Friday, 16 December 2011

எங்கே எனது போதிமரம்?


இறை தேடல்...

இறையென்று உண்டென்று நானறிவேனே

இறை தேடும் வழிதன்னை யானறியேனே

வழிதேடும் திசை கூட யாமறியோமே - திரும்பிய

திசையெல்லாம் சுவையாக கண்டேனே


பொருள் தேடும் பூமியில் - நான்

பொருள் வென்ற போதிலே

ஒரு திசை தன்னை வென்றேனே - இனி

பொருள் போதும் என்றேனே




புகழ் தேடும் மனிதருள் - நான்

புகழ் தேடி தானேயோ - இப்

புவிமாறி போனேனோ - இன்னும்

புகழ் தேடல் தொடருதே..




அருள் நாடும் உலகத்துள்

திரும்பிய திசை எல்லாம் நான் வென்று

இறுதியில் இறுமாப்பையும் கொன்று

அருள் கூடி இருள் நீங்கிச்செல்வேனோ - இல்லை




சிறு போக ஆசையில் சுழன்று

பொருள் தேடி.. பின் புகழ் தேடி..

வரன் தேடி..பின் இல் அறம் தேடி - மீண்டும்

சிறை நாடி செக்கிழுபட்டிருப்பேனோ


ரெகுராம்
Posted by Sidharthan at 15:25 1 comments:
அருள்ஜோதிச்சந்திரன் said...
ஒரு பதில்

இரை தேடும் உலகில்
இறை தேடல் உருவில்
உரையாடும் உந்தன்
கவியாடல் கண்டேன்.

குறை கூறி இங்கு
கவி பாட வில்லை
நிறைவாக எதையும்
நீ கூற வில்லை.

இறை யறிந்தாய் இறை
தேடும் வழி யறியாய் தேடிய
திசை எல்லாம் சுவை யறிந்தாய்
சுவைத்தவனை அறிந்தாயா?

பொருள் தேடி ஒருதிசை
வென்றாய் நீ - வாழ்க்கையின்
பொருள் தேடி எத்திசை
சென்றாய் நீ என்றும்?

புகழ் தேடி இப்புலம்
மாறி வந்தாய் நீ
பகல் தேடி கதிரவன்
பயணித்தல் அறிவாயா?

அருள் நாடும் உலகென்று
வைத்தாயே ஒரு ஆப்பு
அதுவே உன் கவிதைக்கு
ஒரு பெரும் முஸ்தாப்பு.

சிறு போக ஆசையில்
எல்லாமே அடங்கிவிட
பெரும் போக ஆசைகளை
பேரிட்டு எழுதிவிடு.

போதி மரத்தடியில் வெறும்
பேதிக்கு ஒதுங்காதே - பாவம்
இன்னும் சில புத்தர்களும்
ஒதுங்க சுத்தமாய் இருக்கட்டும்.

அருள்ஜோதிச்சந்திரன்

16 December 2011 18:33
Post a Comment

No comments: