Sunday, 6 September 2015

ஜயநி என் காதலி

தன்னை நினைத்தவனை
தென்னை மறப்பதில்லை 
உன்னை நினைத்தவனை 
உதறிப் போனதெங்கே? -ஜோதி.










நடேசர் கொம்மி

நடேசர் கொம்மி

பல்லவி

கொம்மியடிப்பெணகள் - கொம்மியடி - இரு
கொங்கை குலுங்கவே கொம்மியடி.

அநுபல்லவி

நம்மையாளும்பொன் னம்பலவாணனை 
நாடிக்கொம்மியடியுங்கடி பதம் - பாடிக்கொம்மிடியுங்கடி

சரணம் 

காமமகற்றிய தூயனடி - சிவ
காமசவுந்தரி நேயனடி

மாமறையோதுசெவ்வாயனடி - மணி
மன்றெனுஞாநவாகாயனடி.

ஆநந்தத்தாண்டவராஜனடி - நமை
யாட்கொண்டருளியதேஜனடி

வானந்தமாமலைமங்கைமகிழ் - வடி
வாளனடி மணவாளனடி.

கல்லைகனிவிக்குஞ்சித்தனடி - முடி
கங்கைக்கருளியகர்த்தனடி

தில்லைச்சிதம்பரசித்தனடி - தேவ
சிங்கமடியுயர் தங்கமடி.

பெண்ணொருபால்வைத்தமத்தனடி - சிறு
பிள்ளைக்கறிகொண்டபித்தனடி

நண்ணிநமக்கருளத்தனடி - மிக
நல்லனடி எல்லாம் வல்லனடி.

அம்பலத்தாடல்செயையனடி - யன்ப
ரன்புக்கெளி தருமெய்யனடி

தும்பைமுடிக்கணி தூயனடி - சுயஞ்
சோதியடி பரஞ்சோதியடி.

இயற்றியது: அம்மணியம்மாள் 1901

Sunday, 17 May 2015

இனிய துணையை நினைந்து நினைந்து...

சிலசில ஆண்டுகள் முன்னம் 
பலரும் போற்றும் வண்ணம்
சேர்ந்து வாழ்ந்தது ரெண்டன்னம்.

காலையில் அலைகள் மேலோடி
களிப்புடன் நீந்திடும் இரைதேடி
மாலையிலே இருள்வேளையிலே
அவை வந்திடும் தங்கள் இடம்நாடி.

அன்னம் பொரித்தது ஒரு குஞ்சு
ஆனந்த வாழ்வின் இளம் பிஞ்சு
ஆசையாக வளர்த்தது நாளும்
ஆணும் பெண்ணும் கொஞ்சியே!

இப்படி இருந்திடும் நாளையிலே
எழுந்து பெரிய கொடும் புயலே
அற்புதம் போலே சொற்பன வாழ்வு 
தூள் தூளாகி மறைந்ததுவே!

தனியே பிரிந்த ஓரன்னம் 
தஞ்சமின்றி அலைகிறதே
இனியதுணையை நினைந்துநினைந்து
ஏங்கி கண்ணீர் விடுகிறதே!








Monday, 9 March 2015

மகத்துவம் மிக்க மஹாகும்பாபிஷேகம்







மகத்துவம் மிக்க மஹாகும்பாபிஷேகம்
கும்பாபிஷேக விழா என்பது நினைக்கும் போதெல்லாம் இன்பம் தரவல்லது. கும்பாபிஷேகத்தை அதன் விளக்கங்களை உள்வாங்கி தரிசிப்பது மேலும் இன்பம் தரவல்லது. விரிவான கிரியைகளைக் கொண்டும் பல்வேறு ஆழமான தத்துவங்களின் அடிப்படையிலும் ஆற்றப்பெறும் கும்பாபிஷேகக் கிரியைகளில் மிக ஈடுபாட்டுடன் இணைந்து பணியாற்ற விரும்பும் ஒவ்வொருவரும் ஓரளவேனும் அக்கிரியை முறைகளை அறிந்திருப்பது அவசியம். ஆகவே, மிகச் சுருக்கமாக கும்பாபிஷேகக் கிரியைகளை எம் அறிவிற்கேற்ப விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.
ஆகாயவடிவில் எங்கும் பரந்திருக்கும் இறைவன், வாயுவாகவும் அக்கினியாகவும் மிளிர்கின்றான். நீராகவும் மண்ணாகவும் அவன் காட்சி கொடுக்கிறான். எனினும் அவனை மண் உருவில் நாம் உணர்தல் இலகுவாக இருப்பதால் மண்ணோடு தொடர்புற்று இருப்பதாகிய செம்பு, பொன் முதலிய உலோகங்களிலும் கல்லிலும் இறைவனை ஆவாஹித்து வழிபடுவதைக் காணலாம். தைத்திரிய உபநிஷத் பஞ்சபூத உருவாக்கம் பற்றி “ஆத்மன ஆகாச’: ஸம்பூ⁴த:, ஆகாசா’த்³ வாயு:, வாயோரக்³நி:, அக்³நேராப: அத்³ப்⁴ய: ப்ருத்²வீ”” என்று அழகாகச் சொல்கிறது. கும்பாபிஷேகக் கிரியைகளிலும் இப்படியான முறைப்படுத்தப்பெற்ற ஒழுங்கை அவதானிக்கலாம். ஆகாய வெளியில் இருந்து காற்றின் துணையுடன் சூர்யாக்னி எடுக்கப்பெற்று, கும்பாபிஷேக யாகசாலையில் அக்னி ஆவாஹனம் செய்யப்பெற்று, ‘கற்றாங்கெரியோம்பிக் கலியை வாராமே செற்றார் வாழ் தில்லை’ என்று ஞானசம்பந்தப்பெருமான் சொல்வது போல் உரிய வேதாகமப் பிரகாரம் எரியோம்பும் வழிபாடு நடக்கிறது. அங்கிருந்து கும்பத்தில் உள்ள புனிதநீரிலும் இறைவனை உருவேற்றி செம்மைசால் ஆராதனைகள் நடைபெற்றுப் பின்அங்கிருந்து இறைமூர்த்தத்துடன் ‘ஸ்பரிஸாஹூதி’ என்ற உன்னதமான கிரியையூடாகவும் கும்ப அபிஷேகம் மூலமாகவும் விக்கிரகத்தில் இறையருட் பிரவாகம் ஏற்படுத்தப் பெறுகின்றது.
அங்கிங்கெனாதபடி எங்கும் நிறை பரமானந்தமாகிய பரம்பொருளை அர்ச்சக ஸ்வாமியானவர் மந்திரம், பாவனை, கிரியைகள் மூலம் திருவுருவில் நிலைபெற்றிருந்து சர்வான்மாக்களுக்கும் அருள்புரியும் வண்ணம் செய்தலே மஹாகும்பாபிஷேகம். இறைவனை ஆவாஹிக்கும் திருவுருவை நமது தேசத்தில் அநேகமாக, நிலம், நீர், நெருப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய பஞ்சபூத சேர்க்கையைத் தெளிவுறக் காட்டும் கருங்கல்லிலும் பஞ்சபூதங்களையும் பிரதியீடு செய்யும் பஞ்சலோகத்திலும் ஆக்குவது வழக்கமாக இருப்பதனை அவதானிக்கலாம். முக்கியமாக பேரரசர்கள் கட்டிய பெருங்கோயில்களில் ஆலயக் கருவறை விமானத்தையே பொன் வேய்ந்த போதும் மூலமூர்த்தியை கற்சிலையாகவே அமைத்துள்ளமையும் ஈண்டு சிந்திக்கத்தக்கது.
‘அர்ச்சகஸ்ய ப்ரபா⁴வேன சி’லா ப⁴வதி ச’ங்கர:’- என்று இதனையே காட்டுவர். வெறும் சிலையானது அர்ச்சகரின் மந்திர பாவனை மற்றும் கிரியைகளாலேயே சிவமாக… சங்கரனாக (இறைவனாக) மாற்றம் பெறுகிறது. எனினும் விரிவான கிரியைகளுடன் கூடிய கும்பாபிஷேகத்தை ஆற்றும் போது பக்திக்கு முதன்மை தரப்பட வேண்டியதும் அவசியம். பக்தியற்ற வெறும் கிரியைகள் உயிரற்ற உடல் போன்றவை. ஆகவே, கும்பாபிஷேகத்தில் ஈடுபடக்கூடிய குருமார்கள், ஆலய பரிபாலன சபையினர், கோயில்சார் அடியவர்கள், கும்பாபிஷேக விழா ஏற்பாட்டுக் குழுவினர், யாவரும் பக்திமயமாக இவ்வழிபாட்டில் ஈடுபட வேண்டியது அவசியமாகும்.
நால்வகைப் பேறும் அருளவல்ல கும்பாபிஷேகம்
தர்ம, அர்த்த, காம, மோக்ஷம் என்ற அறம், பொருள், இன்பம், வீடு எனும் நால்வகைப் பேறுகளையும் அருளவல்லது கும்பாபிஷேகம். சிவாகமங்கள் கும்பாபிஷேகத்தையும் நான்கு வகையாக வகைப்படுத்திப் பேசும். ஆவர்த்தனம், அநாவர்த்தனம், புனராவார்த்தனம், அந்தரிதம் என்பனவே அவை.
ஆலயம் இல்லாத இடத்தில் புதிதாக ஓர் ஆலயம் அமைத்து, புதிதாக மூர்த்தியைப் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்வது அநாவர்த்தனம். முன்பிருந்த ஆலயம் முற்றாக அழிந்து விட்டால் அவ்விடத்தில் மீள ஆலயம் செய்து பிரதிஷ்டை செய்வது ஆவர்த்தனம். ஆலயத்தினுள் கொலை, கொள்ளை முதலியன நடைபெற்றால் அங்கே மூர்த்திகரம் குன்றாமலிருக்க, பிராயச்சித்தமாகச் செய்யப்பெறுவது அந்தரிதம். இத்தகு கும்பாபிஷேகங்கள் ‘பிராயச்சித்த கும்பாபிஷேகம்’ என்ற பெயரிலே கடந்த கால போரனர்த்தங்களின் போது இலங்கையில் அடிக்கடி நடைபெற்று வந்துள்ளன. பூஜை, உத்ஸவங்கள் நடைபெறக் கூடிய கோயிலில் திருத்த வேலைகளின் பொருட்டு பாலஸ்தாபனம் செய்து செய்யப்பெறும் கும்பாபிஷேகம் சம்பிரோக்ஷண புனராவர்த்தனப் ப்ரதிஷ்டா மஹாகும்பாபிஷேகம். பொதுவாக இத்தகு கும்பாபிஷேகங்கள் நடைபெறுவதையே பலரும் அறிந்திருக்கக் கூடும்.
பூரணமான மஹாகும்பாபிஷேகம் ஐம்பத்தைந்து கிரியைகளைக் கொண்டது என்று ஆகமங்கள் விவரிக்கின்றன. இத்தகு பாரிய முயற்சியாகிய கும்பாபிஷேகம் பல ஆண்டுகளுக்கு (பொதுவாக பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை) நடைபெறுவதால் அதனைப் பார்ப்பது, கலந்து கொள்வது, பங்கேற்று சேவை செய்வது பெரும் புண்ணியமாகும்.
கும்பாபிஷேகத்தை பெரியளவில் பாதுகாப்பு, பிரசார, சுகாதார ஏற்பாடுகளுடனும் செய்வது நல்லது. ஆயினும் இவை கும்பாபிஷேகக் கிரியைகளை குழப்பாததாக இருக்க வேண்டும். இப்படிப்பட்ட விழாக்களுக்கு வருகை தருகிற அரசியற்பிரமுகர்கள் தெய்வகாரியத்திற்கு இடையூறின்றி தரிசனம் செய்து செல்ல முயலவேண்டும். கும்பாபிஷேக நிகழ்வுகளை வர்ணனை செய்வதும் கும்பாபிஷேக மலர் வெளியீடு செய்வதும் கூட வழக்கில் இருந்து வருகிறது. 
புனரமைப்பின் போது செய்யப்பெறும் பாலஸ்தாபனம்
சைவாகமக் கிரியைகளை காமிகம், காரணம், போன்ற ஆகமங்களின் படி செய்வது வழக்கம். ஆகமக் கிரியைகளைச் சுருக்கி இன்றைய கிரியைநெறி முறைகளை பத்ததிகளாக எழுதியோர் பலர். காஞ்சி காமாக்ஷியம்பாள் ஆலய வழிபாட்டு முறைகள் ‘துர்வாச கல்பம்’ என்ற பத்ததிப்படி ஆற்றப் பெறுகின்றதாம். ஸ்ரீ வைஷ்ணவ ஸ்தலங்களில் வைகானஸ, பாஞ்சராத்திர ஆகமங்களின்படி சம்பிரோக்ஷண விழா நடைபெறும். இது போலவே சிவாகம வழி நிற்கும் பதினெட்டுப் பத்ததிகள் சொல்லப்படுகின்றன. ஆயினும் இவற்றில் பலவற்றையும் இன்று நாம் காணமுடியாதுள்ளது. கால வெள்ளமும் போற்றுவாரின்மையும் இவற்றைச் சிதைத்திருக்க வெண்டும். எனினும் இன்று தமிழகம் மற்றும் இலங்கையிலுள்ள சிவாலயங்களில் ஸோமசம்பு சிவாச்சார்யார் பத்ததி, அகோர சிவாச்சார்யார் பத்ததி, ஸத்யோஜாத சிவாச்சார்யார் பத்ததி என்பனவே வழக்கில் உள்ளன.
பத்ததிகளுக்கு இடையில் சிற்சில பேதங்கள் இருப்பினும் யாவும் ஆகமங்களின் வழி எழுதப்பெற்றவையே.. இதே வேளை ஆகமப் பிரதிஷ்டை போலவே வைதீகப் பிரதிஷ்டையும் வழக்கில் உள்ளது. கேரளாவில் இவ்வகை வைதீகப் பிரதிஷ்டையே அதிகளவில் பின்பற்றப்பெறுகிறது. ஆனால் இக்கட்டுரை ஆகமப் பிரதிஷ்டைசார் கும்பாபிஷேகம் பற்றியே எழுதப்பெறுவது குறிப்பிடத்தக்கது.
தமிழில் ‘இளங்கோயில்’ என்று போற்றப் பெறுவதும் ‘தருணாலயங்கள்’ என்று சொல்லப் பெறுவதும் பாலாலயங்கள் என்று கூறப்படுகின்றன. கும்பாபிஷேகத்திற்கு முன்னர் கோயில் திருப்பணி செய்யப்பெறும் போது சிறிய பாலாலயம் ஒன்று அமைக்கப்பெற்று மூலவரின் நாமம் தாங்கிய பாலமூர்த்தி பிரதிஷ்டை செய்யப்பெறுவார். சிற்சில இடங்களில் மூலமூர்த்தியையே பெயர்த்து திருப்பணி வேலை நிறைவுறும் வரையில் பாலாலயத்தில் பிரதிஷ்டை பண்ணி வைத்திருப்பதும் வழக்கம்.அங்கே அப்படிப் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்வதை ‘பாலஸ்தாபன கும்பாபிஷேகம்’ என்று கூறுவர்.
பாலஸ்தாபனம் செய்யப்பெறும்போது மூல பிம்பத்திலிருந்து கும்பத்தில் மூர்த்தியைப் பிரதிஷ்டை செய்து, பின் கும்பத்திலிருந்து பாலபிம்பத்தில் ஸ்வாமி பிரதிஷ்டை செய்யப்பெறுவார். இதையே ‘பாலஸ்தாபன கும்பாபிஷேகம்’ என்பர். பாலஸ்தாபன காலத்திற்கு ஏற்ப கத்தி, கண்ணாடி, சித்திரம், பாதுகை, ஆயுதம், மரச்சிலை, கல்லுருவம் ஆகியவற்றை பாலபிம்பமாகப் பயன்படுத்திப் போற்றி வழிபடுவர். நினைத்தவுடன் பாலஸ்தாபன கும்பாபிஷேகம் செய்து விட்டு பின்னர் திருப்பணிகள் நடைபெறத் தாமதிக்கின்றனவே என்று கவலை கொள்ளாது முறைப்படி இறைவனிடம் அநுக்ஞை பெற்று திருப்பணிக்கான சகல ஆயத்தங்களையும் செய்துகொண்டு, கோயில் திருப்பணிக்காக ஒரு குழுவையும் நியமித்து, அதனை செவ்வனே இயங்க வழிசெய்து இத்தனையாம் நாளில் கும்பாபிஷேகம் செய்வது (நாலு மாதத்தில் கும்பாபிஷேகம் செய்வது) என்று முடிவு செய்துகொண்டு பாலஸ்தாபன கும்பாபிஷேகம் செய்தால், விரைவாகத் திட்டமிட்டு பணிகளை நடாத்தி கும்பாபிஷேகம் செய்ய வாய்ப்பாயிருக்கும்.
நான் அறிந்த வரையில் சில முக்கிய ஆலயங்களில் கும்பாபிஷேக நாளை நிர்ணயம் செய்த பின்னரே பாலஸ்தாபனம் செய்கின்றனர். பாலஸ்தாபனக் கும்பாபிஷேகத்தை ஸரராசியிலே, தேய்பிறையிலே செய்கிற வழக்கம் இலங்கையில் உள்ளது. ஏனெனில் ஸ்வாமி ஸ்திரமாக பாலாலயத்தில் இருக்காமல் விரைவில் பணிகள் நடந்து கருவறையிலே எழுந்தருள வேண்டும் என்பதற்காகவாம்.
கும்பாபிஷேக ஆரம்பக் கிரியைகள்
கும்பாபிஷேகத்திற்கு முன்னேற்பாடாக முகூர்த்த நிர்ணயம், ஆசார்ய வரணம் ஆகியவற்றைச் செய்ய வேண்டும். முகூர்த்த நிர்ணயம் என்பது கும்பாபிஷேக முகூர்த்தத்தை நிர்ணயிப்பதாகும். மிகவும் கவனமாக ஆராய்ந்து, இத்துறையில் மிக்க அனுபவம் கொண்டவராயும் இறை பக்தி மிக்கவராயும் உள்ள ஜோதிஷர் மூலம் வளர்பிறையினையுடையதாய் இதனை ஆற்ற வேண்டும். இதே போலவே ஆசார்ய வரணம் என்பது கும்பாபிஷேக பிரதான ஆச்சார்யாரைத் தெரிவுசெய்து (வரித்து) அழைத்து வருதலாகும். ஒழுக்கம் மிக்க வாழ்வு கொண்டவராயும் வேதாகம அறிவு மிக்கவராயும் ஆச்சார்ய இலக்கணம் மிக்கவராயும் உள்ள குருவானவரைத் தெரிவுசெய்து, அவரை வணங்கி வேண்டி அழைத்து வர வேண்டும்.
குருக்கள் என்பவர் இறைப்பணியாற்றுபவர். அவருக்குரிய மரியாதையை வழங்க வேண்டியது இந்துக்களின் கடன். பிற சமயிகள் தமது குருமார்களுக்குக் கொடுக்கும் மரியாதையை நம்மவர்கள் கிருகஸ்தர்களாக உள்ள அர்ச்சகர்களுக்குக் கொடுப்பதில்லை என்று பலரும் வருந்துவர். இதற்குப் பல காரணங்கள் சொல்லிக் கொள்கின்றனர். காரணங்கள் என்றும் எதற்கும் இருக்கும். ஆனால் நம் தர்மத்தை செவ்வனே வாழச் செய்ய சிறந்த குருமார்களின் உருவாக்கத்திற்கு பணி செய்வது நம் ஒவ்வொருவரினதும் கடமையாகும். இறைவனே அர்ச்சக வடிவு கொண்டு பூஜை பண்ணியதாக கூறும் பல கதைகள் உள்ளதும் ஈண்டு சிந்திக்கத்தக்கது.
அடுத்து முதற் கிரியையாக, புண்ணியாகம் செய்யப் பெற்று தூய்மைப் படுத்தும் காரியம் இடம்பெறும். தொடர்ந்து கும்பாபிஷேக விழாவிற்கு வருகை தந்துள்ள பிராம்மணர்களிடமும் விக்கினங்களை அழித்து அருளும் விநாயகர், மூலமூர்த்தி, உத்ஸவமூர்த்திகள், அஸ்த்திரதேவர் (ஸ்வாமியின் ப்ரதிநிதியான ஆயுதம்) ஆகியவர்களிடம் வழிபட்டு, கும்பாபிஷேகம் செய்ய ஆதரவும் ஆசியும் அனுமதியும் அருளும் தந்தருளுமாறு பிரார்த்திப்பர். இதனை ‘அனுஜ்ஞை’ என்பர்.
அடுத்து, கும்பாபிஷேக திரவியங்களைச் சுத்திசெய்தல், அவற்றை பாகம் செய்தல் என்பவை நடைபெறும். ஆகமங்கள் கும்பாபிஷேகத் திரவியங்களைப் பதினொரு பங்காக வகுக்க வேண்டும் என்று சொல்வதால் அதனைக் குறிக்கப் பதினொரு நாணயங்களை வைத்து குருக்கள் வகுப்பார்.
எனினும் ஆகமங்கள் மற்றும் பத்ததிகள் கூறுவது போல திரவிய விபாகம் நடைமுறையில் எங்குமே செய்வதுமில்லை. செய்யவும் முடியாது. சம்பிரதாயக் கிரியை நடக்கிறதே அன்றி கால மாற்றமும் செலவுப் பெருக்கமும் உண்மையில் ஆகம முறை திரவிய விபாகத்திற்கு இடந்தருவதாக இல்லை. இதனையடுத்து ஆகமம் கட்டாயப்படுத்தாத இடத்தும் கட்டாயம் செய்ய வேண்டிய கிரியை கணபதி ஹோமம். அனேகமாக ஐந்து குருமார்கள் இணைந்து விநாயகப்பெருமானுக்காக ஹோம வழிபாட்டை ஆற்றுவர். விநாயகர் அகவல், காரியசித்தி மாலை, விநாயகர் அநுபூதி போன்ற தமிழ்ப் பாசுரங்களையும் இவ்வமயம் பாராயணம் செய்தல் சிறப்பு. அடுத்து கிராமசாந்தி, பிரவேசபலி ஆகியன நடைபெறும்.
கிராமசாந்தி என்பது பைரவப்பெருமானை முன்னிட்டுக் கொண்டு காமம், குரோதம் முதலிய அகப் பகைகளை அசுரர், ராட்சசர், பூதர், பிசாசர் என்று உருவகித்து ஆலயமுள்ள கிராமத்திலுள்ள குற்றங்களை நீக்கும் முகமாக நீற்றுப்பூசணிக்காயை வெட்டி பலி கொடுத்து வழிபடுவது இதுவாகும். இலங்கையில் சில ஆலயங்களில் இன்றும் கிராமசாந்தியின் போது பலி மேளம் முழங்க, சேவலின் பூவை வெட்டி ஹோமம் செய்யும் வழக்கம் இருக்கிறது.
பிரவேசபலி என்பதும் கிராமசாந்தி போன்ற கிரியையே. ஆலயத்தைச் சுற்றி எண்திசைகளிலும் இன்னும் பிரம்மஸ்தானம் என்ற இடத்திலுமாக ஒன்பது இடங்களில் (நவசந்திகளில்) பலி கொடுத்த பூஜை செய்வதாகும். இதே போல ராஷஸர்களை அழிக்கும் ரஷோக்னதேவரை முன்னிறுத்திப் போற்றி ரஷோக்ன ஹோமம் செய்வர்.
சிவாஸ்திரம், அகோராஸ்திரம், பிரத்தியங்கிராஸ்திரம், பாசுபதாஸ்திரம் ஆகிய நாற்பெரும் ஆயுதங்களைப் போற்றிச் செய்வதாக திசாஹோமம் செய்வர். இவ்விழாவில் வாய்ப்புண்டாகிற சமயத்தில் சிறப்பாக கோபூஜை, கஜபூஜை ஆகியவற்றையும் செய்யும் வழக்கம் உள்ளது.
சிறப்பு மிக்க கிரியைகள்
அடுத்து வாஸ்து சாந்தி நடைபெறும். வாஸ்து புருஷன் என்பவர், ஒருவராலும் அழிக்க இயலா ஆற்றல் பெற்றவராகக் கருதப்படுகிறார். அவரை அசையாமல் இருக்குமாறு வேண்டி நாகபந்தனம் செய்து அவர் மீது காயத்திரி ஸாவித்திரி ஸமேத பிரம்மா உள்ளிட்ட ஐம்பத்துமூன்று தேவர்களையும் பிரதிஷ்டித்து பூஜை செய்வதே வாஸ்து சாந்தி. (வாஸ்து புருஷன் அசைந்தால் பூகம்பம் உண்டாகும் என்பர்.) இது எந்த ஒரு நற்கருமத்திற்கும் முன்னதாகச் செய்யப்பெறுகின்றது. ஆக, வாஸ்து புருஷனை பிரபஞ்ச சக்தியாக அதாவது இயற்கையாகக் கருதமுடியும்.
இந்நிகழ்விலும் வாஸ்து ஹோமம் உண்டு. கூஷ்மாண்டம் என்ற நீற்றுப்பூசணிக்காய வெட்டி பலி கொடுப்பர். நான்கு முழ அளவில் வைக்கோலால் (தர்ப்பையால்) ஓர் ஆளுருவம் செய்து, அதில் வாஸ்து புருஷனை ஆவாஹித்து, அவ்வுருவின் தலைப்பாத்தில் ஹோம அக்கினியை எரியூட்டி கோயில் முழுவதும் இழுத்து வருவர். பின்னால் சாந்திகும்ப நீர் தெளிக்கப்பெறும்.
கணபதி ஹோமத்தைப் போலவே சிறப்பிற்குரியது நவக்கிரஹமகம் என்ற நவக்கிரஹ ஹோமம். இதன் போது ஞானசம்பந்தப்பெருமான் அருளிய ‘கோளறு பதிகம்’ பாராயணம் செய்வதும் சிறப்பாக அமையும். இதையடுத்து இறைவனின் மூர்த்தி சாந்நித்தியத்தை வலுவூட்டும் முகமாக பதினொரு மந்திரங்களான சம்ஹிதா மந்திர ஹோமம் மற்றும் மூர்த்தி ஹோமம், சாந்தி ஹோமம் என்பன இடம்பெறும். இக்கும்பங்கள் மூலமூர்த்திக்கு அபிஷேகம் செய்வதும் வழக்கு.
இவற்றினைத் தொடர்ந்து நிகழ்வது ம்ருத்சங்கிரஹணம். இது பற்றிய விரிவான விளக்கத்தை ‘கொடியேற்ற விழா எனும் தெய்வீக நிகழ்வு’ என்ற இத்தளத்திலே வெளியான கட்டுரையிலும் காணலாம். ம்ருத் என்றால் மண். சங்கிரகணம் என்றால் சேகரித்தல். ஏந்த ஒரு நற்காரியத்திற்கும் முன்னோடியாக அங்குரார்ப்பணம் செய்வது வழக்கம். அதற்குத் தேவையான மண்ணை மந்திரபூர்வமாகப் பெற்றுக் கொள்ளலே இக்கிரியையாகும். இதன் போது ‘பூ ஸூக்தம்’ ஓதப்பெறும்.
ம்ருத்சங்கிரஹணம் மூலம் பெறப்பெற்ற மந்திரபூர்வமான மண்ணை தலையிற் சுமந்து வந்து யாகசாலையை அடைந்து அதன் வடமேற்கு மூலையில் கிருத்திகா ரோஹிணி தேவியருடனாய அமிர்தேஸ்வரன் என்ற சந்திர பகவானையும் பன்னிரு சூரியரையும் பூஜித்து எடுத்து வந்த மண்ணை நிரப்பி அதில் ‘ஓஷதி ஸூக்தம்’ ஓதி பசும் பாலில் இடப்பட்டிருந்த நவதானியங்களை மண்ணில் விதைப்பர்.
ம்ருத்சங்கிரஹணம், அங்குரார்ப்பணம் என்பவற்றை அடுத்து ரஷாபந்தனம் இடம்பெறும். கங்கணம் சாற்றுதல் என்றும் காப்புக்கட்டுதல் என்றும் சொல்லப்பெறும் இந்த ரஷாபந்தனத்தில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்கும் குருமார்கள் அனைவரும் தமது வலது கை மணிக்கட்டில் காப்பணிந்து கொள்வர். காப்பணிந்து கொண்ட குருமார்கள் கோயிற் சூழலை விட்டு காப்புக் கழற்றும் வரை (கும்பாபிஷேகம் நிறைவுறும் வரை) செல்லலாகாது. சவரம் செய்தலாகாது. அதே வேளை அவர்களின் உறவுகளுக்குள் ஏற்படும் ஜனன மரண ஆசௌசமும் அவர்களை இக்காலத்தில் தாக்காது.
புதிய மூர்த்திகளுக்குச் செய்யப்பெறும் கிரியைகள்
புதிதாக உருவாக்கி ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பெறவுள்ள மூர்த்திகளுக்கு நயனோன்மீலனம் போன்ற கிரியைகள் இடம்பெறும். அதாவது கண்திறத்தல், ஜலாதிவாசம் (நீருள் வைத்திருத்தல்), தானியாதி வாசம் (தானியத்துள் வைத்திருத்தல்), சயனாரோஹணம் (தூங்கச் செய்தல்), கிராமப் பிரதட்சணம் (ஊரைச் சுற்றி வலம் வரச் செய்தல்) போன்றவற்றைச் செய்வது வழக்கம். 
யாகமும் யாகபூஜைகளும்
யாகசாலையை ஆலய வீதியுள் (மூன்றாம் வீதியிலேனும்) அமைப்பது சிறப்பு. (பாதுகாப்பும் முக்கியம்.) கிழக்கு, ஈசானமூலை, வாயு மூலையில் அமைப்பதும் சிறப்பு. பூமியை ஒரு முழஆழத்திற்கு வெட்டி, புதுமண் பரப்பி, நடுவே ப்ரதான கும்பம் அமையவுள்ள வேதிகையின் கீழே ரத்னங்களிட்டு, மட்டம் செய்து பூசி, நடுவே, வேதிகையில் பத்மாசனம், கூர்மாசனம் ஆகியவற்றை உருவாக்குவதும் சிறப்பு. பிரதான யாகசாலைக்கேனும் பஞ்சாசன வேதிகை அமைப்பது மேலானதாகும். வசதியில்லாத இடங்களில் ஆலயத்திலுள்ள ஸ்வாமி எழுந்தருளும் சிம்மாசனத்தையே வேதிகையில் வைப்பதுமுண்டு.
சிவாகமத்தின் படி ருத்ரசூத்ரக்கிரமம், விஷ்ணு சூத்திரக்கிரமம், பிரம்மசூத்திரக்கிரமம், மநுசூத்திரக்கிரமம், ரவிசூத்திரக்கிரமம் என்று ஐவகையான யாக வடிவமைப்புகள் முக்கியமாக உள்ளன. ருத்ரசூத்ரக்கிரமப்படி அதிஉச்சமான 33 குண்டங்களையுடைய மஹாயாகம் அமைப்பர். மற்றையவற்றின் பிரகாரம் 25, 17, 09, 05 என்ற எண்ணிக்கையிலும் குண்டங்கள் அமையும். யாகசாலைகளுக்கு 100, 64, 36, 16 என்ற வகையில் தூண்கள் அமையும். வாழை, தோரணங்களால் யாகாசலை அலங்கரிக்கப்பெறும். 33 குண்டம் அமைத்துக் கும்பாபிஷேகம் செய்வது சிறப்பு என்ற எண்ணப்பாங்கு இலங்கையில் பரவி வருகிறது. சிறப்புத்தான் எனினும் அதற்குரிய வசதிகள் இல்லாத இடத்து ஒழுங்கற்ற முறையில் அவ்வாறு செய்வதைக் காட்டிலும் பஞ்சகுண்ட பக்ஷம், அல்லது ஏககுண்ட பக்ஷம் என்பவை மூர்த்திகரத்தை அதிகரிக்க சிறப்பாயமையும். குளிக்கப் போய் சேறு பூசலாகாதல்லவா?
பொதுவாக நவகுண்ட பக்ஷமாக கும்பாபிஷேகம் செய்வது வழக்கம். அட்டமூர்த்திகளான ஆகாயம், காற்று, நீர், நிலம், தீ, சூரியன், சந்திரன், ஆத்மாவுடன் மூலமூர்த்தியின் பிரதான குண்டம் ஆக ஒன்பது குண்டங்கள் இதில் அமையும். அநேகமாக பிரதான குண்டத்தை ஈசானத்திற்கும் கிழக்கிற்கும் இடையில் அமைப்பது வழக்கம். வேதிகைக்கு முன் அமைப்பதும் தவறல்ல.
ரக்ஷாபந்தனத்தையடுத்து சூரியனிலிருந்து பூதக்கண்ணாடி மூலம் நெருப்பை பஞ்சில் பெறும் ஸூர்ய காந்தாக்னி ஸங்கிரஹம் இடம்பெறும். இதன்போது பெறப்பெற்ற அக்கினி யாகசாலைக்குக் கொண்டு செல்லப்பெறும். கடஸ்தாபனம் என்ற கிரியை அடுத்து இடம்பெறும்.; வெண்துணியால் வடித்து எடுக்கப்பெறும் கங்கை முதலிய புனித நீர்கள் இதன்போது மந்திரபூர்வமாக பிரதான குடத்தில் சேர்க்கப்பெறும். இதன்பின் கும்பங்கள் அலங்காரம் செய்யப்பெறும். அடுத்து கலாகர்ஷணம் என்ற கிரியை மூலம் மூலபிம்பத்தின் இறைசாந்நித்யம் கும்பத்தில் சேர்க்கப்பெறும். அடுத்து மங்கல வாத்திய கோஷத்துடனும் வேத, திருமுறைப் பாராயணங்களுடன் கும்பங்கள் உரிய யாகசாலைகளுக்கு எடுத்து வரப்பெற்று வேதிகையில் பிரதிஷ்டை செய்யப்பெறும்.இறைவனுக்கு கும்பத்திலும் பிம்பத்திலும் நடக்கும் ஆராதனை
தொடர்ந்து மிக மிக விரிவாக யாகமண்டபபூஜை இடம்பெற்று பிரதான குண்டத்தில் பிரதான ஆச்சார்யரால் சிவாக்னி ஆவாஹனம் செய்யப்பெறும். தொடர்ந்து அக்னி ஸம்ஸ்காரங்களும் மிக மிக விரிவாகப் பலமணிநேரம் தொடர்ச்சியாக நடைபெறுவது வழக்கம். இவ்வமயம் நடைபெறுகிற கிரியைகள் பற்றி சிவாச்சார்யார் (ஸர்வ ஸாதகாச்சார்யார்) ஒருவர் விளக்கவுரையாற்றி அடியார்களை கிரியையுடன் ஒன்றச் செய்வதும் ஓதுவா மூர்த்திகள் தமிழ் வேதபாராயணத்தில் ஈடுபடுவதும் அவசியம். ச்ருக்ச்ருவம் என்ற நெய்க்கரண்டிகளால் ஸம்ஸ்காரம் செய்யப்பெற்ற நெய்ப் பாத்திரத்திலிருந்து அக்னியில் விசேட ஆஹூதிகள் வழங்கப்பெறும்.
அக்னி ஸம்காரங்களில் சில வைபவங்களுக்கு பாலாக்னியைப் பயன்படுத்துவர். சிலவற்றிற்கு யௌவனாக்னி வரை ஸம்ஸ்காரம் செய்வர். ஆயினும் கும்பாபிஷேக விழாவிற்காக ஏற்படுத்தப் பெறும் மஹாயாக அக்னியில் விவாகம் வரையிலான ஸம்ஸ்காரங்கள் நடைபெறும். விருத்தாக்னி வரை பூஜிக்கப்பெறும். தொடர்ந்து பிரதான குண்ட அக்னியைப் பாகம்செய்து அதிலிருந்து பிற அனைத்துக் குண்டங்களிலும் அக்னி இணைப்புச் செய்யப்பெறும். அனேகமாக கும்பாபிஷேகத்திற்கு முதல்நாள் விரிவான முறையில் யாகத்தில் ‘விசேஷ த்ரவிய ஹோமம்’ நடைபெறும்.
பிரதான யாகம் தவிர்ந்த பிற பரிவார மூர்த்திகளின் யாகசாலைகளிலும் இவ்வாறே யாகபூஜை, ஹோமம், விசேஷ த்ரவிய ஹோமம் என்பன நடைபெறும். பல்வேறு குண்டங்களிலும் ஹோமம் செய்த பூர்ணாஹூதி நடைபெற்றபின் ஒவ்வொரு காலமும் சர்வ அக்னியும் பிரதான குண்டத்தில் சேர்ப்பிக்கப்பெறும். யாகசாலையில் பிரதானகும்பமூர்த்திக்கு அபிஷேகம் செய்யுமாறும் விதிக்கப்படுகிறது. இதற்காக அநேகமாக அஸ்திரதேவருக்கும் பிரதான கும்பத்திற்கும் நாடீசந்தானம் (நூலால் தொடுகை) செய்து அபிஷேகம் செய்கிற வழக்கம் உண்டு.
கும்பாபிஷேகத்திற்கு இருநாள்களுக்குமுன் சுபவேளையில் கலசஸ்தாபனம் (விமானங்களில், ராஜகோபுரத்தில் கலசம் என்கிற திருமுடிகள் வைக்கப்பெறும்.) மூலஸ்தானத்திலும் பரிவார சந்நிதிகளிலும் சுமங்கலிகளால் தீபஸ்தாபனம் என்பன இடம்பெறுவது வழக்கம். கும்பாபிஷேகத்திற்கு முன்னர் ஒரு மண்டலம் சிறப்பாக விசேட அபிஷேக ஆராதனைகளுடன் பூஜிக்கப்பெற்ற அந்தந்த மூர்த்திகளின் மஹோன்னதமான யந்திரங்கள் மூலாலயத்தில் ஸ்தாபிக்கப்பெறும். அன்றைய தினமே சுபவேளையில் பிம்பஸ்தாபனம் இடம்பெறும். அப்போது அஷ்டபந்தனம் என்ற சுக்காங்கல், குங்கிலியம், கொம்பரக்கு, தேன்மெழுகு, காவி, செம்பஞ்சு, எருமை வெண்ணெய், சாதிலிங்கம் என்பவை கலந்து இடித்து உருவாக்கப்பெற்ற அஷ்டபந்தனத்தால் பீடமும் ஸ்வாமி விக்கிரஹமும் இணைக்கப்பெறும்.
இவற்றினையடுத்து கும்பாபிஷேகத்திற்கு முதல், முதல் நாள்களில் முக்கிய நிகழ்ச்சியான தைலாப்பியங்கம் என்கிற ‘எண்ணைக் காப்பு’ சாற்றும் வைபவம் இடம்பெறும். இலங்கைத் திருக்கோயில்களில் இந்நிகழ்வின் போது அடியவர்கள் யாவரும் மூலட்டானேஸ்வரர் உள்ளிட்ட எல்லாக் கருங்கல் மூர்த்திகளுக்கும் கருவறை மற்றும் சந்நிதானங்களுள் சென்று தம் கைகளால் எண்ணைக் காப்பிடக் கூடிய பேறுபெறுகிறார்கள். இதனைப் பாக்கியமாகக் கருதி பலமணி நேரங்கள் எந்த ஜாதி, இன பேதமுமின்றி வரிசையில் காத்திருந்து இப்பணியில் ஈடுபடுகின்றனர். சில முக்கிய ஆலயங்களில் இதனை இரண்டு நாள்கள் செய்வதுமுண்டு. (மக்கள் வெள்ளத்தைக் கட்டுப்படுத்துதற்காக) இதே போலவே தென் தமிழகக் கோயில்கள் சிலவற்றிலும் மக்கள் இறைவனைத் தீண்டி எண்ணை சாற்றும் பேற்றைப் பெறுவதாகவும் அறிய முடிகின்றது.
பொதுவாக க்ருத ச்ரோர்ப்பணம், தைலாப்பியங்கம் என்ற இந்நிகழ்ச்சி சகல தமிழக ஆலயங்களிலும் நடைபெறுகின்றது. ஆச்சார்யார் மற்றும் அந்தணர்கள் மட்டுமேனும் இதில் கலந்து கொள்கிறார்கள். கும்பாபிஷேகத்திற்கு முன் நிகழக்கூடிய இந்நிகழ்ச்சியில் அனைத்து மக்களையும் பங்கேற்கச் செய்வது அனைவருக்கும் திருப்தி தரவல்லதாக இருக்கும் எனலாம்.ஸ்பர்ஸாஹூதி என்ற மிக உயரிய கிரியை முறை
எண்ணெய்க் காப்பின் பின் பிம்பசுத்தி, தேவாலய சுத்தி செய்யப்பெற்று இறைமூர்த்தங்களுக்கு சந்தனம் சாற்றுவர். எல்லா இறை மூர்த்தங்களுக்கும் காப்பு நாண் சாற்றும் முறையும் உண்டு. அடுத்து கும்பாபிஷேகத்திற்கு முந்தைய நாள் இரவுப் பொழுதில் நாடீ சந்தானம், ஸ்பர்ஸாஹூதி, தத்வார்ச்சனை ஆகியன இடம்பெறுவது வழக்கம். யாகசாலையிலுள்ள அக்கினி, பிரதானகும்பம், மூர்த்தி என்கிற மூன்றையும் தொடுப்புச் செய்து தர்ப்பைக் கயிறால் இணைத்து இக்கிரியை நடைபெறும். இதன் போது தொட்டு கும்பாபிஷேகம் வரையிலான காலத்தில் மூர்த்தங்களுக்கு வஸ்திரம் சாற்றும் முறை சில தமிழகக் கோயில்களில் இல்லாது இருப்பதால் பொதுமக்கள்தரிசனம்செய்யஅனுமதிக்கப்பெறுவதில்லை என்று தெரிகிறது. எனினும் இலங்கையில் தேவி மூர்த்தங்களுக்கு சிறிய எளிய வஸ்திரம் சாற்றியிருப்பார்கள். எப்படியாகிலும் பொது மக்கள் இக்கிரியைகளையும் தாராளமாகப் பார்க்கமுடியும். இப்படி ஒவ்வொரு ஆலயங்களிலும் சில வேறுபட்ட சம்பிரதாயங்கள் இருக்கலாம். ஆங்காங்கே சம்பிரதாயங்களை ஏற்று வழிபாடாற்ற வேண்டும்.
ஆனால் அதியுன்னதமான இக்கிரியைகளைப் படம் பிடிப்பதை அனுமதிக்கக் கூடாது என்பதில் மாறுபாடான கருத்தில்லை. பொதுவாகவே கருவறையிலுள்ள இறைமூர்த்தங்களை படம் பிடிப்பதைத் தவிர்ப்பது இறை சாந்நியத்திற்கு குறைவுண்டாகாமல் காக்கும். திருவுருவங்களை கண்டத்திற்கு மேல் ருத்திரபாகம் என்றும் சிவதத்துவம் என்றும் கண்டத்திலிருந்து முழங்கால் வரையான பாகம் விஷ்ணுபாகம் என்றும் வித்யாதத்துவம் என்றும் முழங்காலுக்குக் கீழ் பாதம் வரையில் பிரம்மபாகம் என்றும் ஆத்மதத்துவம் என்றும் பாகம் செய்து தத்வார்ச்சனை செய்வர்.
ஆத்மதத்வாதி⁴பதயே பிரம்மணே ஸ்வாஹா என்று அக்னியில் ஆஹூதி செய்து பிம்பத்தின் பிரம்மபாக சுத்தி செய்து அப்பாகத்தில் பிரம்மனை நிலைபெறச் செய்து பிம்பத்தின் அடிப்பாகத்திலும் ஆச்சார்யார் ஆஹூதி செய்வார்.இதற்கிடையில் மூலமந்திர ஹோமங்கள் விசேட ந்யாசபூர்வ ஆராதனைகள் இடம்பெறும். இது போலவே விஷ்ணுபாகம், ருத்ர பாகம் என்பவற்றிற்கும் அக்னியிலும் பிம்பத்திலும் விரிவான ஆராதனைகளுடன் ஆஹூதிகள் வழங்கப்பெறும். தொடர்ந்து யாகாக்னியில் பிராயச்சித்த ஹோமங்கள் செய்து மூலவருக்கு சாந்தி கும்ப நீரால் அபிஷேகிப்பர். ஸர்வ லோகேஸ்வரனாகிய பகவான் பிம்பத்திலே நிலைபேறாக எழுந்தருளப் பிரார்த்தித்து செய்யப்பெற்ற கிரியைகளில் குற்றமுண்டாகில் மன்னிக்குமாறு ஸ்வாமியின் வலது திருக்காதில் ஆச்சார்யார் பிரார்த்திப்பர்.கோலாகலம் நிறைந்த கும்பாபிஷேக நாள்
கும்பாபிஷேக நன்நாளன்று அதிகாலையிலேயே (கும்பாபிஷேக முகூர்த்தத்திற்கு சில மணிநேரம் முன்னதாகவே) யாகசாலாபூஜை நடைபெற்று பிராயச்சித்த, மூலமந்திர ஹோமம் செய்து மஹாபூர்ணாஹூதி வழங்குவர். இதே போலவே சகல யாகங்களிலும் பூர்ணாஹூதி நிகழும். பிரதான யாகசாலையில் பூர்ணாஹூதியை அடுத்து அக்னிவடிவாக எழுந்தருளியுள்ள பகவானுக்கு உபசாரங்களை வழங்கி திருப்தி செய்து நிறைவாக சகல அக்னிகளையும் பிரதான அக்னியில் சேர்த்து பிரதான அக்னியிலுள்ள இறைசக்தியை முறைப்படி கும்பத்தில் சேர்ப்பர்.
அந்தர்பலி, பஹிர்பலி என்பனவும் நிகழ்த்தி பிரதான கும்பமூர்த்திக்கு சோடச உபசாரபூஜை செய்து நால்வேதபாராயணம், தமிழ்வேத பாராயணம், கீத, ந்ருத்ய உபசாரங்கள் போன்றவற்றையும் பிரதான கும்பத்தின் முன்னே செய்து அர்ச்சகர்கள் ஸ்வாமி மற்றும் அம்பாளின் வாஹனங்களாக தம்மைக் கருதி இருக்க பக்திப் பரவசம் பொங்கவும் மங்கல இசை விண்ணைக் கிழிக்கவும் வேதபாராயணம், பஜனை என்பன நடைபெறவும் கும்பங்கள் அர்ச்சகர்களின் சிரசில் எழுந்தருளச் செய்து வீதியுலாவாகக் கொண்டு செல்வர்.
இதன்பின் ராஜகோபுரம், மூலவிமானம், விமானங்களில் ந்யாசபூர்வ அர்ச்சனையுடன் கும்பாபிஷேகம் நடைபெறும். தமிழகத்தில் இதனையே மக்கள் மிகச்சிறப்பாகப் பார்த்து மகிழ்வதுண்டு. அடுத்து வாயிலில் புஷ்பாஞ்சலியுடன் மூலஸ்தானத்திற்கும் பரிவார மூர்த்திகளின் சந்நிதிகளுக்கும் உரிய மஹாகும்பங்கள் கொண்டு செல்லப்பெறும். விசேஷ ந்யாசங்களின் மூலம் ‘.இறைவா, கும்பத்திலிருந்து இருந்து எம் போன்ற ஆன்மகோடிகளுக்கு அருளும் முகமாக இத்திருவுருவத்தில் எழுந்தருள வேண்டும்’ என்கிற பிராத்தனையை பலமுறை விண்ணப்பித்து மூலஸ்தான மூர்த்திக்கு மஹாகும்பாபிஷேகம் நடைபெறும்.
கும்பாபிஷேகத்தின்பின் யாகசாலையில் ஸ்திராஹூதி வழங்கி விசர்ஜனம் செய்வர். இலங்கையிலிருக்கும் வழக்கின்படி கும்பாபிஷேகம் நிறைவுற்றதும் மூலஸ்தான திருக்கதவு சாற்றப்பெறும். முன்னே கோ(பசு)வை நிறுத்திப் பூஜிப்பர். தவிர அஷ்ட மங்கலப் பொருள்களும் திருக்கதவின் முன்வைத்துப் போற்றப்படும்.
‘பண்ணின் நேர் மொழியாள் உமை பங்கரோ
மண்ணினால் வலஞ்செய் மறைக்காடரோ
கண்ணினால் உமைக் காணக் கதவினைத்
திண்ணமாகத் திறந்தருள் செய்மினே’

என்று உள்ள திருமறைக் காட்டுப் பதிகம் பாராயணம் செய்யப்பெற்று மங்கல வாத்திய முழக்கத்துடன் திருக்கதவு திறக்கப்பெறும். தொடர்ந்து யாவரும் மூலவரை நேரிலும் முன்னே வைக்கப்பெற்ற கண்ணாடியிலும் தரிசனம் செய்வர். ஸ்வாமி முன்றலில் ஸந்நியாசி, பிரம்மசாரி, சுமங்கலிகள், ராஜா, பிராம்மணர்கள் போன்றவர்களை நிற்கச் செய்து இதனை ஆற்றுவர்.
தொடர்ந்து சண்டஹோமம், ஆச்சார்ய உத்ஸவம், யஜமான உத்ஸவம், மஹாபிஷேகம், மாலையில் திருவீதியுலா தொடர்ந்து மண்டலாபிஷேகம் என்பன நடைபெறும். தமிழகத்தில் மண்டலாபிஷேகம் 15, 30, 45 என்ற கணக்கில் இடம்பெறுவதாக அறிய முடிகிறது. இலங்கையில் இது 12, 24, 36, 48 என்கிற கணக்கில் நடைபெறுகிறதுநிறைவுநாளன்றுசஹஸ்ரசங்காபிஷேகம் செய்து திருக்கல்யாண உத்ஸவமும் செய்வது வழக்கம். (சில இடங்களில் கும்பாபிஷேகமன்று மாலையிலேயே திருக்கல்யாண உத்ஸவம் செய்யும் வழக்கம் உள்ளது.) வைஷ்ணவத் திருத்தலங்களிலும் சிற்சில வேறுபாடுகளுடன் மஹாஸம்ப்ரோக்ஷணம் என்கிற பெயரில் கும்பாபிஷேக விழா நடைபெறுகின்றது. இதே போலவே காஞ்சி காமாக்ஷியம்பாள் ஆலயத்தில் நடைபெற்ற கும்பாபிஷேகத்திலும் சம்பிரதாய வேறுபாடுகள் உள்ளதாக அறிய முடிகின்றது. எனினும் பொதுவாக சிவாகம வழியில் பூஜை நடைபெறும் சிவாலயம், அம்பாள் ஆலயம், முருகன் மற்றும் விநாயகர் போன்ற ஆலயங்களில் கைக்கொள்ளப்பெறும் கும்பாபிஷேக நடைமுறைகளையே இங்கு காட்டியிருக்கிறோம்.
கும்பாபிஷேகத்தை தமிழில் ‘பெருஞ்சாந்தி வைபவம்’ என்றும் ‘திருக்குடமுழுக்கு’ என்றும் ‘திருக்குடநன்நீராட்டு விழா’ என்றும் சிலர் எழுதுகிறார்கள். ஆயினும் சில அறிஞர்கள் இச்சொற்கள் ‘கும்பாபிஷேகம்’ என்ற சொல்லிற்கு ஈடாகா என்றும் கருதுவதாக அறிய முடிகிறது. மிக்க ஈடுபாட்டுடனும் அர்ப்பணிப்புடனும் கும்பாபிஷேக நிகழ்வுகளில் கலந்து பங்காற்றுபவர்களுக்கு எல்லா நன்மைகளும் வந்து சேரும் என்று ஆகமங்கள் உறுதி சொல்கின்றன. எனவே ஓரளவேனும் பொருள் தெரிந்து கிரியைகளில் நாமும் இணைந்து இவ்விழாவில் பங்கேற்பது பேருவகை தரவல்லதல்லவா?

Sunday, 15 February 2015

ஆலயம்



ஆலயம் 


சமயம் கோவில் குளங்களெல்லாம் வேண்டாம். இதெல்லாம் மக்களைச் சுரண்டி வாழ்வதற்கு ஒரு சில பிற்போக்குவாதிகளால் செய்து வைத்த சூழ்ச்சிகள். சமூக முன்னேற்றத்திற்குச் சமயம் பெரும் இடைஞ்சலாக இருக்கின்ற படியால் இந்த சமயக் குப்பையில் இருந்து மக்களை விடுதலை செய்ய வேண்டும். இவ்வித மெல்லாம் சடவாதம் செய்யும் கட்சிகளின் செல்வாக்குப் பெருகி வருகின்றது.

"ஈசனுக் கன்பில்லார் அடியவர்க்குமன் பில்லால் 
 எவ்வுயிர்க்கு மன்பில்லார் தமக்கு மன்பில்லார்"

என்ற சிவஞான சித்தியாரின் பாடலின் கருத்தை உணராதவர்களின் சகோதரத்துவம், சமத்துவம், சமதர்மம், பஞ்சசீலம், முதலியன எந்நிலைப் பட்டதோ? இன்னும் சில கோஷ்டிகள் ஆலய சீர்திருத்தத்தின் பெயரால் என்னென்னவோ சொல்லிக் கொண்டு, இருக்கின்ற ஆசாரத்தையும் கெடுத்து அனாச்சாரத்தைப் புகுத்தப் பார்க்கின்றது.

நட்ட கல்லும் பேசுமோ என்ற கூற்றின் உட் பொருள் தெரியாமல் வாசாஞானம் பேசி ஆலயம் புகாமல் கற்பனா உலகில் பிராணத்தியாகம் செய்கின்றவர்களைப் பற்றி என்னவென்று சொல்வது. இன்னொரு சாரார் மதம் மயக்கும் மருந்தென்று சமயத்திற்கு ஒரு பரிபாஷை செய்திருக்கின்றனர். சமயத் துறையில் மதத்திற்கு "தரிசனம்" என்று சொல்வதுண்டு.தரிசனம் என்றால் பார்க்கப் படுவது என்று பொருள். உள்ளதை உள்ளபடி பார்த்தறிவது சமயம். யதார்த்தத்தை அறிவதே அறிவு.

யதார்த்தத்தை அறிவதே அறிவு. மற்றவை எல்லாம் பொய்யறிவு. நமக்கு வரும் சங்கடமெல்லாம் பொய்யறிவின் விளைவு. எனவே மயக்கந் தெளிந்து உள்ளதை உள்ளபடி அறிய உதவுவது எதோ அது மதம் எனப்படும். சிலர் பக்தியானது பயத்தினால் பிறந்த ஒரு மனக்கோளாறு என்று முடிவுகட்டி பக்தியின் ஆராய்ச்சியை அத்துடன் நிறுத்தி விட்டனர். பயத்தினால் உலக மகாயுத்தம் மூளுவதைவிட இறை அச்சத்தினால் பக்தி பிறந்து அன்பினால் பிணைக்கப் பட்ட ஏக சமூக வாழ்வு உத்தமமானதன்றோ? "நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்" என்று பக்தி பெருகி பயமற்ற பெரியாராகிய நாவுக்கரசர் பாடியிருப்பது அவர்களுக்குத் தெரியவில்லைப்போலும். பக்தி பிறந்தால் பயம் பிரியும் என்ற தத்துவம் நவீன உளநூல் ஆராய்ச்சியாளர்களின் புத்திக்கு அகப்படுமோ என்பது சந்தேகம். அச்சமும் பயமுமற்ற அன்னியோன்னிய அன்புடன் சேர்ந்து வாழும் சாந்தமான சூழ்நிலையையே இன்றைய உலக மக்கள் வேண்டி நிற்கின்றனர். உலக சமாதானத்திற்காக ஏதோ சிலதெல்லாம் சொல்லியும் செய்தும் மூச்சுத் திணறி அவஸ்தைப் படுகிறவர்கள் எல்லாம் பக்தியின் சிறப்பை யுணர்ந்து, அதை ஒரு சிறிதளவாவது உட்கொண்டால் போதுமானது. சுவாசம் ஒழுங்காயோடும். மனம் தெளிவடைந்து சாந்தி பிறக்கும். பஞ்சசீலம் விளங்காகதவர்கட் கெல்லாம் சீலமும் நோன்பும் தானே வரும். பக்தி இருக்கின்ற உள்ளத்தில் எல்லோரும் இறைவன் குழந்தைகள். சிருஷ்டிகள் எல்லாம் அவனுடமை என்ற சிருஷ்டி தத்துவம் விளங்கும். சண்டை சச்சரவுகள் குறையும். உனது எனது என்ற மமதை அடங்கும். யுத்த முஸ்தீபுகளுக்கு விரயமாகும் பொருளும் பணமும் மக்கள் க்ஷேமத்திற்காகப் பயன்படும். எனவே அச்சமகற்றி ஏகத்துவம் சகோதரத்துவம் சமத்துவம் முதலிய சமரச உணச்சிகளுக்கு ஆதாரமான பக்தியை வளர்க்கும் ஆலயங்களைச சம்ரட்சணை செய்வோம்.

நாம் வாழும் யுகத்திற்கு கலியுகமென்று பெயர் சொல்கிறோம். கலியுகம் என்றால் இலகுவில் உணர்ச்சி வசப்படும் கால கட்டம் என்று பொருள்படும். அற்ப காரியங்களுக்கும் உணர்ச்சி வசப்பட்டுத தற்கொலை புரிபவர்களின் எண்ணிக்கையை எடுத்துப் பார்த்தால் கலி என்ற சொல் எவ்வளவு பொருத்தமான சொல்லென்பது தெரியும். கலியுக வரதனை நெஞ்சிலூன்றி நினைப்ப வர்களுக்கு மனதில் கொண்ட கலியும் கிலியும் போய் அமைதி நிலவும். பாவ சிந்தனை வராது. ஜென்மம் கடைத்தேற வேண்டுமென்று நினைப்பவர்க்கெல்லாம் கலியுகம் சிறப்புடையது. அதிலும் திராவிடர்க்கு இன்னும் விஷேசம். முன் ஆரியர் வர்த்தம் (விந்திய மலையி லிருந்து வடக்கே இமயம் வரையில்) பக்திக்கும் புண்ணியத்திற்கும் சிரேஷ்டமானதென்று கருதியிருந்தது. கலியுக பகவான் வளர வளர ஆரியர் வர்த்தத்திளிருந்து பக்தியும் புண்ணியமும், ஏனைய சிறப்புகளும் தெற்கே நோக்கி (விந்தியத்திற்குத் தெற்கே) வருமென்று சாஸ்திரங்கள் பல கூறுகின்றன. நானூறு வருடங்களுக்கு முன் திராவிட நாட்டில் தோன்றிய ஒரு பரம ஞானியால் தீர்க்க தரிசனமாகச் சொல்லி வைத்ததின் ஒரு சிறு பகுதியை இங்கு கூறுகின்றோம்.

"த்ர மிள புவி ததோ 
பூரி சஸ்த்தத்திர சோச்சை 
காவேரிம் தாமிர பர்ண்ணீமனுகில கிருதமா 
லாஞ்ச புண்ணியாம் ப்ரதீசிம்" [நாராயணீயம்]

"த்ரமிள புவி" என்றால் திராவிட பூமி என்று பொருள். உலக நெருக்கடி அதி உச்ச நிலையை அடையும் பொழுது திராவிடத்தில் (குறிப்பாகக்  காவிரி நதியோரங்களில்) மகான்கள் தோன்றி உலக க்ஷேமத்தை உண்டு பண்ணுவர் என்று சொல்லப் பட்டிருக்கின்றது.

த்ரமிள புவி என்றால் ... மனித நாகரீகம் முதல் முறையாகத் தோன்றிய பிரதேசமல்லவா? சிறப்பிக்கத்தானே செய்யும். ஆகையால் இனி நமது நாட்டில் சமய நெறி குன்றி பக்தி குறைந்து ஆலயங்கள் தகர்த்து எறியப் படும் என்று யாரும் ஐயம் கொள்ள வேண்டாம். திராவிடக் கலை, கலாச்சாரங்கள் புத்துயிர் பெற்று புது முறையில் விளங்கப் போகின்றது. அந்தரங்க சுத்தியுடன் இருக்கும் ஆலயங்களை நன்நெறி நின்று பரிபாலனம் செய்து வந்தால் போதும்.

அறம் வளரும். புண்ணியம் கூடும். நாடும் சிறக்கும். மற்ற யுகங்களில் கொடிய தவத்தினாலும் அடைய முடியா மேன்மைகளும் சித்தியும் கலியுகத்தில் ஜெபம், பஜனம், நாமார்ச்சனை பக்திப் பாடல்கள் முதலிய சாதாரண சாதனையால் சித்திக்கும் என்ற பாகவதம் முதலிய கிரந்தங்களில் சிறப்புற எழுதப் பட்டிருக் கின்றது. எனவே சீலமும் நோன்பும் இருக்கின்ற பக்த ஜனங்களுக்குக் கலியுகம் மோட்ச காலம் என்றே கருதலாம்.

விஞ்ஞான புத்தி பல அற்புத சாதனைகளைச் செய்து வருகிறது. உடல் வாழ்க்கையைக் கூடுதல் சௌகரியப் படுத்தல் பல நூதனப் பொருள்களையும் ஆக்கித் தந்திருக் கின்றது. அவை எல்லாம் பெருமையுடன் நினைவு கூறத் தக்கவை. அதிக வசதியைச் செய்வதில் மட்டும் புத்தியைச் செலுத்தினால் முடிவு சோகமும் துயரமும் என்பதைப் பாமர மக்கள் உணர இன்னும் பல்லாண்டுகள் செல்லலாம். ஞான, தர்ம, ஒழுக்க நெறி, சிந்தனை களுக்கு இடமில்லாத இன்றைய உலகாயுதக் கல்வி நிலவி இருக்கும் வரையில் தேகத்தைக் கடந்த உன்னத சிந்தனைகளுக்குச் சந்தர்ப்பம் கிடைப்பது அரிது. சில பறவைகள், ஈக்கள், அணுப் பிரமாணமான நுண் சீவிகள் இன்னும் சில செடி கொடிகள் தங்கள் ஜீவனத்திற்காக, விளக்க முடியாத எத்தனையோ அற்புதச் செய்கைகள் செய்கின்றன. அவற்றின் அற்புத செய்கைகளை உன்னிக் கவனித்தால்  அறிவியல்களின் அகந்தை தானே அடங்கும்.

பகுத்தறிவில்லாத பிராணிகளும் அது இருக்கின்ற மனிதனும் செய்யும் நூதன நுட்பங்களெல்லாம் வெறும் உடல் வாழ்க்கையை மாத்திரம் வசதிப் படுத்திக் கொள்வதற்கு என்றால் அவைக்கும் நமக்கும் பெரிய வித்தியாசம் ஏதும் இருப்பதாய்க் கூறுவதற்கில்லை. மனிதனை விட மிருக சாதிகளுக்கிடையில் நோயும் பிணியும் சண்டை சச்சரவுகளும் குறைவு. வஞ்சனை, போட்டி, பொறாமையும் நம்மைவிட விலங்கினத்தில் அதிகமாய் இருப்பதாகத் தெரியவில்லை. இதனால் மனிதனை விட மற்ற ஜந்துக்கள் மேலானது என்று கருதலாமா? சகல பிராணிகளையும் விட மனித ஜன்மம் சிரேஷ்டமான தென்று சர்வ சம்மதமாயிருக்கின்றது. மனிதனில் இருக்கும் அந்த விசேஷம் தான் என்ன? இறை வழிபாடும் சமரச சிந்தனையும் மோட்ச விசாரமும் மிருக சாதிகளுக்கு இல்லை. புலன்களைத் தன் வசப் படுத்தி நிறுத்தும் தனிச் சிறப்பியல்பு மனிதர்களுக் கில்லாவிட்டால் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று கருதி அகப்பட்டதெல்லாம் தின்றும் குடித்தும் உயிரை மாய்க்கும் மிருக இயல்பில் நாங்களும் இருந்திருப்போம். மனித உருவில் இருந்தும் செயலில் இப்படி இருக்கின்றவர்களும் உண்டு. இறைவன் கருணை உள்ளம் அவர்கள்பால் வீசுவதாக.

ஜீவனின் தோற்றம், நிலை, ஒடுக்கம் இவைகளைப் பற்றி நவீன ஆராய்ச்சியாளர்கள் ஏகோபித்த முடிவிற்கு இன்னும் வரவில்லை. ஆரம்பத்திலேயே அவர்களுக்கு இடையில் கருத்து வேற்றுமைகள் தாராளமாகவுண்டு. ஆய்வின் முடிவுகள் அடிக்கடி நெறி செய்தும் வருகின் றன. நமது சமய சாஸ்திரங்கள் இவைகளுக்குத் தக்க பிரமாணங்களுடன் பூரண விளக்கம் தந்தி ருக்கின்றன.  பரிணாம தத்துவத்தை அரைகுறையாக கிரகித்த "டார்வினுக்கு" நாலாயிரம் ஆண்டுகளுக்குமுன் பரிணாம வளச்சியை அதன் முழுநிலையில் ரிஷிகளால்ஆராய்ந்த றியப் பட்டிருக்கிறது.  சிவா புராணத்தில் மணிவாசகப் பெருமான் பரிணாம தத்துவத்தைச் சுருக்கமாகப் பாடி வைத்தார்.அதிகம் சொல்லுவானேன். இந்து மதம் ஒரு பரிபூரண பரிணாம சித்தாந்தத்தை அடிப் படையாகக் கொண்டு பிரபஞ்ச தத்துவத்தை விளக்கி மனிதன் பூரணத்துவம் அடையும் வழி முறைகளை வகுத்துத் தந்திருக்கின்றது. இதைப் பற்றி இங்கு ஈண்டு ஆராயப்பட வேண்டியதில்லை. பதஞ்சலி யோக சூத்திரத்தை சுதேச புத்தியுடன் ஆராய்ந்தால் அணுவின் நுட்பங்களும் பரிணாம இரகசியங்களும், தக்க சான்றுகளுடன் சாஸ்திர ரீதியாய் விளக்கப் பட்டிருப்பதை அறியலாம். மனிதன் பரிணாம வளர்ச்சியின் முழுமையன்று. அவன் இன்னும் வளர வேண்டி இருக்கின்றது. உருவிலன்று. உள்ள்ளத்தால், புத்தியால். எனினும் மனித உருவில் வைத்தே அது முழுமை அடைய வேண்டியிருக்கின்றது.

எல்லாவற்றையும் அறிய வேண்டும் என்ற ஆசையும் விருப்பமும் எல்லோருக்கும் இருக்கின்றது. அங்ஙனம் எல்லோராலும் எல்லாவற்றையுமறிய முடிவதில்லை. நமது புத்தி அது செல்லக் கூடிய எல்லை வரையிலும் தான் செல்லும். அதற்கப்பால் இருப்பதைப் பார்க்க ஊனக் கண்களின் ஒளி போதாது. அதைப் பார்த்தறிய ஒளி மிக்க கண்கள் தேவை. அதை ஞானக் கண் என்று சொல்வர். எல்லோர் உள்ளத்திலும் இருக்கும் ஞானக் கண் மாயா சக்தியினால் ஆவரணம் செய்யப் பட்டிருக்கின்றது. மாயை அல்லது அவித்தை என்ற திரையை நீக்கம் செய்து, மறைந்திருப்பதைப் பார்க்கச் சொன்னவர்களை ரிஷிகள் என்பார்கள். அவர்களின் ஞானக் கண்களால் பார்க்கப்பட்ட விசேஷங்களை உலகச் க்ஷேமத்திற்காக எழுதி வைத்தவைகளே நமது வேத சாஸ்திரங்கள். என்றும் மாறாத தர்மங்களை சமய நூல்கள் சொல்லுகின்ற படியால் மற்றும் நூல்களை விட சமய சாஸ்திர கிரந்தங்களுக்கு விசேஷம் கூட இருக்கின்றது. அல்லது காலத்திற்குக் காலம் மாற்றி எழுதப்படும் விஞ்ஞான நூல்களின் தரத்தில் அதுவும் அகப்பட்டிருக்கும். அங்ஙனம் ரிஷிகளால் பார்த்தரியப் பட்ட வேத தத்துவங்களை துவாபர யுக முடிவில் கலியின் ஆரம்பத்தில் வியாச பகவான் இருக், யசுர்,சாம, அதர்வ என்ற நான்காக வகுத்தார். வேதம் முழுவதும் ஒருவருக்கு கற்றரிய முடியாத காரியமானதினால் அதை ஆயிரத்து ஒருநூற்று எண்பது சாகைகளால் பிரித்தார். ஒருவனால் கற்றரியக் கூடிய ஒரு பகுதிக்கு ஒரு சாகை என்று சொல்லப்படும். ஏதாவது ஒரு சாகையை அறிந்தால் வேதாசாரம் முழுதும் அறிந்ததற்குச் சமமாகும். வேதம் நான்கிற்கும் அங்கம் ஆறு. உப அங்கம் நான்கு. இவைகளைத் தவிர ஆயுள் வேதம், தனுர் வேதம், காந்தர்வ வேதம், அர்த்த வேதம் முதலிய நான்கு உப வேதங்களும் இருக்கின்றன. இவை யெல்லாம் சேர்த்து பதினெட்டு வித்தை என்பார்கள். வேதாந்தம் என்றால் முற்றிய அறிவென்று பொருள். வேதத்தில் என்ன இருக்கு என்று கேட்போருக்கு அதில் இல்லாதது, ஒன்றுமேயில்லை என்று  விடை யளிக்கலாம். அறுபத்திநான்கு கலைகளும் வேதத்தி நின்று தித்தவை.

இன்றைய கல்வித் துறையில் போதிக்கப்படும் தாவர தத்துவ சாஸ்திரம் (Botany) ரசாயன சாஸ்திரம் (Chemistry) பௌதீக சாஸ்திரம் (Physics) மருத்துவ சாஸ்திரம் (Medical Science) வியத்தக்க கணிதம் (Arithmetic, Geometry, Algebra) முதலிய சாதாரண வாழ்க்கைக்குரிய சாமானிய விஷயங்கள் கூட வேதத்தில் இருக்கின்றன. ஒவ்வொன்றுக்கும் விரிவான விளக்கங்கள் உண்டு. இன்றைய முறைகளை விட அவை எளிதாகவும் தெளிவாகவும் இருக்கின்றன. வேதத்தின் ஒரு பகுதியாகிய ஜோதிஷத்தில் அண்டங்களைப் பற்றிய ஆராய்ச்சிகளும் அவற்றின் கெதி விசேஷங்களும், தூரமும் அமைப்பு முறைகளும் சாஸ்திரானுசரனமாக விளக்கப் பட்டிருக்கின்றது. அவை யாவும் இன்றைய விஞ்ஞான ஆராய்ச்சியின் முடிவுகளுக்கு ஒத்ததாகவும் இருக்கின்றன. தற்பொழுது குழந்தைகளுக்கு பூமியின் ஆகர்ஷண சக்தியை (Gravitation) முதன் முறை கண்டு பிடித்தவர் நியூட்டன் என்று சொல்லிக் கொடுக்கப் படுகிறது. நியூட்டனுக்கு எத்தனையோ ஆயிரம் வருடங்களுக்கு முன் எழுதி வைத்த சூரிய சித்தாந்தம் என்ற நூலில் பூமியின் ஆகர்ஷண சக்தியைப் பற்றிக் கூறப் பட்டிருக்கின்றது. அதற்குப் பிறகு ஆரிய பட்டனும், பாச்கரவர்மனும் (இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்) பூமியின் இழுவைச் சக்தியைப் பற்றியும் நரை ஆராய்ந்து தங்களது ஜோஷி கிரந்தங்களில் எழுதியிருக்கின்றார்கள். மின்சார சக்தியைபற்றியும் இவர்கள் அறிந்திருந்தார்கள்.
தனுர் வேதத்தில் யுத்த முறைகளும் யுத்த கருவிகளை உற்பத்தி செய்யும் முறைகளும் கூறப் பட்டிருக்கின்றன. அதில் யுத்த கருவிகளை சஸ்த்திரம் என்றும் அஸ்திரம் என்றும் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப் பட்டிருக்கின்றது. சஸ்திர  மென்பது பொருள்களால் ஆக்கப் பட்டு அதன் இயக்க சக்தியால் மட்டும் இயக்கப் படுவது. அஸ்திர மென்பது ஆயுதங்களை ஆத்மா வலிமையால் பிரயோகிக்கப் படுவது. அஸ்திரத்துக்கு முக்தா முத்தம் என்ற இன்னொரு பெயருமுண்டு. முக்தா முக்த        மென்றால் போய்த் திரும்பி வருவது என்று அர்த்தம். இன்று ஆத்மா வலிமையால் அல்லாவிடினும் அத்தகைய யுத்த கருவிகள் (Rocket) உற்பத்தி செய்யப் படுகின்றன. இவ்விதம் ஒவ்வொன்றாய் ஆராய்ந்து கொண்டு போனால் இகபர வாழ்வுக்கு, உபயோகமான சகலதும் வேதத்தில் அடங்கி இருப்பதைப் பார்க்கலாம். வேத சாஸ்திரங்களை எள்ளி நகையாடும் அறிவிலிகள் இவைகளை ஆராய்ந்தால் தங்கள் வெளி வேஷம் தேசிய மயமாயிருந்தாலும் புத்தி தேசிய மயமாகவில்லை என்ற உணர்ச்சி மேலிடும். வேதத்தின் தனிச்  சிறப்பு மேற் சொன்ன சாமானிய விஷயங்களில் தங்கி நிற்கவில்லை. அதன் மகிமை முழுவதும் மக்கள் பூரணத்துவத்தை அடையும் ஆத்ம போதனையிலும் ஆத்ம விளக்கத்திலுமே தங்கி நிற்கின்றன.

"வேதியா வேத கீதா" பரம சிவம் சதா வேதத்தை ஓதிக் கொண்டிருக்கின்றதாம். சிவனால் ஓதிக் கொண்டிருக்கும் வேதத்தை நிந்தனை செய்வது சிவா நிந்தனையாகாதா? கலியுகத்தில் சாதாரண மக்களால் மேதார்த்தத்தை நேரடியாகக் கிரகிக்க முடியாதென்று கருதி, மந்த புத்திகளும் அவைகளை அறியும் பொருட்டு வியாசர் புராணங்களை இயற்றினார். அதில் வேத சாரங்கள் கதைகளாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. அத்தகைய புராணங்கள் பதினெட்டு. சாமானிய ஜனங்கள் வேத தத்துவங்களை அறிந்து அதன் வழி வாழ்ந்து, அறம், பொருள், இன்பம், வீடு முதலிய புருஷார்த்த தர்மங்களை அடைய வேண்டும் என்ற பரந்த நோக்கத்தாலேயே வியாசர் அவ்விதம் செய்தார்.  பண்டைக் காலத்தில் சீரிய கல்விப் போதனா முறை ஒன்றிருந்தது. பாடங் கேட்கும் போது மனதைச் சாந்தமாய் வைத்துக் கேட்க வேண்டும் மென்பதே அந்த முறை. மனம் சாந்தமாய் இருந்தால் கேட்கும் விஷயங்கள் நன்றாய் மனதில் பதிந்து விடும். அன்றைய கல்விப் போதனா முறைக்கும் தற்கால கல்விப் போதனா முறைக்கும் உள்ள வித்தியாசங்களைச் சிந்தனையாளர் சிந்திப்பார்களாக. அன்று அநேக விஷயங்களைப் போதிப்பதற்கு ஒரு ஆசிரியர். இன்று ஒரு விஷயத்தைப் போதிப்பதற்கு பல ஆசிரியர்கள். அப்படியிருந்தும் கேட்ட விஷயங்கள் அன்றைய உற்சாகத்துடன் மனதை விட்டுப் பிரிந்து சென்று விடுகின்றன. ஆலயங்களில் சாந்தமான சூழ் நிலையில் இருந்து புராண பாராயணங்கள் கேட்டால் அவை நன்றாக மனதில் பதிந்து விடும். தற்பொழுது ஆலயங்களில் புராண படனம் அருகி வருகின்றது. வரவர ஆலய நிர்வாகங்கள் எல்லாம் நவீனத்தில் செல்கின்றன. புராணம் படித்துப் பயன் சொல்ல வேண்டியவர்கள் எல்லாம் அர்த்த சாஸ்திரம் படிப்பதில் கண்ணும் கருத்துமா யிருந்தால் மற்றவர்களின் நிலைமையைப் பற்றிக் கூறுவானேன். ஆத்மாக்கள் ஆத்ம மயம் பெருவதற் குரிய இடமே ஆலயமாகும். தற்காலத்தில் அமைதியைக் கருதித தொழிற்சாலைகளில் பொருந்தும் இயந்திரங்கள் கூட சப்தமில்லாமல் இயங்கும் வகையில் செய்யப் பட்டு வருகின்றன. அங்ஙனம் இருக்க ஆத்மா சாந்திக்கும் அமைதிக்கும் வந்த ஆலயங்களில் இன்று நடப்பவை என்ன? சித்தத்தைக் கலக்கி காதைச் செவிடாக்கும் அசுர ஒலிகளால் அமைதி குலைக்கப் படுகின்றது. குறித்த இலட்சியத்தின் கண் உச்சாடானம் செய்ய வேண்டிய மந்திர ஒலிகள் கூட ஒலிபெருக்கியால் சிதறடிக்கப் படுகின்றது. இதை எல்லாம் பார்த்து மூல ஸ்தானத்தில் வீற்றிருக்கும் சுவாமியின் பொறுமையை நினைத்தால் நமக்கும் வாயடக்கமும் பொறுமையும் தானே வரும். "வேத விகித கரும மார்கேஷு சிறர்த்தா" ஆலய காரியங்கள் எல்லாம் வேதாகம விதிப் படி ஊக்கத்தோடு பிழையறச் செய்ய வேண்டும் என்று சாஸ்திரம் வலியுறுத்திக் கூறி இருக்கிறது. இவ்விடத்தில் ஒரு புராணக் கதை ஞாபகத்துக்கு வருகிறது.

பிரம்ம தேவனிடத்தில் ஒருவர் சென்று அடுத்த ஜென்மத்தில் தான் ஒரு கோவில் பூசாரியாகப் பிறக்க வரம் தர வேண்டும் என்று பிரார்த்தித்து நின்றார். பிரம்மா கேட்ட வரத்தை அளித்தார். வரம் வாங்கி விடை பெற்றுச் செல்லும் பொழுது அந்தரங்க சுத்தி இல்லாமல் பூஜா காரியங்கள் செய்யுமாகில் அதற்கடுத்த ஜென்மம் நாயாகப் பிறப்பாய் என்று பிரம்ம தேவர் ஒரு எச்சரிக்கையும் பண்ணி விட்டார் என்பது ஒரு கதை. ஆலய சம்பந்திகள் சித்த சுத்தியுடன் ஆலய கருமங்கள் செய்யா விட்டால் பாவ ஜென்மம் எடுக்க வேண்டி வரும் என்பதே கதையின் உட்பொருள். என்ன ஜென்மம் வந்தாலும் இப்படியே நடக்கட்டும் என்று நினைப்பவர் களைப் பற்றி நாம் ஒன்றும் கூறுவதற் கில்லை.

புராணங்களைப் பொருளுணர்ந்து சொல்லும்படி சொன்னால் கேட்பதற்கு ஆளில்லாமற் போகாது. கேட்பவர்க்கு வைராக்கியம் உதிக்கும். பக்தி பெருகும். ஈஸ்வரார்ப்பண புத்தி தோன்றும். தனக்கென்று வைத்தி ருப்பதில் ஒரு பங்கை ஈஸ்வரார்பணமாக கொடுக்க வேண்டும் என்ற சற்புத்தி வரும். ஆலயத்தின் பொருள் பண்டங்கள் தாராளமாகச் சேரத் தொடங்கும். நிர்வாகத்தினருக்கு பொருள் தேடித் திரியும் சுமை குறை யும். அருட்சக்தி பொலிவுக்கும் பக்திக்குமனுகூலமான காரியங்களையே ஆலயங்களில் செய்ய வேண்டும். ஆரவாரத்தினாலும் ஆடம்பரங்களினாலும் மக்களை ஆலயத்தின் பால் ஈர்க்க முயற்சிப்பது தவறு. விக்கிரங்களுக்கு மந்திர பூர்வமாகச் சக்தி கொடுத்து பூசை, அர்ச்சனை, அபிஷேகம், யாகம் முதலியவற்றை முறைப்படி சித்த சுத்தியுடன் செய்து வந்தால் அருட் சக்தி ஆலயங்களில் உதயமாகும்.தென்கயிலை மலை என்று போற்றும் திருக்கோணேஸ்வரம் அதற்குத் தக்க சான்றாய் இன்றும் விளங்குகிறது. அங்கிருந்த சேத்திரம் டச்சுக்காரர்களால் இடிக்கப் பட்ட பின் வெளிப் பார்வைக்கு வேற்று மலையாய் இருந்த போதிலும் பல்லாண்டுகளாகத தினசரி நுற்றுக்கணக்கான பக்த ஜனங்களைத் தன் பால் ஈர்த்து அனுக்கிரகம் செய்து கொண்டிருக்கும் அருட் காட்சியைப் பார்த்தவர்களுக்கு முன் கூறிய விஷயம் நன்கு விளங்கும். எவ்வித ஆடம்ப ரமுமில்லாமல் மௌன சாட்சியாய் இருந்து ஆயிர மாயிரம் நாஸ்திக, ஆஸ்திகர்களுக்கு அருளொளி காட்டிக் கொண்டிருப்பதை உணர்ந்தாலே போதும் ஐம்பெரும் பாவங்கள் தானே நீங்கும். சிவராத்திரி போன்ற விசேஷ காலங்களில் தரிசனத்துக்கு வரும் அடியார்களுக்குக் கணக்கில்லை. பார்வைக்கு சிறியதாய்த் தோன்றும் திருமலை உச்சியில் ஒரு பொழுதும் ஜன நெருக்கடி என்பது நாளிதுவரையும் இருந்ததில்லை.இதைத்தான் ஸ்தல மகிமை என்று சொல்வது.

எங்கும் நிறைந்திருக்கின்ற இறைவனுக்குக் கோவில் ஏன் என்று சிலர் கேட்கின்றனர். பரம்பொருள் எங்கும் பரந்திருக்கின்ற தென்ற உணர்ச்சி எல்லோருக்கும் இருந்தால் சூது, வாத்து, வஞ்சனை, பொய்கள் ஒன்றும் இருந்திருக்காது. மின்சக்தி எங்கும் பரந்திருக்கும். ஊனக் கண்களுக்குப் புலனாவ தில்லை. சில ஆராய்ச்சியினால் இருக்கின்ற தென்று அறியப்பட்டிருக்கின்றது. அருவமா யிருக்கும் மின்சக்தியைச் சில கருவிகளால் சேமித்து வைத்து அதற்கேற்ற உபகரணங்கள் மூலம் நாம் நமது தேவைகளுக்கு ஏற்றவாறு உபயோகப்படுத்திக் கொள்கி றோம்.அதே போல் அருவ சக்தியாயிருக்கும் அருட் சக்தியைச் சேமித்து வைத்திருக்கும் அருள் நிலையம் ஆலயம். மந்திரம், தோத்திரம், அபிஷேகம், அர்ச்சனை முதலியன அருட் சக்தியைச் சேமிக்கும் கருவிகள். பிரார்த்தனை, வழிபாடு, தியானம்முதலியன அந்தச் சேதனா சக்தியை நாம் பெறும் உபகரணங்களாகும்.

வழிபாட்டுக்குரிய விக்கிரகங்கள் சைய்ரி (கல்), தாருமை லௌகி, லேப்பியா,லேக்கியா, சைகதி, மனோமாயி, மணிமயி என்ற எட்டு விதப் பொருள்களால் செய்யப் பட வேண்டும் என்ற நியதி உண்டு. எண் வித லிங்கங்களும் சாலக் கிராமம் முதலியவைகளும் மணிமயி என்பதில் உட்படும். பிரதிஷ்டைக் குரிய விக்கிரகங்களுக்கு லாளித்துவம், பிரசாதம், சுகமத, பாவமாது, ரியம், தர்மோப தேசப் பிராஜுரியம் என்ற ஐந்து வித லெட்சணங்களும் பொருந்தி நின்றால் ஈஸ்வர குணங்கள் ஆறும் விக்கிரகத்தில் ஒளிரும். இத்தகைய லெட்சணங்கள்  பொருந்தா விட்டால் விக்கிரக பாவம் விகாரமடைந்த சாதாரண மனிதனைப் போல் தோற்ற மளிக்கும். தற்காலத்தில் வார்க்கப் படும் விக்கிரகங்கள் எத்தன்மை வாய்ந்ததென்று வாசக நேயர்கள் ஊகித்தறிய  வேண்டியது பிரதிஷ்டை செய்யும் பொழுது.

"லோகானுக்ரகே துர்வதும்ஸ்திரீபவசுகாயன" என்ற மந்திர உச்சாடணத்துடன் பிரதிஷ்டை செய்வதுண்டு. இறைவா! உலக சேமத்திற்காக நீ இதில் வீற்றிருப்பாயாக என்பதே இதன் பொருள். இந்த மந்திரப் பொருளைத் தெரிந்தால் ஆலயம் எதற்காக உண்டாக்கப் பட்டுள்ளதென்பதை எளிதில் யாவரும் விளங்கிக் கொள்ளலாம். இந்து மதத்திற்கு சைவம், வைஷ்ணவம், சாக்தேயம், காணபத்யம், கௌமாரம், சௌரம் என்று பல பிரிவுகளுண்டு. எல்லாவற்றிற்கும் வேதம், பிரமாணம் ஒவ்வொரு பிரிவுகளுக்கும் வெவ்வேறு ஆகமங்கள் இருக்கின்றன. எந்த எந்தத் தெய்வத்தை எப்படி பிரதிஷ்டை பண்ணி எவ்விதம் பூஜை வழிபாடுகள் செய்ய வேண்டும் என்பதை ஆகமங்கள் கூறும். ஆகமத்திற்கு சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு பிரிவுகள் இருக்கின்றன. ஒருவன் எப்படி வழிபட வேண்டும் என்பதை சரியை விளக்கும். ஆலய அமைப்பு ஆலய கிரியாஷேசம் என்பன கிரியை என்ற பாகத்தில் உட்படும். யோக தியானத்தால் இறைவனை அடையும் உபாயங்களைக் கூறும். ஞானம் இறை அனுபூதியை விளக்கும். யோகம் தவங்களுக்கு வாய்ப்பில்லாத சாதாரண மக்களும் திருவருளால் உலக செமங்களை அனுபவித்து இறையடி சேர்ந்து ஜென்மம் ஒழிக்க ஆலய வழிபாடு ஒரு உபாயமாகின்றது. ஆலயம் சென்றவர் ஆணவமறந்தார்.முறைப்படி ஆலய தரிசனம் செய்து வேண்டி நின்றால் வேண்டுவார்க்கு வேண்டுவன கிடைக்கும்.

சீரிய பண்பாடுடைய இனம் அல்லது சமுதாயம் ஜீவி களையுடன் நீடூழி வாழும். தனிமனிதனுக்கும் இது பொருந்தும். உயிரையும் உடலையும் ஈஸ்வரார்ப்பண மாய்ச் செய்து உயிரினங்களின் மேன்மைக்கும் சுகத்திற் குமாகத் தனது வாழ்வைத் தியாகம் செய்து வாழ்வதே மேம்பட்ட பண்பாடுடைய வாழ்வு. தங்களிடமிருக்கும் விலங்கு நீர்மையைப் போக்கி தெய்வத் தன்மை பெற முயற்சிக்கும் அளவுக்கு சுயநல விருப் பொழிந்து பரோபகார சிந்தை மேலிடும். பரோபகார சிந்தனை உணர்ச்சியிலூறி செயலில் மிளிருமாகில் பண்பாடற்ற நாஸ்தீக பொதுவுடைமை வாத மொழிந்து தனி மனித சுதந்திரத்தை மதித்து மெய் நெறி தழுவிய ஒரு பொது வுடமைத் தத்துவம் மக்கள் உள்ளத்தில் உதயமாகும். பலாத்காரமில்லாமல் தனியுரிமை உடைந்து பொது வுடைமை நிலைக்கும். ஒவ்வொருவனும் நித்தமும் ஆலயம் சென்று இறை வழிபாட்டை நிகழ்த்தித் தன்னை ஈச்வரார்ப்பணம் செய்து தன்தன் கடமைகளைப் பரோப கார சிந்தையுடன் செய்து வருவாராகில் ஆத்மா பூரணத்துவம் அடையும். மெய்நெறி வளர்ந்த நாடு செழிக்கும். பலதர வெறிகள் ஓழிந்து சாந்தி நிலவும்.

திருக்கோணேஸ்வரத்தில் கோயில் கொண்டருளி யிருக்கும் எம்பெருமானருளால் அனைவரும் சிவயோக சித்தி எய்தி ஆத்மானந்தம் பெறுவீர்களாக.

ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி.

*குறிப்பு:- ஆலய கருமங்கள் அனைத்தையும் மொத்தத் தில் பூதசுத்தி அந்தரசுத்தி என்று இரண்டாகப் பிரிக்கலாம். கிரியைகள் அனைத்தும் இந்த இரண்டு விதமான தத்துவத்தின் அடிப்படையிலுமே விதிக்கப் பட்டிருக்கின்றன. பல காரணங்களாலும் பஞ்ச பூதங்களின் நஞ்சு கலந்து மக்கள் கொடிய பிணி நோய்களால் பீடிக்கப் பட்டுக் கஷ்ட்டப் படுவதுண்டு. அவ்விதம் நேராமல் ஆலயங்களிற் செய்யும் மகாயாகாதிகளால் பஞ்ச பூதத்தில் கலந்திருக்கும் நஞ்சுகளை அடிக்கடி சுத்தி செய்வதே பூத சுத்தி எனப் படும். பஞ்ச பூதங்களைச் சுத்திகரிக்கும் அதி தீவிர சக்தி கருமங்களுக்கு உண்டு. இன்று பலவித அணுச் சோதனையால் கதிரியக்கம் பரந்து அகாச வெளிக ளெல்லாம் நஞ்சு கலந்து அச்சமும் பயமும் கொண்டி ருக்கும் தற்காலத்தில் ஆலயங்கள் யாகாதி கருமங்களை அடிக்கடி செய்து வருவது மனிதர்களுக்கும் பிராணிகளுக்கும், தேக, தேகிகளுக்கும் மிகுந்த நலனைக் கொடுக்கும்.

பிரார்த்தனை வழிபாடு முதலியனவே அந்தர சுத்தி எனப்படும். அதாவது மனதின் ஆணவ மலங்களைப் போக்கி ஆத்மத் தெளிவைக் கொடுப்பதே. சுருங்கக் கூறின் மனிதர்களுடைய அக, புற வாழ்வின் மேன்மைக்கு அந்தர சுத்தி பூத சுத்தி செய்ய வேண்டியது இன்றியமையாததாகும்.

"ஆலயம்" முற்றும்.

Sunday, 8 February 2015

என்னோட மனிதர்கள்




என்னோட மனிதர்கள் 


"என்னோட மனிதரர்கள்" என்ற தலைப்பில் என்னுடன் பழகிய மனிதர்களை, என்னுடைய மனிதர்களைப் பற்றி எழுதலாம் என்று எண்ணினேன். என் எண்ணத்தின் வேகத்திற்கு எழுத்து இடம் கொடுக்காது என்பது என்னவோ உண்மைதான். எழுத்தென்று வரும்பொழுது அது ஒரு வரையறைக்குள் இலக்கணம் மீறாது, சமுதாய நாகரீகம் மீறாது, உறவுகளின் உணர்வுகளை மதித்து எழுதப்பட வேண்டிய அவசியம் உண்டு.

இதில் உறவுகளின் உணர்வுகளை ஒரு பொருட்டாகக் கொள்ளக் கூடாது என்ற முன் எச்சரிக்கையோடுதான் "என்னோட மனிதர்கள்" என்ற தலைப்பை என்னோட உறவுகள் என்ற தலைப்பில் இருந்து மாற்றி எழுதினேன். உண்மையில் என்னோடு பழகிய மனிதர்களாகவே அவர்களை நான் இன்று இனம் காண்கின்றேன்.

உறவுகள் என்ற புனிதமான ஒரு இணைப்பை அவர்களிடம் இருந்து உணராத வரையில் அவர்களை எல்லாம் வெறும் மனிதர்களாகவே எண்ணிக் கொள்ள வேண்டிய கட்டாயம். மேலும் என் வாழ்வில் பழகிய மனிதர்களின் வீதத்தில் உறவுகள் எல்லாம் வெறும் சிறு பகுதியே. அதிலும் உடன் பிறப்புகளும், இரத்த உறவுகளும் ஒரு வீதம்கூட வரப்போவதில்லை.

நான் ஒரு கவிஞன் என்ற நினைப்பில் எழுதிய கவிதைகளின் பெருந் தொகையான கவிதைகள் என் உடன்பிறப்புகளையும், அவர்களது குடும்பங்களையும் சார்ந்ததாகவே இருந்ததுண்டு. ஒரு சராசரிக் கவிஞனாக அகமும்,புறமும் சேரக் காதலையோ போரையோ பற்றி இல்லாமல், கற்பனையில் விரிந்து வரும் இயற்கையின் வண்ணங்களும் இல்லாமல் வெறுமனே என் உறவுகளின் வக்கரித்துப் போன வாழ்க்கையைப் பற்றியும் அவர்கள் வாழத் தவறிய அல்லது வாழ்வில் காணத் தவறிய நல்லவற்றைப் பற்றியுமே சுற்றிச் சுற்றி வந்தது.

இவற்றை எல்லாம் ஒரு கவிதைத் தொகுதியாக வெளியிட எனக்குள் உடன்பாடில்லை. அந்த ஒரு காரணத்தினால் மட்டுமே இன்று வரை நான் எழுதிய நூற்றுக் கணக்கான கவிதைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக குறைப் பிரசவங்கள் போல கிடக்கின்ற நிலையில் எனது மண உளைச்சல்களுக்கு ஒரு வடிகாலாக இதனை "என்னோட மனிதர்கள்" என்ற தலைப்பில் இன்று எழுத முற்பட்டேன்.

இதில் வரும் சம்பவங்கள் அனைத்தும் உண்மையே. உண்மையைத் தவிர வேறில்லை.இதைச் சம்பந்தப்பட்டவர்கள் வாசிக்க நேர்ந்தால் அல்லது வாசித்தவர்களின் விமர்சனங்களால் தங்களைப் பற்றியே குறிப்பிடப் பட்டிருப்பதை உணர்ந்து கொண்டால் அவர்கள் மனநிலை என்னவாக இருக்கும் என்பதைப்பற்றி எனக்கு ஒரு கவலையும் இல்லை. உண்மையில் அவர்களை கவலைப் படுத்த வேண்டும் என்றோ அல்லது அவரவரின் காரணங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்றோ நான் எதிர்பார்க்கவில்லை. 

எந்தவிதமான எதிர்பார்ப்புகளுமே இல்லாமல் எழுதுகின்ற இந்த எழுத்துக்கள் இன்னொருவருடைய அங்கீகாரத்தை எதிர்பார்ப்பதில்லை. இது என்னுடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளின் வெளிப்பாடே.

09/04/2011

பகுதி பகுதியாக வெளிவரப் போகும் "என்னோட மனிதர்கள்" தொடர்ந்து வாசிக்கும் வகையில் என்னுடைய புளக்கில் பதிவு செய்யப்படும். அதன் லிங்க் அந்தந்தப் பகுதியோடு மேலேற்ற முடிவு செய்துள்ளேன்.
என் தந்தையைப் பற்றி நான் சொல்வதை விட எனது பெருமதிப்பிற்கும், பேரன்பிற்கும் பாத்திரமான ஜெகமண்ணா என்று எங்களால் அழைக்கப் பட்டவரும், பல கவிதைத் தொகுப்புகளை எழுதி வெளியிட்டவருமான டாக்டர் சி.சிவசேகரம் அவர்களால் எழுதப்பட்ட இந்த தொகுப்பை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

பேராசிரியர் சி.சிவசேகரம் அவர்களால் எழுதப்பட்டது.

அசாதாரணமான ஒரு சாதாரண மனிதர் 

இயற்கை அற்புதமானது. அதன் விதிகள் அற்புதமானவை. அவற்றை மீறிய நிகழ்வுகள் என்ற வகையில் அற்புதங்கள் என எதுவும்மில்லை. நாம் இயற்கையை அறிய அதன் விதிகளை அறிய முயல்கிறோம். அதேவேளை அவ்விதிகளை மீறும் அற்புதங்களுக்காக காத்திருக்கிறோம்.அவற்றை நிகழ்த்துவதற்கு இயற்கையில் மிக சாதாரணமான படைப்பான மனிதரிடையே எவரையாவது எதிர் நோக்கி இருக்கிறோம். ஜோசியக்காரர்கள் வருகிறார்கள். வித்தைக்காரர்கள் வருகிறார்கள். துறவு வேடம் பூண்டோர் வருகிறார்கள். நாம் அவர்களிடம் மயங்குகிறோம். பகுத்தறிவுக்கு எட்டாதது என்று நாம் கூறும் பரம்பொருளின் இருப்பை நிலைநிறுத்த தர்க்க முறையிலான வாதங்களையும் விஞ்ஞானத் தகவல்களையும் துணைக்கு அழைக்கிறோம். மனித இருப்பு வெகு சாதாரணமானது என்பதாலேயே அது அற்புதமானது. எளிய விஷயங்களைப் புரிந்து கொள்வதற்கான முயற்சி இல்லாமலே அறிவதற்கு எட்டாத விஷயங்கள் பற்றி நம்மால் தீர்ப்பு வழங்க இயலுமாகிறது. இவ்வாறான முரண்கள் ஆன்மிகம், ஞானம், யோகம் என்ற பேர்களில் ஊக்குவிக்கப்படுகின்றன. தெளிவான சிந்தனையும் நேரான மதியும்  தீர்க்கக்கூடிய விஷயங்களுக்கு யார் யாரையோ தேடி அலையும் நிர்ப்பந்தம் எமக்கு.

புற வளர்ச்சிக்கு மேலாக அக வளச்சியையும் உலக ஞானத்திற்கு மேலாக ஆன்மீகத்தையும் சமுதாயப் பொறுப்புகட்கும்,நீதிக்கும் மேலாக தவயோகத்தையும் வலியுறுத்துகிற சாமிமாரைப் பணக்காரர்களும், பிரமுகர்களும் சூளுகிறார்கள். விளம்பர யுகம் யாரை விட்டுவைக்கிறது. கைக் கெட்டுத் தொலைவிலுள்ள சுடர்விலக்கைவிடத் தொலைவில் மின்னும் வண்ண விளக்குகள் நம்மைக் கவருகின்றன. இவ்வாறான மயக்கங்களினின்று நாம் மீளுமுன் நம் கைக்கு எட்டக் கூடியன காணாமற் போய்விடுகின்றன. சந்திரசேகரம்பிள்ளை அவர்கள் பற்றி நான் எழுதுவதற்கு ஜோதி என்னைக் கேட்டது மட்டுமே காரணமல்ல. நான் அறிந்த நல்ல மனிதர்களுள் அவர் ஒருவர் என்பதும் அவரிடமிருந்து கற்கவேண்டிய நிறைய உள்ளது என்பதும் முக்கியமானவை.

அவரைப் பெயர் குறிப்பிட்டு எழுதுவதோ, பேசுவதோ இதுவே முதன்முறையாக இருக்கலாம். அவரது பிள்ளைகளுடைய பெயரைக் குறிப்பிட்டு, இவரை அவரது அப்பா என்றோ அவரது குடும்பத்தினருடன் போகும்போது அப்புச்சி என்று அவரது பிள்ளைகள் அழைப்பது போலவோ தான் அழைப்பது வழக்கம். அம்மா சந்திரசேகரத்தார் என்று சொல்வது நினைவு. மற்றப்படி அந்த வீடு அயல் எல்லாம் புளியடிமச்சி என்ற பெயராலேயே குறிப்பிடப்படும். அசாதரமானவை என்று நாம் வழமையாகக் கருதும் எதுவிதமான பண்பும் அவரிடமில்லை. பணம், பட்டம், பதவி என்றவாறான அளவுகோளால் மதிப்பிடும் வெற்றிகள் அவருக்குரியனவல்ல. அவற்றின் மீதான மோகமும் அவரிடமிருந்ததாகத் தெரியவில்லை. அதேவேளை மனிதரது தேவைகளும் உணர்வுகளுஞ் சார்ந்த ஆபாசங்கட்கு அப்பாற்பட்டவராகவும் அவர் இருக்கவில்லை. தனக்குத் தெரிந்த வாழ்க்கையை தனக்குத் தெரிந்த நெறிகட்கமைய ஆரவாரமில்லாமலேயே வாழ்ந்தவர் என்று சொல்லலாம்.

அவரது உலகநோக்கு மரபு சார்ந்ததும், பழமை பேணுவதுமான ஒன்று. அதை எல்லார் மீதும் திணிக்கும் நோக்கம் அவரிடம் இருந்ததில்லை.தன்னுடைய வயதையும் அனுபவத்தையும் மற்றவர்களை அடக்கும் ஒரு ஆயுதமாக அவர் பிரயோகித்ததாக நினைவில்லை. வயதுக்கேற்ற மரியாதை என்பது மனிதருடன் பேசுவதிலும் பழகுவதிலும் உள்ள பண்பு என்று மட்டும் வரையறுத்துக் கொள்ளாமல் அதிகாரத்துக்கான தகுதி என்று கருதுகிற மனோபாவம் அவரிடம் இருக்கவில்லை. இதனால் அவருடன் எந்த நேரத்திலும் எந்த சூழலிலும் எதைப்பற்றியும் சமத்துவமான முறையில் பேச இயலுமாயிருந்தது.என்னைவிட நாற்பத்தாறு வயது மூத்தவர் என்ற உணர்விற்கே இடமில்லாமல் பன்னிரண்டு பதின்மூன்று வயதில் கூட அவருடன் உரையாட முடியுமாயிருந்தது.

அவர் கோபப்படாதவரோ கடுமையான மொழி பேசாதவரோ இல்லை. நியாயவீனமானவையும் ஏமாற்றும் கடுமையான கோபத்தை வரவழைப்பதுண்டு. சிலசமயம் நெருக்கமானவர்களுடன் குரலை உயர்த்திப் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். புளியடிமச்சியுடன் இவ்வாறான சூடான வாக்குவாதங்கள் அடிக்கடி நிகழும். ஆனால் அவர்களைப் போல நெருக்கமான கணவன் மனைவி என்று பலர் இல்லை.

பிறர் பொருள் மீது ஆசைப்படாதவர்கள் கூட மற்றவர்களது நல்ல நிலையைப் பார்த்துப் பொறாமைப்படுவதுண்டு. தன்னுடைய நிலையை மற்றவர்களது நிலையுடன் ஒப்பிடுகிற அக்கறைகூட அவருக்கு இருந்ததாகத் தெரியவில்லை. பொய்ப் புகழ்ச்சிக்கான தேவையும் அவருக்கு இருக்கவில்லை. பிள்ளைகளுடைய படிப்பு, தொழில் போன்ற அலுவல்களிலும் அவர் அதிகம் குறுக்கிடவில்லை. இதனால் அதிகம் கெட்டுப் போனதாகவும் தெரியவில்லை. சில பெற்றோர்களினளவுக்கு மிகுதியாக குறிப்பிட்டிருப்பதாயின் அதன் விளைவுகள் எவ்வாறு அமைந்திருக்குமென யாரும் வேண்டுமானால் ஊகிக்கலாம். ஆனால் உறுதியான முடிவுகட்கு வருவது கடினம்.

வேகமாக மாறி வருகிற சமுதாயச் சூழலில் மூர்க்கத்தனமான பொருள் முதல்வாத விழுமியங்கட்கு நாம் பலியாகி வருகிறோம். மரபின் பெயரால் வெறும் சடங்குகளையே பற்றிக்கொண்டு நம்மையே இழந்து வருகிறோம். அந்த மரபில் மனித வாழ்வும் மனித உறவுகளும் தொடர்பான சமுதாய விழுமியங்கள் பற்றிய ஆழமான அக்கறையில்லாதபோது மரபின் நல்ல பண்புகளை இழந்து புதிய சூழலில் தவறான பண்புகளையே நாம் தழுவிக்கொள்ளும் அபாயம் உண்டு. இந்த வகையில் நவீன உலகத்துக்குள் வர ஆயத்தமில்லாத நிலையிலும், அதனுடன் பகையின்றித் தன் வாழ்வைத் தனக்குத் தெரிந்த விதிகட்கு அமையத் தனக்கு உண்மையாக வாழ்கிறவர்கள் போற்றத்தக்கோர். சந்திரசேகரம்பிள்ளை அவர்கள் அவர்களுள் ஒருவர். அவரது பெருந்தன்மை பற்றி அம்மா பலமுறை குறிப்பிட்டிருக்கின்றார். அவரது குறைபாடுகலாகக் காணப்பட்டவை பலவற்றை மீள நோக்கினால் அவை அவரது குறைபாடுகள் அல்லாமல் எங்களது பார்வையின் குறைபாடாகவும் கருத இடமுண்டு. அவருடைய  அந்தக் குறைபாடு மற்றவர்களுக்குக் கேடு செய்யும் வகையிலாவதில்லை. உலகில் உள்ள கபடும் வஞ்சனையும் பற்றி அவர் அறிவார். ஆயினும் தன்னை அவற்றில் ஈடுபடுத்திக்கொள்ள அவர் என்றுமே ஆயத்தமாக இருக்கவில்லை. இதைவிடப் பெரிய  வெற்றி என வாழ்க்கையில் அதிகம் இல்லை.

அவரிடமிருந்து திருக்கோணமலையின் பழைய நாட்கள் பற்றிக் கொஞ்சம் கேட்டறிந்திருக்கிறேன். சம்பிரதாயங்களின் பேரால் நடக்கும் பம்மாத்துக்கள் பற்றிய அவர் கூறிய நகைச்சுவையான கதைகளையும் கேட்டிருக்கிறேன். மேலும் கேட்டிருக்கலாம். ஆனால் அவ்வாறு நிகழவில்லை.வாழ்வின் பல நெருக்கடிகளின் மத்தியில் அவரால் தடுமாற்றமின்றி வாழ முடிந்தது.இது நாம் கற்க வேண்டிய ஒன்று. இதை நன்கு அரிய முடிந்தால் ஞானிகளாகவும் சித்தர்களாகவும் உலா வருகிறவர்களின் பின்னால் ஓட வேண்டிய தேவை இராது என நினைக்கிறேன்.

Friday, 6 February 2015

ஞான‬ மண்டலம் சன்மார்க்க சுகம்



#‎ஞான‬ மண்டலம்


சன்மார்க்க சுகம்


 


சிறந்த ஒரு ஜீவித லட்சியம், ஈஸ்வர பக்தி, சரீர சுகம், மனக் கட்டுப்பாடு, நித்திய கருமங்களில் ஒழுங்கு, ஹிருதய சுத்தி, கரும சுத்தி, குடும்ப ஐக்கியம், இந்த எட்டும் ஒருவருடைய வாழ்க்கையில் அமையுமானால் அவருடைய வாழ்க்கையும் அமிர்தம் உண்டு வாழும் அமிர்த பக்ஷணிகள் போன்று அமிர்த மயமாய் இருக்கும்.

ஜீவகாருண்ணியம், எவரோடும் மரியாதையுடன் பழகுதல், தான தர்மங்கள் செய்தல், பொதுச் சேவைகளை பலேச்சை இல்லாமல் மனப்பூர்வமாகச் செய்தல், எக்காரணம் கொண்டும் அயலவரை வேருக்காதிருத்தல், சமுதாயத்தின் ஒரு பகுதிதான் நாங்களும் என்ற பாவனையுடன் வாழ்தல், அவசியமில்லாத விருந்துபசாரங்களில் குரவத்திர்காக பங்கு பற்றுவதைத் தவிர்த்து அத்தகைய விருந்துபசாரங் களைத் தாங்களும் செயாதிருத்தல், எந்தச் சூழ்நிலையி லும் பொறுமையா இழக்காமல் காரியமாற்றுதல், சூழ் நிலைகளின் நிர்ப்பந்தங்களுக்கு லக்ஷியமும் கொள்கையும் அடிமைப் பட்டுப் போகாத மனத் திடம், உலகத்தவர்களுடைய இகழ்ச்சி, புகழ்ச்சிகளுக்குச செவி சாய்க்காதிருத்தல், காரியம் செய்யும் முன் நிதானமாகப் பலமுறை சிந்தித்துத தெளிவுபடுத்திச் செய்தல், இயன்றளவு கடன் படாதிருப்பதும், படுவதாகில் தனது தகுதிக்குட்பட்டுப் பெறுதல்.

எப்பொழுதும் நல்லவர்களுடன் சவாசம் செய்ய வேண்டும். எல்லாவற்றிலும் சந்தேகம் கொள்வதும், மற்றவர்களைக் குறை கூறுவதும், கண்டத்திலும் கேட்டதிலும் குறை குற்றங்களைப் பார்ப்பதும் அறவே ஒழிக்கப்பட வேண்டும். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் நாணயமாக நடக்க வேண்டும். மனக் கொந்தளிப்பாயிருக்கும் பொழுது எந்த ஒரு காரியத்தையும் முடிவு செய்யாமலிருப்பதும், மற்றவர்களுடைய கஷ்ட நஷ்டங்களில் ஈவிரக்கத்துடன் நடந்து கொள்வதையும் கடைப் பிடிக்க வேண்டும். செய்யும் செயலின் பலாபலனை எண்ணியெண்ணிக் கொண்டிராமல் இறைவனையே தஞ்சமெனக் கொண்டு செயற்படுவதும், உதிக்கும் எண்ணங்கள் எதுவாயினும்சரி இறையுணர்வோடு கலந்து வருமலவிற்குத் தெய்வ பக்தியை ஆழமாக்க வேண்டும். இவைகளை அன்றாட வாழ்விற் கடைப்பிடித் தொழுகினால்  நிஜமான மனச் சுகத்துடன் ஐஸ்வரியமாய் வாழலாம்.

தேகப் பயிற்சி:


ஒருவர் தனது சுய கருமங்களைச் சரிவரச் செய்வதற்கு சரீரம் அதி பிரதானமாய் இருப்பதால் அதனை ஆரோக்கியமாய் வைத்திருக்க வேண்டும். சரீர சுகம் இல்லாதவர்களுடைய ஜீவிதம் கிலேச கரமாய் இருக்கும். உணவு, உறக்கம், தொழில், தேகப் பயிற்சி, மனப் பயிற்சி, இவைகளை ஒழுங்கு படுத்திச் செய்வதால் ஆரோக்கியமான நீடித்த ஆயுள் கிடைக்கும். மற்றைய தேகப் பயிற்சிகளை விட யோகாசனப் பயிற்சிகள் சிறேஷ்டமானவை. சரீரம், மனம், புத்தி, பிராணன் இவைகளைச் சுத்திகரித்து ஒன்றிணைந்து ஒழுங்காக இயங்கச் செய்வதற்கு இதற்கிணையான பயிற்சிகள் வேறெதுவுமில்லை. இது மனிதனில் இருக்கும் ஆற்றல் சக்தியை அதிகரிப்பிக்கும். ஒடுங்கியிருக்கும் சைதன்னிய சக்தி வெளியில் தோன்றிச் செய்யும் செயலுக்கு அபூர்வமான சக்தியளிக்கும் தனியாற்றல் யோகாசனங்களுக்குண்டு. இருக்கும் நோய்களைக் குணப்படுத்தி நோய்த் தடுப்புச் சக்திகளையும் கூட்டும். குறு மூலம் கற்றுச் செய்க.

உணவு:


உண்ணும் உணவுக்கும் மண உணர்விற்கும் நெருங்கிய தொடர்பிருக்கின்றது. மனச் சுகம்; சாந்தம்; சக்தி; நோய் தடுக்கும் சக்தி என்பன உண்ணும் உணவைப் பொறுத்து உள்ளன. இருதயத் துடிப்பு, நாடித் துடிப்பு, இரத்தோட்டம் என்பன சீராகச் செயற் படுவதற்கும் உணவு மிக முக்கிய காரணமாய் இருக்கின்றது. இத்தகைய பெரும் நன்மைகளுக்கு மற்றெல்லா உணவுகளையும் விடத் தாவர உணவு மிக விஷேசமானது. மத்தியான வேளையில் அரை வயிறு உணவினாலும், கார் பங்கு நீரினாலும், மீதிப் பாகம் காற்றினாலும் நிரப்பப் படுவதுதான் சீரான உணவு நியமம். தேகத்தில் இருக்கும் இயற்கையான சத்துக்களை வீண் விரயம் செய்யாமல் இருந்தால் குறைந்தளவு உணவினாலேயே நல்ல ஆரோக்கியமாய் இருக்கலாம். காலை மாலையில் மிகக் குறைந்தளவு உணவும் கூடுதல் நீரும் பருகுவது சிறந்த நன்மை பயக்கும்.

பசுவின் நெய், தேன், மோர், ரசம் இவைகளைத் தினசரி உணவில் அளவாகச் சேர்த்துக் கொண்டால் அநேக நன்மைகளைப் பெறலாம். பசுவின் நெய் நல்ல ஞாபக சக்தியைத் தரும். கிரகிக்கும் தன்மையை அதிகரிப்பிக்கும். புத்தி வளர்ச்சிக்கு விஷேசமானது. அன்றாடம் சரீரத்தில் சேரும் விஷக் கிருமிகளைக் கொல்லும். மண மகிழ்ச்சியை உண்டாக்கும். சாப்பிட்டுத் தன்மைக்குத் தக்கபடி ஒரு கரண்டிக்கு மேற்படாமல் மத்தியான உணவின் முதல் சாதத்தில் கலந்து உண்ணவும். நெய்யை அவ்வப்போது உருக்கி உபயோகிக்க வேண்டும்.

தேன்:


இதில் இரும்பு போன்ற அநேக உலோகச் சத்துக்கள் தாராளமாய் இருக்கின்றன. அனேக நோய்களைச் சுகப்படுத்தும் ஔஷதத் தன்மையுடையது. தேனில் போட்டு வைக்கப்படும் பொருட்கள் நீண்ட காலம் கேட்டுப் போகாமல் இருப்பதில் இருந்தே இதன் மகிமையைத் தெரிந்து கொள்ளலாம். பதினைந்து துளி எலுமிச்சம் பழம் பிழிந்து வடித்தெடுத்த சாற்றில் இரண்டு தேக்கரண்டி தேனைக் கலந்து இருவேளை பருகி வந்தால் ஹிருதய ரோகத்திற்கு நன்று. நாடித் துடிப்பைச் சீராக்கி விடும். காலையில் எழுந்தவுடன் உள்ளங்கையில் சிறிதளவு தேனை விட்டு நக்கிச் சாப்பிட்டு வந்தால் அனேக குடல் வியாதிகள் நீங்கும். நீரிற் கலந்தும் மற்றும் உணவுகளுடன் கலந்தும் சாப்பிடலாம். ஆத்ம சாதனைக்கு அனுகூலமானது.

மோர்:


வெண்ணெய்யை நீக்கி எடுத்த மோரை நீரில் கலந்து உணவின் கடைசிப் பகுதியில், உணவுடன் கலந்தோ அல்லது தனியாகவோ உபயோகித்து வந்தால் இரைப்பை  ஒழுங்காக இயங்கும். தீபன சக்தியை உண்டாக்கும்.

ரசம்:


தினசரி ரத்த நாளங்களிற் சேரும் கொழுப்பைக் கரைத்து, இரத்த ஓட்டத்தைச் சமப்படுத்தும். இரத்த அமுக்கம் வராது. கடைசி உணவுடன் கலந்தோ கலக்காமலோ உபயோகிக்கலாம். நெய், தேன், மோர், கீரை இவை நான்கும் இராக் காலங்களில் உண்பது நல்லதல்ல. முளை கட்டிய பாசிப் பயற்றைப் பச்சையாகவோ தேன் கலந்தோ  பாவிப்பதும், எள்ளும் பேரீச்சம் பழமும் சேர்த்திடித்த உருண்டைகளை உண்டு வந்தால் அதிக போஷாக சத்தும் ஊட்டச் சத்தும் கிடைக்கும். கிழங்கு வகைகளை விடக் காய் பிஞ்சுகள் கூடுதலான சத்து நிறைந்தவை.

வாரம் ஒருமுறையாவது உச்சியிலிருந்து பாதம் வரை எண்ணெய் தேய்த்து ஸ்நானம் செய்வது சொல்லரிய நன்மைகளைத் தரும். போன்னாவரசுப் பூ அல்லது சமூலம் அவித்த நீரை நாள் தோறும் பருகி வந்தால் இரத்த விருத்தி உண்டாகும். தாகம் தணியும். நீரழிவு வியாதிகளுக்கு மிகவும் நன்று. தேக சாந்தியைத் தரும். இரவு படுக்கைக்குப் போகு முன் குளிர்ந்த ஜலத்தில் பாதங்களை நன்றாகக் கழுவிச சுத்தப் படுத்தித திரிபலாதி சூரணத்தை ஒரு கழஞ்சளவு சர்க்கரையிற் குழைத்துச் சாப்பிட்டுப் படுக்கவும். இது அனேக நோய்களைக் கண்டிக்கும். மல சோதனையைச் சரிப் படுத்தும். வாத பித்த கப தோஷங்களைத் தீர்த்து உழைச்சல், பிடிப்பு, வலிகள் ஒன்றுமில்லாமல் தேகம் சுகமாயிர்க்கும். எளிதான இம்முறைகளை அனுசரித்து வாழ்ந்தால் நோய்கள் குறைந்து நீடித்த ஆயுளுடன் சுகமே வாழலாம்.

உறக்கம்:


எண்ணற்ற எண்ணங்களின் தாக்கத்தால் களைத்துப் போன மனம் தானாகவே மேற்கொள்ளும் ஒரு குறுகிய ஒய்வு காலந்தான் உறக்கம். எவ்வளவு நேரம் உறங்க வேண்டும் என்பதை விட, எப்படி உறங்கியது என்பதுதான் முக்கியம். கனவுகளும் மன அலட்டலும் இல்லாமல் இருந்தால் குறைந்த நேர உறக்கம் போதுமானது. உறக்கத்தி இருந்து விழித்தால் புத்துணர்வும் அமைதியும் சந்தோஷமுந் தோன்றுமே ஆகில் அதுவே திருப்திகரமான நல்லுறக்கம்.

தொழில்:


தொழில் ஏற்ற தாழ்வுகள் இல்லை. ஜன்ம வாசனைக் கேற்றவாறு எத்தகைய தொழிலாயினும் சரி அதனைச் சுய தர்மமாகவே ஏற்க வேண்டும். லாப நஷ்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் தொழிற் கடமைகளை அந்தரங்க சுத்தி, பொறுப்புணர்ச்சி, பலாபலனில் பற்றுதல் வைத்துப் பலகாமளிருத்தல் போன்ற நெறியான வழிகளைக் கடைப் பிடித்துச் செய்து வந்தால் எத தொழிலும் உத்தமமானதே யாகும்.

குடும்பம்:


ஒரு குடும்பத்தின் சகல ஐஸ்வரியங்களும் அக் குடும்பத்தின் ஐக்கியத்தில் தங்கியிருக்கிறது. குடும்பத்தில் எள்ளளவேனும் பிளவிருக்குமேயானால் குடும்ப வளர்ச்சியும் சந்தோஷமும் குன்றிவிடும். முயற்சிகள் வீணாகும். சதா ஒரு சின்னப் போர்க்களம் போன்ற நிலை உருவாகும். நரக வேதனைதான் நித்திய அனுபவமாய் இருக்குமாகையால் இல்லற ஐக்கியத்தில் கண்ணும் கருத்துமாய் இருப்பது அவசியம். பெண்கள் பெண்களுக்கு இருக்க வேண்டிய பெண்மைக் குணத்துடனும், ஆண்கள் ஆண்களுக்கு இருக்க வேண்டிய புருஷ தருமத்துடனும் குடும்பத்தை நடத்துவர்கலாகில் ஐக்கியம் நிலைக்கும். அவ்வப்போது இருக்கும் மனோபாவத்தை அன்னியோன்னியம் உணர்ந்து சகிப்புத் தன்மையுடன் நடந்து கொண்டால் குடும்பப் பிரச்சனைகள் ஒரு போதும் தோன்றா. சந்தேகத்திற்கு இடமில்லாமல் நடைமுறைகள் தெளிவாகவும் ஆத்மார்த்தமாகவும் இருக்க வேண்டும். குடும்பத்தின் ஐஸ்வரிய தேவதையை ஆகர்ஷணம் செய்தெடுக்க வேண்டியது வக்ஷ்சுமியின் பிரதி ரூபங்களாகிய பெண்கலாகையால் அவர்கள் மிகப் பொறுமையுடனும், களங்கமற்ற அன்புடனும், இருதய சுத்தியுடனும் எல்லாவற்றிலும் இணங்கியும் இணைந்தும் குடும்பத்தை நடத்த வேண்டிய முக்கிய பொறுப்பு அவர்களிடம் இருக்கின்றது. ஒரு குடும்பத்தில் சுகமும் திருப்தியும் ஸ்ரீதேவிகளாகிய பெண்களுடைய பாவன இருதயத்தில்தான் தங்கியிருப்பதாகையால் அவர்களைப் பூஜிக்கத் தக்கவர்களாகவே கருத வேண்டும். குடும்பம் முழுவதும் ஒரே லட்சியத்தின் கீழ் இணைவதுடன், நியாயமான முயற்சியாற் கிடைக்கும் ஊதியத்தில் பரிபூரண திருப்தியுடனும் வாழ வேண்டும். இவ்வாறான இல்லற தர்மத்துடன் வாழும் இல்லம் அஷ்ட ஐஸ்வரியங்களின் விளை நிலமாகவே இருக்கும்.  ஒரு நல்ல குருவின் துணியை நாடி வாழ்வது மிக நன்று.

குழந்தைகள்:


குழந்தைகள் நல்லவர்களாக வளர வேண்டும் என்றால் பெற்றோர்கள் நல்லவர்களாகவே வாழ வேண்டும். பூர்வ ஜென்ம வாசனைகள், பெற்றோர்களின் குண விஷேசங்கள், சகவாசம் இவை மூன்றும் சேர்ந்துதான் ஒருவருடைய வாழ்க்கை நிர்ணயிக்கப் படுகின்றது. இதைக் கருத்தில் வைத்துப் பிள்ளைகளை வளர்க்க வேண்டும். திருத்த வேண்டிய இடத்தில் சாம, தான, பேத, தண்டங்களைக் கிரமமாயும் சாதூரியமாயும் உபயோகிக்க வேண்டும். அவசர புத்தியும் கோபமும் வளர்ப்பு முறையில் ஆகாது. வயதையும் பருவ வித்தியாசத்தையும் கருத்திற் கொண்டு அதற்கேற்ற முறையில் மிக நிதானமாகவும் கரிசனமாகவும் நடந்து கொள்ள வேண்டும். எப்பொழுதும் நல்ல சகவாசத்திற்குரிய சூழ்நிலையை அமைத்துக் கொடுக்க வேண்டும். சரீர உணர்ச்சிகளைத் தூண்டிவிடும் உணவுகளைக் கொடுக்காமல் வளர்ப்பது நல்ல குணங்களை வளர்க்கும். எல்லாவற்றையும் விட ஒழுக்கந்தான் சிறந்ததென்ற கருத்தில் குழந்தைகளை வளர்ப்பது அதி முக்கியமானது.

தினசரி கருமங்கள்:


குறைந்த பட்சம் காலையில் நாலு மணிக்காவது எழுந்திருக்க வேண்டும். படுக்கையில் இருந்தபடி சிறிது நேரம் மானசீகமாக இறை வணக்கம் செய்க. செய்தபின் இரு நாசியிலும் ஓடிக் கொண்டிருக்கும் சுவாசத்தைக் கவனிக்குக. நாசியில் கைவைத்துப் பார்த்தால் ஒன்றில் கூடுதலாகவும் மற்றதில் குறைவாகவும் ஓடிக் கொண்டிருப்பதை அறியலாம். கூடுதலான சுவாசம் ஓடும் நாசியின் பக்கமிருக்கும் கன்னத்தில் அதே பக்கமிருக்கும் கையால் கொஞ்ச நேரம் மிருதுவாய்த் தடவிகே கொடுக்கவும். தடவி முடிந்த பின் அதே பக்கமிருக்கும் கால் பேரு விரலை நிலத்தில் ஊன்றி எழுந்து சென்று ஒரு கிண்ணம் குளிர்ந்த ஜலத்தைப் பருகவும். யோக ரகசியமாகிய இப் பெரும் கிரியை மனத்திலும் சரீரத்திலும் ஆச்சரியகரமான நற்பலனை விளைவிக்கும்.

சகல விக்கினங்களையும் தீர்த்துக் கடைமைகளில் வெற்றியைத் தரும். அதற்குப் பின் மலசல மோசனஞ் செய்து பல் துலக்கி யோகாசனப் பயிற்சிகள் செய்க.இது செய்ய முடியாதவர்கள் சிரசிலிருந்து பாதம் வரை ஒரே பாங்கில் சாவகாசமாய் உடலை நன்றாகத் தேய்த்து விடவும். குழந்தைகள், கர்ப்பிணிகள், நோயாளிகள், வயோதிபர்கள் யோகாசனப் பயிற்சி பெற்றவர்களின் உபதேசப்படி செய்ய வேண்டும். ஆசனப் பயிற்சி முடிந்து ஐந்து நிமிடங்களுக்குப் பின் வழமையாய் குடிக்கும் ஏதேனும் பானங்களைக் குடித்துக் கொஞ்சம் ஓய்வாய் இருந்த பின் ஸ்நானம் செய்யவும். ஸ்நானம் செய்ய முடியாதவர்கள் ஈரச் சீலையால் துடைத்துச் சுத்தம் செய்து பூஜை அறைகளிருந்தால் அல்லது சுத்தமான வேறேதும் ஓரிடத்தில் அமர்ந்து இறை வலிபாடியற்றித் தகுதிக்கும் நேரத்திற்கும் தக்கபடி பிரணாயாமம், ஜெபம், தியானம் முதலியன செய்க. இவைகளை அவரவர்க ளுடைய குரு மூலம் கற்றுக் கொள்க.

சாதனைகள் முடிந்த பின் தன் தன் நித்திய கடமைகளைச் செய்யத் தொடங்கவும். மாலையிலும் நேரத்துக்குத் தக்க படி இறை வணக்கம், ஜெபம், தியானம் செய்க. ஜெபம், தியானம் செய்ய இயலாதவர்கள் தேவார திருவாசகங்கள் அல்லது பஜனைப் பாடல்களை மனமுருகிப் பாடி வழிபாடு செய்க. வழிபாடும் சாதனையும் எதுவாயினுஞ் சரி, செய்வது உங்களுடைய ஆத்மாவைத் தொடும் வண்ணம் மனமுருகிச் செய்க. தினசரிக் கடைமைகளின் போது அடிக்கடி இறைவனை நினைவு கூறுக. நாமத்தை மானசீகமாய் உச்சரிக்குக. படிப்படியாக வாழ்க்கையின் எல்லா வசங்களிலும் சதா இறைவனுடைய சிந்தனை சகஜமாய் வருமலவிற்குச் சிந்தனையை வளர்த்தேடுக்குக.

மெல்ல மெல்ல உங்களுடைய முக் கரணங்களையும் அது - மயமாக்கி விடுக்க. உங்களுடைய விசுவாசத்திற்கும் ஆறுதலுக்கும் இறைவனைத் தவிர வேறொன்றும் இவ்வுலகத்தில் இல்லையென்ற போதத்துடன் அந்தத்  திவ்ய சக்தியில் இணங்கிச் சேர்க்க. இவ்விதம் உங்களை நீங்களே உயத்திக் கொள்வீர்களாகில் எந்த ஒரு வாழ்க்கைத் தருமத்தின் கீழ் வாழ்வதாயினும், ஜாதக பலன் எவ்வாறிருந்த போதிலும் எல்லாம் அனுகூல சுகமுடையதாயமையும். இறுதியில் மாயா சக்தியின் கெடுபிடியில் இருந்து நீங்கி, முத்தராய்த் தொல்லைகளற்ற சாசுவதமான இன்பத்துடன் ஜீவித கருமங்களை முடிக்கலாம். சாதாரண வாழ்க்கைத் தருமங்களைப் புறக்கணிக்காத இந்த எளிதான ஜீவித கிரமங்களை அனுசரித்து வாழ்ந்து உங்களைத் தெய்வ தரிசனம் பெறுவதற்குத் தகுதி உடையவராக்கித் தீர்க்குக.

ஞான மண்டலம் முற்றும்.