Saturday, 8 March 2014

வஜனாம்ருதம் தொடர்ச்சி 4


WEDNESDAY, 12 MARCH 2014
வஜனாம்ருதம் தொடர்ச்சி 4



ஆன்மீகப் புத்தகமோ 
அத்வைத வித்தகமோ 
"நான்" கடந்த தத்துவமோ 
ஞானத்தின் மெய்த்தவமோ 
தேன் கடந்த தித்திப்போ 
தேவ நிலை சித்திப்போ 
வான் கலந்த குருமணியே!
வாழ்த்துகிறோம்! வணங்குகிறோம்!!


151. குற்றத்தைக் கண்டிப்பதும், திருத்த முயற்சிப்பதும் சமய சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு செய்யப்படாவிட்டால், கிடைக்கும் பலன் கலகமும் விரோதமுமாகும்.

152. உனது அறிவைப் பற்றிய அறிவு உனக்கில்லாமல் இருப்பதே உனது துன்பங்களுக்கெல்லாம் மூல காரணம்.

153. தன் அபிமானத்தை தன் அளவில் அடக்கமாக வைத்திராவிட்டால் அது அகங்கார வடிவம் கொள்ளும். அகங்காரத்தின் விளைவு நாசம்.

154. உனது தீய கர்ம வினைகளின் திரட்சியே ஏழரைச் சனியாய் வடிவெடுக்கின்றது. அதற்கு அந்நியமாய்ப் பிறிதொரு சனிதோஷம் கிடையவே கிடையாது.

155. சரித்திர கால வரலாற்றினால் மாத்திரம் ஒரு தேசம் என்றும் பெருமை யுடையதாய் இருப்பதற்கில்லை. காலத்திற்கேற்றவாறு அபிவிருத்தி அடைந்தால்தான் சரித்திரப் பெருமையும் நிலைத்திருக்கும்.

156. பண்பாடு என்பது தொன்று தொட்டு வந்த பழக்கங்கள். அன்று கோடானுகோடி மக்களால் பல்லாயிரம் தலைமுறைகளாகப் படிப்படியாய்ச் சீர்திருத்தியெடுத்த வாழ்க்கை முறையாகும்.

157. பழையதானாலும் கெட்டுவிடாமல் இருப்பது தர்மம் ஒன்றேயாம்.

158. விவேகமிருந்தும் சினமும்,சஞ்சலப்படும் சுபாவமும் உடையவர்களுக்கு நிம்மதி என்பதில்லை.

159. விவேகம் இல்லாத கல்வி கடிவாளம் இல்லாத குதிரை போன்றது.

160. குலம், கோத்திரம், பிறப்பு இவைகளால் ஒருவனைக் கணிப்பது பிழை. ஒருவனுடைய மேன்மையும், தாழ்வும் அவனது குணத்தைப் பொறுத்து இருக்கிறது.

161. சத்தியம், தானம், பொறுமை, ஒழுக்கம், சாந்தம், தபசு இவைகளால் எவன் பிரமத்தை அரிய முயற்சிக்கிறானோ அவனே உத்தமமான பிராமணன். அத்தகையவன் சண்டாள குலத்தில் பிறந்தாலும், பிராமணனேயாம். 

162. ஞானம் கைவந்த போதிலும், மக்களையும் மாநிலத்தையும் மறப்பது இறைவனைப் புறக்கணிப்பதற்கு ஒப்பாகும்.


163. உனது திறமைகளை அடக்கி ஒடுக்காதே. அதைச் சீரியமுறையில் செயற்படுமாறு சுதந்திரமாகத் திறந்துவிடு.


164. எங்கு கருணை இருக்கின்றதோ அங்கு தர்மம் இருக்கும். தர்மம் இருக்குமிடத்தில் சுகம் இருக்கும். சுகம் இருக்கும் இடத்தில் இறைவன் இருப்பார்.


165. மன்னனும், மனிதனும் உனக்கு மன்னிப்பு அளித்தாலும் உனது தீவினைப்பயன் உனக்கு மன்னிப்பளிப்பதில்லை.


166. தன்னடக்கம் இல்லாதவர்களுக்குக் கிடைக்கும் அனுகூலம் சில சமயம் பிரதிகூலமாக மாறிவிடுகிறது.


 167. வண்டுதான் தேன் உண்ணுமே தவிர மண்டூகம் (தவளை) அதை உண்பதில்லை. அதே போன்று உலக ஆசையில் மூழ்கிக் கிடப்பவர்களுக்கு ஞானத் தேன் உண்ண விருப்பம் வருவதில்லை.


168. அன்றலர்ந்த மலர் அன்று கெடும். மலராமல் மலர்ந்திருக்கும் ஞான மலர் என்றும் கெடுவதில்லை.

169. அந்தரங்க சுத்தியில்லாத ஒரு சமயவாதியைவிட நல்லொழுக்கம் உடைய ஒரு நாஸ்திகன் மிகச் சிறந்தவன்.

170. தன்னறிவு தெளியும் வரையில் சான்றோன் ஒருவரை நாடி நிற்பதால் பெரும் பயன் உண்டு.



171. உன்னில் தேய்வதும், வளர்வதும் எவை என்பதைக் கண்டறிவது மிகக் கஷ்டம். நுண்ணறிவை நிதானமாய் உபயோகித்து அறியவும்.


172. தனக்கு மதிப்புத்தந்து தன்னைப் புகழ்ந்து கொண்டிருப்பவர்கள் மட்டும்தான் நல்லவர்கள், மற்றவர்களெல்லாம் பொல்லாதவர்கள் என்று நினைப்பவர்கள்தான் பொல்லாதவர்கள்.


173. குளத்தில் நீரிருக்கும்வரையில் மீனிருக்கும், ஈர்ந்தெடுப்பதற்கு ஏதாவதொன்று இருக்கும் வரையில் மனிதர்கள் உன்னை நாடி நிற்பர். ஒன்றுமே இல்லையென்றால் ஒருவரும் சார்வதில்லை.


174. கோவிலைச் சுற்றிவாழும் நாய்களெல்லாம் பிராமணனாக மாறுவதில்லை. மகான்களைச் சுற்றி நிற்பவர்கள் எல்லாம் நல்லவர்கள் ஆவதில்லை.


175. பழமை வாய்ந்ததாயினும், புதியதாயினும் அப்படியே ஏற்றுக்கொள்ளாதே. விவேகத்தினால் இரண்டிலுமிருக்கின்ற நல்லவைகளையே தேர்ந்தெடுத்துக் கொள்.


176.ஊசி முனையில் நிற்கப் பழகினாலும், மன நுனியில் ஒரு வினாடிதானும் நிற்கப் பழகுவது மிகக்கடினம்.


177. நிறம் மாறும் ஓணான் போன்று அடிக்கடி குணம் மாறுபவர்களிடத்திலிருந்து வெகு தூரம் விலகி நில்.





179. தன்னயம் கருதாமல் அன்பு செலுத்துகிறவர்களுடைய அன்புதான் உண்மை அன்பு. அவர்கள்தான் உத்தம நண்பர்கள்.


180. சிற்றின்ப நுகர்ச்சிகளில் காணுந் தோல்விகளை தோல்வி என்று கருதி வருந்தாதே. அது திருந்துவதற்குரிய ஒரு கடுந் தண்டனை என்பதை உணர்க.







181. கடலின் மேற்பரப்பில் தான் அலையும் இரைச்சலும் இருக்கின்றது. ஆழத்தில் அலைகள் இல்லை. அதே போன்று மேல் மனதின் செயல் நிலையில் மாத்திரந்தான் துயரமும் அமைதிக்குறைவும் நிலவுகின்றது. அடி மனதில் இறங்கிச் செல்லும் அளவிற்கு ஆத்மசக்தியின் பேரானந்தமும் தான் அனுபவமாக நிலவுகின்றது.


182. கண்டதும், கேட்டதும் எல்லாம் விரும்பாதே. நல்லவையில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து அதை அழுத்தம் திருத்தமாகச் செயல் படுத்துக. பலன் நிச்சயம் கிடைக்கும்.


183. உலகியல் இன்பம், பால்யம், இளமை, முதுமை என்பதற்கிணங்க விதம் விதமாக அனுபவப்படுகின்றது. ஞான இன்பமோ எந்தப் பருவத்திலும், ஒரே மாதிரியான சுகானுபவம் உடையது.


184. அருளும் பொருளும், உயிரும் சரீரமும் போன்று ஒன்றோடொன்று தொடர்புடையவை. இரண்டையும் படைத்த கரம் ஒன்று ஆகையால் இவை இரண்டையும் இரண்டு கோணத்தில் வைத்துப் பார்த்து வாழ்வதில் அர்த்தமேயில்லை.


184. பழங்கள் பழுத்தால் மரத்தின் மேலும், கீழும் நல்லதும் கெட்டதுமாகிய பலவித பிராணிகள் வந்தடைகின்றன. அதேபோன்று ஞானம் பூர்த்து நிற்கும் இடத்தில் பலதரப்பட்ட மனிதர்களும் வந்து சேர்கின்றனர்.


186. மதம், ஆத்மீகம் இவைகளை தவறான வழியில் கவர்ச்சியுடையதாக்கி வளர்ப்பதால் அது விரைவில் அழிந்துவிடும்.


187. துறவிகளின் பூர்வ வரலாற்றை அறிய முயற்சிப்பது, இறந்த குழந்தையின் சாதகம் வாசித்து அறிவதற்கு ஒப்பானது.


188. நேரம், காலம், கடவுள் இவை உன்னை நோக்கி வரும் எனக் காத்திருக்காதே. இம்மூன்றும் தீவிர முயற்சியுடையவனில் எப்பொழுதும் தங்கி இருக்கிறது.


189. உனது கெட்டித்தனத்தால் பலதும் சாதிக்க முடியலாம். ஆனால் சாதித்ததை நிம்மதியுடன் சம்பூர்ணமாய் அனுபவிப்பதற்குத் திருவருள் வேண்டும் என்பதை அறிக.


190. குளிப்பது, உண்பது, உறங்குவது, புணர்வது இவற்றை மனம்போன போக்கில் செய்தால் தேகசுகம் கெடும்; நோய்வாய்ப்படுவாய். ஊர்ந்து,பறந்தும் வாழ்கின்ற பற்பல பிராணிகளின் தினசரி ஒரு நேரமும் நெறியும் உண்டு. மனிதனுக்கென்று ஒரு நன்னெறி இருந்தும், நெறி தவறி வாழ்கின்றவர்களின் வாழ்வால் என்ன பயன்?


191. உண்ணும் உணவின் அதிசூக்குமமான பகுதிக்கும் மனதிற்கும் நெருங்கிய தொடர்புகள் இருக்கின்றன. எனவே நல்லுணர்வுகளை வளர்க்கும் சாத்வீக உணவை உண்க!


192. சுகமுடன் வாழ்வதற்கும், இறப்பதற்கும் ஒரு நெறியும் குறியும் வேண்டும். அது இல்லையானால் திசை தடுமாறித் திரிய நேரிடும்.இடறுவீர்.


193. முத்துச் சிப்பியை உடைத்துப் பார்த்தாற்றான் முத்து இருப்பதும் இல்லாததும் தெரியும். இதயத்தை ஊடுருவிப் பார்க்கும் திறமை உனக்கிருந்தால் மட்டும்தான் மற்றவர்களுடைய நன்மை,தீமைகளை சரிவர அரிய இயலும்.


194. உனது கடமைகளைச் செயற்படுத்தும்பொழுது மற்றவர்களுக்கு இடையூறு விளையாமல் பார்த்துக் கொண்டால், இன்னலும் விரோதமும் குறையும்.


195. ஒரு தேசத்தின் இயற்கை வளங்களையும் செயற்கைச் செல்வங்களையும், அந்நாட்டு மக்கள் சம தர்ம ரீதியில் அனுபவிப்பதற்குரிய சந்தர்ப்பம் இருக்க வேண்டும். அங்ஙனம் இருந்தால் பஞ்சமா பாதகங்களைச் செய்யத் தூண்டும் உணர்வுகள் குறையும்; தேசப் பற்றும் தேச பக்தியும் பெருகும்.


196. மாதா, பிதா, குரு, மன்னன் இவர்கள்தான் தண்டிப்பதற்குரிய உரிமை உடையவர்கள். மற்றவர்கள் அதனைச் செய்தல் குற்றமாகும்.



197. உலகத்தைப் புரிந்து வாழ். துயர் நீங்கும்.


198. வெளிச்சத்திற்குப் பின் இருள் இருப்பது போன்று நல்லதென்று கருதுவதின் பின்னுக்குத் தீயதும் இருக்குமென்றறிக.


199. பகவான் என்ற சொல் இறைவனுக்கு மாத்திரம் பொருத்தமானது.


200. உலகத்தில் மனிதத் தன்மை வளரும் அளவிற்குப் பிரச்சனைகள் தானாகவே குறையும். ஆகையால் சகலவிதமான செயல்களும் மனிதத் தன்மையை வளர்த்தெடுக்கும் முறையில் அமையவேண்டும்.



thayam


Friday, 24 January 2014

தன்னை அறிந்தால் தவம்வே றில்லை




தன்னை அறிந்தால் தவம்வே றில்லைத்
தன்னை அறிந்தால் தான்வே றில்லைத்
தன்னை அறியச் சகலமு மில்லைத்
தன்னை அறிந்தவர் தாபத ராமே

பொன்னை யன்றி பொற்பணி யில்லை
என்னை யன்றி ஈசன்வே றில்லை
தன்னை யன்றிச் சகம்வே றில்லைத்
தன்னை அறிந்தவர் தத்துவா தீதரே

ஆதியும் இல்லை அந்தமும் இல்லை
நீதியும் இல்லை நெறியும் இல்லை
சாதியையும் இல்லைச்  சமயமும் இல்லை
ஓதி உணர்ந்தவர் உறுதி மொழியே

நம்மையுந் தீமையும் நங்கட் கில்லைத்
தொன்மையும் புதுமையும் தூயோர்க் கில்லை
அன்னையுந் தந்தையும் ஆன்மாவுக் கில்லை
சொன்ன சுருதியின் துணிபிது வாமே

காலமு மில்லைக் கட்டு மில்லை
மூலமு மில்லை முடிபு மில்லை
ஞாலமு மில்லை நமனு மில்லைச்
சால அறிந்த தவத்தி னோர்க்கே.

சின்னத்தங்கச்சி சிந்தையில் சிவநெறி விளக்கம்




எனது மகனுக்கு பதினாறு வயதாகப் போகிறது. கடந்த பதினைந்து வருடங்களாக மனைவி   இருந்தபோதும், இறந்தபின்னும் எந்தவிதமான இடையூறுமின்றி விம்பிள்டன் பிள்ளையார் கோவிலுக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் போய்வருகிறோம். சகோதரர்களின் பிள்ளைகளுக்கு பிள்ளை பிறந்தாலோ தீட்டு,துடக்கு, என்று வந்தாலோ மட்டுமே தடைப்படும்.
இன்று ஆலய புனருத்தாரண வேலைகள் ஆரம்பித்து பாலஸ்தாபனம் பண்ணிய கோவிலில் யோக சுவாமிகளின் 'நற்சிந்தனை' புத்தகம் கிடைத்தது. அதிலொரு பாடல் 'சின்னத்தங்கம்' என்று முடிவுறும். அதனை எங்கள் சுவாமிஜி அவர்களின் வரிகளாக பாவித்து எங்கள் சகோதரியாரை அவர் அழைக்கும் 'சின்னத்தங்கச்சி' என்று மாற்றி எழுதிப் பார்த்தேன். எனது அக்காவின் அருளுரைகளும் இதுபோலவே அமைத்திருக்கும்.
அவருக்கு சமர்ப்பணமாக "சின்னத்தங்கச்சி சிந்தையில் சிவநெறி விளக்கம்" என்ற தலைப்பில் அமைத்துள்ளேன்.


"சின்னத்தங்கச்சி சிந்தையில் சிவநெறி விளக்கம் "

தெய்வத்துக்குத் தெய்வம் சிந்தையிலே தானிருக்க
வையகத்தி லேனளைந்தாய் - சின்னத்தங்கச்சி
வாட்டமெல்லாம் விட்டிடடி சின்னத்தங்கச்சி

ஆழித் துரும்பெனவே யன்குமிங்கு மாயலைந்து
பாரில் தவியாதே - சின்னத்தங்கச்சி
பார்த்து மகிழ்ந்திடடி - சின்னத்தங்கச்சி

கங்குபகல் காணாத கருணைதனை வேண்டிக்கொண்டு
செங்கமல மடமாதே - சின்னத்தங்கச்சி
சீராக வாழ்ந்திடடி - சின்னத்தங்கச்சி

ஆடம் பரமெல்லாம் அடியோடே நீக்கிவிட்டு
கேடரியாத் திருவடியை - சின்னத்தங்கச்சி
கிட்டநீ கண்டிடடி - சின்னத்தங்கச்சி

வேடமொன்றும் போடாதே வீணருடன் கூடாதே
தேடவேண்டாந் திகைக்கவேண்டாஞ் - சின்னத்தங்கச்சி
சீவன்சிவன் ஆச்சுதடி - சின்னத்தங்கச்சி

தொழுது வணங்கிடுவாய் துரியநிலை சாருமட்டும்
அழுதழுது ஆண்டவனைச் - சின்னத்தங்கச்சி
ஆன்மலாபம் தேடிடடி - சின்னத்தங்கச்சி

முழுதுமுண்மை என்றுமுன்னாள் மோனகுரு சொன்னாரடி
பழுதொன்று மில்லையடி - சின்னத்தங்கச்சி
பவுத்திரமாய் வாழ்ந்திடடி - சின்னத்தங்கச்சி

காண்பானுங் காட்சியும்போய்க் காட்சிப் பொருளுமற்று
மாண்புடனே நின்றிடுவாய் - சின்னத்தங்கச்சி
மரணபய மில்லையடி - சின்னத்தங்கச்சி

சேண்பொழியுந் திருவடியே சித்தத்திலெப் போதுமுண்டு
வீண்காலம் போக்காதே - சின்னத்தங்கச்சி
வேண்டிப் பணிந்திடுவாய் சின்னத்தங்கச்சி

மானாபி மானம்விட்டு மண்ணும்விண்ணுந் தெரியாமல்
தானான தன்னிலையில் - சின்னத்தங்கச்சி
தனியே யிருந்திடடி - சின்னத்தங்கச்சி

தானான தானேயல்லால் தனக்குதவி யாருமில்லை
மோன நிலைதனிலே - சின்னத்தங்கச்சி
மூழ்கி யிருந்திடடி - சின்னத்தங்கச்சி

புத்தியைநீ நாட்டாதே புன்நெறியைச் சூட்டாதே
வெற்றியுனக் குண்டாகுஞ் - சின்னத்தங்கச்சி
விருப்பும் வெறுப்பும்விடு - சின்னத்தங்கச்சி

எத்திக்கு மீசனடி இருந்தபடி யேயிருந்து
பத்திசெய்து பார்த்திடுவாய் - சின்னத்தங்கச்சி
பழிபாவ மில்லையடி - சின்னத்தங்கச்சி

தத்துவப் பேயோடு தான்தழுவிக் கொள்ளாதே
சுத்தபரி பூரணத்தில் - சின்னத்தங்கச்சி
சுகித்துநீ வாழ்ந்திடடி - சின்னத்தங்கச்சி

வித்தகம்நீ பேசாதே வேறொன்றை நாடாதே
செத்தாரைப் போல்திரிவாய் - சின்னத்தங்கச்சி
தெய்வம்நீ கண்டிடடி - சின்னத்தங்கச்சி

மெத்தக்கதை பேசாதே மேன்மக்களை யேசாதே
சத்துருவும் மித்துருவுஞ் - சின்னத்தங்கச்சி
தானொன்றாய்ப் போகுமடி - சின்னத்தங்கச்சி

Thursday, 23 January 2014

கண்ணாடியுளிருந்து கவிதைகள் முப்பத்தெட்டு



தவம்

ஆதி மனிதர்கள் அவனை வானில் முளைத்த நெருப்பு என்று கணந்தோறும் பயந்தார்கள்.யுகங்கள் கழிய பயங்கள் வியப்பாகின்றன. கிரேக்கர்கள் அவனை அப்போலோ என்றழைக்கத் துவங்கினர். அவனுக்கென கையில் யாழொன்றையும் கண்டனர். வைத்தியனாதலால் சூர்யவெளிச்சம் என்ற நாளாந்த அனுமானத்தை வாழ்விற்குப் புலப்படுத்திக் கொண்டிருக்கிறான். ஒளியும் ஒளி இழைகளின் இடுக்கில் வசிக்கும் இருளும் அவனது கலை. அவனது கலையும் வைத்தியமும் சங்கமிக்கும்போது அவன் பேருணர்வுகளின் உதரமாகிறான்.

ஆனால் நான் எழுதமுயர்சிக்கும்போது மட்டும் அவன் குகையாகிறான். எனது சித்தாந்தங்கள் வேட்டை நாய்களாக அவனைத் தேடுகின்றன. அவற்றின் குரல்கள் மனசின் கானக மரங்களில் மோதி எதிரோளிகலாகச் சிதறுகின்றன. "டேஃப்னே, டேஃனே"என அப்போலோ தான் காதலித்தவளைப் பின் தொடரும் குரல் எனது சித்தாந்தங்களின் குரைப்பில் கேட்கிறது. டேஃனேயை அவனால் தீண்ட முடியவில்லை. மரமாகிவிட்டாள். அவள் கன்னிமையின் நிழலில் நான் நிற்கிறேன். அதன் இலைகளை ஒடித்து அப்போலோவைப் போலவே சிரசில் அணிந்து கொள்கிறேன். எழுத வேண்டியதில்லை எனத் தோன்றுகிறது. உள்ளிருந்து ஒரு புதிய இயல்பு பிறக்கிறது.என் விரல்களை மடித்து கைகளையும் கட்டிக்கொள்கிறேன். வேட்டை நாய்கள் முயல்களையும் முள்ளம்பன்றிகளையும் தேடி ஓடட்டும். எனது பிடரியில் குடியிருக்கும் இருள் கலைந்து புறப்பட்டு நிசப்தத்தில் வானை நிரப்புகிறது. மூச்சின் இறகுகள் நுரைஈரலிறக்கைகளுள் மடிகின்றன.

சூர்யன் தன் உத்தரக்கோதுக்குள் ஆழ்ந்து கருவாகிறான். எல்லையற்று ஒடுங்கிக்கொண்டிருக்கிறான்.

தவம்   1 23/01/2014


அறைகூவல் 2

இது
புவியை நிலவாக்கும்
கண்காணாச் சரக்கூடம்.
நடுவே
நெருப்புப் பந்திழுத்து
உள்வானில் குளம்பொலிக்கப்
பாய்ந்துவரும் என்குதிரை.

பாதை மறைத்து நிற்கும்
மரப்பாச்சிப் போர் வீரா!
சொல்வளையம் இது என்றுன்
கேடயத்தைத் தூக்கி என்னைத்
தடுக்க முனையாதே.
தோலும் தசையும்
ஓடத்தெரியாத
உதிரமும் மரமாய்
நாடு மனமும் மரமாகி
விரைவில்
தணலாகிக் கரியாகும்
விற்குப் போர்வீரா!
தற்காக்கும் உன் வட்டக்
கேடயம்போல் அல்ல இது.

சொற்கள் நிலவு வட்டம்
ஊடே
சூரியனாய் நிலைத்(து)எரியும்
சோதிஒன்று வருகிறது.
சொல்வளையம் இது என்றுன்
கேடயத்தைத் தூக்கி என்னைத்
தடுக்க முனையாதே

தீப்பிடிக்கும் கேடயத்தில்
உன்கையில் கவசத்தில்
வீசத் தெரியாமல்
நீ
ஏந்திநிற்கும் குறுவாளில்
யாரோ வரைந்துவிட்ட
உன்
மீசையிலும்!

நில் விலகி,
இன்றேல்
நீறாகு!

24/01/2014

குருஷேத்ரம்    3

இன்று வேலை நிறுத்தம்!
'கடமையைச் செய்
பலனை எதிர்பார்க்காதே'
என்று சொல்லிவிட்டு
காரில் நழுவப் பார்த்த
கன்னபிரானுக்குக்
கல்லடி
சுவரெங்கும்
பசிவேத சுலோகங்கள்.
அர்ச்சுனன் கிளைத்து
அரக்கனாய்
கார்த்தவீர் யார்ச்சுதனாய்
தலை ஆயிரம்,
கை இரண்டாயிரம்.
கண்ணபிரான் நெற்றியிலே
உதிரத்தின்
நாமக் கோடுகள்.
விஸ்வரூபத்துக்கும்
முயற்சிக்க வலுவில்லை.
இருந்த கால்களில்
எழும்ப முயன்றான்.
'கீதையைக் கேட்க
அர்ச்சுனன் இல்லையென்றால்
கூப்பிடு கௌரவரை' என்றான்.
பறந்தது போன் செய்தி
பொலீசுக்கு.


(உன் ) பெயர்    4

சீர்குலைந்த சொல்லொன்று
தன் தலையைத்
தானே
விழுங்கத் தேடி
என்னுள் நுழைந்தது.
துடித்துத் திமிறி
தன்மீதிறங்கும் இப்
பெயரின் முத்தங்களை
உதறி உதறி
அழுதது இதயம்.
பெயர் பின் வாங்கிற்று.
'அப்பாடா' என்று
அண்ணாந்தேன்.......

சந்திர கோலத்தில் மோதியது
எதிரொலிக்கிறது.
இன்று, இடையறாத உன்பெயர்
நிலவிலிருந்திறங்கி
என்மீது சொரியும் ஓர்
ரத்தப் பெருக்கு.

25/01/2014


கலப்பு    5

ஒரு பாப்பாத்தி நகத்தோடு
என் பறைநகம் மோதி
மனம் அதிர்ந்தது.
கோபத்தில் மோதி
கலந்தன கண்கள்.
பிறந்தது
ஒரு புது மின்னல்.
ஜாதியின்
கோடைமேவிப் பொழிந்தது
கருவூர்ப் புயல்.....



வசன கவிதை    சுவர்கள்    6

மனசின் இருண்ட அனுஷ்டானங்கள் என்னை வீடு திரும்ப விடாது தடுத்துக் கொண்டிருக்கின்றன.

இருண்ட கானகக் குரல்களின் ஊர்வலம் ஒன்று நகரச் சந்தையில் அலைகிறது.

வீடு திரும்பும் வழி தெரியவில்லை.

அன்று.....
ஒரு மாட்டுக் கொட்டிலின் மஞ்சள் வைக்கோல் மீது பிறந்து கிடந்த சிசு மூன்று சக்கரவர்த்திகளை நோக்கி திறந்த பாலைவெளியினூடே
ஒரு நக்ஷத்திர அழுகையில் அழைத்து வழி காட்டிற்று.

நான் சக்கரவர்த்தியுமல்லன்.

சூழச் சுவர்களின் இனம் மூடும் நகர் ஒரு திறந்த வெளியுமல்ல.....

பாலையாயினும்
வீடுகள் யாவும் வாயிளித்து ஆபாஸமான பசியைப் போன்று நிற்கக் கண்டவனாயினும்

வீடு

ஒன்றுண்டெனவே எண்ணுகிறேன்.

இந்த சுவர்களினுள் விழுங்கப்பட அல்ல.

கருவாகி

புனிதத் தசைகளில் ஊறும் ரத்தச் சுனையைக் காண.

(லக்ஷிமிக்கு)

29/01/2014


முதுமை 7 

காலம் பனித்து விழுந்து 
கண்களை மறைக்கிறது.
கபாலத்தின் கூரையுள் 
ஒட்டியிருந்து 
எண்ணவலை பின்னிப்பின்னி 
ஓய்கிறது மூளைச் சிலந்தி.
உணர்வின் ஒளிப்பட்டில் 
புலனின் வாடைக்காற்று 
வாரியிறைத்த பழந்தூசு.

உலகை நோக்கிய
என்விழி வியப்புகள்
உயிரின் இவ்வந்திப்போதில்
திரைகள் தொடர்ந்துவரும்
சவ ஊர்வலமாகிறது.
ஒவ்வொரு திரையிலும்
இழந்த இன்பங்களின்
தலைகீழ் ஆட்டம்.
அந்தியை நோக்குகிறேன்.
ஏதோ எரிகிறது.....
ஒன்றுமில்லை,
பரிதிப் பிணம்.

பூர்ஷுவா 8

வம்பளப்பு,கண்ணடிப்பு,
கண்ணாடியில்
டீயை எதிர்பார்த்திருக்கும்
பிரதி பிம்பங்கள்.
சீனத்துக் கோப்பைகளில்
வெள்ளையன் கரண்டிகள்
சிந்திய சிரிப்புகள்.
எங்கள் முறுவலிப்பு
முறைக்கும்.
தேசம் திருகி
வலம் இடமாகும்.
காலமும் திருகி
நேற்றையது நாளையாய்
நாளை நேற்றாகும்.
யாவும் உருகி
நீராகும்.

அனால் நாமோ
முறுவல் என்று
முறைப்போம்.
யாவற்றையும் கண்டு
கண்ணாடியில்
நிச்சலனமாய்க் காத்திருக்கும்
பிரளயம்.



30/01/2014



பேச்சு  1       9 

கேள்,
அழகு கதைக்கிறது.
ரத்தப் பளபளப்பு.
கண்ணின் இமைக்கரங்கள் 
மெல்ல அருகளைக்கும்.
பார்வைச் செவிப்பறையில் 
பருவம் முரசறையும்.
பூவின் இதழ்ச் சுவருள் 
வண்டுக் குரல் ஒலிகள் 
மோதி மடிகிறது.
முத்தத் திரைமறைவில் 
பேச்சுப் புதைகிறது.
ஆனால்,
ரத்தம் கதைக்கிறது.
மௌனம் அதிர்கிறது.

(நன்றி: 'எழுத்து')


பேச்சு   2      1௦ 

கருத்தழிவின் கழிவு 
காதலன் பிதற்றல்.
அவள் சொல்லோ 
வெறும் பார்வை.
வெறும் விரல்கள் 
மணலில் 
விட்ட வடுக்கள்.

(நன்றி: 'நடை')


விடிவு     11 

பூமித் தோலில் 
அழகுத் தேமல்.

பரிதி புணர்ந்து 
படரும் விந்து.

இருளின் சிறகைத் 
தின்னும் கிருமி.

வெளிச்சச் சிறகில்,
மிதக்கும் குருவி.

(நன்றி: 'எழுத்து')


31/01/2014.



அடிமனம்     12 


முட்டித் ததும்பியென்ன?
மாலையில் பகல் வடிகிறது.
ஒளி ஒதுங்கிய இரவாகிறது.
கதிர் 
எங்கோ சொட்டி 
விளைந்தன தாரகைகள்,
பகலின் துளிகள்.
என் மன அகலிகையின் 
நிறைவின்மை முடிவுற்று 
வாழ்வு கரவாகிறது.
இனி என்ன?
கௌதம உக்கிரத்திற்கு 
ஒரு போலி.
போலிப் பரிதி.
ஒரு போலி வைகறை.
உதிக்கிறது எங்கும் ஒரு 
திருட்டுத் தெளிவு.
இந்திர நிலவு.
பாதி தெளிந்து 
ஆடை கலைந்து 
வெளிர்கிறது மனவெளி.
ஒலியற்றுச் சிரித்து 
மனம் பதைக்கும் புணர்ச்சிக்கு தனித்து 
வெறிச் சோடிய தெருவெங்கும் 
அழுகி வடியும் விளக்கின் 
வாழ்த்தொளி.
இது நிகழ்ந்த சமயம் 
இடமற்ற 
மனோவேளை.

(நன்றி: 'கசடதபற')


வசன கவிதை    வருகை     13 

இரு துவங்களிலுமிருந்து சுவர்கள் முளைத்து அறையாகின்றன.

சூர்யக் கூரையிலிருந்து தொங்கும் ஒரு ஆகர்ஷணத் தூணியுள், அறைவாசி காமம் மேலிட்டுத் தவிக்கிறான்.

நக்ஷத்ரன்களினூடே, இன்னொரு மானுஷ்யத்தைத் தேடி அலைகிறது அவளது காம வாடை.

பிரபஞ்சம், நுகரும் புலன்களற்று, வெற்றுப் பார்வை பார்த்து. விடாயைக் கூட்டுகிறது.

ஒளிமண்டலங்களிடையே பிளக்கும் அகாதம் தூளியில் தவிப்பவளை நோக்கி வந்து புகுந்தபடியே இருக்கிறது; முடிவற்று விடாய்தீர்கிறது. உணராது அவள் தவிக்கிறாள்.

ஃ 

01/02/2014


அற்புதம்      14 

துருப்பிடித்த 
இரும்புக் கொடுகளினூடே 
சிதறும் 
பயனற்ற 
உப்பு நீர்ப் பாறைகள்.
வரண்ட நதிபோல் கிடக்கும் 
ஒரு துறைமுகத் தெரு 
எங்கும் 
இரும்பின் கோஷம்,
முரட்டு இயக்கம்.
ஒரு தொழிலாளி 
சூரியனை அவனது சிரசு மறைக்க 
பனை உயர கிரேனின் உச்சியிலிருந்து 
பீடிப் புகையோடு 
காறித் துப்புகிறான்.
அற்புதம்.
விரல்கள் வில்நீத்த அம்பாய் நடுங்க,
பரிதியின் விரித்த கையிலிருந்து 
ஒரு மழைத்துளி பிறக்கிறான்.
முகத்தில் 
வைரத்தின் தீவிரம்.அவள் 
மூளையில் ஒரு வான வில்.
எச்சல் துளி 
என் விழிப்பந்தில் வீழ்கிறது.
அக்கணம், ஒரு கணம் 
கிரேன்கள் லாரிகள் யாவும் 
தொழிலற்றுச் சமைந்தன.


வசன கவிதை      தவிப்பு      15 

தவிப்பு, நம்பிக்கையின் இனிய துகள்களாய் சிதறி விழுகிறது.
மனிதச் சிறுவர்கள், இரவினூடே யாவற்றையும் தேடிப்பிடித்தாராய்ந்து விளையாடுகின்றனர்.

எல்லையின்மை தவித்துத் தவித்து, சிதறியபடி ஆராய்வுக்ககப்படாது விரிந்தகல்கிறது.
இந்த இரவுகளில் சிறுவர்களின் ஆய்வுக்கருவிகள்தான் விழித்திருக்கின்றன.

ஆய்வுக் கூடங்களில் எல்லையின்மையை செயற்கை கருப்பைகளில் சிறையிடுகின்றனர்.

கருவையும் நிர்மாணிக்கின்றனர். காத்திருக்கின்றனர்.

கருப்பை வெடிக்கிறது.
அழிவு.

சரித்திரம், காலம், மனிதச்சிறுவனின் நம்பிக்கைகள்.......இனியதுகள்கள் சிதறிக்கொண்டிருக்கின்றன.

ஃ 
02/02/2014