Saturday, 23 November 2013

வஜனாம்ருதம் தொடர்ச்சி 1

வஜனாம்ருதம் தொடர்ச்சி 



51. மனதை ஆத்மாவில் லயம் செய்தது நிறுத்தும் நிலைதான் மனோலயம். மன நாசம், மனத்தைக் கடந்தநிலை என்றெல்லாஞ் சொல்லப்படுவதுமஃதே.

52. அரசியல், பொருளாதாரத் தத்துவங்கள் சமயக்கொள்கைகளுக்கு மாரானதன்று. அவை சில மகத்தான உண்மைகளின் அடிப்படையில் சிந்தனை செய்து செயற்படுத்தும் பொழுது சமயம் அதை முழுமனதுடன் ஏற்றுக்கொள்ளும்.

53. ஆத்ம சுகம், மனச்சுகம், சரீரசுகம் என்ற மூவகைச் சுகங்கள் மனிதனுக்குத் தேவை. சரீரசுகம் இல்லாதவனுக்கு மனச் சுகம் இல்லை. மனச் சுகம் இல்லாதவனுக்கு ஆத்ம சுகம் இல்லை.ஆத்மசுகம் பூரணமாயிருப்பவனுக்கு மனச் சுகத்திலும், சரீர சுகத்திலும் நாட்டமுமில்லை.

54. தர்மத்தையுணர்ந்து அதன் வழி நில்லாதவர்க்கு ஞானம் என்பது பிறப்பதில்லை.

55. தர்மம் காய் போன்றது எனில், ஞானம் பழம் போன்றதாகும். வாழ்க்கையில் தர்மம் என்ற காய் முற்றி ஞானம் என்ற பழமாகப் பழுக்கிறது.

56. அடிப்படையில் விடுதலை வெளிப்படையில் உலக ஷேமமும் தான் ஒரு மத விசுவாசியின் இலட்சியமாக இருக்கவேண்டும்.

57. தர்மத்திற்கு இருக்கும் அதே ஆயுள் அதர்மத்திற்கும் இருக்கின்றது.

58. உயர்வதும் தாழ்வதுமாகிய இயற்கை நியதிகளைப் போன்று தர்மமும் அதர்மமும் காலாகாலத்தில் தேய்வதும் வளர்வதுமாகத் தோற்றமளிக்கிறது.

59. மத விசுவசமுடைய சிறந்த அரசாட்சியின் துணையால்தான் அதர்மத்தை ஒழித்து தர்மத்தை நிலை நிறுத்த முடியும். மக்கள் தர்மத்தை அனுஷ்டிக்கும் வகையில் ஆட்சி செலுத்தி தர்ம நெறியில் மக்கள் ஒழுகத் தொடங்கும் பொழுது ஆட்சியின் அவசியம் மக்களுக்கு தேவையற்றதாகிவிடுகிறது.

60. தர்மத்தின் அடிப்படையில் அரசாட்சி இருந்தால்தான், மதகுருமார்களினாலும் மதப்பிரசாரத்தாலும் பிரயோசனம் ஏற்படும்.

61. தர்ம சிந்தனைக்கு இடமில்லாத நிர்வாகமும், கல்வி முறையும் இருக்கும் இடத்தில், எக்காலமும் அமைதி நிலவுவதற்கு இடமில்லை.

62. தர்ம சிந்தனை இல்லாத மக்கள் இருக்குமிடத்தில் எத்தகைய அரசாட்சியும் நிலைத்திருப்பதில்லை.

63. அரசாட்சியை விட தர்மம் பெரியதென்று மக்கள் நினைக்கும் பொழுதுதான் அரசாட்சி அதன் உண்மையான குறிக்கோளை அடையும்.

64. வேற்றுமையில் ஒற்றுமையிருக்கும் இயற்கை இரகசியத்தை அறிந்தவகள் உள்ளத்தில் சமரசம் தானாகவே பிறக்கிறது.

65. பிராணன், மனம், புத்தி மூன்றும் ஆத்மாவில் லயக்கும்பொழுதுஅதி அற்புதமான சுகம் பிறக்கிறது.

66. எங்கு பண்பு குறைந்திருக்கின்றதோ அங்கு தருமமில்லை. தர்மத்தின் செயலுருவம்தான் பண்பு.

67. தாய் தந்தையின் அந்தரங்க எண்ணங்களின் உருவ வடிவமாகத்தான் குழந்தைகள் பிறந்திருக்கின்றன.

68. தாய் தந்தையர்களின் அடிமனதில் பதிந்திருக்கும் எண்ணங்களுக்கு தக்கபடி, பிறக்கும் குழந்தைகளின் அடிப்படைச் சுபாவமும், அமைந்திருக்கும்.

69. தர்ம சிந்தனைகள் அடி மனதில் பதியாதவர்களுக்கு நன்மக்கள் பிறப்பதில்லை.

70. தர்மத்தை உபாசிக்கின்றவர்களுக்குத் தர்ம தேவதை புத்திரனாகப் பிறக்கின்றது.

71. நல்லறமிக்க இல்லறத்திலிருந்து ஒழுக்கமுடைய மக்கள் பிறக்கின்றனர்.

72. நல்லறமில்லாத இல்லறமே ஒழுக்கங் கெட்ட பிரஜைகளுக்குக் காரணம்.

73. மாதா, பிதா, குரு, அரசன் இந்நால்வரும் அறநெறியில் வாழ்பவராகில், கெட்ட பிள்ளையும், கெட்ட சிஷ்யனும், கெட்ட பிரஜையும் இருக்க முடியாது.

74. சத்தியம், தர்மம் இவற்றை இரு கண்களாக வைத்து வாழ்கின்றவர்களுக்கு அரசியல் சலுகையும் பாதுகாப்பும் எதற்கு?

75. சுயநலம் கருதி கடமையும், சேவையும் செய்கின்றவர்களுக்கு இறுதியில் அதுவே துன்பத்திற்குக் காரணமாகின்றது.























Thursday, 21 November 2013

கவிஞனின் அனுபவம்

கடகட எனவொரு இசைபட வருகிற
ரெயிலினி லனுதின மிடர்பல படுகிற
கவிஞனி  னனுபவ மிகைபட மிகைபட
தினமொரு கவிய மனதினி லமைவுற
அதையொரு காகித மிசைபட இயம்பிட
 பலரதை ஒருமுறை புகழுரை நயம்பட
உரைத்திட உணர்வது தாய்மையி னின்பம்.

படபட எனபல உரைபல உரைத்திடு
மடமயில் மங்கையர் குரல்பல இணைந்திட
கடகட ரயிலொலி காற்றினி லோய்ந்திட
இடையிடை கூவிடும் இஞ்சினி னொலியது
தொலைவினி லொருரெயில்  வருவது போலவே
செவியினில் விழுவதால் தலையினை அடிக்கடி
வெளியினில் விடுவதால் விழியினில் விழுவது
கரித்திடவருவது கண்களில் கண்ணீர்.

ஒருகர மதிற்சில பொருள்பல இருந்திட
மறுகர மதுவொரு துணைஎனு மளவிலே
அகப்படு பொருளினை  குரங்கென பிடித்திட
பரபர எனவொரு துருதுருப் புடன்ரெயில்
புறப்படு வேளையில் நாணலாய் வளைவரேல்
சடசட வெனவொரு சரிவது காண்கிலர்
முதலதை பயின்றிட லவசியம் 'அரிவரி'
முழுவதும் பயின்றவ ரதிசயம் சரிவரின்.

பலபல நிறங்களில் பாவையர் சேலை
பலவித வகையினிற் பார்ப்பவர் சேட்டை
தினமிதைப் பொறுத்திட செல்வதோ ஆலை
இடையிடை நினைத்திட செய்வதே வேலை
ஒருபடி ஓய்ந்திட வந்திடும் மாலை
மறுபடி தொடர்ந்திடு மதுதான் வாழ்க்கை
அதையிதைச் சொன்னதால் ஆத்திரம் வேண்டாம்
அடுத்தவர் சுதந்திரம் காத்திட வேண்டும்.

கடகட எனவொரு இசையொடு போகிற
ரெயிலினி லனுதின மிடர்படசாகிற
கவிஞனி னனுபவ மதுவொரு தனிரகம்.

எழுபதுகளில் காகிதாலை வேலைக்குப் போகும் காலங்களில் கவிஞனின் பார்வையில் மட்டக்களப்பிலிருந்து வாழைச்சேனை காகித ஆலைக்கு நாளாந்தம் ரெயிலில் செல்லுகையில் ஏற்ப்பட்ட அனுபவத்தை இக் கவிதையில் தந்தேன்.