Saturday 7 December 2013

உதயம்


உதயம் 

படமும் போட்டு தலைப்பும் போட்டாயிற்று. படைப்பு எதுவாக இருக்கும் என்று இதுவரை எனக்கும் தெரியாது. நிறைய எழுத வேண்டும் என்று எண்ணிக் கொள்வேன். அனால் ஒரு சோம்பேறித்தனம் தாமச குணம் தடுத்து நிற்கும். "உதயம் " உலகின் ஒவ்வொரு மூலையிலும் ஒவ்வொரு கணமும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கும். நாம்தான் அதைக் காண அடுத்த நாளுக்காக ஏங்கிக் கொண்டிருப்போம். ஏனெனில் எம்மால் காலத்தோடு ஓடமுடியாது. 

இருந்த இடத்தில் இருந்துகொண்டு உதயத்தைக் காண இருபத்துநான்கு மணி நேரம் காத்துக் கொண்டிருக்கும் எமக்கு வாழ்வின் உதயமும் நீண்ட நாள் போராட்டத்தின் பின்னர் அல்லது எதிர்பார்ப்பின் பின்னர் வருமென்று ஏங்குகிறோம். உண்மையில் உதயம் என்பது கணத்துக்குக் கணம் எம்முள் நிகழ்கிறது. அதை நாம் காணத் தவறிவிடுகிறோம். அதுமட்டுமல்ல ஒரு அற்புதமாக அது நிகழ வேண்டுமென்றும் எதிர்பார்க்கிறோம்.

ஒவ்வொரு நாள் காலையிலும் எழும்போது எமது எதிர்பார்ப்புகள் ஏக்கங்களை ஒரு மூட்டையாகக் கட்டி வைத்துவிட்டு நின்மலமான மனதோடு அந்த நாளை எதிர் கொள்ளப் பழகுவோம். எந்தவொரு சம்பவங்களையும் உறவுகளையும் இருகரம் நீட்டி வரவேற்போம். நமது குடும்பத்தில் உள்ளவர்களைக் கூட புதியவர்களாகக் காணப் பழகுவோம். அவர்கள் பற்றிய இறந்தகால விம்பங்க்களை உடைத் தெறிந்துவிட்டு புதிய உறவுகளாகக் கொண்டாடுவோம்.

இதை ஒரு பயிற்சியாகக் கொள்ளாமல் இயல்பாகவே செய்து பாருங்கள். நீங்களே உங்களளவில் ஒரு புதிய மனிதராக மாறியிருப்பீர்கள். அது உங்களுக்கு ஒரு புதிய உதயமாகும். உங்கள் உள்ளம் உவகை கொள்ளும். முதல் நாள் பகைமையோ மனதைப் புண்படுத்திய செயல்களோ உங்களைப் பாதிக்காது. அன்று பிறந்த குழந்தை போல ஒவ்வொன்றையும் உற்று நோக்கத் தொடங்குவீர்கள்.

உதயம் உங்கள் இதயத்தின் ஒவ்வொரு கணமும் நிகழ்ந்தால் உங்களைவிட அதிஸ்டசாலி வேறேவராகவும் இருக்கமுடியாது.

No comments: