Thursday, 23 January 2014
கண்ணாடியுளிருந்து கவிதைகள் முப்பத்தெட்டு
தவம்
ஆதி மனிதர்கள் அவனை வானில் முளைத்த நெருப்பு என்று கணந்தோறும் பயந்தார்கள்.யுகங்கள் கழிய பயங்கள் வியப்பாகின்றன. கிரேக்கர்கள் அவனை அப்போலோ என்றழைக்கத் துவங்கினர். அவனுக்கென கையில் யாழொன்றையும் கண்டனர். வைத்தியனாதலால் சூர்யவெளிச்சம் என்ற நாளாந்த அனுமானத்தை வாழ்விற்குப் புலப்படுத்திக் கொண்டிருக்கிறான். ஒளியும் ஒளி இழைகளின் இடுக்கில் வசிக்கும் இருளும் அவனது கலை. அவனது கலையும் வைத்தியமும் சங்கமிக்கும்போது அவன் பேருணர்வுகளின் உதரமாகிறான்.
ஆனால் நான் எழுதமுயர்சிக்கும்போது மட்டும் அவன் குகையாகிறான். எனது சித்தாந்தங்கள் வேட்டை நாய்களாக அவனைத் தேடுகின்றன. அவற்றின் குரல்கள் மனசின் கானக மரங்களில் மோதி எதிரோளிகலாகச் சிதறுகின்றன. "டேஃப்னே, டேஃனே"என அப்போலோ தான் காதலித்தவளைப் பின் தொடரும் குரல் எனது சித்தாந்தங்களின் குரைப்பில் கேட்கிறது. டேஃனேயை அவனால் தீண்ட முடியவில்லை. மரமாகிவிட்டாள். அவள் கன்னிமையின் நிழலில் நான் நிற்கிறேன். அதன் இலைகளை ஒடித்து அப்போலோவைப் போலவே சிரசில் அணிந்து கொள்கிறேன். எழுத வேண்டியதில்லை எனத் தோன்றுகிறது. உள்ளிருந்து ஒரு புதிய இயல்பு பிறக்கிறது.என் விரல்களை மடித்து கைகளையும் கட்டிக்கொள்கிறேன். வேட்டை நாய்கள் முயல்களையும் முள்ளம்பன்றிகளையும் தேடி ஓடட்டும். எனது பிடரியில் குடியிருக்கும் இருள் கலைந்து புறப்பட்டு நிசப்தத்தில் வானை நிரப்புகிறது. மூச்சின் இறகுகள் நுரைஈரலிறக்கைகளுள் மடிகின்றன.
சூர்யன் தன் உத்தரக்கோதுக்குள் ஆழ்ந்து கருவாகிறான். எல்லையற்று ஒடுங்கிக்கொண்டிருக்கிறான்.
தவம் 1 23/01/2014
அறைகூவல் 2
இது
புவியை நிலவாக்கும்
கண்காணாச் சரக்கூடம்.
நடுவே
நெருப்புப் பந்திழுத்து
உள்வானில் குளம்பொலிக்கப்
பாய்ந்துவரும் என்குதிரை.
பாதை மறைத்து நிற்கும்
மரப்பாச்சிப் போர் வீரா!
சொல்வளையம் இது என்றுன்
கேடயத்தைத் தூக்கி என்னைத்
தடுக்க முனையாதே.
தோலும் தசையும்
ஓடத்தெரியாத
உதிரமும் மரமாய்
நாடு மனமும் மரமாகி
விரைவில்
தணலாகிக் கரியாகும்
விற்குப் போர்வீரா!
தற்காக்கும் உன் வட்டக்
கேடயம்போல் அல்ல இது.
சொற்கள் நிலவு வட்டம்
ஊடே
சூரியனாய் நிலைத்(து)எரியும்
சோதிஒன்று வருகிறது.
சொல்வளையம் இது என்றுன்
கேடயத்தைத் தூக்கி என்னைத்
தடுக்க முனையாதே
தீப்பிடிக்கும் கேடயத்தில்
உன்கையில் கவசத்தில்
வீசத் தெரியாமல்
நீ
ஏந்திநிற்கும் குறுவாளில்
யாரோ வரைந்துவிட்ட
உன்
மீசையிலும்!
நில் விலகி,
இன்றேல்
நீறாகு!
24/01/2014
குருஷேத்ரம் 3
இன்று வேலை நிறுத்தம்!
'கடமையைச் செய்
பலனை எதிர்பார்க்காதே'
என்று சொல்லிவிட்டு
காரில் நழுவப் பார்த்த
கன்னபிரானுக்குக்
கல்லடி
சுவரெங்கும்
பசிவேத சுலோகங்கள்.
அர்ச்சுனன் கிளைத்து
அரக்கனாய்
கார்த்தவீர் யார்ச்சுதனாய்
தலை ஆயிரம்,
கை இரண்டாயிரம்.
கண்ணபிரான் நெற்றியிலே
உதிரத்தின்
நாமக் கோடுகள்.
விஸ்வரூபத்துக்கும்
முயற்சிக்க வலுவில்லை.
இருந்த கால்களில்
எழும்ப முயன்றான்.
'கீதையைக் கேட்க
அர்ச்சுனன் இல்லையென்றால்
கூப்பிடு கௌரவரை' என்றான்.
பறந்தது போன் செய்தி
பொலீசுக்கு.
(உன் ) பெயர் 4
சீர்குலைந்த சொல்லொன்று
தன் தலையைத்
தானே
விழுங்கத் தேடி
என்னுள் நுழைந்தது.
துடித்துத் திமிறி
தன்மீதிறங்கும் இப்
பெயரின் முத்தங்களை
உதறி உதறி
அழுதது இதயம்.
பெயர் பின் வாங்கிற்று.
'அப்பாடா' என்று
அண்ணாந்தேன்.......
சந்திர கோலத்தில் மோதியது
எதிரொலிக்கிறது.
இன்று, இடையறாத உன்பெயர்
நிலவிலிருந்திறங்கி
என்மீது சொரியும் ஓர்
ரத்தப் பெருக்கு.
25/01/2014
கலப்பு 5
ஒரு பாப்பாத்தி நகத்தோடு
என் பறைநகம் மோதி
மனம் அதிர்ந்தது.
கோபத்தில் மோதி
கலந்தன கண்கள்.
பிறந்தது
ஒரு புது மின்னல்.
ஜாதியின்
கோடைமேவிப் பொழிந்தது
கருவூர்ப் புயல்.....
வசன கவிதை சுவர்கள் 6
மனசின் இருண்ட அனுஷ்டானங்கள் என்னை வீடு திரும்ப விடாது தடுத்துக் கொண்டிருக்கின்றன.
இருண்ட கானகக் குரல்களின் ஊர்வலம் ஒன்று நகரச் சந்தையில் அலைகிறது.
வீடு திரும்பும் வழி தெரியவில்லை.
அன்று.....
ஒரு மாட்டுக் கொட்டிலின் மஞ்சள் வைக்கோல் மீது பிறந்து கிடந்த சிசு மூன்று சக்கரவர்த்திகளை நோக்கி திறந்த பாலைவெளியினூடே
ஒரு நக்ஷத்திர அழுகையில் அழைத்து வழி காட்டிற்று.
நான் சக்கரவர்த்தியுமல்லன்.
சூழச் சுவர்களின் இனம் மூடும் நகர் ஒரு திறந்த வெளியுமல்ல.....
பாலையாயினும்
வீடுகள் யாவும் வாயிளித்து ஆபாஸமான பசியைப் போன்று நிற்கக் கண்டவனாயினும்
வீடு
ஒன்றுண்டெனவே எண்ணுகிறேன்.
இந்த சுவர்களினுள் விழுங்கப்பட அல்ல.
கருவாகி
புனிதத் தசைகளில் ஊறும் ரத்தச் சுனையைக் காண.
(லக்ஷிமிக்கு)
29/01/2014
முதுமை 7
காலம் பனித்து விழுந்து
கண்களை மறைக்கிறது.
கபாலத்தின் கூரையுள்
ஒட்டியிருந்து
எண்ணவலை பின்னிப்பின்னி
ஓய்கிறது மூளைச் சிலந்தி.
உணர்வின் ஒளிப்பட்டில்
புலனின் வாடைக்காற்று
வாரியிறைத்த பழந்தூசு.
உலகை நோக்கிய
என்விழி வியப்புகள்
உயிரின் இவ்வந்திப்போதில்
திரைகள் தொடர்ந்துவரும்
சவ ஊர்வலமாகிறது.
ஒவ்வொரு திரையிலும்
இழந்த இன்பங்களின்
தலைகீழ் ஆட்டம்.
அந்தியை நோக்குகிறேன்.
ஏதோ எரிகிறது.....
ஒன்றுமில்லை,
பரிதிப் பிணம்.
பூர்ஷுவா 8
வம்பளப்பு,கண்ணடிப்பு,
கண்ணாடியில்
டீயை எதிர்பார்த்திருக்கும்
பிரதி பிம்பங்கள்.
சீனத்துக் கோப்பைகளில்
வெள்ளையன் கரண்டிகள்
சிந்திய சிரிப்புகள்.
எங்கள் முறுவலிப்பு
முறைக்கும்.
தேசம் திருகி
வலம் இடமாகும்.
காலமும் திருகி
நேற்றையது நாளையாய்
நாளை நேற்றாகும்.
யாவும் உருகி
நீராகும்.
அனால் நாமோ
முறுவல் என்று
முறைப்போம்.
யாவற்றையும் கண்டு
கண்ணாடியில்
நிச்சலனமாய்க் காத்திருக்கும்
பிரளயம்.
ஃ
30/01/2014
பேச்சு 1 9
கேள்,
அழகு கதைக்கிறது.
ரத்தப் பளபளப்பு.
கண்ணின் இமைக்கரங்கள்
மெல்ல அருகளைக்கும்.
பார்வைச் செவிப்பறையில்
பருவம் முரசறையும்.
பூவின் இதழ்ச் சுவருள்
வண்டுக் குரல் ஒலிகள்
மோதி மடிகிறது.
முத்தத் திரைமறைவில்
பேச்சுப் புதைகிறது.
ஆனால்,
ரத்தம் கதைக்கிறது.
மௌனம் அதிர்கிறது.
(நன்றி: 'எழுத்து')
பேச்சு 2 1௦
கருத்தழிவின் கழிவு
காதலன் பிதற்றல்.
அவள் சொல்லோ
வெறும் பார்வை.
வெறும் விரல்கள்
மணலில்
விட்ட வடுக்கள்.
(நன்றி: 'நடை')
விடிவு 11
பூமித் தோலில்
அழகுத் தேமல்.
பரிதி புணர்ந்து
படரும் விந்து.
இருளின் சிறகைத்
தின்னும் கிருமி.
வெளிச்சச் சிறகில்,
மிதக்கும் குருவி.
(நன்றி: 'எழுத்து')
31/01/2014.
அடிமனம் 12
முட்டித் ததும்பியென்ன?
மாலையில் பகல் வடிகிறது.
ஒளி ஒதுங்கிய இரவாகிறது.
கதிர்
எங்கோ சொட்டி
விளைந்தன தாரகைகள்,
பகலின் துளிகள்.
என் மன அகலிகையின்
நிறைவின்மை முடிவுற்று
வாழ்வு கரவாகிறது.
இனி என்ன?
கௌதம உக்கிரத்திற்கு
ஒரு போலி.
போலிப் பரிதி.
ஒரு போலி வைகறை.
உதிக்கிறது எங்கும் ஒரு
திருட்டுத் தெளிவு.
இந்திர நிலவு.
பாதி தெளிந்து
ஆடை கலைந்து
வெளிர்கிறது மனவெளி.
ஒலியற்றுச் சிரித்து
மனம் பதைக்கும் புணர்ச்சிக்கு தனித்து
வெறிச் சோடிய தெருவெங்கும்
அழுகி வடியும் விளக்கின்
வாழ்த்தொளி.
இது நிகழ்ந்த சமயம்
இடமற்ற
மனோவேளை.
(நன்றி: 'கசடதபற')
வசன கவிதை வருகை 13
இரு துவங்களிலுமிருந்து சுவர்கள் முளைத்து அறையாகின்றன.
சூர்யக் கூரையிலிருந்து தொங்கும் ஒரு ஆகர்ஷணத் தூணியுள், அறைவாசி காமம் மேலிட்டுத் தவிக்கிறான்.
நக்ஷத்ரன்களினூடே, இன்னொரு மானுஷ்யத்தைத் தேடி அலைகிறது அவளது காம வாடை.
பிரபஞ்சம், நுகரும் புலன்களற்று, வெற்றுப் பார்வை பார்த்து. விடாயைக் கூட்டுகிறது.
ஒளிமண்டலங்களிடையே பிளக்கும் அகாதம் தூளியில் தவிப்பவளை நோக்கி வந்து புகுந்தபடியே இருக்கிறது; முடிவற்று விடாய்தீர்கிறது. உணராது அவள் தவிக்கிறாள்.
ஃ
01/02/2014
அற்புதம் 14
துருப்பிடித்த
இரும்புக் கொடுகளினூடே
சிதறும்
பயனற்ற
உப்பு நீர்ப் பாறைகள்.
வரண்ட நதிபோல் கிடக்கும்
ஒரு துறைமுகத் தெரு
எங்கும்
இரும்பின் கோஷம்,
முரட்டு இயக்கம்.
ஒரு தொழிலாளி
சூரியனை அவனது சிரசு மறைக்க
பனை உயர கிரேனின் உச்சியிலிருந்து
பீடிப் புகையோடு
காறித் துப்புகிறான்.
அற்புதம்.
விரல்கள் வில்நீத்த அம்பாய் நடுங்க,
பரிதியின் விரித்த கையிலிருந்து
ஒரு மழைத்துளி பிறக்கிறான்.
முகத்தில்
வைரத்தின் தீவிரம்.அவள்
மூளையில் ஒரு வான வில்.
எச்சல் துளி
என் விழிப்பந்தில் வீழ்கிறது.
அக்கணம், ஒரு கணம்
கிரேன்கள் லாரிகள் யாவும்
தொழிலற்றுச் சமைந்தன.
வசன கவிதை தவிப்பு 15
தவிப்பு, நம்பிக்கையின் இனிய துகள்களாய் சிதறி விழுகிறது.
மனிதச் சிறுவர்கள், இரவினூடே யாவற்றையும் தேடிப்பிடித்தாராய்ந்து விளையாடுகின்றனர்.
எல்லையின்மை தவித்துத் தவித்து, சிதறியபடி ஆராய்வுக்ககப்படாது விரிந்தகல்கிறது.
இந்த இரவுகளில் சிறுவர்களின் ஆய்வுக்கருவிகள்தான் விழித்திருக்கின்றன.
ஆய்வுக் கூடங்களில் எல்லையின்மையை செயற்கை கருப்பைகளில் சிறையிடுகின்றனர்.
கருவையும் நிர்மாணிக்கின்றனர். காத்திருக்கின்றனர்.
கருப்பை வெடிக்கிறது.
அழிவு.
சரித்திரம், காலம், மனிதச்சிறுவனின் நம்பிக்கைகள்.......இனியதுகள்கள் சிதறிக்கொண்டிருக்கின்றன.
ஃ
02/02/2014
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment