Friday, 21 November 2014
மனம் கெட்டால் மாநிலம் கெடும்
#ஞான மண்டலம்
மனம் கெட்டால் மாநிலம் கெடும்
பிரமாண்டமான இப்பிரபஞ்ச நியமங்களைப் பற்றிய ஒரு சாமானிய அறிவு உணர்வுக்காவது இம் மண்ணுலக மனிதன் ஒரு கணமேனும் தலைவணங்கி நிரற்பாநேயானால் இவ் வையகம் பெருஞ் சுகமடைய வழியுண்டு.
மனிதன் இப்பூவுலகில் வாழ்ந்தும் அதன் உண்மைகளை உள்ளபடி அறியாமல் ஒன்றை இன்னொன்றாகவே கருதி வாழ்வதால் ஏமாற்றங்கள் பல சம்பவிக்கின்றன.
உண்மையைக் கிரகிக்க முடியாத மனம், மாறி மாறி வரும் ஏமாற்றங்களால் தன்னம்பிக்கை இழந்து வாழுந் திறமையுமற்று இறுதியில் மன வெறுப்பால் தரந் தாழ்ந்த குணமுடையதாகவும் மாறி விடுகின்றது.
மனித சுபாவம்:
மனிதருடைய அந்தரங்க உணர்வு தனது சக ஜீவிகளிடம் அன்பும் சமரச பாவனையும் உடையதாயிருந்த போதிலும், சொந்த விருப்பு வேருப்புகளுக்குப் பங்கம் விளையும் பொழுது மனித சுபாவம் கொடிய விலங்குகளைவிட மூர்க்க குணமுடையதாகின்றது.
நேற்று வரையிலும் இனிமையாகவும் நன்மையாகவும் போற்றிப் புகழ்ந்து வந்தவைகள் எல்லாம் கசப்பும் பகைமையும் உடையவைகளாகவே மாறிவிடுகின்றன. பகைமை கொண்ட மனமும் பாகனில்லாத யானையும் ஒன்றே. இங்ஙகனம் சுயநலத்தால் வெறுப்பும் பகைமையும் கொண்டு சீறும் மனம் நல்லகுணங்கள் எல்லாமிழந்து மத யானை போன்று தனக்கும் சமுதாயத்திற்கும் பெருங் கேடுகளை விளைவிக்கின்றது.
இப்படியான கரவுக் குணத்திலிருந்தெழுந்த விளைவுகள் தனி மனிதனிலிருந்து உலக ரீதியில் தோன்றிக் கொண்டிருக்கும் சகல தொல்லைகளுக்கும் மூல காரணம்.
மிக அரிது:
காலம் போகப் போகச் சிறிதேனும் உள்ளக் களிப்புடன் அமைதி நிறைந்த ஆத்மார்த்தமான ஒருவரைக் காண்பதே அரிதாகிவிட்டது.
மனிதன் தன் தன் உணர்வுகளை, செயல்பாடுகளை உன்னிக் கவனிப்பதில்லை. மனம் தோற்றுவிக்கும் விருப்பு வெறுப்புகளின் பலாபலன்களை அலசி ஆராய்வதுமில்லை.
கேடுபிடிக்குரிய யதார்த்த காரணங்கள் வேறெங்கோ இருக்கையில், விருப்பு வெறுப்புகளை மாத்திரம் முன்வைத்துப் பிரச்சனைகளைத் தீர்க்கப் பார்த்தால் மேலும் புதிய பிரச்சனைகளைத் தோற்றுவிக்கும்.
மனிதன் மனச் சாட்சியை நேர் கோட்டில் வைத்துக் காரிய காரணங்களைப் பார்த்தறியப் பழக வேண்டும்.
மனித மனம்:
பால் அதிக சத்து நிறைந்த உணவாகினும் கெட்டால் நச்சுத் தன்மையடைகிறது.
மனத்தால் வாழுகின்றவன் மனித்ன். மனிதனுடைய மனம் கெட்டுவிட்டால் இவ்வையகம் முழுவதும் கெடும்.
அடிமனம் விஷக் கலப்பில்லாத அமிர்த துல்லியமானது. பேராசையும் அகங்காரமும் மனமென்ற பொதிக்குள் விஷத்தை ஊற்றிவிடுகின்றது.
அக்கினியின் ஒளியால் கவரப்பட்டு அதிலேயே மாண்டு மடிகின்ற விட்டில் பூச்சி போன்று உலக வாசனையால் தடிப்பேறிய அகங்காரமும் பேராசையும் அதற்குரியவரைச் சுட்டெரிக்கின்றன.
உலகின் நிலை:
கேடுகள் பூமியில் இருந்தும் வானத்தில் இருந்தும் உருக்கொள்வதில்லை. அவைகள் மனித மனத்தில் இருந்து சிருஷ்டிக்கப்படுகின்றன.
பேராசையும் சுயநலமும் கேடுகளை வளர்த்தெடுக்கின்றன.
இவ்விரு நீச குணங்களுடைய பராமரிப்பில் வளர்ந்து வருகின்ற உலகம் சர்வ நாசத்திற்கு ஊர்ந்து செல்லக் கூடும்.
மிலேச்ச குணங்கள் கண்களைத் திசைமாறிப் பார்ப்பதற்குப் பழக்கி வைத்திருக்கின்றபடியால் அது நேரான மார்க்கத்தைப் பார்ப்பதற்குரிய ஒளியை இழந்து வருகின்றது.
ஜனங்களுடைய நல்ல சுபாவந்தான் உலக சேமத்தின் ஆதார பீஜம். இதை ஒவ்வொருவரும் திடமாகவே கருத்தில் ஊன்ற வேண்டும்.
மனிதர் களங்கமற்ற நற்குண சீலராய் வந்தால் கலகமும் கலக்கமும் இருக்க மாட்டா.எதார்த்தம் இவ்வாறிருக்கையில் வெவேறு மார்க்கங்களில் யோக செமங்களைத் தேடப் பார்ப்பது அர்த்தமற்றதாய் விடுகின்றது.
ஆத்மீக சிஷ்டணங்கள் சமய ஆசார அனுஷ்டானங்கள் எல்லாம் மனக் கசடுகளை உருக்கி மனிதர்களை நல்ல சுபாவ சுத்தியுடையவர்களாக்குவத்ர்கு உரிய உபாயங்களாகும்.
மனிதர் சர்வ சக்திகளையும் உபயோகித்து நற்குணங்களை விருத்தி செய்ய வேண்டும்.
உபத்திரவங்கள்:
துர்க்குணம் உடையவர்கள் வாழுகின்ற இடங்களில் பெரும் உபத்திரவங்கள் நிகழ்கின்றன. இதுதான் இன்றைய உலகநிலை.
மென்மேலும் மனக்கசடுகள் வளர்ந்துகொண்டேபோனால் மனிதனுக்கும் விஷக் கிருமிகளுக்கும் அதிக வித்தியாசமில்லாதுவிடும்.
நமது உணர்வு மாற்றத்திற்காக காலம் காத்து நிற்பதில்லை. இனியாவது மனிதர்கள், சமுதாயம் போய்க்கொண்டிருக்கும் பாதையைப் பற்றிச் சரியான அறிவுடையவர்களாகாவிட்டால் எதிர்காலம் அமங்கல கரமான பல சம்பவங்களால் பாதிக்கப்படும்.
மனிதருடைய துர்க்குணங்களே சாசுவதமான சுகத்திற்கும் சுதந்திரமான வளர்ச்சிக்கும் இடையூறாயிருக்கின்றன.
உலக சமுதாயத்தின் இரு பெருங் கண்களாகிய அரச தர்மமும் ஆத்மீக தர்மமும் அந்தரங்க சுத்தியுடன் சரியான இலட்சியத்தில் செயல்பட்டால் உயர்ந்த சீலமுடைய ஒரு மனித சமுதாயத்தை உருவாக்குவது சுலபமானதாகும்.
மனிதர் துர்க்குனங்களிலிருந்து முக்தராகுவதுதான் உலக சமாதானத்திற்கும் மாயக் கலப்பில்லாத சாந்த மதுரமான வாழ்க்கைக்கும் ஏக மார்க்கம்.
Monday, 17 November 2014
இல்லறம்
இல்லறம்
ஆகாய விமானம் பூமியில் சிறிது நேரம் ஓடிய பின்புதான் மேலெழுந்து பறக்கின்றது. விமானம் மேலெழுந்து பறக்கின்ற சக்தியும் வேகமும் ஓடுகின்ற ஓட்டத்தில் இருந்துதான் பெறுகின்றது.
அதே போன்று இப்பூவுலக வாழ்க்கையைக் கிராமமாய் வாழ்ந்து முடிப்பவர்களுக்குத்தான் மேலான ஞான வாழ்க்கைக்குரிய சக்தியும் மனபரிபாகமும் கிடைக்கின்றது.
இல்லற தர்மத்தின் ஒவ்வொரு படியையும் ஒழுங்காக ஏறிச் செல்கின்றவர்களே இறுதியில் ஞானத்திற்கு அருகதையுடையவர்களாயிருப்பார்கள்.
சகல சராசரங்களும் திவ்விய ஞானத்தை நோக்கிப் பருணமித்துக் கொண்டிருக்கின்றன.
பரிணாம வளர்ச்சியின் மேல்நிலைக்கு வந்திருக்கின்ற மனிதன் தனது சம்பூரண வளர்ச்சியைத் துரிதப்படுத்துவதற்காகச் சில விஷேச தர்மங்களைக் கடைப்பிடித்து வாழ வேண்டும்.
இல்லற தர்மம்:
அவைகளை அனுசரித்து வாழ்கின்றவர்களே உத்தமமான மனிதர்கள். உத்தமமான மனிதன்தான் ஞானவானாக பரிணமிக்க முடியும்.
மனிதனை மேல்நிலைக்கு உயர்த்துகின்ற தர்மங்களில் இல்லற தர்மமே முதல் தர்மம்.
இந்த ஆரம்ப தர்மத்தைச் செவ்வனே நிறைவேற்றி முடிக்காதவர்கள் எவ்வுலகத்திலிருந்தாலும் சரி, அவர்கள் கர்ம தோஷத்தினால் சதா துன்பப்பட்டுக் கொண்டேயிருப்பார்கள். அவர்களுக்கு கெதி மோட்சம் என்பதில்லை.
முதல் தர்மமாகிய இல்லற தர்மத்தின் மகிமையையும் பெருமையையும் எடுத்துக் காட்டுவதற்காகவே நமது தெய்வங்களும் அவதார புருஷர்களாகிய இராமரும், கிருஷ்ணரும் மற்றையோரும் இல்லற வாசிகளாவே திகழ்ந்தனர்.
பிரசித்தமான கர்ம யோக மார்க்கம் இல்லற தர்மத்திற்கு ஒரு அழுக்கற்ற கண்ணாடிபோல் பிரகாசிக்கின்றது.
கர்மயோக மார்க்கத்தை அறிந்து அதன் வழி வாழுகின்ற இல்லற தர்மிகள், இந்த விசாலமான சம்சார சாகரத்தை வெகு சாதுரியமாய்க் கடந்து நற்கதியடைவார்கள்.
ஒவ்வொருவருக்கும் தமது சொந்தக் கடமையிலிருந்து தேசக் கடமை வரையிலும் பலவாறான கடமைகள் இருக்கின்றன.
தன் தன் கடமைகளைச் செயற்படுத்தும்போது வரும் இடையூறுகளைத்தான் வாழ்க்கைப் பிரச்சனைகள் என்று சொல்கின்றோம்.
இப்போது மனிதர்கள் பெரும் மூளைசாலிகளாகவே வளர்ந்து வருகின்ற போதிலும், வாழ்க்கைப் பிரச்சனைகளும் எல்லை மீறி வளர்ந்து வருகின்றன. கெட்டிக்காரர்கள் கூட வாழ்க்கைப் பிரச்சனைகளுக்கு முன் தடுமாறி நிற்பதைக் காணும் பொழுது, இவர்களுடைய அறிவாற்றல்களெல்லாம் வாழ்க்கை மர்மங்களை அறிவதற்குப் பயனற்றவை எனத் தோன்றுகிறன.
காட்டுப்பன்றி
ஒரு காட்டுப்பன்றி தனது குட்டிகளுக்குப் பாலூட்டும் பொழுதெல்லாம், தனது வீரபராக்கிரமன்களைக் குட்டிகளுக்குப் புனைந்து கூறுவது வழக்கம்.
ஒருநாள் இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கையில் ஒரு வெடிச் சத்தம் கேட்டது. சத்தம் கேட்டவுடனே தாய்ப்பன்றி குட்டிகளையும் விட்டு ஓடிப் போய்விட்டது.
பின்பு பன்றிக் குட்டிகள் தாய்ப் பன்றியைத் தேடிப்பிடித்து தங்களை விட்டோடியதன் காரணத்தை விசாரித்தன.
தாய்ப் பன்றி "என் அருமை மக்களே! வெடிச் சத்தத்திற்கு முன் எனது துணிச்சலெல்லாம் பறந்து விடுகின்றது" என்று கூறியது.
இதே போன்றுதான் வாழ்க்கைப் பிரச்சனைகளுடன் நேர்முகப் பரீட்சை நடத்தும் பொழுதுள்ள மனிதர்களுடைய நிலையும்.
விஞ்ஞானம், அரசியல் போன்ற உலகாயத அறிவுகளெல்லாம் இப் போராட்டத்திற்கு முன் முழந்தாளிடுகின்றன. அவ்விடத்தில் மகா மேதைகளும் தளர்ந்து விடுகின்றனர்.
வாழ்க்கைத் தர்மங்களைச் சரிவரக் கற்றுக்கொள்ளாத காரணத்தால் இன்று தனி மனிதனிலிருந்து உலகம் முழுவதிலும் குழப்பங்களும்,தற்கொலைகளும்,வெட்டுக் குத்துக்களும் நடைபெறுகின்றன.
மனிதன் செயலாற்றும் திறமைசாலியாய் மட்டுமிருந்தால் போதாது. அதிலிருந்தெழும் பிரச்சினைகளைச் சாதூரியமாய்த் தீர்த்துக் கருமமாற்றும் நுண்ணறிவும் ஆற்றலும் பெறவேண்டும்.
இதனைப் பெறாவிட்டால் மேலும் அனர்த்தமும், வெறுப்பும், விரக்தியும்தான் வாழ்க்கையில் கண்ட பலனாயிருக்கும்.
கர்ம ரகசியம்:
கருமமாற்றும் நியதி நியமங்களையறியாமல் வந்த விரக்தியும் வெறுப்பும் அயோத்தியில் வைத்து இராமனுக்கும், குருஷேத்திரத்தில் வைத்து அர்ச்சுனனுக்கும் உண்டாயின.தக்க தருணத்தில் இராமனுக்குத் தனது குலகுருவாகிய வசிடரிடத்திலிருந்தும், அருச்சுனனுக்குக் கிருஷ்ணரிடத்திலிருந்தும் கர்ம ரகசியங்கள் உபதேசமாகக் கிடைத்தன.
வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர்கள் மீண்டும் கர்மத் திறமையுடையவர்களாயினார்கள்.
அதே கர்ம ரகசியங்களை மானிடர் தமது வாழ்க்கையிலும் பகிர்ந்தெடுக்க வேண்டும்.அப்பொழுதுதான் தன் தன் கடமைகளில் குறுக்கிடும் பிரச்சனைகளைத் தீர்ப்பதென்பதற்குரிய நுண்ணறிவும் கர்மத் திறமையும் கிடைக்கும்.
குடும்பச் சண்டையிலிருந்து தேசியக் கலவரங்கள் வரை தோன்றுகின்ற சகல பிரச்சனைகளுக்குரிய காரண காரியங்களும் இராமாயண காவியத்தில் அதி நுட்பமாக எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன.
மனிதருடைய மனம் செயற்பட்டுக்கொண்டிருக்கும் காலம்வரையில் இராமாயண சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டேயிருக்கும்.
இராமர் மனித வாழ்க்கைக்கு ஒரு உதாரண புருஷர். இந்த மகா புருஷன் கையாண்ட வாழ்க்கை நெறிகளை ஏனைய மனிதர்களும் வாழ்க்கையில் கையாளுவார்களேயாகில் இம்மண்ணுலகில் தாமரை இலையில் நீர் போல் வாழ்ந்து சாஸ்வதமான சத்தியத்தை இங்கேயே அனுபூதிமயமாக்கலாம்.
.
Monday, 10 November 2014
அநாதியான சிவயோக மார்க்கம்
அநாதியான சிவயோக மார்க்கம்
இன்று நடைமுறையிலிருக்கும் நானாவித மதங்களுடைய தத்துவச் சிந்தனைகளும், ஆரியாஷ்டாங்க (பௌத்த தர்மம்) நெறிகள் உட்பட சகல யோக மார்க்கங்களும் அநாதியான சிவயோக மார்க்க விளக்கொளியில் நின்று காலாகாலத்தில் கொளுத்தியெடுத்த தீபச் சுடர்கலாகும். சகல மதங்களுடைய ஆத்மீக தத்துவ தரிசன மார்க்கத்திற்கும், எல்லாவிதமான சந்நியாச (துறவறம்) தர்மத்திற்கும் இந்த சுத்த சிவயோக மார்க்கந்தான் ஆதிமூல காரணமாயிருந்தது.கலியுகாரம்ப காலத்திற்கு முன் சிவயோக நெறிகள் உலகம் முழுவதும் பரவியிருந்ததற்குப் புராண, இதிகாச, சரித்திரச் சான்றுகள் பல இருக்கின்றன. ஜம்புத்தீவம் (ஆசியா), புஷ்கர தீவம் (வட அமேரிக்கா), குச தீவம் (அவுசஸ்திரேலியா), ,க்ரௌஞ்ச தீவம் (ஆபிரிக்கா) முதலிய பெரிய கண்டங்களிலும் சகஸ்தானம் (பேஷியா),, காந்தார தேசம், (பாபிலோனியா), நீல தேசம் (எகிப்து), பாலஸ்தீனம் முதலிய தூர தேசங்களில் இந்த யோக மார்க்கம் பிரசித்தமான ரீதியில் பரவியிருந்தது.சிவயோக திருக்கூட்டங்கள் ஆங்காங்கு சென்று குகைகளில் தங்கியிருந்து தவயோக மியற்றியவாறு சிவயோக வித்தியாசாலைகளை அமைத்து சிவயோக நெறிகளை ஸ்தல வாசிகளிடம் பிரச்சாரஞ் செய்து வாழ்ந்தனர்.அக்காலத்தில் அநாகரிகமான முறையில் வாழ்ந்திருந்த ஸ்தலவாசிகளைத் தார்மீக நெறியில் வாழ நெறிப்படுத்திக் கொண்டிருந்தனர். சுத்த சைவ போசனிகளா யிருந்த சிவயோகத் துறவிகள் விவசாயம், வைத்தியம், பார்பன்னைகள் முதலியவைகள் மூலமாகச் சமுதாயச் சேவையும் செய்து வந்தார்கள்.
ஆத்மாவின் ஜீவ சங்கற்பத்தால் தோன்றிய நான், எனது என்ற சுயநலத்தைத் துறந்து உலக சுகத்திற்கும் ஆத்மாக்களுடைய விடுதலைக்கும் தங்களை அர்ப்பணித்து வாழ்கின்றவர்களே சந்நியாசிகளாவர். நேபாள தேசத்தில் பிறந்த சதாசிவ குமரேஸ்வரன் என்ற மகா சிவயோகி சிவயோக மார்க்கத்தின் யோக கர்த்தாவாகவும், பரமாச்சாரியருமாயிருந்தவர். காலாந்தரத்தில் ஈசானன் என்று அறியப்பட்டு வந்த ஞான நிஷ்டையுடைய இந்த யோக மார்க்க சிவாச்சாரியார் கலியுகாரம்பத்திற்கு முன் வாழ்ந்தவர். பாசுபதம், சைவம், சாக்தம், ஈசானம், ஐஸ்வரியம், பைரவம், கபாலிகம், வாமதேவம், பதஞ்சலம், ஸ்தவிர பௌத்தம் (தேர புத்தம்) போன்ற பிரத்தியோக மார்க்கங்களுக்கெல்லாம் தாய்மையான ஞானபாதம் (Gnostic), சிராமணிகம் (சமணம்) போன்ற விதேச நாமங்களால் அறியப்படும் சந்நியாச தர்மங்களெல்லாம் சிவயோக சந்நியாச மார்க்கத்திலிருந்து பகிர்ந்தெடுக்கப்பட்டவைகளேயாகும்.
பாரத தேசத்திற்கு வெளியில் வாழ்ந்து வந்த சிவயோகிகளைப் பிற்காலத்தில் மூர்க்க குணம் படைத்த ஹிப்புறு வர்க்கத்தினர் மெல்ல மெல்லக் கொன்றொடுக்கினார்கள். அதனால் தூர தேசங்களில் சிவயோக நெறிகள் மங்கி விட்டன. பாரத நாட்டில் பிரகாசத்திலிருந்த சிவயோக தத்துவ சாஸ்த்திரங்கள் கலியுகம் ஆரம்பித்த சிறிது காலத்திற்குப் பின் ஏற்பட்ட பிரளயத்தால் முக்கால் பங்கும் அழிந்துவிட்டது. பாரத யுத்தம் கி.மூ.3௦80இல் நடைபெற்றது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணனுடைய தேகவியோகம் கி.மூ.3067இல் நிகழ்ந்தது. பகவானுடைய தேகவியோகத்திற்குப் பின்னர்தான் முன் குறிப்பிட்ட பிரளயம் நிகழ்ந்தது. அதற்குப்பின் அங்கும் இங்குமாகச் சிதறிக் கிடந்த சிவயோக நெறிச் சாஸ்த்திரங்களை நகுலீசமுனி போன்ற சில மகா யோகிகள் நர்மதாநதிக் கரையோரங்களிலும், விந்திய மழைப் பிரதேசங்களிலும் பிரசாரஞ் செய்து புனர்ஸ்தாபனம் செய்தார்கள்.
புத்தாவதாரத்திற்குப் பின் முற்றிலும் சைவமாயிருந்த சிவயோக நெறிகள் சில மாற்றங்களுடன் புனரமைப்புச் செய்யப்பட்டு ஆரியாஷ்ட்டாங்க யோகமென்ற (பௌத்த தர்ம யோகம்) ஒரு தனி பௌத்த யோக மார்க்கம் உருவாக்கப்பட்டது. சிவயோக மார்க்க நெறிகள் பரவியிருந்த தேசங்களிலெல்லாம் ஆரியாஷ்ட்டாங்க யோகிகளாயிருந்த புத்த பிக்குகள் சென்று அதிதீவிரமாகப் பிரசாரம் செய்தமையால் சிவயோக மார்க்க நெறிகள் பலவீனமடையத் தொடங்கின. எனினும் இன்று உலகம் முழுவதும் பல ரூபத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் யோக மார்க்கங்களெல்லாம் ஆதிச் சிவயோக மார்க்க அக்கினிச் சுவாலையினின்றெழுந்த பொறிகளாகும். இந்துக்களுடைய தத்துவ தரிசனத்தாலறியப்பட்ட சிவயோக மார்க்கமும் அதிலிருந்து உடலெடுத்த ஆரியஷ்ட்டாங்க யோகமும் சனாதனா தர்மம் என்ற ஒரு தாயின் வயிற்றில் பிறந்த குழந்தைகள்.
யோகம் என்றால் என்ன? அது மனித சமுதாயத்திற்கு எவ்வகையில் பயன்படுகின்றது? நமது மனம் இறைவனிடத்தில் இரண்டறக் கலந்திருந்தால் அது யோகம் எனப்படும். பிறவித் துன்பங்களுக்குக் காரணமாயிருக்கின்ற சித்த விருத்திகளைத் தடைசெய்வதால் ஜீவனுடைய தனித்துவம் நீங்கி ஜீவன் சிவத்தோடு ஐக்கியப்படுகின்றது. சீவ உபாசனையால் இந்த ஐக்கிய நிலை அடைவது சிவயோகம் எனப்படும்.
சித்த விருத்திகளைத் தடைசெய்யாமல் மனம் யோக நிலை அடைகின்றது. மனம் இடையறாது உருவாக்கிக் கொண்டிருக்கும் எண்ணரிய எண்ண அலைகளைச் சித்த விருத்திகள் ஒழிந்த மனதில், தெளிந்த நீரில் பிரகாசிக்கும் சந்திர பிம்பம் போன்று இறையொளி நன்றாக ஒளிர்கின்றது. இத்தகைய பெரும் பேறு பெற்ற மனம் வசந்த கால சுகத்தை நுகரும் பூங்குயில் போன்று புலநுகர்ச்சிகளை நீக்கிச் சதா இறையின்பத்தில் லயத்திருக்கும். காலகதியில் சதாசிவமாகிய இறைவனில் இரண்டறக் கலந்து அதுவாகவே மாறிவிடும். இதுதான் ஜீவாத்மாக்களுடைய பரம லட்சியமாயிருக்கின்ற சிவயோக பதம் அல்லது ஜீவாத்ம பரமாத்ம ஐக்கியம்.
பிறவித் துன்பங்களைத் தீர்த்து சாசுவதமான சுகத்தைத் தரும் இந்த யோக உணர்வு இயற்கையாகவே ஒவ்வொரு ஜீவனிலும் மறைமுகமாக மறைந்திருகின்றது. ஒருவர் உலகியலின்பங்களையும் வேண்டும் வண்ணம் அனுபவித்து பின்னும் இன்னும் ஏதோ ஒன்றை அனுபவிக்க வேண்டியிருப்பதாகவுள்ள ஆவல் அவரிடம் ஒன்றிருப்பதாக உணர்கின்றார். எனினும் அது இன்னதென்பதை மனக் குழப்பத்தால் அறிந்து கொள்வதில்லை. ஒவ்வொரு மனிதர்களுடைய இருதயக் கருவறையிலும் மறைந்திருந்து தூண்டிக் கொண்டிருக்கும் இந்த வாஞ்சைதான் இறை இன்பத்துக்குரிய அந்தர்முக தாகம்.
நெல்லையும் பதரையும் வேறு பிரித்தறிய முடியாத விவசாயிகள் போன்று மனிதர்கள் மாயா வசத்தால் பலத்தையும் எடுப்பதற்கும் பிடிப்பதற்குமாய் ஓடியோடி முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அயராமல் முயற்சிகள் பலசெய்தும் கைக்கெட்டியது வாய்க்கெட்டவில்லை, வாய்க்கெட்டியது வயிற்றுக்கெட்டவில்லை என்றநிலையில் காலம் கழிந்து கொண்டிருக்கிறது. நீரென்று கருதி கானல் நீருக்குப் பின்னால் திரிந்து மடியும் மான் கூட்டங்களைப் போன்று மேலும் மேலும் துயரங்களைத் தரும் அற்ப சுகத்திற்குப் பின்னால் சென்று வரக்தியுடனும், அதிருப்தியுடனும் ஜீவன் பிரிகின்றது.
எண்ணரிய பரிணாம வளர்ச்சிக்குப் பின் மிக அபூர்வமாகக் கிடைத்த புனிதமான மனித ஜென்மம் இவ்வாறு வீணாகிக்கொண்டிருகின்றது. ஆகையால் சாசுவதமான சுகத்தைத் தரும் ஜீவித தர்மங்களை அனுசரித்து வாழ்ந்து, ஜீவித லட்சியத்தை அநுபூதி மயமாக்குவதற்கு முயற்சிக்க வேண்டும். முக்கரணங்களைச் (மனம், வாக்கு, காயம்) சித்திகரித்துப் பலப்படுத்தக் கூடியதும் அனைவராலும் அப்பியாசிக்கக் கூடியதுமாகிய சில பரிசீலனங்கள் (இயமம், நியமம், ஆசனம்)போன்றவை யோக மார்க்கங்களில் இருக்கின்றன. இவைகளையாவது சித்த சுத்தியுடன் நித்தியமும் பழகி வந்தால் சிறந்த மனச் சுகத்துடனாவது வாழலாம். இத்தகைய ஆன்மீகப் பரிசீலனங்களுக்கு நமது சிந்தையைச் செலுத்தத் தவறினால் எதிர்கால சமுதாயம் விலங்குணர்வுகளை விட மோசமடையும்.
எண்ணரிய பரிணாம வளர்ச்சிக்குப் பின் மிக அபூர்வமாகக் கிடைத்த புனிதமான மனித ஜென்மம் இவ்வாறு வீணாகிக்கொண்டிருகின்றது. ஆகையால் சாசுவதமான சுகத்தைத் தரும் ஜீவித தர்மங்களை அனுசரித்து வாழ்ந்து, ஜீவித லட்சியத்தை அநுபூதி மயமாக்குவதற்கு முயற்சிக்க வேண்டும். முக்கரணங்களைச் (மனம், வாக்கு, காயம்) சித்திகரித்துப் பலப்படுத்தக் கூடியதும் அனைவராலும் அப்பியாசிக்கக் கூடியதுமாகிய சில பரிசீலனங்கள் (இயமம், நியமம், ஆசனம்)போன்றவை யோக மார்க்கங்களில் இருக்கின்றன. இவைகளையாவது சித்த சுத்தியுடன் நித்தியமும் பழகி வந்தால் சிறந்த மனச் சுகத்துடனாவது வாழலாம். இத்தகைய ஆன்மீகப் பரிசீலனங்களுக்கு நமது சிந்தையைச் செலுத்தத் தவறினால் எதிர்கால சமுதாயம் விலங்குணர்வுகளை விட மோசமடையும்.
Sunday, 9 November 2014
Friday, 7 November 2014
ஞான சுகம்
உலகம் நியதி தவறாமல் போய்க்கொண்டிருக்கின்றது. அதில் பிசகேற்படுவதில்லை. பிசகு இருந்தால் அது நம்முடையதன்றி உலகத்தினுடையதல்ல. ஒவ்வொருவரும் வைத்துப் பார்க்கும் கண்ணாடியின் நிற வித்தியாசத்திற்குத் தக்கவாறு எல்லாம் காட்சியளிப்பதன்றிச் சத்தியம் ஒன்றேதான். சத்தியம் இன்னதென்று மனதில் தெளிந்தால் வித்தியாசமாய்த் தோன்றியதெல்லாம் ஒன்றின் பிரதிபலிப்பென்ற உண்மையை விளங்க வேண்டும். இது விளங்கினால் மனிதனின் குதர்க்க சுபாவங்கள் தீர்ந்து சந்தேக நிவர்த்தி வரும்.மனத்திற்கு சாந்தியும் கிடைக்கும். சத்தியம் தெளிந்து நேர்முக ஞானம் வந்தால் கலக்கமெல்லாம் தீரும். கிலேசமிராது. இது விளங்குவதற்கேற்ற முறையில் வாழ்க்கையைத் திருத்தி அமைப்பதுதான் புருஷ தர்மம்.
மது, மாமிசம், விபச்சாரம், கொலை, களவு, கொள்ளை, இலஞ்சம் போன்ற மகா பாவங்களை அடிமனதிலிருந்து அறவே விளக்கி உண்மையைப் பேசித் தர்மத்தின் வழி வாழவேண்டும்.அசுத்தங்களை மனதில் வைத்து இறைவனை வழிபட்டால் அது கருணை காட்டாது. இரக்கமும் கொள்ளாது. மனதிலிருந்து கழிவுகளை நீக்கி வஜிபாடியற்றினால் ஆகாததும் ஆகும். வேண்டி நின்றால் பெரும் ஞானமும் கிடைக்கும். இந்த ஞானம் வெளிப்படும் வரையில் இருளில் தடவித் திரியும் குருடனைப் போன்றுதான் வாழ்க்கையும், வாழ்க்கை அனுபவங்களுமிருக்கும்.ஆகையால் குருடனைப் போன்று தட்டுத் தடுமாறி வாழ்ந்து மடியாமல் இருட்டிலும் ஒளி விட்டுக்கொண்டிருக்கும் சர்ப்ப மணி போன்று மாயா இருளடைந்த இந்த மயக்க உலகத்தில் ஞான ஒளியின் துணையால் சேர வேண்டிய கரையைச் சேர வேண்டும். இதற்காகத்தான் மனிதன் இங்கு தோன்றியிருக்கிறான். இந்த மேலான ஞான நிலவில் இளைப்பாறியிருந்தால் பிறவிக் கிலேசங்களெல்லாம் தீரும். ஆத்மாவுக்குப் பரம திருப்தியும் சுகமும் கிடைக்கும். கண் கூசாத இந்த நிழலிலிருந்து பார்த்தால் உலகத்தின் திருகுதாளங்கள் எல்லாம் விளங்கும். அது விளங்க ஞானம் ஸ்திரப்படும். இது ஸ்திரப்படும் வரையில் ஜென்ம கிலேசம் இருந்தே தீரும். இவையெல்லாம் பலரும் பலகாலமாய்க் கெட்டுப் பழகிய பாடங்கள். இருந்தும் ஏதோ ஒருவனுக்குத் தவிர மற்றவர்களுக்கு இதில் உள்ளார்வம் உண்டாவதில்லை. அதற்குத் தக்க காரணம் உண்டு. புண்ணியக் குறைவு அதுதான் காரணம். அதனால் அந்த ஆர்வம் இல்லாதவர்களுக்கு ஞான வாசனை வருவதற்கு நிறையப் புண்ணிய கருமங்களைச் செய்து வரவேண்டும். கடுகளவேனும் சுயநலமில்லாமல் புண்ணிய சீலராய் வாழ்ந்தால் ஒரு நாள் ஞானக் கதவு நிச்சயம் திறக்கப்படும்.
மரங்கொத்திப் பறவை என்றொரு பறவை இருக்கின்றது.அதற்கு நல்ல மரத்தில் கூடுகட்டி முட்டையிட வேண்டுமென்றொரு ஆசையிருப்பதால் நல்ல மரங்களைத் தேடி எல்லா மரங்களையும் கொத்திப் பார்த்துக் கொண்டு திரியும். ஒரு மரத்திலும் திருப்தி வருவதுமில்லை.இதற்கிடையில் ஆகாயத்திலே முட்டையும் போட்டு முட்டை கீழே விழுந்து உடைகின்றது. இதைப் போலவே மனிதனும் எல்லாவற்றையும் ருசிபார்த்துத் திரிகிறான். ஒன்றிலும் போதும் என்ற திருப்தியும் சுகமும் உண்டாவதில்லை. நிரந்தரமான திருப்திக்குரிய ருசி எதிலிருகின்றது என்று அறிவதற்கிடையில் மரணம் மனிதனைக் கௌவிக் கொள்கின்றது. இதே நிலை மாறி மாறி நிகழ்ந்து கொண்டிருப்பதால் ஜீவனுக்கு ஈடேற்றங் கிடைப்பதில்லை. எத்தகைய சுகங்களை அனுபவித்தாலும் அவற்றிலெல்லாம் ஒரு பற்றாக்குறை அல்லது ஒரு திருப்திக் குறை இருப்பதாகத் தோன்றும். அந்தப் பற்றாக்குறைதான் ஜீவிதாசைகளைப் பரிபூரணப் படுத்தும் ஞானம். ஞானம் மிளிர்ந்தால் குறையிலும், நிறையிலும் நிரந்தரமான திருப்தி, நிரந்தரமான சுகம். இந்த அனுபவத்திற்கு வரவேண்டிய மனிதர் மரங்கொத்திப் பறவையைப் போல் வாழ்வதென்றால் அது பெரும் சங்கடத்தில் முடியும்.மனிதருடைய முயற்சியின்பங்களுக்குப் பரிபூரணத்துவம் வராது. ஆகையால் ஜென்ம சுகம் சம்பூரணமடைவதற்கு நேர காலத்துடன் ஞான வழியில் முயற்சிக்க வேண்டும். முகத்தில் தாக்கப்படும் அலை உணர்வுகளைக் கொண்டு அனுகூலப் பிரதிகூலங்களை அறிந்து வாழும் வௌவால் போன்று மனிதன் தான் மெய்யுணர்வு அலைகளுக்குள் ஐம்புல வாசனைகளைச் சுருட்டி எறிந்தால் மெய்யுணர்வு அலைகள் அவனை ஞானக் கரையில் ஏற்றி விடும். இனிமேலாவது கிடைத்த ஜென்மத்தைப் பாழாக்காமல் உறுதியான வைராக்கியத்துடன் அப்பியாசித்து ஞானமாகிய பெரும் பேற்றைப் பெறுக.
Sunday, 2 November 2014
ஞான மண்டலம் 2
மனிதன் என்ற சொல்லுக்கு அர்த்தமென்ன? எதை ஆதாரமாக வைத்து இச் சொல் வழங்கி வருகின்றது. கை, கால், கண் என்பவற்றுடன் ஒன்பது துவாரங்களுடன் கூடிய உயிர்த் துடிப்பிருக்கும் வெறும் ஒரு மாமிச பிண்டத்தை மாத்திரம் கருத்தில் கொண்டுதானா இப்பெயர் வழங்கி வருகின்றது? அல்லது அதைவிட ஆழமும் விசாலமுமான பொருள் வேறேதுமிருக்கின்றதா?ஒரு இயந்திரத்தை சரியான முறையில் இயக்குவதற்கு அதை பற்றிய தக்க அறிவிருந்தாற்றான்முறையாக அதனை இயக்க முடியும். அதேபோன்று மனிதன் தன்னைப் பற்றிய தெளிந்த ஞானமுடையவனாயிருந்தாற்றான் வாழ்க்கை என்ற இயந்திரத்தை நெறி தவறாமல் இயக்க முடியும். தற்சமயம் கல்வி முறைகள் உலகாயதப் பொருள்களை அறிவதற்கும் அதைச் சம்பாத்தியம் பண்ணுவதற்கும் உபயோகப்படுமே தவிர மனிதன் தன்னையும் தன் வாழ்க்கையைப் பற்றியும் அறிவதற்குச் சிறிதளவேனும் பயன்பெறக் கூடிய வகையிலில்லை. ஜீவிதத்தைப் பற்றிய யதார்த்த ஞானக் குறைவுதான் தனி மனிதனிலிருந்து சமுதாயம் முழுவதிலும் தோன்றிக்கொண்டிருக்கும் சகல சங்கடங்களுக்கும் மூலகாரணம். மனிதன் தெளிந்த தன்னறிவின் ஒளியைக் கொண்டு வாழ்க்கையைப் பார்க்க வேண்டும். அதன் வெளிச்சத்தில் தேட வேண்டியதைத் தேடியெடுத்து அனுபவிக்க வேண்டும். மனிதன் இவ்வழியில் வாழ்ந்தால் ஜீவிதம் சம்பூரண சுகமுடையதாய் அமையும்.
மனத்தைக் கொண்டு வாழ்பவன் மனிதன் ஆகையால் "மனம் போல மாங்கல்யம்" என்றதோர் பழமொழியும் இருக்கின்றது. மனம் மனிதனை ஆளாமல் மனிதன் மனத்தை ஆளுகின்ற திறமையும் சக்தியும் பெற்றால் வண்டரிக்காமல் பூத்து மலரும் நறுமலர் போன்று வாழ்வும் ஆனந்தப் பொன்மலராய் மலர்ந்து மணம் கமழும். மனம் என்ற பொருளை உன்னிப் பார்க்குக. அதில் சந்தோஷம், திருப்தி, அன்பு,ஐக்கியம் போன்ற பசுமையான சுகவுணர்வுகளும், பகை, பொறாமை, சினம், கோபம், வஞ்சனை முதலிய புன்னெறி உணர்வுகளும் நீர்க் குமிழி போன்று மறைவதும் தோன்றுவதுமாயிருப்பதை அவதானிக்கலாம்.இத்தகைய நல்லதும் கெட்டதுமாகிய எண்ணரிய எண்ணங்களின் பிரதிபலிப்பால் மனதின் சமநிலை அல்லது ஏகாக்கிருகை கலைந்து இயல்பான சாந்தியும் சுகமும் இழக்கப்படுகின்றது.மனம் குழம்பினால் ஜீவிதம் குழம்பும். சாசுவதமான இன்பத்தையும் அறிவாற்றலையும் செல்லரித்து விடுகின்ற உணர்வலைகளின் தாக்கம், மனிதனை வாழ்க்கையின் யதார்த்த வசங்களிலிருந்து இருளடைந்த மாயா மார்க்கங்களுக்குத் திசை திருப்பிவிடுகின்றது.
தூலப் பிராண சக்தி மனதைத் தாக்கும்பொழுது வெடித்துச் சிதறிப் பறந்து திரியும் பஞ்சுத் துகள்கள் போன்று மனமும் சிதறி விடுகின்றது. சிதறிய மனம் தொட்டடுத்து நிற்கும் விஷயாதிகளில் கலந்து அதனதன் குணரூப வடிவங்கொண்டு அதற்கேற்ற சுகதுக்கங்களை அனுபவித்து நிற்கும். புல்லுருவி போன்ற மனம் எதில் கலந்து நிற்கின்றதோ அதன் வடிவங் கொள்வதுதான் மனதின் இயல்பு. இப்படி விஷய வாசனைகளில் சென்று விழுந்த மனம் வாசனா குனங்ககளாகிய எண்ணச் சுழலில் சுழன்று சுழன்று சமுத்திர அலைகளிலகப்பட்ட றப்பர்ப் பந்து போன்று அங்குமிங்குமில்லாத நிலையில் தத்தளித்துக் கொண்டிருக்கும். இதுதான் பெரும்பாலும் மனிதருடைய மானசீக அனுபவம். சகாராப் பாலைவனங்களில் ஒரு வகையான நீண்ட முள்ளுடைய முட்செடிகள் இடையிடையே முளைத்து வருகின்றன. அங்கு வாழும் ஒட்டகங்கள் அச் செடியின் முட்களுக்கிடையிலிருக்கும் பொடியிலைகளைத் தின்ன முயற்சிக்கும்பொழுது முகத்தில் முட்கள் குத்தி இரத்தம் தாரை தாரையாக வழியத் தொடங்கும். இரத்தம் வழிய வழிய ஒட்டகம் அதைத்தான் தின்ன முயற்சிக்குமே தவிர தின்னும் ஆசையை விட்டுவிட மனமில்லாமல் அங்கேயே மாண்டு மடிகின்றது.இதைப் போன்றுதான் சிற்றின்பப் பற்றுடைய மனிதனின் நிலையும். ஆயினும் மனிதன் பகுத்தறிவற்ற மிருகமல்ல.பகுத்தறியும் விவேகமுடையவன்.நிலையற்ற அற்ப சுகங்களில் மயங்கி கைக்கெட்டியது வாய்க்கெட்டாமலும், வாய்க்கெட்டியத்தை உட்செலுத்த முடியாமலும் வேதனைப்படும் பாரிசவாத நோயாளிகளைப் போன்ருதானா பெரும் பெருகளையுடைய மனிதன் வாழ்ந்து மடிய வேண்டும்.
எண்ணங்களை வைத்துக் கால்பந்து விளையாடிக்கொண்டிருக்கும் மனதை அவ் விளையாட்டரங்கினின்றெடுத்து ஆத்மாவின் பிரசாந்த மதுரமயமான வெளியரங்கில் வைத்து வாழுகின்ற மனிதன்தான் மனிதன். இதற்குரிய சக்தி மனிதனுக்கில்லை எனினும் மனிதனில் அது இருக்கின்றது.நீரில் கலந்திருக்கும் பால்போன்று மனதில் கலந்திருக்கும் அந்த மகா சக்திக்குக் கீழ்ப் பணிந்து அதன் வழி நடத்தலுக்கு நம்மை ஆளாக்கிக் கொண்டால் மார்க்க தரிசனம் சுகமாயிருக்கும்.அப்பெருஞ் சக்தியின் அருளாசியால் மனதை மாயா மயக்க உணர்வு மண்டலத்திலிருந்து ஆனந்தமயமான ஞானப் பேருணர்வு மண்டலத்தில் நுழைய விட்டால் அம மண்டலத்தின் ஈர்ப்புச் சக்தியால் ஈர்க்கப்பட்டு அது அங்கேயே சஞ்சாரஞ் செய்துகொண்டிருக்கும்.சூரியனைச் சுற்றிக்கொண்டிருக்கும் பூமியும் இடையிடையே சூரியனை அண்டி வருவது போன்று இறையழகொழுகும் ஞானமய மண்டலத்தையடைந்த மனமும் அங்கேயே சுற்றிச் சுற்றி இறுதியில் அம்மண்டல ஞான பிந்துவாயொளிரும் சர்வேஸ்வரனில்,நீரில் கலந்த உப்புப் போன்று இரண்டறக் கலந்து விடுகின்றது. இதுவே யோகம் என்பது.இதற்குப் பின் மனம் ஒரு பொழுதும் இந்தக் கர்ம பூமியை நோக்கித் திரும்பி வருவதில்லை. ஜீவன் எண்ணற்ற ஜடங்கள் வழி பிரயாணம் செய்து தனது யாத்திரையை இனிது முடிக்கின்றது.சாயுச்சியமென்ற இந்நிலையை ஜீவன் அடையும் பொழுது ஜீவனின் வளர்ச்சி பரிபூரணமடைகின்றது.உயிகள் இயறகையாகவே ஒருநாள் இந்நிலையை அடைந்துதானாகவேண்டும். ஆயினும் விவேகமுடைய மனிதன் சம்சார சாகரத்திலிருந்து விரைவில் கரையேறுவதற்கு முயற்சி என்பதொன்று அவசியம் இருந்துதானாக வேண்டும்.இயற்கை நியதிகளுடன் தான் முயற்சியும் சேரும்பொழுது நீரும் உரமும் போட்ட செடியின் வளர்ச்சி துரிதப்படுவது போன்று ஜீவனுடைய வளர்ச்சியும் துரிதமடைகின்றது.இதற்காகத்தான் ஆத்மீக சாதனைகள் உருவாக்கப்பட்டிருகின்றன.
ஆத்மீக சாதனைகளென்றால் யோக ஞான மார்க்கங்களென்று மாத்திரம் கருதக்கூடாது. சமயாசார அனுஷ்டானங்களும் ஏனைய வழிபாட்டு முறைக்களெல்லாம் இதனை ஆதாரமாகக் கொண்டவை. ஆகையால் இதுதான் சரி, மற்றவையெல்லாம் பிழையென்று கூறுவதற்கில்லை. அவரவர்களுடைய பக்குவத்திற்கும் ருஜிக்கும் ஜீரண சக்திக்கும் ஏற்றவாறு எந்தவொரு மார்க்கத்தை வேண்டுமானாலும் கடைப்பிடித்தொழுகலாம்.செய்யும் சாதனைகள் உயிரணுக்களைத் தொடும் வண்ணம் செய்யப்பட்டால் எந்தவொரு சாதனையிலும் நிச்சயம் சித்தி கிடைக்கும்.கண்ணப்பர், சபரி, ஹனுமார், குகன் போன்றவர்கள் இதற்கு உதாரணமாயிருக்கின்றனர்.
எண்ணங்களாகிய சித்த விருத்திகளால் ஜீவன் சம்சார துக்கத்தை அனுபவிக்க வேண்டியிருக்கின்றது. சித்த விருத்திகளைத் தடை செய்தால் கிரகண பீடை நீங்கிய சந்திரனைப் போன்று மனம் ஒரு நிலைப்பட்டு ஒன்றாக பிரகாசிக்கும். தெளிந்து அசைவற்றிருக்கும் மனதில் பிரமப் பிரகாசம் தானாகவே ஒளிரும். இந்த ஒளியின் மகிமையால் கவரப்பட்ட மனம் காலக் கிரமத்தில் அதனில் கலந்து அது மயமாய் விடுகின்றது. இதுதான் பிறவிப் பேறென்று சாஸ்திரங்கள் புகழும் சாயுச்சியம் அல்லது முக்தி பதம்.நமக்கு அரிய மனித ஜென்மம் கிடைத்திருப்பது எதற்காகவென்று ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். பஞ்சமா பாதகங்களால் ஐம்பொறிகளையும் கெடுத்து ஜென்மத்தையும் பாழாக்கிவிடுவதற்காகவா?அல்லது கித்த ஜென்மத்தைக் கடைத்தேற்றுவதற்காகவா? இதனைப் பகுத்தறிய முடியாத ஜென்மம் பாபக் கறை படிந்ததேயாகும். சிந்தித்துத் தெளிவடைந்து கடைத்தேற முயற்சிக்க வேண்டும். வானம்பாடி வானத்தில் பறந்து திரியும் பரவையாயினும் பூமியில் இறங்கித்தான் இரை தேடுகின்றது. மனிதனும் தனது மனதை இறை மண்டலத்தில் சஞ்சாரம் செய்யவிட்டு இந்த கர்ம பூமியில் வாழும் வரை தன் தன் கர்மங்களைச் செவ்வனே செய்ய வேண்டும். முயற்சிக்கு முன்னுக்கும்,முயர்சியின்மைக்குப் பின்னுக்கும் கடவுள் நிற்கின்றார் என்பதை உணருவாயாக! பேசுவதிலும் கேட்பதிலும் வாசிப்பதிலும் மாத்திரம் நிற்காமல் சிறிதேனும் சாதனை செய்து பயனடைவாயாக!
Wednesday, 23 July 2014
ஞான மண்டலம்
விஞ்ஞானம் இப் பூவுலகத்திற்குப் புதியதாய் வந்த தொரு நவீன சாஸ்திரம் என்று கருதுவது பிழை. இதற்கு முன்பும் அது அநேக தரம் வந்தும் போய்க் கொண்டு மிருந்திருக்கின்றது. மின்சார சேமிப்பு நிலையங்கள் வெறும் சேமிப்பு நிலையங்களே தவிர, உற்பத்தி நிலையங்க ளல்ல. அது வேறொரு இடத்தில் உற்பத்தியாகிச் சேமிப்பு நிலையங்களுக்கு வினியோகிக்கப்படுகின்றது. விஞ்ஞான அறிவும் மனிதர்களுடைய மூளையிலிருந்துதான் உற்பத்தியாகின்றதெனக் கருதுவது மிகத் தவறு.வெறும் ஜடப் பொருளாகிய மூளை அறிவு மண்டலத்தில் ஒரு வானொலிப் பெட்டியின் 'வாலப் f' போன்றது. அதற்கு மேற்பட அதற் கொரு ஸ்தானமும் உபயோகமுமில்லை. அப்படியென்றால் இந்த அறிவெல்லாம் மூளைக்கு எங்கிருந்து வருகின்றது? பிரபஞ்சத்தின் கருவூலத்தில் இருக்கும் ஞானமய கோசத்திலிருந்து உருவாகி எமது பிண்டத்திலிருக்கும் ஞானமய கோசத்தின் வழியாக மூளைக்குச் செல்கின்றது. இந்த உண்மையை உணராமல் மனிதருடைய மூளைதான் விஞ்ஞானம் முதலிய அறிவுக்கு மூலகர்த்தா என்று நினைக்கும் பொழுது அவனுக்கொரு அகந்தை வருகின்றது. நான்தான் சிருஷ்டி கர்த்தா என்பதுதான் அந்த அகந்தை. இந்த ஆணவத் திமிர்தான் பொல்லா வினைகளை வரவழைக்கின்ற பெரும் பூதங்கள். மனிதன் காரண காரியங்ககளைப் பற்றிய யதார்த்த அறிவுடையவனாகும் பொழுது பெரும் குழப்பங்களை விளைவிக்கின்ற இந்த ஆணவத் திமிர் தானாகவே ஒடுங்கி ஒழியும்.
குறியில்லாமல் அம்பெய்தால் எய்த அம்பால் ஆபத்துக்களே விளையும். இவ்வாறானதுதான் வாழ்க்கையும். மனிதன் ஒரு உயர்ந்த இலட்சியத்துடன் வாழ வேண்டும். அன்றாடக் கடமைகளை இலட்சியத்தில் பொருந்தும் வண்ணம் செய்து கடமையின் பலாபலனாகிய இன்ப துன்பங்களை இலட்சியத்துக்காக சமர்ப்பணம் பண்ணவேண்டும்.இவ்விதம் வாழுகின்றவன் சீரிய குறிக்கோளையடைந்த ஒரு பெருமகனுக்குரிய சுதந்திரத்தையும் சுகத்தையும் அனுபவிக்கிறான்.
ஞானம் இதுதான் இலட்சியங்களில் சிறந்த இலட்சியம்.ஜீவித தர்மங்கள் இந்த இலட்சியத்துடன் இணையாவிட்டால் வாழ்க்கையின் அச்சாணி உடையும். பணமும் பொருளும் வாழ்க்கைக்கு அவசியமான போதினும் மனிதன் வெறும் பொருளாதாரப் பிராணியாக மாறுவது ஆபத்தானது. ஜீவாதாரத் தேவைகளில் தன்னிறைவெய்தினாற் கூட மனிதன் திருப்திப் படுவதில்லை.அதற்கப்பால் ஒரு இருதய தாகம் இருக்கிறது. மனிதருடைய மன வேட்கைக்கு முடிவு காணும் அந்த அந்தரங்க ஆத்மீக மூல உணர்வுகளை மனித சமுதாயம் புறக்கணிக்கும் போது நீர் வற்றி வரண்டுபோன குளத்தை விட்டு நீர்ப்பறவைகள் பறந்து செல்வது போன்று அமைதியும் அகமும் உலகத்தை விட்டுப் பறந்து செல்கின்றது. மனித இருதயங்கள் ஞான கலசங்கலாகப் பரினமிக்கும்போது சமுதாயங்களுக்கிடையில் தெய்வீக உறவு நிலவுச் சாந்தியும் சமாதானமும் வேரூன்றித் தழைக்கும்.
ஒரு ஆசிரியர் தனது மாணாக்கர்களின் கல்வித் தராதரத்தை அறிவதற்காக இடையிடையே பல சோதனைகளை நடத்துகின்றார். மாணாக்கர் கற்ற கல்வியில் எவ்வளவு துரம் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்பதைத் திட்டவட்டமாக ஒரு ஆசிரியருக்கு கிரகிக்க முடியாமையால் ஒரு பரிட்சை மூலம் கிரகிக்க வேண்டியிருக்கின்றது. இறைவனும் தனது பக்தர்களை அடிக்கடி சோதனை செய்து பார்க்கின்றார் என்பது இறை பக்தர்களின் நம்பிக்கை. இறைவனோ சர்வக்ஞன். எல்லாம் அறிபவனாகிய இறைவனுக்கு சோதனையென்றொரு மத்திமம் மூலமாகவா பக்தர்களின் உள்ளத்தை அறியவேண்டும்? முக்காலமும் உணர்ந்த முழு முதல் மூர்த்திக்கு நமது மனதிலிருக்கும் அதி சூக்குமமான அசைவுகளைக் கூட சொதனையொன்றுமில்லாமலே நன்கு அரிய முடியும். பின்னர் நம்மையெல்லாம் சோதிப்பது எதற்காக? அது நம்மை நாம் அறிவதற்கு. மற்றொன்றுக்குமாகவல்ல. இதை உணர்ந்தவர்களுக்குத் துன்பமும் துயரமும் இல்லை. மனக் கலக்கம் அன்னவர்களைத் தீண்டுவதுமில்லை.தெய்வம் நம்மை வருத்துவதன் நோக்கத்தை உணர்ந்து அதற்குக் கீழ்ப்படிந்து வாழ்கின்றவர்கள் ஞானத்தின் ஏழு படிகளாகிய சுபேச்சை, விஜாரணை, தனுமானசி, சத்துவாபத்தி, அசம்ஸத்தி, பதார்த்தாபாவனை, தூரியம் என்ற ஏழு நிலைகளையும் கடந்து சாயுச்சியம் என்ற பரம பதத்தை அடைகின்றனர்.
துரியோதனன் முழுமுதற் கடவுளாகிய கார்வண்ணனைத் தரிசித்தவன். அவன் ஸ்ரீ கிருஷ்ணபகவானுடைய முப்பெரும் சக்தியை உணர்ந்திருந்தான். அது மாத்திரமல்ல. தினசரி ஸ்ரீ கிருஷ்ணனுடன் உறவாடும் அரிய சந்தர்ப்பங்களும் துரியோதனனுக்குக் கிடைத்திருந்தது. கிடைப்பதற்கரிய பெரும்பேறு அவனுக்குக் கிடைத்திருந்தும்,இறையவதாரமாகிய ஸ்ரீ ஹரிக்கு எதிர்மாறாகவே செயல் புரிந்தான். இறுதியில் பகவானுடைய பகைவனாகவே மாறிவிட்டான். படைத்தல், காத்தல்,அழித்தல் போன்ற முப்பெரும் சக்தி வாய்ந்த இறைவனுடன் நேர்முகமாகப் பகை கொள்வதற்குரிய துணிச்சல் எவ்வாறு உண்டாயிற்று? அவனுடைய கடும் ஆணவத்தாலும் பேராசையாலும் அந்தத் துணிச்சல் உண்டாயிற்று. இவ்விரு கொடிய குணங்களால் அவனுடைய ஆட்சியும் அந்தஸ்த்தும் உயிரும் பறிக்கப்பட்டன. உலகம் எத்தகைய நற்பேறுகள் எய்தினாலும்சரி, ஆணவத் திமிரும் பேராசையும் அடங்காவிட்டால் துரியோதனன் கதை போன்றுதான் முடியும். புராண இதிகாசங்களும் சரித்திர வரலாறுகளும் இதனை ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
சரணாகதி
பல ஜென்மங்களில் செய்த புண்ணியத்தின் பயனாக ஒருவருடைய மனதில் பகவத் பக்தி தோன்றுகிறது. களஞ்சியத்தில் கிடக்கின்ற வித்து, அங்கு கிடந்தபடி முளைவிட்டுக் காய்த்துப் பலன் தருவதில்லை. பண்படுத்திய நிலத்தில் விதையை விதைத்து,நீரிறைத்து உரமும் போட்டுப் பக்குவமாய் வளர்த்தெடுத்தால்தான் அது பலன் தருகின்றது.
அதே போன்று, மனிதனுடைய மனதில் பீஜாவஸ்தையில் இருக்கின்ற பக்தியுணர்வை, ஞானானுஷ்டானங்களால் விருத்தி செய்து இறையருளைப் பெறவேண்டும்.
இந்தப் பிரதான தர்மத்தில் யாதொரு முயற்சியும் செய்யாத ஜனங்கள், கற்பூரம் கொளுத்தி,தேங்காயுடைத்து ஒரு தோத்திரத்தையும் பாடினால், ஆகாத காரியமெல்லாம் கடவு ஆக்கித் தரவேண்டுமென்று எண்ணுகின்றனர்.இந்த லட்சணத்தில்தான் அநேக பக்தர்களின் பக்தி விசுவாசங்கள் இருக்கின்றன.
துரியோதனாதியர் பாஞ்சாலியை வஸ்திராபகரணம் செய்தபோது ஒரு கையால் சேலையைப் பிடித்தபடி, மற்றக் கை உயர்த்தி கண்ணா! கண்ணா!! என்று அரற்றி அழுதாள். கண்ணன் வரவேயில்லை. இறுதியில் இரு கரங்களையும் உயர்த்தி, நெஞ்சுருகி அழுத் பொழுதுதான் கண்ணன் தரிசனம் கொடுத்தார்.
பாஞ்சாலியைப் போன்று தன்னை மறந்து, கண்ணை இழந்த நிலையில் கடவுளிடம் சரணாகதி அடையும் மனப் பக்குவம் நமக்கு வரும் பொழுது மாத்திரந்தான், இறைவனுடைய அருளாசிகள் கிடைக்கும்.
கடவுள் நமக்கு எல்லாவற்றையும் தருவார் என்ற நம்பிக்கையைவிட, எல்லாம் தந்திருக்கிறார் என்ற உண்மையை உணரும் பொழுது, எல்லாம் நமக்கு முன்னே இருப்பதாகத் தெரியும்.
நாம் இப்பூமண்டலத்திற்கு வருமுன், சீவியத்திற்குத் தேவையானவற்றை எல்லாம் ஒரு குறையும்மில்லாமல் நமக்கு முன்னே ஆக்கி வைத்தபின்தான் எங்களை இறைவன் இங்கு இறக்கி விடுகிறான்.
கர்ப்பப் பையிலிருந்து வெளிவரும் குழந்தைக்கு பசி, தாகம் தணிப்பதற்குரிய பாலமுதைத் தாயினுடைய தனத்தில் சுரக்க விட்ட பின்புதானே குழந்தையும் வெளிவருகின்றது.
இவ்வளவு தூரம் பெருங் கருணை காட்டிப் பாதுகாப்பளிக்கின்ற இறைவனுடைய மகா தயாள குணத்தை ஒரு கணம் நினைத்தால் போதும், மனம் அவன்பால் பற்றிப் பக்திமயமாவத்ர்கு.
இவ்வாறு உயிரினங்களை மறவாது கருணை கூர்ந்து சம்ரக்ஷனை செய்து வருகின்றவனை மறுத்து, கர்வங்கொள்கின்ற பொழுதுதான் வினையும் வந்து சூழ்கின்றது.அடுத்தவருக்கு ஒரு சிறு உபகாரம் செய்தால் அதற்கு பிரதிபலனை மனிதர் எதிர் பார்க்கின்றனர்.கிடைக்காதவிடத்த ில் அவர்களை நன்றி கெட்டவர்களாகவும், பெரும் பகைவர்களாகவும் கருதிக் கொள்கின்றனர். அவ்விதமாயின் மனிதரைப் படைத்து, இமைப் பொழுதும் மறவாமல் காத்து வருகின்ற இறைவனுக்கு நெஞ்சார உபசாரம் செய்யாவிட்டால் அவனுக்கு மனிதர்கள் நன்றி கெட்டவர்களாகவும், பகைவர்களாகவும் தானே இருக்க வேண்டும். ஆனால் இறைவன் நம்மவர்களைப் போன்று அப்படியெல்லாம் நினைப்பதில்லை.
அவன் தன்னை நினைப்பவருக்கும், நினையாதவருக்கும் தன்னுடைய கருணா கடாக்ஷத்தைச் சமமாகப் பொழிகின்ற பெருங் குணமுடையவன்.
மனப் பயம், மனக் கலக்கம் வரும் பொழுதும், வராத பொழுதும் அவனையே தஞ்சமெறெண்ணி நின்றால் பொல்லாப்பு அகன்று வாழலாம்.
மனம் நொந்து போய்த் தளர்ந்த நிலையில் இறைவன்பாற் கொள்ளும் சரணாகதியைத் தவிர, மனத் துயரம் தீர்ப்பதற்கு வேறென்ன வழி? வரேன்ன கதி? இதனை மக்கள் நன்கு சிந்தித்து செயல் பட்டால், முக்தி இன்பம் பெறலாம் என்பது திண்ணம்.
நாம் இப்பூமண்டலத்திற்கு வருமுன், சீவியத்திற்குத் தேவையானவற்றை எல்லாம் ஒரு குறையும்மில்லாமல் நமக்கு முன்னே ஆக்கி வைத்தபின்தான் எங்களை இறைவன் இங்கு இறக்கி விடுகிறான்.
கர்ப்பப் பையிலிருந்து வெளிவரும் குழந்தைக்கு பசி, தாகம் தணிப்பதற்குரிய பாலமுதைத் தாயினுடைய தனத்தில் சுரக்க விட்ட பின்புதானே குழந்தையும் வெளிவருகின்றது.
இவ்வளவு தூரம் பெருங் கருணை காட்டிப் பாதுகாப்பளிக்கின்ற இறைவனுடைய மகா தயாள குணத்தை ஒரு கணம் நினைத்தால் போதும், மனம் அவன்பால் பற்றிப் பக்திமயமாவத்ர்கு.
இவ்வாறு உயிரினங்களை மறவாது கருணை கூர்ந்து சம்ரக்ஷனை செய்து வருகின்றவனை மறுத்து, கர்வங்கொள்கின்ற பொழுதுதான் வினையும் வந்து சூழ்கின்றது.அடுத்தவருக்கு ஒரு சிறு உபகாரம் செய்தால் அதற்கு பிரதிபலனை மனிதர் எதிர் பார்க்கின்றனர்.கிடைக்காதவிடத்த
அவன் தன்னை நினைப்பவருக்கும், நினையாதவருக்கும் தன்னுடைய கருணா கடாக்ஷத்தைச் சமமாகப் பொழிகின்ற பெருங் குணமுடையவன்.
மனப் பயம், மனக் கலக்கம் வரும் பொழுதும், வராத பொழுதும் அவனையே தஞ்சமெறெண்ணி நின்றால் பொல்லாப்பு அகன்று வாழலாம்.
மனம் நொந்து போய்த் தளர்ந்த நிலையில் இறைவன்பாற் கொள்ளும் சரணாகதியைத் தவிர, மனத் துயரம் தீர்ப்பதற்கு வேறென்ன வழி? வரேன்ன கதி? இதனை மக்கள் நன்கு சிந்தித்து செயல் பட்டால், முக்தி இன்பம் பெறலாம் என்பது திண்ணம்.
Subscribe to:
Posts (Atom)


