Sunday, 1 December 2013
மனைவி
மனைவிளங்க வந்ததனால் மனைவியானாள் - ஒரு
துணையாக நின்றதனால் துணைவியானாள் - வாழ்வின்
சாரத்தை புரியவைத்து சம்சாரமானாள் - ஒரு
ஆதார சுருதியாகி என்தாரமானாள்.
ஆட்டிப் படைத்ததனால் பெண்டாட்டியானாள் - ஏதோ
சாதிக்க வந்ததனால் பெஞ்சாதியானாள் - சம்மதம்பெற
சதிசெய்வதனால் சதியுமானாள் - தினம்
பத்துமணிக் கினிப்பதனால் பத்தினியானாள்.
அரிசியில்லை பருப்பில்லை என்பதனால் இல்லாளானாள்
அச்சம் மடம் நாணங்கொண்டு குடும்பத்தலைவியுமானாள்
பாரிய சுமைகள் தாங்கி பாரியாரானாள் - அவள்சொல்
மீறிவிட்டால் மனையே ஆட்டி மனையாட்டியுமானாள்.
கூறிவிட்டேன் மனைவிக்கு பன்னிரு மறுபேர்கள்
குறையிருந்தால் மன்னிக்கவும் இதையிங்கு மறுப்போர்கள்
பாடிவிட்டேன் பக்கத்திலே அவளிருக்கின்றாள் - பயமிருக்கு
பன்னிரண்டில் என்னவாக மாறப் போகிறாள்.
நேரடி ஒளிபரப்பிற்காக நடாமோகன் நடத்திய கவியரங்கிற்கு என் மனைவி அருகிலிருக்க எழுதிய கவிதை. இன்று அவள் இவ்வுலகில் இல்லை என்றாலும் அன்று அவள் சிரித்த சிரிப்பொலி இன்னும் என் செவியில் ஒலிக்கிறது. என் மனைவியின் நினைவோடு இதைப் பகிர்கிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment