WEDNESDAY, 12 MARCH 2014
வஜனாம்ருதம் தொடர்ச்சி 4
ஆன்மீகப் புத்தகமோ
அத்வைத வித்தகமோ
"நான்" கடந்த தத்துவமோ
ஞானத்தின் மெய்த்தவமோ
தேன் கடந்த தித்திப்போ
தேவ நிலை சித்திப்போ
வான் கலந்த குருமணியே!
வாழ்த்துகிறோம்! வணங்குகிறோம்!!
151. குற்றத்தைக் கண்டிப்பதும், திருத்த முயற்சிப்பதும் சமய சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு செய்யப்படாவிட்டால், கிடைக்கும் பலன் கலகமும் விரோதமுமாகும்.
152. உனது அறிவைப் பற்றிய அறிவு உனக்கில்லாமல் இருப்பதே உனது துன்பங்களுக்கெல்லாம் மூல காரணம்.
153. தன் அபிமானத்தை தன் அளவில் அடக்கமாக வைத்திராவிட்டால் அது அகங்கார வடிவம் கொள்ளும். அகங்காரத்தின் விளைவு நாசம்.
154. உனது தீய கர்ம வினைகளின் திரட்சியே ஏழரைச் சனியாய் வடிவெடுக்கின்றது. அதற்கு அந்நியமாய்ப் பிறிதொரு சனிதோஷம் கிடையவே கிடையாது.
155. சரித்திர கால வரலாற்றினால் மாத்திரம் ஒரு தேசம் என்றும் பெருமை யுடையதாய் இருப்பதற்கில்லை. காலத்திற்கேற்றவாறு அபிவிருத்தி அடைந்தால்தான் சரித்திரப் பெருமையும் நிலைத்திருக்கும்.
156. பண்பாடு என்பது தொன்று தொட்டு வந்த பழக்கங்கள். அன்று கோடானுகோடி மக்களால் பல்லாயிரம் தலைமுறைகளாகப் படிப்படியாய்ச் சீர்திருத்தியெடுத்த வாழ்க்கை முறையாகும்.
157. பழையதானாலும் கெட்டுவிடாமல் இருப்பது தர்மம் ஒன்றேயாம்.
158. விவேகமிருந்தும் சினமும்,சஞ்சலப்படும் சுபாவமும் உடையவர்களுக்கு நிம்மதி என்பதில்லை.
159. விவேகம் இல்லாத கல்வி கடிவாளம் இல்லாத குதிரை போன்றது.
160. குலம், கோத்திரம், பிறப்பு இவைகளால் ஒருவனைக் கணிப்பது பிழை. ஒருவனுடைய மேன்மையும், தாழ்வும் அவனது குணத்தைப் பொறுத்து இருக்கிறது.
161. சத்தியம், தானம், பொறுமை, ஒழுக்கம், சாந்தம், தபசு இவைகளால் எவன் பிரமத்தை அரிய முயற்சிக்கிறானோ அவனே உத்தமமான பிராமணன். அத்தகையவன் சண்டாள குலத்தில் பிறந்தாலும், பிராமணனேயாம்.
162. ஞானம் கைவந்த போதிலும், மக்களையும் மாநிலத்தையும் மறப்பது இறைவனைப் புறக்கணிப்பதற்கு ஒப்பாகும்.
163. உனது திறமைகளை அடக்கி ஒடுக்காதே. அதைச் சீரியமுறையில் செயற்படுமாறு சுதந்திரமாகத் திறந்துவிடு.
164. எங்கு கருணை இருக்கின்றதோ அங்கு தர்மம் இருக்கும். தர்மம் இருக்குமிடத்தில் சுகம் இருக்கும். சுகம் இருக்கும் இடத்தில் இறைவன் இருப்பார்.
165. மன்னனும், மனிதனும் உனக்கு மன்னிப்பு அளித்தாலும் உனது தீவினைப்பயன் உனக்கு மன்னிப்பளிப்பதில்லை.
166. தன்னடக்கம் இல்லாதவர்களுக்குக் கிடைக்கும் அனுகூலம் சில சமயம் பிரதிகூலமாக மாறிவிடுகிறது.
167. வண்டுதான் தேன் உண்ணுமே தவிர மண்டூகம் (தவளை) அதை உண்பதில்லை. அதே போன்று உலக ஆசையில் மூழ்கிக் கிடப்பவர்களுக்கு ஞானத் தேன் உண்ண விருப்பம் வருவதில்லை.
168. அன்றலர்ந்த மலர் அன்று கெடும். மலராமல் மலர்ந்திருக்கும் ஞான மலர் என்றும் கெடுவதில்லை.
169. அந்தரங்க சுத்தியில்லாத ஒரு சமயவாதியைவிட நல்லொழுக்கம் உடைய ஒரு நாஸ்திகன் மிகச் சிறந்தவன்.
170. தன்னறிவு தெளியும் வரையில் சான்றோன் ஒருவரை நாடி நிற்பதால் பெரும் பயன் உண்டு.
171. உன்னில் தேய்வதும், வளர்வதும் எவை என்பதைக் கண்டறிவது மிகக் கஷ்டம். நுண்ணறிவை நிதானமாய் உபயோகித்து அறியவும்.
172. தனக்கு மதிப்புத்தந்து தன்னைப் புகழ்ந்து கொண்டிருப்பவர்கள் மட்டும்தான் நல்லவர்கள், மற்றவர்களெல்லாம் பொல்லாதவர்கள் என்று நினைப்பவர்கள்தான் பொல்லாதவர்கள்.
173. குளத்தில் நீரிருக்கும்வரையில் மீனிருக்கும், ஈர்ந்தெடுப்பதற்கு ஏதாவதொன்று இருக்கும் வரையில் மனிதர்கள் உன்னை நாடி நிற்பர். ஒன்றுமே இல்லையென்றால் ஒருவரும் சார்வதில்லை.
174. கோவிலைச் சுற்றிவாழும் நாய்களெல்லாம் பிராமணனாக மாறுவதில்லை. மகான்களைச் சுற்றி நிற்பவர்கள் எல்லாம் நல்லவர்கள் ஆவதில்லை.
175. பழமை வாய்ந்ததாயினும், புதியதாயினும் அப்படியே ஏற்றுக்கொள்ளாதே. விவேகத்தினால் இரண்டிலுமிருக்கின்ற நல்லவைகளையே தேர்ந்தெடுத்துக் கொள்.
176.ஊசி முனையில் நிற்கப் பழகினாலும், மன நுனியில் ஒரு வினாடிதானும் நிற்கப் பழகுவது மிகக்கடினம்.
177. நிறம் மாறும் ஓணான் போன்று அடிக்கடி குணம் மாறுபவர்களிடத்திலிருந்து வெகு தூரம் விலகி நில்.
179. தன்னயம் கருதாமல் அன்பு செலுத்துகிறவர்களுடைய அன்புதான் உண்மை அன்பு. அவர்கள்தான் உத்தம நண்பர்கள்.
180. சிற்றின்ப நுகர்ச்சிகளில் காணுந் தோல்விகளை தோல்வி என்று கருதி வருந்தாதே. அது திருந்துவதற்குரிய ஒரு கடுந் தண்டனை என்பதை உணர்க.
181. கடலின் மேற்பரப்பில் தான் அலையும் இரைச்சலும் இருக்கின்றது. ஆழத்தில் அலைகள் இல்லை. அதே போன்று மேல் மனதின் செயல் நிலையில் மாத்திரந்தான் துயரமும் அமைதிக்குறைவும் நிலவுகின்றது. அடி மனதில் இறங்கிச் செல்லும் அளவிற்கு ஆத்மசக்தியின் பேரானந்தமும் தான் அனுபவமாக நிலவுகின்றது.
182. கண்டதும், கேட்டதும் எல்லாம் விரும்பாதே. நல்லவையில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து அதை அழுத்தம் திருத்தமாகச் செயல் படுத்துக. பலன் நிச்சயம் கிடைக்கும்.
183. உலகியல் இன்பம், பால்யம், இளமை, முதுமை என்பதற்கிணங்க விதம் விதமாக அனுபவப்படுகின்றது. ஞான இன்பமோ எந்தப் பருவத்திலும், ஒரே மாதிரியான சுகானுபவம் உடையது.
184. அருளும் பொருளும், உயிரும் சரீரமும் போன்று ஒன்றோடொன்று தொடர்புடையவை. இரண்டையும் படைத்த கரம் ஒன்று ஆகையால் இவை இரண்டையும் இரண்டு கோணத்தில் வைத்துப் பார்த்து வாழ்வதில் அர்த்தமேயில்லை.
184. பழங்கள் பழுத்தால் மரத்தின் மேலும், கீழும் நல்லதும் கெட்டதுமாகிய பலவித பிராணிகள் வந்தடைகின்றன. அதேபோன்று ஞானம் பூர்த்து நிற்கும் இடத்தில் பலதரப்பட்ட மனிதர்களும் வந்து சேர்கின்றனர்.
186. மதம், ஆத்மீகம் இவைகளை தவறான வழியில் கவர்ச்சியுடையதாக்கி வளர்ப்பதால் அது விரைவில் அழிந்துவிடும்.
187. துறவிகளின் பூர்வ வரலாற்றை அறிய முயற்சிப்பது, இறந்த குழந்தையின் சாதகம் வாசித்து அறிவதற்கு ஒப்பானது.
188. நேரம், காலம், கடவுள் இவை உன்னை நோக்கி வரும் எனக் காத்திருக்காதே. இம்மூன்றும் தீவிர முயற்சியுடையவனில் எப்பொழுதும் தங்கி இருக்கிறது.
189. உனது கெட்டித்தனத்தால் பலதும் சாதிக்க முடியலாம். ஆனால் சாதித்ததை நிம்மதியுடன் சம்பூர்ணமாய் அனுபவிப்பதற்குத் திருவருள் வேண்டும் என்பதை அறிக.
190. குளிப்பது, உண்பது, உறங்குவது, புணர்வது இவற்றை மனம்போன போக்கில் செய்தால் தேகசுகம் கெடும்; நோய்வாய்ப்படுவாய். ஊர்ந்து,பறந்தும் வாழ்கின்ற பற்பல பிராணிகளின் தினசரி ஒரு நேரமும் நெறியும் உண்டு. மனிதனுக்கென்று ஒரு நன்னெறி இருந்தும், நெறி தவறி வாழ்கின்றவர்களின் வாழ்வால் என்ன பயன்?
191. உண்ணும் உணவின் அதிசூக்குமமான பகுதிக்கும் மனதிற்கும் நெருங்கிய தொடர்புகள் இருக்கின்றன. எனவே நல்லுணர்வுகளை வளர்க்கும் சாத்வீக உணவை உண்க!
192. சுகமுடன் வாழ்வதற்கும், இறப்பதற்கும் ஒரு நெறியும் குறியும் வேண்டும். அது இல்லையானால் திசை தடுமாறித் திரிய நேரிடும்.இடறுவீர்.
193. முத்துச் சிப்பியை உடைத்துப் பார்த்தாற்றான் முத்து இருப்பதும் இல்லாததும் தெரியும். இதயத்தை ஊடுருவிப் பார்க்கும் திறமை உனக்கிருந்தால் மட்டும்தான் மற்றவர்களுடைய நன்மை,தீமைகளை சரிவர அரிய இயலும்.
194. உனது கடமைகளைச் செயற்படுத்தும்பொழுது மற்றவர்களுக்கு இடையூறு விளையாமல் பார்த்துக் கொண்டால், இன்னலும் விரோதமும் குறையும்.
195. ஒரு தேசத்தின் இயற்கை வளங்களையும் செயற்கைச் செல்வங்களையும், அந்நாட்டு மக்கள் சம தர்ம ரீதியில் அனுபவிப்பதற்குரிய சந்தர்ப்பம் இருக்க வேண்டும். அங்ஙனம் இருந்தால் பஞ்சமா பாதகங்களைச் செய்யத் தூண்டும் உணர்வுகள் குறையும்; தேசப் பற்றும் தேச பக்தியும் பெருகும்.
196. மாதா, பிதா, குரு, மன்னன் இவர்கள்தான் தண்டிப்பதற்குரிய உரிமை உடையவர்கள். மற்றவர்கள் அதனைச் செய்தல் குற்றமாகும்.
197. உலகத்தைப் புரிந்து வாழ். துயர் நீங்கும்.
198. வெளிச்சத்திற்குப் பின் இருள் இருப்பது போன்று நல்லதென்று கருதுவதின் பின்னுக்குத் தீயதும் இருக்குமென்றறிக.
199. பகவான் என்ற சொல் இறைவனுக்கு மாத்திரம் பொருத்தமானது.
200. உலகத்தில் மனிதத் தன்மை வளரும் அளவிற்குப் பிரச்சனைகள் தானாகவே குறையும். ஆகையால் சகலவிதமான செயல்களும் மனிதத் தன்மையை வளர்த்தெடுக்கும் முறையில் அமையவேண்டும்.
No comments:
Post a Comment