பொருந்தி நின்றால் ஈஸ்வர குணங்கள் ஆறும் விக்கிரகத்தில் ஒளிரும். இத்தகைய லெட்சணங்கள்  பொருந்தா விட்டால் விக்கிரக பாவம் விகாரமடைந்த சாதாரண மனிதனைப் போல் தோற்ற மளிக்கும். தற்காலத்தில் வார்க்கப் படும் விக்கிரகங்கள் எத்தன்மை வாய்ந்ததென்று வாசக நேயர்கள் ஊகித்தறிய  வேண்டியது பிரதிஷ்டை செய்யும் பொழுது.

"லோகானுக்ரகே துர்வதும்ஸ்திரீபவசுகாயன" என்ற மந்திர உச்சாடணத்துடன் பிரதிஷ்டை செய்வதுண்டு. இறைவா! உலக சேமத்திற்காக நீ இதில் வீற்றிருப்பாயாக என்பதே இதன் பொருள். இந்த மந்திரப் பொருளைத் தெரிந்தால் ஆலயம் எதற்காக உண்டாக்கப் பட்டுள்ளதென்பதை எளிதில் யாவரும் விளங்கிக் கொள்ளலாம். இந்து மதத்திற்கு சைவம், வைஷ்ணவம், சாக்தேயம், காணபத்யம், கௌமாரம், சௌரம் என்று பல பிரிவுகளுண்டு. எல்லாவற்றிற்கும் வேதம், பிரமாணம் ஒவ்வொரு பிரிவுகளுக்கும் வெவ்வேறு ஆகமங்கள் இருக்கின்றன. எந்த எந்தத் தெய்வத்தை எப்படி பிரதிஷ்டை பண்ணி எவ்விதம் பூஜை வழிபாடுகள் செய்ய வேண்டும் என்பதை ஆகமங்கள் கூறும். ஆகமத்திற்கு சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு பிரிவுகள் இருக்கின்றன. ஒருவன் எப்படி வழிபட வேண்டும் என்பதை சரியை விளக்கும். ஆலய அமைப்பு ஆலய கிரியாஷேசம் என்பன கிரியை என்ற பாகத்தில் உட்படும். யோக தியானத்தால் இறைவனை அடையும் உபாயங்களைக் கூறும். ஞானம் இறை அனுபூதியை விளக்கும். யோகம் தவங்களுக்கு வாய்ப்பில்லாத சாதாரண மக்களும் திருவருளால் உலக செமங்களை அனுபவித்து இறையடி சேர்ந்து ஜென்மம் ஒழிக்க ஆலய வழிபாடு ஒரு உபாயமாகின்றது. ஆலயம் சென்றவர் ஆணவமறந்தார்.முறைப்படி ஆலய தரிசனம் செய்து வேண்டி நின்றால் வேண்டுவார்க்கு வேண்டுவன கிடைக்கும்.

சீரிய பண்பாடுடைய இனம் அல்லது சமுதாயம் ஜீவி களையுடன் நீடூழி வாழும். தனிமனிதனுக்கும் இது பொருந்தும். உயிரையும் உடலையும் ஈஸ்வரார்ப்பண மாய்ச் செய்து உயிரினங்களின் மேன்மைக்கும் சுகத்திற் குமாகத் தனது வாழ்வைத் தியாகம் செய்து வாழ்வதே மேம்பட்ட பண்பாடுடைய வாழ்வு. தங்களிடமிருக்கும் விலங்கு நீர்மையைப் போக்கி தெய்வத் தன்மை பெற முயற்சிக்கும் அளவுக்கு சுயநல விருப் பொழிந்து பரோபகார சிந்தை மேலிடும். பரோபகார சிந்தனை உணர்ச்சியிலூறி செயலில் மிளிருமாகில் பண்பாடற்ற நாஸ்தீக பொதுவுடைமை வாத மொழிந்து தனி மனித சுதந்திரத்தை மதித்து மெய் நெறி தழுவிய ஒரு பொது வுடமைத் தத்துவம் மக்கள் உள்ளத்தில் உதயமாகும். பலாத்காரமில்லாமல் தனியுரிமை உடைந்து பொது வுடைமை நிலைக்கும். ஒவ்வொருவனும் நித்தமும் ஆலயம் சென்று இறை வழிபாட்டை நிகழ்த்தித் தன்னை ஈச்வரார்ப்பணம் செய்து தன்தன் கடமைகளைப் பரோப கார சிந்தையுடன் செய்து வருவாராகில் ஆத்மா பூரணத்துவம் அடையும். மெய்நெறி வளர்ந்த நாடு செழிக்கும். பலதர வெறிகள் ஓழிந்து சாந்தி நிலவும்.

திருக்கோணேஸ்வரத்தில் கோயில் கொண்டருளி யிருக்கும் எம்பெருமானருளால் அனைவரும் சிவயோக சித்தி எய்தி ஆத்மானந்தம் பெறுவீர்களாக.

ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி.

*குறிப்பு:- ஆலய கருமங்கள் அனைத்தையும் மொத்தத் தில் பூதசுத்தி அந்தரசுத்தி என்று இரண்டாகப் பிரிக்கலாம். கிரியைகள் அனைத்தும் இந்த இரண்டு விதமான தத்துவத்தின் அடிப்படையிலுமே விதிக்கப் பட்டிருக்கின்றன. பல காரணங்களாலும் பஞ்ச பூதங்களின் நஞ்சு கலந்து மக்கள் கொடிய பிணி நோய்களால் பீடிக்கப் பட்டுக் கஷ்ட்டப் படுவதுண்டு. அவ்விதம் நேராமல் ஆலயங்களிற் செய்யும் மகாயாகாதிகளால் பஞ்ச பூதத்தில் கலந்திருக்கும் நஞ்சுகளை அடிக்கடி சுத்தி செய்வதே பூத சுத்தி எனப் படும். பஞ்ச பூதங்களைச் சுத்திகரிக்கும் அதி தீவிர சக்தி கருமங்களுக்கு உண்டு. இன்று பலவித அணுச் சோதனையால் கதிரியக்கம் பரந்து அகாச வெளிக ளெல்லாம் நஞ்சு கலந்து அச்சமும் பயமும் கொண்டி ருக்கும் தற்காலத்தில் ஆலயங்கள் யாகாதி கருமங்களை அடிக்கடி செய்து வருவது மனிதர்களுக்கும் பிராணிகளுக்கும், தேக, தேகிகளுக்கும் மிகுந்த நலனைக் கொடுக்கும்.

பிரார்த்தனை வழிபாடு முதலியனவே அந்தர சுத்தி எனப்படும். அதாவது மனதின் ஆணவ மலங்களைப் போக்கி ஆத்மத் தெளிவைக் கொடுப்பதே. சுருங்கக் கூறின் மனிதர்களுடைய அக, புற வாழ்வின் மேன்மைக்கு அந்தர சுத்தி பூத சுத்தி செய்ய வேண்டியது இன்றியமையாததாகும்.

"ஆலயம்" முற்றும்.

No comments: