Sunday, 12 January 2014

வஜனாம்ருதம் தொடர்ச்சி 3






ஆன்மீகப் புத்தகமோ 
அத்வைத வித்தகமோ 
"நான்" கடந்த தத்துவமோ 
ஞானத்தின் மேய்த்தவமோ 
தேன் கடந்த தித்திப்போ 
தேவ நிலை சித்திப்போ 
வான் கலந்த குருமணியே!
வாழ்த்துகிறோம்! வணங்குகிறோம்!!


101. மதுவை அமுதம் என்று கருதும் அசுரர் போன்று அஞ்ஞானி சிற்றின்பத்தை பேரின்பம் எனக் கருதுகிறான்.

102. புலிக்கு அறியுந்தன்மை நுகர்ச்சியிளிருப்பது போன்று, ஞானியின் அறிவும் அகக்கண்ணில் இருக்கின்றது.

103. சக்தி திரண்டு பொருளாவது போன்று நிலையான சக்தி திரண்டு ஞானமாகிறது.

104. கருவுற்றிருப்பவர்களுக்கு அன்னத்துவேஷம் உண்டாவது போன்று ஞானக் கருவுற்றிருக்கும் ஞான
சாதகனுக்கு விஷய சுகங்களில் வெறுப்பு உண்டாகிறது.

105. கடம்புப்பால் குடல் அழுக்கை நீக்கும் கன்றுக்குட்டி போன்று ஞான சாதகன் ஞானப்பால் குடித்து அக மலங்களை நீக்கிய வண்ணம் இருப்பான்.

106. புறப்பார்வையிலிருக்கும் துரம், இடைவெளி, நேரம், காலம் முதலியவை அகப்பார்வையில் இருப்பதில்லை.

107. ஞானமும் பக்தியும் இரு கண்கள் போன்றவை. ஞான சாதகன் நிலைத்த பொறுமையுடையவனாகில் குறியின்கண் நெருங்கிக் கொண்டிருப்பதாகக் கருதலாம்.

108. உண்ணும் மருந்து பலிதமாவதற்குப் பத்தியம் அவசியமாயிருப்பது போன்று தவப் பயனுக்கு பிரமசாரியம் என்ற பத்தியம் அவசியமாகும்.

109. கடமை என்பது லௌகீகச் செயலாயிருந்தாலும் அதில் அன்பும், தியாகமும் கலக்கும் பொழுது ஞான சாதகமாக மாறுகின்றது.

110. தேனில் ஊறவிட்ட பழச்சுளைகள் கெட்டுவிடுவதில்லை. அதேபோன்று இறை சிந்தனையில் ஊறியிருக்கும் மனமும் புத்தியும் எக்காலமும் கெட்டுவிடுவதில்லை.

111. பிரபஞ்ச வாசனைகள் அற்றிருக்கும் மனம் ஆழமான மௌன சுகத்தை அனுபவிக்கின்றது. நீரைப் பிரித்துப் பாலை மாத்திரம் உண்ணும் பறவையை அன்னமென்பர். அன்னத்தைப் போன்று தன்னிலிருக்கும் அசத்தைப் பிரித்து சத்தை மட்டும் உண்ணுகின்றவனை ஞானி என்பர்.

112. ஆசையின் மத்தியில் அசைவற்றிருக்கும் இரகசியத்தை அறிந்தவனை ஆசைகள் தீண்டுவதில்லை.

113. சர்வ சக்திதரனும், சர்வ வியாபியுமாகிய இறைவனை எல்லா மதத்தவர்களும் ஏகோபித்து வழிபடுகின்றனர். அதே இறைவன் பெயரைச் சொல்லி எல்லா மதத்தினரும் ஒன்றோடொன்று மோதி வாழ்கின்றனர். என்ன மதியீனம்.

114. அன்பு என்பது ஒரு நல்ல மன விகாரம்.பக்தி என்பது மனத்தைக் கடந்த விளக்க முடியாத அற்புத ஆத்மசுகம்.

115. கோது, சுளை, வித்துக்குள்ளே இருக்கும் பீஜம் போன்றே முறையே மதம், பண்பாடு, தர்மம் அமைந்திருக்கின்றது.


116. பண்பாடு என்பது தர்ம நெறியிலிருந்து புடம் பண்ணியெடுத்த நல்லதோர் பழக்க வழக்கமாகும்.

117. வியாதிக்கு ஔஷதம் போன்று வாழ்க்கை என்ற வியாதிக்கு ஔஷதமாயிருப்பது தர்மம்.

118. சரீரம்,நித்தியம் என்றும் அநித்தியம் என்றும், வாதிட்டு வீணே காலம் கழிப்பவர்கள் சரீரத்தை உள்ளபடி பிரயோசனப்படுத்தத் தெரியாத வீணர்களேயாகும். சரீரத்தை மிஞ்சிப் போற்றுவதும் தூற்றுவதும் குற்றமாகும்.

119. விஷத்தை விஷ வித்தையால் இறக்குவது போன்று அஞ்ஞானம் என்ற விஷத்தை ஞானம் என்ற ஔஷதத்தால் சுகப்படுத்தலாம்.

120. திசை அறிகருவி திசையைக் காட்டுவது போன்று உண்மையான வாழ்க்கையின் திசையைக் காட்டும் கருவி மதம்.

121. யானைக்கு கரும்பு போன்று தர்மம் மனித வாழ்க்கைக்கு உவப்பான கரும்பு.

122. பால் கெட்டால் நஞ்சாக மாறுகின்றது. ஒழுக்கம் குறைந்த சமுதாயம் கெட்ட பாலுக்குச் சமன்.

123. மரத்தில் பூக்கும் பூக்கள் எல்லாம் காயாவதில்லை. சில உதிர்ந்தே போய்விடுகின்றன. அதேபோன்று மனதில் உதயமாகும் எண்ணங்கள் முழுவதும் செயற்படுவதில்லை.

124. மலரிலிருந்து தேனூறுவதுபோன்று தியானத்தினின்று பெருஞ்சுகம் ஊறி வருகின்றது.

125. நீர் வற்றிய குட்டையில் துடித்துச் சாகும் மீன்கள் போன்று தர்மம் குன்றிய மனித சமுதாயம் பஞ்சமா பாதகங்களாக துடிதுடித்து மடியும்.

126. நீர் கலந்த பால் கெட்டுப்போனால் அது பாலின் குற்றமன்று. நீர் கலந்தவனின் குற்றமேயாகும். அனாசாரங்களினால் சமயம் கெட்டுவிட்டால் அது சமயத்தின் குற்றமன்று. அனாசாரங்களைப் புகுத்திய மனிதனின் குற்றமேயாகும்.

127. மனிதன் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் இருளும் ஒளியும் என்றென்றும் இருப்பது போன்று உலகம் இருக்கும் வரையில் தர்மமும் அதர்மமும் இருந்தே தீரும்.

128. உத்தமமான பக்தி பயத்தினால் உருவாகும் ஒரு மன விகாரமன்று. சத்திய தரிசனத்தில் அனுபூதி மாத்திரமாய் நிற்கும் விளக்கமுடியாத கோடானுகோடி இன்பங்களின் திரட்சியேயாகும்.

129. பிரார்த்தனை, வழிபாடு, பூஜை, ஜெபம், தவம் முதலியவற்றின் காரிய சித்திதான் பக்தி.

130. கருமம், யோகம், ஞானம் முதலிய மரங்களில் காய்த்துக் கனிந்த கனியே பக்தி.

131. புளிமாங்காய், நன்றாக முற்றிப் பழுத்தால் சுவை மிக்கதாய் மாறுவது போன்று விஷய வாசனையால் புளித்துக் கெட்டுப்போன வாழ்க்கை, பக்தி நெறியால் முற்றிப் பழுக்கும்போது நிலையான சுகத்தைக் கொடுக்கின்றது.

132. வெளிச்சம் ஒன்றினாலன்றி வேறெதனாலும் இருள் நீங்குவதில்லை. அதே போன்றே சுத்த ஞானத்தினாலன்றி வேறெதனாலும் வினைப் பயன் நீங்குவதில்லை.

133. தேன் கலந்த முக்கனி ரசம்போன்று தெய்வீகம் கலந்த கர்மம், யோகம்.ஞானம் என்ற முக்கனி பிழிந்தெடுத்த ரசமே பக்தி.

134. சந்துப்புழு, பயிர்களின் சந்து பொந்துகளில் குடியிருந்து பயிரை நாசஞ் செய்வதுபோன்று வஞ்சகக் குணம் இருதயத்தில் குடியிருந்து மனிதனை அடியோடு நாசஞ் செய்கிறது.

135. நீரோட்டத்திற்கெதிரே நீந்திப் பழகுவதால் சரீரம் வலுவடைவது போன்று வாழ்க்கையில் வருகின்ற கஷ்டங்களை எதிர்த்துப் போராடுவதனால் மனம் வலுவுடையதாகின்றது.

136. இனம் இனத்தை நாடுவது போன்று போலிகள் போலிகளை நாடுகின்றனர்.

137. நாய் போன்ற பிராணிகளுக்கு வெறி பிடித்தால் அடித்துக் கொள்ளலாம் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் மனித சமுதாயத்திற்கு வெறி பிடித்தால் என்ன செய்வது?

138. சமயமென்றால் கடைந்தெடுத்த வாழ்க்கைத் திட்டத்தின் பெட்டகமாகும்.

139. எந்த மதம் நிலையான தர்மத்தை உட்கொண்டிருக்கின்றதோ, அந்த மதம் என்றென்றும் உயிரோட்டம் உடையதாயிருக்கும்.

140. ஞானி ஞானோதயத்திற்குப் பின்னும் மக்களையும் மாநிலத்தையும் நன்றி உணர்வுடன் பார்க்கவேண்டும்.

141. பலாபழத்தின் சுவையும், குணமும் சுளையில் தங்கியிருப்பது போன்று மதத்தின் சாரம் மத தர்மத்தில் கலந்திருக்கின்றது.

142. மதத்தில் இடை புகுந்த அனாச்சாரங்களுக்காக மதத்தைப் புறக்கணிப்பது எலிக்குப் பயந்து இல்லத்தைச் சுடுவதற்கு ஒப்பானது.

143. ஜனநாயக ஆட்சியில் எதிர்கட்சிகள்,களை கொல்லி திராவகம் போன்றவை.ஆனால் அது அசிற்றுத் திராவகமாக மாறினால், பயிரையும் சேர்த்து அழித்து விடுவது போன்று ஆட்சியை அழித்துவிடும்.

144. மாமிசம் உண்பவனைப் பார்த்து பிணந்தின்னி என்றொருவன் சொல்வானாகில் விபரீத பயன் விளையும். எனவே உண்மையைச் சொல்லும் பொழுது பண்புடன் சொல்ல வேண்டும்.

145. நிலத்தில் பாடுபட்டு உழைக்கும் உழைப்பாளியின் உழைப்பில்தான் உண்மையான ஜீவ களை பொங்கி வழிகின்றது.

146. ஆத்மஞான சுகமும், உத்தமுமான பக்திச் சுவையும் ஒன்றேயாகும். பக்தியும், ஞானமும் ஆத்மாவின் இரு கண்களேயாகும்.

147. மனிதன் இறைவனில் இரண்டறக் கலந்திருக்குஞ் சுகமே பக்தி.

148. தேன் ஜாடியில் வீழ்ந்திருக்கும் தேனீக்கு எங்ஙனம் தேனைச் சுவைக்க முடிவதில்லையோ அதே போன்று பிரபஞ்ச வாசனையில் மூழ்கிக் கிடக்கும் மக்களுக்குப் பக்தி என்ற தேனமுதைச் சுவைக்க முடிவதில்லை.

149. பொறியில் வீழ்ந்திருக்கும் பறவைக்கு உணவின் சுகம் இல்லாதது போன்று உலகப்பற்று என்ற பொறியில் வீழ்ந்து கிடக்கும் மனிதனுக்கு உண்மையான பக்தியின் சுவை தெரிவதில்லை.

150. நித்தியம், அநித்தியம், சிறுமை, பெருமை முதலியவற்றை சரிவர ஆராய்ந்து எது மெய் என்று அறியும் பொழுது பக்தியுணர்வின் ஊற்றுவாய் திறக்கப்படுகின்றது.


வஜனாம்ருதம் தொடர்ச்சி 2 

No comments: