Thursday, 1 May 2014

வஜனாம்ருதம் தொடர்ச்சி-5

THURSDAY, 01 MAY 2014
வஜனாம்ருதம் தொடர்ச்சி 5 




ஆன்மீகப் புத்தகமோ 
அத்வைத வித்தகமோ 
"நான்" கடந்த தத்துவமோ 
ஞானத்தின் மெய்த்தவமோ 
தேன் கடந்த தித்திப்போ 
தேவ நிலை சித்திப்போ 
வான் கலந்த குருமணியே!
வாழ்த்துகிறோம்! வணங்குகிறோம்!!

214. இதில் கூறப்பட்டிருக்கும் உண்மைகளை நீங்களாகவே உங்களில் கண்டறிந்து சுயம் செயல்படுத்துவீரகளாக.

"பரமேஸ்வர ஸ்மரணம்"

"ஒன்றே குலம் ஒருவனே தேவன்"

201. சீரிய குணந்தான் செல்வங்களில் சிறந்த செல்வம்.


202. தனது இதயத்தைப் பரிசுத்தப் படுத்தி எடுப்பதுதான் நிலையான சம்பத்து. அது எதனாலும் அழிக்கப்படுவதில்லை.



203. என்னதான் இருந்தாலும் நல்ல குணம் இல்லாவிட்டால் ஜீரண சக்தி குறைந்தவர்கள் உண்ணும் உணவு போன்று பிரயோசனமற்றது.

204. நீ ஒரு சக்திக் கனலாக மாறும் பொழுது உன்னை நோக்கி வரும் பிரச்சனைகள் தானாகவே கருகிவிடும்.



205. உலகம் உலகியல் தேவைகளில் தன்னிறைவு எய்தினாலும்,ஆத்மீக சைதன்யத்தின் உட்செறிவு இல்லாவிட்டால், சமுதாயத்தின் நிலை நாய்க்கூட்டத்தினுள் வீசப்பட்ட மாமிசத்துண்டு போலாகிவிடும்.


206. ஆத்ம சித்திகள் மனம் புத்தியைக் கொண்டு அப்பியாசித்து அடையக் கூடியதன்று. மனம் புத்திகள் அகந்தையால் செயற்படுபவை.ஆகையால் அகங்கார நாசத்திற்குப் பின் தோன்றும் விசேஷ பேறுகள்தான் ஆத்ம சித்திகள்.


207. நீ ஏதோ ஒரு துறையில் சிறிதளவு அறிவு பெற்றிருக்கலாம். அதை வைத்துக்கொண்டு படித்தவன், அறிவுடையவன்,நாகரீகமானவன் என்றெல்லாம் அகங்கரித்தால் அது உன்னை சர்வநாசத்தில் ஆழ்த்திவிடும்.


208. நீ எதைக் கற்றைந்தாலும் உன்னுடைய சொந்தப் பிரச்சனைகளுக்கு நீயாகவே தீர்வு கானமுடியாதிருந்தால் கற்றதின் பயன் என்ன?

210. மனதைச் சரியான முறையில் கட்டுப்படுத்துவதற்குரிய பயிற்சியும், மனித சக்திகளுக்கெல்லாம் ஆதாரமாய்  இருக்கின்ற கடவுள் சக்தியில் முழு நம்பிக்கையும் இல்லாவிடத்தில் மற்றெல்லாம் இருந்தாலும் நிலையான சுகமும் சாந்தியும் உண்டாவதில்லை.


211. இன்று வரையில் நீ செய்துவரும் கர்மங்களில் அதிக பங்கும், உன்னுடைய சரீரம், மனம் இவைகளின் சக்தியைக் குறைக்கக் கூடியதும், சொந்த ஆத்மாவை வஞ்சிக்கக் கூடிய செயல்களும்தான் செய்து வருகின்றாய். ஒரு நாளைக்கு ஒருதரமாவது தனிமையிலிருந்து ஆழமாய் சிந்தனை செய், இந்த உண்மை விளங்கும். எனவே சிந்தனை செய்து தெளிவுபடுத்திய பிறகு மனம், சரீரம், புத்தி இவைகளைப் பலப்படுத்தக்கூடியதும், ஆத்மாவின் சுகத்திற்கேற்றவாரும் உரிய கர்மங்களை மாத்திரம் செய்தால் சுகமுடன் வாழலாம்.


212. முறையறிந்து செய்தால் ஒரு சிறு செயல் மூலமாக இறைவனுடைய திருவருளை எளிதில் பெறலாம்.


213. நீ இறைவனை நோக்கி கீழ் வருமாறு பிரார்த்தனை செய். என்னுடைய பலவீனத்தாலும், அஞ்ஞானத்தாலும் பல குற்றங்கள் செய்தும், நல்லது பலதும் செய்யாமலும் விட்டேன். கருணைகூர்ந்து என்னை மன்னித்து விடு. இங்ஙனம் உன்னுடைய நெஞ்சுருகும் வண்ணம் பிரார்த்தனை செய்து வந்தால் இந்தப் பிறவியிலேயே பாவங்கள் நீங்கி திருப்தியும் சுகமும் பெறலாம்..


214. இதில் கூறப்பட்டிருக்கும் உண்மைகளை நீங்களாகவே உங்களில் கண்டறிந்து சுயம் செயல்படுத்துவீரகளாக.

"பரமேஸ்வர ஸ்மரணம்"

"ஒன்றே குலம் ஒருவனே தேவன்"



வஜனாம்ருதம் - இரண்டாம் பாகம் 

1.
இறைவனைக் காண்பது கடினமான காரியமன்று. அதனைப் பார்ப்பதற்குரிய கண்ணாடியாகிய ஹிருதயத்தைப் பரிசுத்தப்படுத்துவதுதான் மிகக் கடினமானது.


2.
இறைவன் பொருட்டு தனக்கு மிகப் பிரியமானதை விட்டு விடுவதற்கும்,மிகவும் வெறுப்பானத்தை ஏற்றுக் கொள்வதற்கும் தயாராயிருப்பவனே யதார்த்தமான இறைபக்தன்.


3.
ஞானம், அது ஒரு இரவில் அடையக் கூடிய காரியமல்ல. நாகமணியைச் சுற்றிக் கிடக்கும் நாகம் போன்று, ஜீவனைச் சிற்றுக் கிடக்கும் தீய வாசனைகள் கடுந் தவத்தால் நீங்கும் பொழுது மாத்திரந்தான் ஞானம் பிரகாசிக்கும்.


4.
பார்க்கப் பார்க்க, பழகப் பழக அலுப்பும் வெறுப்பும் தட்டாமலிருப்பது எதுவோ அதுதான் சாஸ்வதமான அன்பும் இன்பமுந் தரும் முழுமுதற் தெய்வம்.


5.
புலனுணர்வுகள் கடுகளவேனும் இருக்கும் வரை ஞான ஒளியைக் காண்பதென்பது வெறும் ஒரு மனச் சங்கற்பம்.


6.
பக்தியென்பது மன உணர்வுகளை மீறிச் செல்லும் பொழுது அனுபவப்படுகின்ற ஒரு தனித்த பேரானந்தம்.


7.
இந்தப் பிரபஞ்சத்தை நாங்களோ எங்களுடைய பாட்டனாரோ படைக்கவில்லை. அதைப் படைத்தவன் இன்னொருவன் இருக்கிறான். நீ அணிந்திருக்கும் ஆடைகளை நிர்மாணிப்பவரை நேரில் கண்டிருக்காவிட்டாலும் அப்படியொருவர் இருக்கின்றார் என்பதை நம்பித்தானாக வேண்டும். இப் பிரபஞ்சம் சூனியத்திலிருந்து தோன்றவில்லை. இதைப் படைத்தவன் ஒருவன் இருக்கின்றான் என்ற பிரத்தியட்ச ஞானம் உண்டாகும் பொழுது நீயும் மற்றவர்களும் கர்த்தாக்களல்ல, வெறும் கருவிகளேயென்ற அறிவு வரும்,அகங்காரம் ஒழியும்.


8.
அடிக்கடி உனது குருவினிடத்தில் அமர்ந்திருந்து குரு முகத்திலிருந்து வரும் வார்ததைகளை ஹிருதயம் கொடுத்துக் கேள். அது உனது மனச் சலனங்களை தீர்த்து மனத்தென்பைத் தரும்.


9.
உனது துன்பங்களைத் தீர்க்கும் சக்தி உனக்கில்லாமல் இருக்கலாம். ஆயினும் அதனைத் தீர்க்கக் கூடிய ஒரு சக்தி உன்னிடம் இருக்கின்றது. அதற்கு உன்னைச் சுயாதீனப்படுத்தினால் காற்றில் பறந்து போகும் சாம்பல் போன்று துன்பங்களெல்லாம் பறந்து விடும்


10.
முழு மாணவ சமுதாயத்தையும் நம்முடன் வாழுகின்ற தெய்வமென்று கருதிக் கொண்டால் உயிர் ஐக்கியம் தானாகவே உண்டாகும்.


11.
நெஞ்சில் திருக்கை வால் ஏற்றுத் திரிபவர்களிடத்தில் எட்டத்தில் நின்று கொள்.


12.
பூமி முழுவதிலும் எவ்வளவோ குப்பை கூளங்கள் மண்டிக் கிடக்கின்றன. அவையெல்லாம் உன்னால் சுத்தஞ் செய்ய முடியுமா? இல்லை. ஆனால் பூமியின் ஒரு பகுதியாகிய உனது முற்றத்தை தினசரி கூட்டிச் சுத்தமாய் வைத்திருக்க முடியும். அதே போன்று உலகத்தவர்களுடைய மனதை உன்னால் சுத்திகரிக்க முடியாவிட்டாலும் உனது சொந்த மனதின் அழுக்காறுகளை நீக்கிச் சுத்தமாய் வைத்திருக்க முடியும்.


13.
மனிதருடைய மனக் குற்றங்கள்தான் இவ்வுலக துன்பங்களையெல்லாம் சிருஷ்டிக்கின்றன. ஜனங்கள் மனக் குற்றமற்றவர்களாயிருந்தால் இப்பூவுலகம் உண்மையில் ஒரு பூவுலகமாகவே இருக்கும்.

No comments: