Saturday, 12 June 2010
அம்மா எங்களுக்கு நீயே முழு உலகு
எமை ஈன்ற அன்னைக்கு இன்றகவை நூறு
அமைகின்ற காரணம் கொண்டுவகையோடு
எமைச்சார்ந்த சுற்றங்கள் ஒன்றாகக் கூட
சுவைத்தமிழோடு நான்வந்தேன் நன்றாகப்பாட.
நன்றாக பாட்டிசைப்பார் நம்மன்னை என்றும் – குணக்
குன்றாக வாழ்ந்துயர்ந்தார் இவ்வுலகிலென்றும் – மனக்
குறைதீர்க்க மற்றவர்கள் வந்துரைக்கும் சொல்லை – பிறர்
செவிகேட்க்க உரைத்ததில்லை நம்மன்னை கொள்கை.
கைநயம் சமையல்கலைநயம் சொல்நயம் – சொல்லும்
கதைநயம் தையல்திறன்நயம் மணிகள்புணைநயம் – வெல்லும்
வினைநயம் உழுக்கெடுக்கும் விரல்நயம் கணிதப்புயல்நயம் – செல்லும்
பயணத்தில் சேர்ந்துவக்கும் மனநயம் மெல்லாமுண்டெம் அன்னைக்கே.
அன்னைக்கே என்றிருந்தோம் அன்று; இன்றுநம்
பிள்ளைகட்காய் வாழ்ந்தபோதும் அன்னையின் நினைவகலா
பிள்ளைகளாய் வாழ்கின்றோம் பிரிந்துகூடிச் சிறுபிள்ளைகள்போல்
சண்டையிட்டும் அறிந்துணர்வோம் நம்மன்னையின் பொறுமைதனை.
பொறுமைதனை போதித்தாள் பிறர்வாழ்வில் பரிவுதனைக் காண்பித்தாள் - நம்
அறிவுதனை நாளும் செதுக்கி அன்பு வயல் உழுவித்தாள்
அடைகாக்கும் கோழிதனை உவமைகாட்டி எமை
விடைதுரத்தும் காலமும் வருமென்றாள்; விடைதுரத்தாமலே விட்டகன்றாள்.
விட்டகன்றாள் விண்ணுக்கு வினைப்படியே போயமர்ந்தாள்
பட்டகன்றாள் மண்ணிற் படுந்துயரம் பார்த்தகன்றாள்
தொட்டகன்ற போதும் தொடாத தூரத்தே நின்று
பற்றகலாப்பாசத்தில் எமைவிட்ட நேசத்தின் திருவுருவே.
திருவுருவாம் எந்தையின் திருக்கரங்கள் பற்றியிங்கு
பெருகுவதாம் பிள்ளைகள் ஏழும் பெற்றுப் பிறப்பறுத்து
உருகுவதாம் பாசத்தில் எம்முள்ளங்களை உழலவிட்டு
விலகுவதா விதிப்பயணம்? விடைகூர் அம்மா.
அம்மா என்றுனையழைத்தோம், ஆனந்தித்தோம், அல்லல் மறந்தோம் – இன்று
அம்மா என்றாரழைத்தாலும் உன்முகமே நம்முள் தோன்றும்
அம்மா இவ்வுலகிற்கு நீ யாரோ ஒரு நபர், சிலருக்கு வெறும் உறவு
அம்மா எங்களுக்கு நீயே முழு உலகு. எமைக் காப்பாய் அம்மா.
For the whole world you may be nothing.
But for us you are the whole world.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment