Wednesday, 6 December 2006

பாரதி


தேடிச் சோறு நிதம் தின்று - பல

சின்னஞ்சிறு கதைகள் பேசி

வாடித் துன்பமிக உழன்று - பிறர்

வாடப் பல செயல்கள் செய்து

நரை கூடிக் கிழப்பருவம் யெய்தி

கொடுங் கூற்றுக்கிரை எனப் பின்

மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல

நானும் இங்கு வீழ்வேன் என்று நினைத்தாயோ


- மகா கவி சுப்ரமணிய பாரதி

நண்பா


என்பால் கொண்ட அன்பால்
முன்பால் வந்த நண்பா
உன்பால் கண்ட அன்பால்
என்பால் இந்த வென்பா.

வெண்பா ஒரு வேம்பாய்
காண்பார் இந்த மண்மேல்
என்பா தரும் தெம்பால்
மகிழ்வார் இந்த மண்பால்

மண்பால் பலர் பிறப்பார்
பிறப்பால் சிலர் இணைவார்
இணைவார் சில துணையார்
துணையால் சிலர் பிரிவார்

பிரிவால் வரும் துயரம்
பரிவால் வரும் உறவு
தெரிவார் சிலர் உணர்வால்
தெளிவார் சிலர் உயர்வார்

உயர்வார் மனம் உயரார்
உயிரால் தினம் உழல்வார்
உழல்வார் இவ் உலகில்
உதவார் எவ் உயிர்க்கும்

உயிர்க்கும் சில நினைவு
உயிர்ப்பில் சிதைந் தழியும்
வியக்கும் சில விளைவு
மயக்கும் இவ் உலகை

உலகை மனம் நினைக்கும்
உவகை கணம் பிறக்கும்
முதுமை பனி பூக்கும்
தனிமை எனை வாட்டும்

வாட்டும் இந்த உலகில்
வாட்டம் எந்த நாளும்
கேட்டும் என்ன நண்பா
வாட்டம் ஏன் என்பால்.

What a Wonderful Thing is a Mother

The more I experience life
the more I realize
That a mother as great as you
is really very rare.

-Andrew Harding Allen

The mother is every thing-
she is our consolation in
sorrow, uor hope in misery,
and our strength in weakness.
She is the source of love,
mercy, sympathy, and
forgiveness.
-Kahlil Gibran

Tuesday, 5 December 2006

சுவாமி கெங்காதரானந்தாஜி



செங்கதி ரொளிபோ லாடை செஞ்சுட ரொளிரும் மேனி
பொங்கிடும் கருணை வெள்ளம் போக்கிடுந் துயர மெல்லாம்
இங்கிவ னருளைப் பெறநாம் எத்தனை தவங்கள் செய்தோம்
சங்கொலி யலைசூழ் மலையெம் கோணைமா நகருள்ளானே.

அன்னை ஞானாம்பிகை 98வது ஜயந்தி

இன்று 06-12-2006 எமதன்னையின் 98வது பிறந்த தினம். அவர்கள் 28-10-1965 இல் எமைவிட்டுப் பிரிந்த போது அன்னாரின் நினைவாஞ்சலி மலருக்கு நான் எழுதிய கவிதைகளில் இரண்டு இன்னும் என் நெஞ்சை விட்டு அகலாது நிலைத்து நிற்கிறது. அவற்றை இங்கு நான் பதிவு செய்ய விரும்புகிறேன். அப்போது நான் பதினாறு வயதிலும் ஒரு பாலகன்.




ஈன்றதாய் எனக்கின்றில்லை நாளை எனைச்
சான்றோன் எனக்கேட்க வருவளோ - இனியார்தமக்கு
தோன்றும் பேரவலம் துடைத்து நின்று
சான்றோன் எனச் சார்தல்.

அருவமாய் உருவங் கொண்டு
அன்னையின் உயிருங் கொண்டாய்
அக்கினி உருவங் கொண்டு
அன்னவள் உடலுங் கொண்டாய்
தருமணி கடலு மானாய்
தாயவள் நீறு கொண்டாய்
பெருமுகில் உருவமாகப் பின்னவள்
மறைந்து கொண்டாள்.

Friday, 1 December 2006

திருகோணமலை நமச்சிவாயப்பதிகம்




கோண மாமலை கோயிலாய் உமை
பாகனே உனைப் பாடுவேன்
கான மாமழை காதிலோதிடும் கடலும்
சூழ் நற் பதியினாய்
ஆன மாமறை ஆகமங்களும் அருளும்
பேர் உறை பொருளினாய்
கோணேசா உனை நான் மறக்கினும்
சொல்லும் நா நமசிவாயவே.

வான் உலாவரும் வானவர் தொழு
தேற்றும் சீர்திருக் கோணகா
தேன் ஊறுதமிழ் தேர்ந்த சொல்லினால்
தேனீயா யானுமா கினேன்
பூவெலாம் புகுந் தேகினேன் நின்
புதுமலர் பதம் புகும்வரை
கோணேசா உனை நான் மறக்கினும்
சொல்லும் நா நமசிவாயவே.

மான் உலாவரும் மாமலை தனில்
மாதுமை ஒரு பாகனாய்
தான் உலாவருங் கோலங் காட்டியே
தடுத்து நீஎனை ஆட்கொண்டாய்
யாது நானுரை செப்பினும் அது
உன்புகழ் சொல்ல ஒப்புமோ
கோணேசா உனை நான் மறக்கினும்
சொல்லும் நா நமசிவாயவே.

மாலவன் அயன் இந்திரன் பணிந்
தேற்றி டுந்திரு கோணகா
காலனும் பணிந் தோடுவான் உன்
கடிதென வரு முனிவினால்
பாலனும் பணிந் தேற்றினான் திருப்
பாலமு துண்ட வாயினால்
கோணேசா உனை நான் மறக்கினும்
சொல்லும் நா நமசிவாயவே.

மாசிலா மதி மாலை சூடியே
சந்திர சேகர னானவா
ஞானமா ம்பிகை தன்னையே ஓர்
பாகமாய் புணர்ந் தேற்றவா
வானமா ம்பதி வாழுந் தேவர்கள்
வாழ்த்துரை செய் நாயகா
கோணேசா உனை நான் மறக்கினும்
சொல்லும் நா நமசிவாயவே.

கோவிலும் குளக்கோட்டமும் பணி
செய்தவர் குலம் வாழவே
நாட்டமுமிக நண்ணினார் குலக்
கோட்டனும் உன் கோவிற்கே
மாற்றங் கள்பல வாகினும் என்றும்
மாறாத மீன்பொறி வாசகம்
கோணேசா உனை நான் மறக்கினும்
சொல்லும் நா நமசிவாயவே.

கடிந் துனைவரு காழ்ப்புணர் விழி
காட்சியும் போய் வருந்திட
பரிந்தவர் விழிப் பார்வையும் பெற
கண் தளைத்தவூர் கந்தளாய்
விரிந் துயர்வங்கக் கடலலை வந்து
வாருங் கரையுடை நாதனே
கோணேசா உனை நான் மறக்கினும்
சொல்லும் நா நமசிவாயவே.

எண்திசை யினில் எல்லைக் காளிகள்
ஏற்றுந் சீர்திருக் கோணகா
ஏழிசை யினில் உன்னைப் பாடிட
ஏற்றம் பெற்றதோ ராவணன்
மண்னடி யினில் மாண்டி டாதுயிர்
மாவிரல் தனை மாற்றினாய்
கோணேசா உனை நான் மறக்கினும்
சொல்லும் நா நமசிவாயவே.

தொழும் பினால்பல ஊர்கள் பேர்களும்
தோன்று மாம்நற் பதியினாய்
கருவில் ராவணன் கொண்ட கன்னிகை
பெயரில் வெண்நீ ரூற்றுடை
மருவி யோடிடும் மாவலி நதி
மாகடல் படு துறையினாய்
கோணேசா உனை நான் மறக்கினும்
சொல்லும் நா நமசிவாயவே.

மாதுமை யொரு பகனாய் விடை
ஏறியே வரு கோணேசா
நாளுமே உனைப் பாடுவார் மனம்
நாடியே வரு நாயகா
நானுனை நினைந் தேற்றிட அருள்
நல்கினாய் என் நாதனே
கோணேசா உனை நான் மறக்கினும்
சொல்லும் நா நமசிவாயவே.


விரும்பி னாரவர் வினைகள் தீரவே
வரும்பதி கம்பத்தும் பாடிய
அருளும் ஜோதியாய் ஆனமதியினன்
பெருகு கங்கை பருகுனன்
பொருளும் போகமும் போற்றுவா ருயிர்
போகுங்கா லம் மருளுவார்
அருளுவா ரவரின்னல் கள்நீங்கிட
கோணமா மலை அமர்ந்தவா.