There was death at its begining as there would be death again at its end.
முடிவில் மரணம் இருப்பதைப் போலவே ஆரம்பத்திலும் மரணம் உண்டு.
பெருநாதப் பிழம்பொளிரப் பிறந்ததண்டம்
ஒருநாத ஓசையின்றி ஒடுங்கும் அணுக்கள்
இருநாமம் ஒன்றுபட்டால் அணுவண்டம்
இதில் நாங்கள் எங்கிருந்து எங்குவந்தோம்.
பரிணாமம் பழங்கதையாய் போகுங்காலம்
புரியாத புதிரெல்லாம் புரிந்துபோகும்
அறிவாலே அறிவையார் அறியவல்லார்
அறியாத அறியாமை ஆட்சிசெய்தால்.
தெரியாத பொருளை நாம்தேடுகின்றோம்
தெரிந்ததைத்தான் தேடலில் தெரிந்துகொள்வோம்
தெரிந்ததைநாம் தேடியேன் தெரியவேண்டும்
தேடுதலை நிறுத்துதலே தெளிவுதானே.
சார்புநிலை கொள்கையினைச் சற்றுப்பார்ப்போம்
சார்ந்தஒரு நிலையினில்தான் காலதூரம்
பிரமத்தின் சூத்திரத்தை விளங்கிக்கொள்ள
பிரமத்தை விட்டுநீ விலகவேண்டும்.
சூனியத்தின் சூட்சுமமும் சூனியந்தான்
முடிவிலியின் எதிரொலியும் முடிவிலிதான்
வாழ்க்கையின் முடிவுமொரு மரணமென்றால்
வாழ்க்கையின் தொடக்கமும் மரணந்தானே.
வித்தா அண்டமா என்ற வாதம்
விதைத்த வார்த்தைதான் விதண்டாவாதம்
சாவில் பிறப்பா? என்ற வாதம்
சாவில் பிறப்பாய் என்று மாறும்.
சாவில் பிறந்தேனா? நான்சாகப் பிறந்தேனா?
வாழ்வில் வந்ததெல்லாம் வாழ்வாய்வந்ததுவா?
வாழ்வாய் வந்ததெல்லாம் வாழ்வில் வந்ததென்றால்
வாழ்வில் வராததொன்று முடிவில் வருவதொன்றா?
முடிவில் வருவதொன்று முதலில் வந்திருந்தால்
முடிவே முதலா? முதலே முடிவா?
விடைநான் கண்டேன் விளங்கிக்கொண்டேன்
விளங்கிக்கொண்டேன் விடைபெறுகின்றேன்,
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment