வஜனாம்ருதம் தொடர்ச்சி
100. மயிலுக்கு தேவாங்கு ஜன்ம விரோதியாய் இருப்பது போன்று காமம் ஞானத்துக்கு ஜன்ம சத்துரு ஆகின்றது.
76. அசுர குணம் படைத்தவர்களுக்கு நல்லுபதேசம் செய்தல், குளிர் ஜுரம் உடையவர்களுக்கு கொடுக்கும் அன்னம் போன்று விஷமாக மாறும்.
77. அறநெறி ஒழுங்கில்லாத அரசியல்வாதிகளின் ஆட்சியில், பஞ்சமா பாதகங்கள் பெருகும்.
78. சொந்தச் சுக துக்கங்களுகுத் தானே காரணமென்பதை தன்னை ஆராய்ந்து அறிந்து கொண்டவர்களுக்கு நாளடைவில் நிறைந்த சாந்தியும் ஆத்ம சுகமும் கிடைக்கின்றது.
79. அறமில்லாதவனுக்கு இறைவனும், இறை உணர்வு இல்லாதவனுக்கு அறமுமில்லை.
80. அறநெறியும், அரசாட்சியும் பிராணனும் சரீரமும் போன்றவை. ஆறாம் குன்றிய ஆட்சி வீ ழ்ச்சியடைகிறது.
81. உலோகாயுதக் கல்வியால் புத்திக்குட்பட்ட காரியங்களைத்தான் கற்பிக்க முடியும். சமயக் கல்வியால் புத்திக்கும் அப்பாற்பட்ட விஷயங்களையும் அறியமுடியும்.
82. எல்லா மனிதருடைய அடிப்படைத் தேவைகளும் ஒன்றாயிருந்த போதிலும் அவை நிறைவேறும் முறைதான் கால தேச வர்த்தமானகளுக்கு ஏற்ப மாறுபடும்.
83. பன்றியின் சயன சுகம் சேற்றில் தங்கியிருப்பது போன்று நெறி கெட்டவர்களுக்குப் பஞ்சமா பாதகங்கள் சுகமாய்த் தோன்றும்.
84.எருதிலிருந்து பால் சுரந்தாலும், வஞ்சகர்களிடத்திலிருந்து அன்பு சுரப்பது அரிதிலும் அரிது.
85. உருக்கினால் உருகாத உலோகப் பொருள் உலகில் இல்லாதிருக்கலாம், எனினும் மூக்கரின் உள்ளம் உருகுவது மிகக் கடினம்.
86. வித்தினின்றும் மரம், மரத்திலிருந்து பூ, காய், பழம் உண்டானாலும் மரத்தில் காய்த்துப் பழுத்த பழம் மரத்திற்குரியதன்று. இது மரத்தின் நியதி. அதேபோன்று தவத்திலிருந்து ஞானம், ஞானத்திலிருந்து சுகம் பிறக்கும். ஞானசுகம் ஞானிக்கு மட்டும் உரியதன்று.
87. ஞானியின் ஞானசுகம் ஞானகாரகனாகிய ஈஸ்வரனுக்கு அர்ப்பணம் செய்யப்படும் பொழுது இறை சிருஷ்டிகள் அதனைப் பகிர்ந்து கொள்கின்றன.
88. பிறருடைய நலத்தைப் பேணி வளப்பவர்களின் சுய சுகம், பர சுகமாக மாறிவிடுகிறது.
89. உனது சொந்த விருப்பு வெறுப்புகளைப் புறக்கணித்து இறைவனுடைய விருப்பத்திற்கு உன்னை ஆளாக்கி விடும் போதே இறை அருளுக்கும், அன்புக்கும் நீ பாத்திரமாகிறாய்.
90. உன்னிடமிருக்கும் சகலவிதமான உடைமைகள், உரிமைகளை முற்றாக விட்டுவிடு. உன்னை நிர்க்கதிக்கு உட்படுத்து. உனது சுயசிந்தனையிளிருந்தும் விலகு. பட்டம் பதவிகளை உதறு. கற்ற கல்வியை நிஷ்பிரயோசனப்படுத்து. இங்ஙனம் நீ செய்யமுடியுமானால் "சரணாகதி" என்ற உயர்ந்த நிலையால் ஞானத்தின் உச்சநிலை அடைவாய்.
91. இரத்த சோகையால் துன்புறும் நோயாளிக்கு இரத்த விருத்திக்குரிய மருந்தினாலன்றி வேறு ஒன்றினாலும் சுகம் கிடைக்காதது போன்று, அஞ்ஞானத்தினால் துன்பப்படுகிறவர்களுக்கு, ஞானத்தால் அன்றி, வேறொன்றினாலும் சுகம் கிடைப்பதில்லை.
92. தவத்தினாலன்றி உபதேசத்தினால் ஞானசக்தி உண்டாவதில்லை.
93. உபதேசத்தினாலும், உபதேசம் பெறுவதினாலும் பூரணத்துவம் அடையமுடியாது.பற்றின்மையாலேயே அதை அடையலாம்.
94. மதமும் தர்மமும், முத்துச்சிப்பியும் முத்தும் போன்றது.
95. சரிரம் இருக்கும்வரை ஞானிக்கும் பசி, தாகம், உறக்கம், பிணி போன்ற சரீர உபாதைகள் இருக்கத்தான் செய்யும்.
96. குளிர்ந்த கார்முகிலை உஷ்ணமுகில் உராயும் பொழுது இடியும்,மின்னலும் உண்டாவது போன்று தர்மத்திற்கும்,அதர்மத்திற்கும் நடக்கும் போராட்டத்தில் சத்தியம் என்ற மின்னல் தோன்றுகிறது.
97. குருவை குருவாகவும், தெய்வத்தை தெய்வமாகவும் கருதுகின்றவர்களுக்குத்தான் குரு தேவை. தெய்வம்தான் குரு என்று காணுகின்ற பேரறிஞனுக்கு குருவின் தேவைதான் என்ன?
98. நீரிலும் நிலத்திலும் வாழ்கின்ற சில பறவைகள் போன்று ஞானியும், இகத்திலும் பரத்திலும் சஞ்ச்சரிக்கக்ககூடிய தகுதியுடையவர்.
99. பறவைகள் உண்பது, கூடுகட்டுவது, தேகசுத்தம் செய்வதாகிய மூவகைக் கருமங்களையும் தமது ஒரே ஒரு அலகினால் மாத்திரஞ் செய்து முடிக்கின்றன. அதேபோன்று ஞானியின் ஞானமும் அநேக கருமங்களைச் செய்து முடிக்கும் வல்லமையுடையது.
100. மயிலுக்கு தேவாங்கு ஜன்ம விரோதியாய் இருப்பது போன்று காமம் ஞானத்துக்கு ஜன்ம சத்துரு ஆகின்றது.
.வஜனாம்ருதம் தொடர்ச்சி 1