கடகட எனவொரு இசைபட வருகிற
ரெயிலினி லனுதின மிடர்பல படுகிற
கவிஞனி னனுபவ மிகைபட மிகைபட
தினமொரு கவிய மனதினி லமைவுற
அதையொரு காகித மிசைபட இயம்பிட
பலரதை ஒருமுறை புகழுரை நயம்பட
உரைத்திட உணர்வது தாய்மையி னின்பம்.
படபட எனபல உரைபல உரைத்திடு
மடமயில் மங்கையர் குரல்பல இணைந்திட
கடகட ரயிலொலி காற்றினி லோய்ந்திட
இடையிடை கூவிடும் இஞ்சினி னொலியது
தொலைவினி லொருரெயில் வருவது போலவே
செவியினில் விழுவதால் தலையினை அடிக்கடி
வெளியினில் விடுவதால் விழியினில் விழுவது
கரித்திடவருவது கண்களில் கண்ணீர்.
ஒருகர மதிற்சில பொருள்பல இருந்திட
மறுகர மதுவொரு துணைஎனு மளவிலே
அகப்படு பொருளினை குரங்கென பிடித்திட
பரபர எனவொரு துருதுருப் புடன்ரெயில்
புறப்படு வேளையில் நாணலாய் வளைவரேல்
சடசட வெனவொரு சரிவது காண்கிலர்
முதலதை பயின்றிட லவசியம் 'அரிவரி'
முழுவதும் பயின்றவ ரதிசயம் சரிவரின்.
பலபல நிறங்களில் பாவையர் சேலை
பலவித வகையினிற் பார்ப்பவர் சேட்டை
தினமிதைப் பொறுத்திட செல்வதோ ஆலை
இடையிடை நினைத்திட செய்வதே வேலை
ஒருபடி ஓய்ந்திட வந்திடும் மாலை
மறுபடி தொடர்ந்திடு மதுதான் வாழ்க்கை
அதையிதைச் சொன்னதால் ஆத்திரம் வேண்டாம்
அடுத்தவர் சுதந்திரம் காத்திட வேண்டும்.
கடகட எனவொரு இசையொடு போகிற
ரெயிலினி லனுதின மிடர்படசாகிற
கவிஞனி னனுபவ மதுவொரு தனிரகம்.
எழுபதுகளில் காகிதாலை வேலைக்குப் போகும் காலங்களில் கவிஞனின் பார்வையில் மட்டக்களப்பிலிருந்து வாழைச்சேனை காகித ஆலைக்கு நாளாந்தம் ரெயிலில் செல்லுகையில் ஏற்ப்பட்ட அனுபவத்தை இக் கவிதையில் தந்தேன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment